sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

தெய்வப் பிறவிகள்! (4)

/

தெய்வப் பிறவிகள்! (4)

தெய்வப் பிறவிகள்! (4)

தெய்வப் பிறவிகள்! (4)


ADDED : ஏப் 21, 2017 12:24 PM

Google News

ADDED : ஏப் 21, 2017 12:24 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

”அனைத்திலும் இருப்பது ராமனே

அனைத்தும் ராமனிலே தான் இருக்கின்றன

அனைத்திலும் அனைத்தும் ராமனே”

- ராம்தாஸ்


சாது என்ற சொல்லுக்கு 'எப்போதும் கடவுளுடைய நினைப்பிலேயே திளைப்பவர்' என்பது பொருள். சந்தைக்கடை போல் ஓயாத இரைச்சல், துன்பம், போராட்டம் நிறைந்த உலக வாழ்க்கையில் இப்படி இருக்க முடியுமா? முடியும் என காட்டுவதற்காக அவ்வப்போது பல மகான்கள் அவதரிக்கிறார்கள். அந்த வரிசையில் அண்மையில் தோன்றி இறைவனே கதியாக அவனுடைய திருநாமத்தைச் சொல்லியே அடையலாம் என்று வாழ்ந்து காட்டியவர் சுவாமி ராம்தாஸ்.

1884 ஏப்ரல் 10ல் கேரளா - கர்நாடகா எல்லையில் உள்ள கான்ஹன் காட்டில் லலிதாபாய் - பாலகிருஷ்ண ராவ் தம்பதியருக்கு, ஒரு அனும ஜெயந்தியன்று அவதரித்தார் விட்டல் ராவ். குழந்தை பருவத்திலேயே அவர் கண்களில் மின்னிய ஒளி, அனைவரின் கவனத்தையும் கவர்ந்தது.

இவருக்கு கல்வி வேம்பாக கசந்தது. ஆனால் ஒருமுறை படித்ததையோ, கேட்டதையோ அப்படியே நினைவில் கொள்ளும், கல்வெட்டு நினைவாற்றல் இருந்தது. அதே போல், சிறுவயதிலேயே ஆங்கிலத்தில் தேர்ச்சி பெற்றிருந்தார். 22 வயதில் ருக்மாபாயை மணம் செய்து, 29 ஆம் வயதில் ரமாபாய் என்னும் பெண் குழந்தைக்குத் தந்தையானார். ஆன்மிகத் தேடலில் மனம் ஈடுபட்டிருந்ததாலும், மிகவும் நேர்மையான மனிதராக விளங்கியதாலும் வியாபாரம், குடும்பம் இரண்டையும் சரியாக நிர்வகிக்க முடியவில்லை.

இருதலைக் கொள்ளி எறும்பாக துன்பத்தில் தவித்த இவருக்கு, அவருடைய தந்தை குருவாக இருந்து, “ஸ்ரீராம் ஜெய்ராம் ஜெய ஜெய ராம்” என்னும் மந்திரத்தை உபதேசித்தார். சிறிது காலத்திற்குள் வீட்டைத் துறந்து, ஸ்ரீரங்கத்தில் காவிரியில் குளித்து காவியுடுத்தினார். ராம்தாஸ் என்னும் பெயர் பெற்றார். அப்போது அவர் எடுத்துக் கொண்ட உறுதி மொழிகள்:

1. வாழ்க்கையை ராம தியானத்திற்காகவும், ராமனின் சேவைக்காகவும் அர்ப்பணிக்கிறேன்

2. பிரம்மச்சர்ய விரதத்தை அனுசரித்து பெண்களை பெற்ற தாயாக காண்பேன்

3. பிச்சை எடுத்து உண்பேன். அல்லது மற்றவர்கள் தாமாகத் தருவதை உண்பேன்

இதன்படியே இறுதி மூச்சு வரை ராமனுடைய அடியவராக வாழ்ந்தார். கையில் ஒரு தம்பிடிக் காசும் இல்லாமல், எங்கே செல்கிறோம், என்ன செய்யப்போகிறோம் என்னும் எண்ணம் இல்லாமல், என்ன நடக்குமோ என்னும் அச்சம், கவலை கொள்ளாமல் ராமனே கதி என்று ராமேஸ்வரத்திலிருந்து கேதார்நாத் வரை பயணம் செய்தார். பட்டினி கிடந்தாலும், விருந்து சாப்பிட்டாலும், அவமானம் என்றாலும், அன்பாக ஆதரித்தாலும், கடுங்குளிரானாலும், தகிக்கும் வெயிலானாலும் - எதையும் ராமனின் கருணைச் செயலாக எண்ணி வாழ்ந்தார்.

திருவண்ணாமலையில் பகவான் ரமண மகரிஷியின் தீட்சை பெற்ற பின், அங்குள்ள ஆலமர குகையில் ஒரு மாதம் தங்கி ராம தியானத்தில் ஆழ்ந்தார். ஒருநாள் அவருக்கு அந்த குகையில் ஓர் அகண்ட தரிசனம் கிடைத்தது. அப்போது உயிருள்ளவை, உயிரற்றவை எல்லாமே ராமனாக தெரிந்தன. தான் ஒன்றும் இல்லை என தெரிந்தவனுக்கே இந்த தரிசனம் கிடைக்கும். இதன் பின்

''குழந்தையின் குதூகலம், பித்தனின்

பைத்திய நிலை, ஞானியின் தெளிந்த

மனநிலை'' மூன்று குணங்களும் இவரது இயல்பாகி விட்டது.

