sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 02, 2026 ,மார்கழி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

ஏழுமலைவாசன் - கீதைப்ரியன்

/

ஏழுமலைவாசன் - கீதைப்ரியன்

ஏழுமலைவாசன் - கீதைப்ரியன்

ஏழுமலைவாசன் - கீதைப்ரியன்


ADDED : டிச 31, 2010 03:26 PM

Google News

ADDED : டிச 31, 2010 03:26 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தன் கணவருக்கு ஏற்பட்ட கஷ்டத்தை போக்குவதற்காக லட்சுமி மகேஸ்வரனிடம் சென்றாள். தங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடை அவரிடம் சொல்லி, தனது கோபம் காரணமாக திருமால் பூலோகம் சென்று ஒரு புளியமரத்தின்கீழ் அன்னபானமின்றி தவமிருப்பது பற்றி எடுத்துச் சொன்னாள். மகேஸ்வரன் அவளது கஷ்டத்தை தீர்ப்பதாக வாக்களித்தார். பிரம்மாவை வரவழைத்தார்.

''பிரம்மனே! நாம் இருவரும் பசு, கன்றுவாக மாறி, நாராயணனின் இருப்பிடத்திற்கு செல்ல வேண்டும். நம்மை லட்சுமி சந்திரகிரி நாட்டின் அரசன் சோளராஜனுக்கு விற்றுவிடுவாள். நாம் அந்த நாட்டில் தவம் செய்து கொண்டிருக்கும் நாராயணனை தேடிச்சென்று அவரது பசிபோக்க பாலூட்டுவோம்,'' என்றார்.

லட்சுமி மகிழ்ச்சி அடைந்தாள்.

உடனே பிரம்மா பசுவின் வடிவையும், மகேஸ்வரன் கன்றின் வடிவையும் அடைந்தனர். லட்சுமிதேவி அவற்றை மேய்ப்பவள் போல வேடமணிந்தாள். பசு, கன்றுகளை ஓட்டிக்கொண்டு சந்திரகிரிக்கு வந்துசேர்ந்தாள். அந்த பசுவும் கன்றும் அந்நாட்டு மக்களை கவர்ந்தன.

''இதுபோன்ற உயர்ந்த ஜாதி பசுவை நாங்கள் இதுவரை கண்டதில்லை. இதன் மடு மிகவும் பெரிதாக இருக்கிறது. ஒருமுறை பால் கறந்தால் உலகத்திற்கே போதும் என்கிற அளவிற்கு பெரிதாக மடு கொண்ட பசுவை அதிசயப்பிறவி என்றே சொல்ல வேண்டியிருக்கிறது. இதை எங்கள் தேசத்திற்கு கிடைத்த மாபெரும் பொக்கிஷம் என்றே கருதுகிறோம். இந்த மாட்டுக்கு சொந்தக்காரி பேரழகு பொருந்தியவளாக இருக்கிறாள். லட்சுமி கடாட்சம் இவள் முகத்தில் தாண்டவமாடுகிறது,'' என்று புகழ்ந்து பேசினர்.

தங்கள் நாட்டிற்கு வந்திருக்கும் அதிசய பசு, கன்று பற்றிய தகவல் அரண்மனைக்கு சென்றது. மன்னன் சோளராஜன் அவற்றை பார்க்க விரும்பினான். இதை எதிர்பார்த்து காத்திருந்த லட்சுமி பிராட்டியார், பசுக்களை ஓட்டிக்கொண்டு அரண்மனைக்கு சென்றாள். மன்னன் அந்த பசுக்களை பற்றி விசாரித்தான்.

''பெண்மணியே! உனது நாடு எது? எந்த நாட்டில் இதுபோன்ற உயர்ஜாதி பசுக்கள் இருக்கின்றன? இதன் சிறப்பம்சம் என்ன? தெளிவாகச் சொல்,'' என கேட்டான்.

லட்சுமி பிராட்டி அவனிடம், ''மன்னனே! இந்த பசுக்களுக்கு உணவிட சாதாரண மனிதர்களால் முடியாது. இவை மிக அதிகமாக சாப்பிடும். ஆனால் உணவிற்கேற்ற பாலை இந்த ஊருக்கே தரும். நீ அரண்மனைவாசி. உன்னால் இதை வளர்க்கமுடியும். இந்த பசுக்களுக்கு தேவையான உணவை கொடுத்து வா. உன் நாடே வளமாகும்,'' என தெரிவித்தாள். சோளராஜனுக்கும், அவனது மனைவிக்கும் அந்த பசுக்களை மிகவும் பிடித்துவிட்டது.

