sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

தெய்வப் பிறவிகள்! (1)

/

தெய்வப் பிறவிகள்! (1)

தெய்வப் பிறவிகள்! (1)

தெய்வப் பிறவிகள்! (1)


ADDED : மார் 24, 2017 10:19 AM

Google News

ADDED : மார் 24, 2017 10:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உள்ளிலிருந்தென்னை உந்தி இழுப்பான்

வெளியிலிருந்தென்னை உள்ளே தள்ளுவான்

என் குருவே என் இறைவன், அவன்

என்னுயிரின் தலைவன்

சிவனே குரு என்பது ஆன்றோர் வாக்கு. குருவே சிவன் என்பது அடியார் அனுபவம். தன்னில் நம்மைக் கரைக்க, நம்மைப் போலவே மனித வடிவில் குருவாக இறங்கி வருகிறான் இறைவன். பலவிதமான குரு வடிவங்களில் வருவது சிவனே. எனவேதான் 'குரு என்பவர் ஓர் ஆள் இல்லை... தத்துவம்' என்கிறார்கள். அப்படி வந்தவர் தான் சத்குரு சிவானந்த மூர்த்தி.

ஆந்திராவில், கோதாவரிக் கரையிலுள்ள ராஜமகேந்திரபுரியில் உர்லாம் என்னும் ஜமீன் குடும்பத்தில் அவதரித்தார். இரண்டரை வயதில் பத்மாசனத்தில் அமர்ந்து, தியானத்தில் இருந்தது கண்டு பெற்றோர் அதிசயித்தனர். பகலில், அனைவரும் உறங்கிக் கொண்டிருந்தபோது மெல்ல நழுவி, கோதாவரியில் மத்ஸ்யாசனம் செய்து மிதந்து, நடுவிலிருக்கும் திடலுக்குச் சென்றமர்ந்து தியானம் செய்யத் தொடங்கி விடுவார். பாரதப் பண்பாட்டைப் பெற்ற தாயும், பக்குவம் என்னும் பாடத்தைக் கோதாவரித் தாயும் கற்றுக் கொடுத்தார்கள்.

ஆற்றில் ஒரு சடலம் தன்னை உரசிச் சென்றதையும், ஒரு மரக்கட்டை நதியோடு சென்றதையும் பார்த்த அவர், அவற்றுக்கும் தமக்கும் என்ன வேறுபாடு என்னும் சிந்தனையில் ஆழ்ந்தார். ஒன்பது வயதில் நெல்லூரில், ரமண முனியின் படத்தை வைத்துக்கொண்டு பிறருடன் நாம சங்கீர்த்தனம் செய்தபோது, படத்திலிருந்த ரமணர் வெளிப்பட்டு அவரது தலையைக் கோதினார்.

யாரோ 'மூடியை' திறக்க வேண்டியுள்ளது!

பத்து வயதில் கோதாவரியில் தென்பட்ட ஒரு வடக்கத்திய யோகி, இந்த பாலகனுக்கு மந்திர உபதேசம் செய்தார். 32 மந்திரங்களில் சித்தி அடைந்து, பல ஆண்டுகளுக்குப் பிறகு அவற்றை வாரங்கல்லில் நடந்த ஒரு வேள்வியில் அக்னியிடம் ஒப்படைத்தார். 11 வயதில் குடும்ப வழக்கப்படி உபதேசம் பெற்று ஆத்மலிங்கம் தரித்தார்.

நான்கு நாட்கள் உபநயன விழா! தெலுங்கு, ஆங்கிலம், சமஸ்கிருதம், இந்தி இவற்றில் வியக்கத்தக்க தேர்ச்சி பெற்றார். இவர் எந்த மொழியில் பேசினாலும், அந்த மொழி பாக்கியம் பெற்றதாகத் தோன்றியது! அப்படி ஒரு தெளிவு அவரது பேச்சில்... அறிவியல் துறையில் பட்டம் பெற்றார். சுதந்திரப் போராட்டத்தில் ரயில் மறியலில் ஈடுபட்டு கைதாகி விடுதலையானார். ஜோதிடம், வானியல் சாஸ்திரங்களில் வல்லுனராக விளங்கினார்.

ஒருமுறை சக மாணவர்களுடன் உல்லாசப் பயணம் செல்லும்போது, விசாகப்பட்டினத்திலிருந்து 30 கி.மீ. தூரத்திலுள்ள பீமுனிப்பட்டினத்திலுள்ள விடுதியில் தங்கினார். விடுதி வராண்டாவில் எல்லோரும் படுத்திருந்தனர். இரவு திடீரென்று ஒரு மாணவி அலற எல்லோரும் எழுந்தார்கள். இவருக்குப் பின்புறமிருந்து ஒரு நல்ல பாம்பு அவருக்கு தன் படத்தால் குடை விரித்துக் கொண்டிருந்தது. தெய்வங்களுக்கு தான் இப்படி பாம்பு குடை பிடிக்கும்..!