நாடு முழுவதும் யாத்திரை சென்றார். மங்களூரு அருகில் உள்ள கத்ரி என்னும் தலத்தில் பஞ்ச பாண்டவர், குகையில் இருந்தபோது, அவர் உச்சரித்துக் கொண்டிருந்த மந்திரம் தானாக நின்றது. வட்டமான ஒளி ஒன்று அவரை ஈர்த்தது. அதை தொடர்ந்து எல்லையில்லா மகிழ்ச்சி அவருக்குள் எழுந்தது. அவருடைய ஆன்மாவை அமைதி தழுவிக் கொண்டது. ஆம்...

அவருக்கு நிர் விகல்ப சமாதி நிலை கிட்டியது.

இறைவனுடைய நாமத்தை இடைவிடாமல் உச்சரிப்பதன் மூலமாகவே இந்த நிலையை அடைந்தார். “இறைவனுடைய திருநாமத்தைக் காட்டிலும் சக்தி

மிக்கது ஏதுமில்லை. அது இருளை ஒளியாக்கும். பகையை நட்பாக்கும். வாழ்வில் கசப்பை இனிப்பாக்கும். அச்சத்தை நம்பிக்கையாக்கும். சந்தேகத்தை பரஸ்பர அன்பாக்கும். ஏனெனில் நாமம் என்பது கடவுளே. உலகின் துயர்களை நீக்கவும், விடுதலையை வீட்டுக்கே கொண்டு வந்து சேர்க்கவும் எளிய வழி இறைவன் நாமத்துடன் எப்போதும் இணைந்திருப்பதே!” என்பது அவரது அனுபவமும், அறிவுரையுமாகும்.

புகழ் மிக்க ஆங்கில எழுத்தாளர் சோமர்செட் மாவ்ம் எழுதிய 'வாளின் முனை' (The Razor's Edge) நூலில் வரும் ஒரு கதாபாத்திரம் சுவாமி ராம்தாஸ் தான்.

அவரது வழிகாட்டுதலால் அந்த எழுத்தாளர், ரமணரைச் சந்திக்கிறார் என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது.

ஆன்மிகத்தில் முழுமை பெற்ற பிறகு, ராமதாஸ் தன் நண்பர் காசர்கோட்டில் நிறுவிய ஆஸ்ரமத்தில் தங்கினார். அங்கு மாதாஜி கிருஷ்ணாபாயுடன் சேர்ந்து, 1931ல் ஆனந்த ஆஸ்ரமத்தை நிறுவினார். வருவோருக்கு உணவையும், அன்பையும் வாரி வழங்கினார். இடைவிடாமல் ராம நாமத்தை உச்சரிப்பது

எத்தனை எளிது என்றும், அதன் மூலம் ஆனந்தம் அடைவது எவ்வளவு இயல்பானது என்றும் வாழ்ந்து காட்டினார்.

மனிதன் உலக வாழ்வில் ஈடுபட்டாலும், அமைதியும் ஆனந்தமும் அடைவதற்கு ராம நாமம் ஒன்றே வழி என்பது அவரது அறிவுரையின் சாரமாக இருந்தது.

''கடவுளைச் சரணடைவதே அறிவுடைமை. நம் செயல்களெல்லாம் அவன் செயல்களே. இந்த மனப்பான்மை இருந்தால், மனம் பக்குவமடையும். ஒரே ஒரு சக்தி தான் எல்லாமுமாக விளங்குகின்றது என்பது புரியும். அதன் பிறகு ஆனந்தமும் அமைதியும் நீடிக்கும்,” என வலியுறுத்தினார். எப்போதும் குழந்தை போல மகிழ்ச்சியுடன் சிரிக்கப் பேசும் இந்த மகானை “அப்பா” ('பப்பா') என அனைவரும் அழைத்தனர்.

திருவண்ணாமலை யோகி ஸ்ரீ ராம் சூரத்குமார் என்னைப் பணித்ததன் பேரில், 1984 ல் கான்ஹன்காட்டில் உள்ள ஆனந்த ஆஸ்ரமத்திற்குச் செல்ல

நேர்ந்தது. அப்போது அங்கிருந்த மாதாஜி கிருஷ்ணாபாய்க்கு வயது 90 ஐத் தாண்டியிருந்தது. ராமபக்தையான சபரி போல காட்சியளித்த அவரது

திருவடியில் விழுந்து வணங்கினேன். 'பப்பா'வின் சமாதி மந்திரில் அமர்ந்ததும் மனதில், 'ஸ்ரீராம் ஜெய்ராம் ஜெய ஜெய ராம்' என்னும் மந்திரம் ஒலித்தது.

நாமத்தைச் சொல்வதன் மூலம் கடவுளை அடையலாம் என்பதை பெரும்பாலான அத்வைதிகள் ஏற்பதில்லை. அடியவர்கள் புரிந்து கொள்வதுமில்லை.

“இடைவிடாமல் இறைவன் நாமத்தைச் சொல்! நீ பற்பல நிலைகளின் வழியாக, எல்லா நிலைகளும் கடந்த நிலையை விரைவில் எய்துவாய்!” என்பதே

'பப்பா'வின் ஆசீர்வாதம்.

ஸ்ரீராம் ஜெய்ராம் ஜெய ஜெய ராம்!






      Dinamalar
      Follow us