
உலகில் இன்றைக்கும் உயிர்த்துடிப்புடன் இயங்கி வரும் பழமையான நகரம் காசி. கங்கைக்கரையில் எண்ணற்ற கதைகளைப் பேசும் எத்தனையோ படித்துறைகள்... அவற்றுள் ஒன்று பஞ்சகங்காகாட். அந்தத் துறையில் ஒரு சிறு கோவில். அதில் ஒரு பருத்த லிங்கம் நம்மை வரவேற்கிறது. கட்டிப் பிடிக்க முடியாத அகலம். இந்த லிங்கம் கங்கையில் கண்டெடுக்கப்பட்டது. இதை நதியில் மூழ்கி எடுத்து, கக்கத்தில் இடுக்கிக்கொண்டு, படிகள் பல ஏறி, அங்கே பிரதிஷ்டை செய்தவரே மகாயோகி த்ரைலிங்க சுவாமி.
மகாயோகிகளின் பூர்வம் ஆந்திராவில் விஜயநகரம் அருகே ஒரு செல்வக்குடும்பத்தில், 1607ல் பிறந்தவர் த்ரைலிங்கம். பெற்றோர் நரசிம்மதார், வித்யாவதி. நரசிங்கருக்கு இன்னொரு மனைவியும் உண்டு. த்ரைலிங்கருக்கு பெற்றோர் வைத்த பெயர் சிவராமா. சித்தி மூலம் பிறந்த தம்பி ஸ்ரீதர்.
சிறுவயதிலிருந்தே எதிலும் பற்றில்லாமல் உள்முகமாக இருக்கும் மகனுக்கு, தாயே குருவாக இருந்து காளி மந்திரம் ஒன்றையும், ஓர் உபாசனை வழியையும் உபதேசித்தார்.
மகனுக்குத் திருமணம் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தார் நரசிங்கர். ஆனால் வித்யாவதி மகனுக்கு கல்யாணம் வேண்டாம் என்றார்.
தன் கணவரிடம், ''இறந்துபோன என் தந்தை, எனக்கு மகனாகப் பிறந்திருக்கிறார். ஸ்ரீதருக்குத் திருமணம் செய்து வையுங்கள். இவனை இவன் போக்கிலேயே விட்டுவிடுங்கள்,' என்றார். தந்தை இறந்தபின், த்ரைலிங்கர் தாயுடன் இருந்தார். தாயின் மறைவுக்குப் பிறகு தான் அவரை உலகம் அறிந்து கொண்டது.
சிதையில் எரிந்த தாயின் சாம்பலைத் திருநீறாகப் பூசிக்கொண்டார். ஸ்ரீதர் எவ்வளவோ அழைத்தும் வீட்டுக்கு வர மறுத்தார், சொத்தையெல்லாம் அவரையே நிர்வகிக்கச் சொல்லிவிட்டு, ஸ்ரீதர் அமைத்துக் கொடுத்த கொட்டகை ஒன்றில் அமர்ந்து, 20 ஆண்டுகள் தீவிர ஆன்மிகப்பயிற்சியில் ஈடுபட்டார்.
அப்போது துறவி பாகீரதானந்தா அங்கு வந்தார். குருவாக இருந்து த்ரைலிங்கருக்கு உபதேசம் செய்தார். இதன்பின் தனது பாதயாத்திரையைத் தொடங்கினார் த்ரைலிங்கர். ராஜஸ்தானிலுள்ள புஷ்கர் சென்று விட்டு, ராமேஸ்வரம் வந்தார். அங்கே விஜயநகரத்து மக்கள் சிலர் அவரைப் பார்த்து, சொந்த ஊருக்கே தங்களுடன் வரும்படி அழைத்தனர்.
அப்போது வெயில் தாங்காமல் தள்ளாடி வந்த ஒரு பக்தர், கீழே விழுந்தார். சிலர் அவரைப் பார்த்து விட்டு, அவர் இறந்து விட்டதாகக் கூறினர். த்ரைலிங்கர் அவரது முகத்தில் தண்ணீர் தெளிக்கவே அவர் எழுந்து அமர்ந்தார், இந்தக் காட்சியைப் பார்த்து அனைவரும் வியந்து நின்ற வேளையில், அந்த இடத்தைவிட்டு மறைந்து விட்டார்.
அடுத்து நேபாளம் சென்றார். அப்பகுதி அரசனும், வீரர்களும் புலிவேட்டை ஆட வந்தார்கள். அவர்களிடம் இருந்து தப்பிய ஒரு புலி, த்ரைலிங்கரின் காலடியில் படுத்திருக்க இவர், அதைப் பூனையைப் போல் தடவிக் கொண்டிருக்கிறார். திகைத்து நின்ற அவர்களிடம், ''எவ்வுயிரும் நம்முயிரே என்பதை உணர்ந்து கொண்டால், இவ்வுலகில் எந்தப் பூசலும் இன்றி வாழலாம்,'' என்று அறிவுரை வழங்கினார். உடனே அரசன் முத்துக்களையும், ரத்தினங்களையும் வரவழைத்து அவர் முன் சமர்ப்பித்தான். புன்னகை செய்தபடி, அவற்றை வாங்க மறுத்து விட்டார். அவருடைய அபூர்வசக்தி பற்றிக் கேள்விப்பட்டுக் பக்தர்கள் அதிகமாக அவரைத் தரிசிக்க வரவே, அங்கிருந்து மானசரோவர் சென்று தங்கினார். ஓர் ஏழைத்தாயின் வாழ்வின் அச்சாணியாக இருந்த ஒரே மகன் இறந்து, அவனைச் சிதையில் வைத்தபோது, திடீரென்று தோன்றி அவனைத் தொட்டு உயிர்ப்பித்து மறைந்து விட்டார்.