உலகத்திற்கே படியளக்கும் லட்சுமி பிராட்டிக்கு பணம் கொடுத்து அந்த பசுக்களை வாங்கிக்கொண்டனர். அரண்மனை கொட்டிலில் அந்த பசுக்கள் அமைதியாக நின்றன. அவற்றை கட்டிப்போட

வேண்டும் என்ற அவசியம் வரவில்லை. எந்தப் பிரச்னையும் செய்யாமல் சாப்பிட்டன. அதுவரை அப்படிப்பட்ட பசுக்களை பார்க்காத பராமரிப்பு ஊழியர்கள் ஆச்சர்யமும் ஆனந்தமும் கொண்டனர். சோளராஜன் பசு பராமரிப்பாளரை அழைத்து, ''சேவகனே! இந்த பசு கறக்கும் பாலை மட்டும் அரண்மனையில் ஒப்படைத்துவிட வேண்டும். இதன் பால் தெய்வாம்சம் மிக்கது என இதை என்னிடம் விற்ற பெண்மணி சொல்லியிருக்கிறாள். இவற்றை வேங்கடாசல மலைக்கு அழைத்து சென்று மேயவிடு. மிகவும் கவனமாக பார்த்துக்கொள்,'' என சொல்லி அனுப்பினான்.

பராமரிப்பாளர் தனது சக ஊழியர்களுடன் பசுக்களை வேங்கடாசல மலைக்கு ஓட்டிச் சென்றார். சேவகர்கள் மதியவேளையில் ஓய்வெடுக்கும் நேரத்தில், அந்த தெய்வப்பசுக்கள் மந்தையைவிட்டு பிரிந்து மலையிலிருந்த புளியமரத்தின் அருகில் சென்றன. புற்றுக்குள் ஸ்ரீமந் நாராயணன் தவத்தில் இருந்தார். அவர்மீது அந்த பசு பாலை சொரிந்தது. திடுக்கிட்டு விழித்த நாராயணன், மேல்நோக்கி பார்த்தார். பால் வழிந்து கொண்டிருந்தது. வாய் திறந்து அந்த பாலை பருகினார். இப்படியாக தினமும் அந்த பசுக்கள்

புற்றுக்கு சென்று அதனுள் அமர்ந்திருந்த ஹரிக்கு பாலை சொரிந்துவிட்டு வந்தன.

மிகுந்த எதிர்பார்ப்புடன் வாங்கப்பட்ட பசு, பாலை முழுமையாக புற்றில் சுரந்து விட்டு வந்ததால், அரண்மனைக்கு வந்ததும் பால் தராமல் இருந்தது. இவற்றை விற்ற பெண் அரசனையே ஏமாற்றிவிட்டாளோ என்று பேசிக்கொண்டனர்.

மகாராணி பராமரிப்பாளனை அழைத்து, ''இந்த மாடு பால் கொடுக்கிறதா? இல்லையா? ஒரு வேளை நீயே இந்த பாலை குடித்துவிடுகிறாயா? உண்மையை சொல்லாவிட்டால் உன் தலையை எடுத்துவிடுவேன்,'' என எச்சரித்தாள்.

அவன் பதறிப்போனான். ''மகாராணி! எல்லா பசுக்களையும் போல இதையும் திருவேங்கடமலைக்கு ஓட்டிச் செல்கிறேன். எங்கள் பார்வையில்தான் இந்த பசுக்கள் மேய்கின்றன. மடு மிகவும் பெரிதாக இருக்கிறது. ஆனால் கறந்தால் பால் வருவதில்லை. இது என்னஅதிசயம் என்று எங்களுக்கு புரியவில்லை. இது மாயப்பசுவாக உள்ளது,'' என்று சொல்லி அவளது காலில் விழுந்தான்.

மகாராணிக்கு அவனது பேச்சில் நம்பிக்கை வரவில்லை.

''பொய்யனே! உன் பேச்சை நான் நம்பமாட்டேன். மிகச்சிறந்த கன்றை ஈன்றுள்ள இந்த பசுவிற்கு எப்படி பால் இல்லாமல் போகும்? இன்று ஒருநாள் அவகாசம் தருகிறேன். நாளை முதல் எப்படியும் இந்த பசுவின் பால் அரண்மனைக்கு வந்தாக வேண்டும். இல்லாவிட்டால் உன்னை கொன்றுவிடுவேன்,'' என எச்சரித்து அனுப்பினாள்.

என்ன செய்வதென அறியாத பராமரிப்பாளன் மறுநாள் அந்த பசுவின் மீது கண் வைத்தான். மதிய வேளையில் அவன் ஓய்வெடுக்கவில்லை. பசுவும் கன்றும் புற்றை நோக்கி சென்றன. பராமரிப்பாளன் பின்தொடர்ந்தான். புற்றின் அருகே சென்ற பசு, பால் சொரிய ஆரம்பித்தது. அவன் அதிர்ச்சியடைந்தான். கடும் கோபம் ஏற்பட்டது. தனது கையில் இருந்த தடியுடன்பசுவை அடிக்க பாய்ந்தான்.

-தொடரும்






      Dinamalar
      Follow us