
வேலுார் மாவட்டம் கலவை என்னும் கிராமத்தில் முகாமிட்டிருந்தார் காஞ்சி மஹாபெரியவர். ஒரு தொழிலதிபர் தன் மனைவியுடன் மஹாபெரியவரை எதிர்பார்த்துக் காத்திருந்தார்.
அறையில் இருந்து மஹாபெரியவர் வெளியே வந்ததும், முன்வரிசையில் இருந்த தொழிலதிபரை பார்த்து, 'எப்படி இருக்கிறாய்?' என நலம் விசாரித்தார்.
இதுதான் சந்தர்ப்பம் என அவரும் எல்லோரும் கேட்கும்படியாக தான் செய்த அன்ன தானம், பள்ளிக்கூடம், கோயில்களுக்கு நன்கொடை, ஏழைகளுக்கு திருமண உதவி என ஒன்றையும் விட்டு வைக்காமல் சத்தமாக சொன்னார்.
பொறுமையுடன் கேட்ட மஹாபெரியவர் மெல்லிய குரலில், 'திருநெல்வேலியில் உன் வீட்டில் இருந்தானே சிறுவன் தட்சிணாமூர்த்தி, அவன் எப்படி இருக்கான்?' எனக் கேட்டார். வேறு எதுவும் கேட்காமல் அப்படியே கையை உயர்த்தி ஆசியளித்து விட்டு மீண்டும் அறைக்குள் நுழைந்தார்.
உடனே தொழிலதிபர் விம்மி அழ ஆரம்பித்தார். 'நான் பாவி, நான் பாவி' எனச் சொல்லிக் கொண்டே இருந்தார். பிறகு விசாரித்த போதுதான் உண்மை புரிந்தது.
அவருக்கு சகோதரி ஒருவர் இருந்தார். கணவனை இழந்த அவருக்கு ஒரு மகனும் இருந்தான். தொழிலதிபரின் வீட்டில்தான் இருவரும் தங்கியிருந்தனர். சகோதரி உடல்நலக்குறைவால் காலமான பிறகு அந்த சிறுவனை ஆதரிக்கும் எண்ணம் இல்லாததால் வெளியே துரத்தினார். அந்த சம்பவம் நடந்து பல ஆண்டுகளாகி விட்டது. அந்த சிறுவன்தான் தட்சிணாமூர்த்தி.
தாய்மாமனாக இருந்தும் அன்பு காட்டாமல் துரத்தி விட்டு, ஊராருக்கு தர்மம் செய்வது சரியல்ல என்பதை உணர்த்தினார் மஹாபெரியவர். அந்த தெய்வத்தின் தீர்ப்பை ஏற்று சகோதரியின் மகனைக் கண்டுபிடித்து உதவிக்கரம் நீட்டினார் அந்த தொழிலதிபர்.
காஞ்சி மஹாபெரியவரின் உபதேசம்
* எல்லோரும் நலமுடன் வாழ கடவுளை வேண்டுங்கள்.
* குலதெய்வத்தை ஆண்டுக்கு இரண்டு முறையாவது தரிசியுங்கள்.
* தேய்பிறையில் செய்யும் வழிபாடு பிரச்னையை போக்கும்.
* வளர்பிறையில் செய்யும் வழிபாடு வளர்ச்சியை தரும்.
* ஈர ஆடையுடன் வழிபாடு செய்யக்கூடாது.
* தாய் மதத்தை பழிப்பது தாயை பழிப்பதற்கு சமம்.
* மனதை கெடுக்கும் எந்த நிகழ்ச்சிகளையும் பார்க்காதீர்கள்.
உடல்நலம் பெற... காஞ்சி மஹாபெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்
அஸ்மிந் பராத்மன் நநு பாத்மகல்பே
த்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!
அநந்த பூமா மமரோக ராஸிம்
நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!
எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா! பிரம்மாவைத் தோற்றுவித்தவரே! நீயே நோய்களைப் போக்கி நலம் தர வேண்டும்.