அங்கிருந்து காசி சென்றார். அப்போது அவருக்கு 130 வயதாகியிருந்தது. அங்கே அவர் 150 ஆண்டுகள் வாழ்ந்தார். அவர் பூமியில் வாழ்ந்த ஆண்டுகள் 280. தேக நினைப்பே இல்லாமல், கோவணம் கூட பாரமென்று வாழ்ந்த, இந்த துறவியை, சில காவலர்கள் பிடித்துச் சென்று சிறையில் அடைத்தனர். ஆனால் அவர் சிறையின் மொட்டைமாடியில் உலவிக் கொண்டிருந்தார். தப்பி விட்டாரோ என நினைத்து திரும்ப அடைத்த போது, அப்போதும் அதே போல் மேல் மாடியிலேயே நின்றார். அதன்பின், அவர் ஒரு தெய்வப்பிறவி என நினைத்து விடுதலை செய்து விட்டனர்.
அவர் மீது பொறாமை கொண்ட வஞ்சகன் ஒருவன் பாலில் விஷம் கலந்து கொடுத்தான். அதைக் குடித்து விட்டு புன்னகைத்த படியே அங்குமிங்கும் நடந்தார். இந்த அதிசயத்தை அறிந்த ராமகிருஷ்ண பரமஹம்சர், அவரைத் தரிசித்து, 'நடமாடும் காசி விஸ்வநாதர்' என்று பாராட்டினார்.
இந்த மகாயோகி 500 ஆண்டுகள் வாழ்ந்ததாகவும் ஒரு செய்தி உண்டு. எதற்காக இத்தனை காலம் வாழ்ந்தார்?
சிதறிக்கிடந்த சமஸ்தானத்து மன்னர்கள் பலரிடமும் தனித்தனியாகப் பேசி, தேச ஒற்றுமைக்காக உழைத்தார். இந்த நாட்டைத் தாங்கி நடத்திச் செல்ல உடல்வலிமையும், மனவலிமையும், ஆன்மநலனும் உள்ள குழந்தைகள் பிறக்கவேண்டும் என்று யோக தந்திரங்கள் செய்தார்.
ஒருமுறை கங்கையில் ஓர் ஓடத்தில் அவர் ஏறி ஒரு புறமாக அமர்ந்தார். அவரது எடை 140 கிலோ. மறுபுறம், பட்டுத்துணிகளும், ரத்தினங்களும், மகுடமுமாய் காசி அரசர் அமர்ந்தார். அவர், மணிகள் பதித்த தனது பரம்பரை வாளை, த்ரைலிங்கரிடம் காட்டிப் பெருமைப்பட்டார். அதை வாங்கிய த்ரைலிங்கர் கங்கையில் எறிந்து விட்டார். அரசன் விக்கித்து வருந்தும்போது, கங்கையில் கைவிட்டு, அதே போன்ற நான்கு வாட்களை எடுத்து, இவற்றுள் எது உன்னுடையது எடுத்துக்கொள்!' என்று உபதேசம் செய்தார்.
இன்னொரு முறை, தன்னை ஒரு பெட்டியில் இறக்கி ஆணி அறைந்து, ஒரு குறிப்பிட்ட இடத்தில் கங்கையில் அமிழ்த்தி விட வேண்டும் என்றார். அவர் சொன்னபடியே செய்யப்பட்டது. இரு கரையிலும் நின்ற கணக்கற்றோர் இதைப் பார்த்து அதிசயித்தனர். இரண்டு நாள் கழித்து மீண்டும் வந்து, பெட்டியின் அளவு சரியில்லை என்று சொல்லி, இன்னொரு பெட்டி செய்யச் சொல்லி, அதில் அமர்ந்து மீண்டும் மூழ்கி மறைந்தார்.
ஒரு பக்தருக்காக, சன்னிதியிலிருந்து அன்னபூரணியை வரவழைத்து, அவள் காலைத்தொடச் செய்தார்.
இவரே மதுரை காளவாசலில் சமாதி கொண்டிருக்கும் குழந்தையானந்த சுவாமி என்றும் சிலர் சொல்கின்றனர்.
அவர் கால் படாத சிகரங்களே இமயத்தில் இல்லை. ஒருசமயம், கயிலாயத்தைக் காண வந்த அவர், கண்ணே இமைக்காமல் ஆறு மாதங்களாக அசையாமல் அமர்ந்திருந்தார். அந்தளவுக்கு யோகாவில் அவர் திறமை வாய்ந்தவர்.
காசிக்குச் செல்லும்போது பஞ்சகங்காகாட் லிங்கக் கோவிலுக்கு செல்லுங்கள். அங்கே அவர் இன்றும் வாழ்கிறார் என்றும், நமக்கு அருள் செய்கிறார் என்றும் சொல்கிறார்கள்.
- இசைக்கவி ரமணன்