செல்வம் என்னும் சகதியைத் துறந்தார். எந்த சொத்தும் தேவையில்லை என்று தந்தைக்கு எழுதிக் கொடுத்துவிட்டு, காவல் துறை நிர்வாகப் பொறுப்பில் வேலைக்குச் சேர்ந்தார். தீவிரவாதிகளுக்கும், காவல் துறைக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் உயிர் தப்பினார். அன்னையின் ஆணைக்கிணங்கி, கங்காதேவி அம்மையாரை மணந்துகொண்டார். இரண்டு ஆண், இரண்டு பெண்களுக்குத் தந்தையானார்.

பீமுனிப்பட்டினத்தில் ஒரு மாந்தோப்பில் நுழைந்தபோது, அவருடைய குரு எதிர்ப்பட்டார். அவர் இமயத்தில் நந்தா தேவியில் ஒரு குகையில் இருந்து வந்ததாகச் சொன்னார். அந்த தரிசனம் நிகழ்ந்த இடத்தில், ஒரு யோக கணபதி விக்ரகத்தை நிறுவினார்.

ஜோதிடர், உபாசகர், வானியலாளர், ஓமியோபதி மருத்துவர், இலக்கிய விமர்சகர், பரிகாரம் சொல்பவர், இசை, நடனம், சிற்பக்கலை அறிஞர், சாத்திரங்கள் பற்றிய சந்தேகங்களுக்கு விளக்கம் தருபவர், கோவில் வாஸ்துவில் வல்லவர், நாட்டின் வரலாற்றை அறிந்தவர், சொற்பொழிவாளர்...இப்படி பல துறைகளிலும் வல்லுநராக விளங்கினார்.

வாரிக் கொடுக்கும் வள்ளலாகவும் திகழ்ந்தார்.

அவரைச் சூழ்ந்த அடியார்களை நாடெங்கும் பல திருத்தலங்களுக்கு அழைத்துச் சென்று வரலாற்றையும், பண்பாட்டையும், ஆன்மிக விஷயங்களையும் போதித்தார். அருணாச்சல பிரதேசத்திலிருந்து கன்னியாகுமரி வரை, பல இடங்களில் நாட்டின் நலனுக்காகவும், சனாதன தர்மம் தழைத்தோங்கவும் யாகங்கள் செய்தார். தன்னுடைய அடியார்களையே வேள்வி செய்யும் ரித்விக்குகளாகத் தயார் செய்தார்.

பக்தர்களுக்கு தாயும் தந்தையுமாக இருந்து அன்பு காட்டினார். ஆன்மிக குருவாக இருந்து வழிகாட்டினார். மொத்தத்தில் கடவுளாகவே காட்சியளித்தார்.

கல்வி, திருமண வாழ்க்கை இவை பற்றிய நூல்கள் மட்டுமன்றி, பிரம்மாண்ட புராணத்தை, அறிவியல் பார்வைக்கு ஏற்ப ஆங்கிலத்தில் வடித்தார். கடோபநிஷத்திற்கு “கட யோகம்' என்ற விளக்கவுரை, இந்தோனேசியப் பயணக் கட்டுரை எழுதினார். ஒருமுறை 29 நாட்கள் தொடர்ந்து யாகம் செய்தபோது ரிஷிகளைப் பற்றி பேசினார். அந்தப் பேச்சின் தொகுப்பும், பகவத் கீதை, உபநிஷதங்கள், ஸ்ரீ ருத்ரம் பற்றிய விளக்கங்களும் நூல்கள் ஆக்கப்பட்டன. இரண்டு முறை அமெரிக்கா சென்று உரையாற்றினார். 13 ஆயிரம் நூல்களைப் படித்தவர். இன்றும் பொலிவோடு விளங்கும் அவரது நூலகம் அதற்குச் சாட்சி.

அவரது போதனைகள் சிலவும் உண்டு.

* பாரத நாட்டின் எதிர்காலம், அதன் புராதனப் பண்பாட்டில்தான் இருக்கிறது.

* கண்ணைத் திறந்தால் நாட்டுக்குத் தொண்டு செய். கண்ணை மூடினால் கடவுளாக இரு.

* தேசமே தெய்வம் என்னும் உணர்வோடு, நாட்டை மூன்றுமுறை வலம் வருபவன் வேறெந்த சாதனையும் செய்யாமலேயே முக்தியடைவான்.

* இல்லறத்தில் இருந்தாலும், துறவியானாலும் இந்த சமுதாயத்தில் வாழும்வரை நாம் கடன்பட்டிருக்கிறோம்.

* ஒவ்வொருவரும் குடிமகனுக்குரிய பொறுப்போடு கடமையாற்றுவதே நாட்டின் கடனைத் தீர்க்கும் வழி.

வெளியே, எளிய, இனிய மனிதனாகவும், உள்ளே ஒப்பற்ற யோகியாகவும் வாழ்ந்து காட்டியவர். வாரங்கல்லில் சிவலிங்க வடிவில் சமாதி கொண்டு அருள்பாலிக்கிறார்.

இசைக்கவி ரமணன்






      Dinamalar
      Follow us