sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 28, 2025 ,கார்த்திகை 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

பச்சைப்புடவைக்காரி - 38

/

பச்சைப்புடவைக்காரி - 38

பச்சைப்புடவைக்காரி - 38

பச்சைப்புடவைக்காரி - 38


ADDED : ஜன 30, 2023 12:44 PM

Google News

ADDED : ஜன 30, 2023 12:44 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இரு பயணங்கள்

உருவெளிப்பாடாகத் தோன்றிய உமையவளிடம் கேட்டேன்.“ஒரு முழுமையான ஆன்மிகப் பயணத்தைப் பற்றிச் சொல்லுங்களேன்”

“ஒன்றென்ன இரண்டு பற்றி சொல்கிறேன்.”

சேதுவும் வாசுவும் நண்பர்கள். மென் பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்தனர். சேது வஞ்சனையின்றி உழைத்தான். வாசுவுக்குப் பொறுமை இல்லை.

சூழ்ச்சியில் மேனேஜரை சிக்க வைத்து அவரது பதவியைப் பறித்தான் வாசு.

சேதுவிற்கு அவனது போக்கு பிடிக்காததால் வாசுவிடமிருந்து விலகினான். வாசு அசுர வேகத்தில் முன்னேறினான். சேதுவைவிட நான்கைந்து மடங்கு சம்பளம், பதவி. கூட மது, மாது பழக்கம்.

இருவருக்கும் திருமண வயதானது. ஒரு கோடீஸ்வரர் வாசுவிற்கு மகளைத் தர முன்வந்தார்.

சேது சாதாரண குடும்பப் பெண்ணைத் திருமணம் செய்தான்.

வாசு, சேதுவிற்கு நாற்பது வயதானபோது வாசு அந்த நிறுவனத்தின் துணைத் தலைவராக இருந்தான். சேது உதவி மேலாளராக இருந்தான்.

பென்ஸ் கார், பெரிய பங்களா,, வெளிநாட்டுப் பயணம் என்றிருந்தது வாசுவின் வாழ்க்கை. சேதுவோ அப்போதுதான் சிறிய கார் வாங்கினான். கடன் வாங்கி ஒரு பிளாட்டை வாங்கியிருந்தான்.

நிறுவனத்தின் தலைவர் பதவி காலியானபோது வாசு சூழ்ச்சியால் தலைவராகிவிட்டான். தலைவரான மகிழ்ச்சியை வாசுவால் கொண்டாட முடியவில்லை. வாசுவின் மகன் மதுவருந்தி காரை ஓட்டி விபத்தில் சிக்கிக் கொண்டான். வாசுவின் செல்வம், செல்வாக்கால் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டான். வாசுவின் மனைவிக்கு மனநோய் வந்துவிட்டது. சேது தன் போக்கில் நிம்மதியாக வாழ்ந்தான் .

கல்லுாரி சுற்றுலாவிற்குச் சென்ற வாசுவின் மகள் தான் கர்ப்பமாகி விட்டதாக சொன்னாள். பணத்தைத் தண்ணீராய் செலவழித்து வரவிருந்த பழியிலிருந்து மீட்டு மகளுக்குத் திருமணம் செய்து வைத்தான் வாசு.

போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தில் வாசுவின் மகன் கைதானான். நிறுவனத்தின் பணத்தை வாசு கையாடல் செய்து விட்டதைத் தணிக்கையாளர்கள் கண்டுபிடித்தனர். வழக்கு ஐந்து வருடம் நடந்தது. வாசுவிற்குச் சிறை தண்டனை கிடைத்தது. மேல் முறையீடு செய்து தன் செல்வாக்கை பயன்படுத்தி வெளியே வந்தான் வாசு.

சேதுவின் வாழ்வோ தெளிந்த நீரோடையாக சென்றது. அவனது மகன் பட்டப்படிப்பு முடித்து ஓவியக்கலை பயின்று பெயரும் புகழும் சம்பாதித்தான். ஒரு வட இந்தியப் பெண்ணை பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்தான். சேதுவின் மகள் தமிழில் முனைவர் பட்டம் பெற்று வெளிநாட்டு பல்கலைக் கழகத்தில் பணி செய்தாள். அங்கேயே ஒருவனை காதல் திருமணம் செய்து மகிழ்ச்சியாக வாழ்ந்தாள். இப்படியாக சேது மனநிறைவாக வாழ்ந்து கொண்டிருந்தான்.

வாசுவின் மனைவி படுத்த படுக்கை ஆனாள். வாசுவிற்கு நிம்மதி என்றால் என்ன என்று தெரியாமல் போனது.

வாசு, சேது இருவரும் 70ம் வயதில் இறந்து போனார்கள். அவர்களின் ஆன்மா அன்னையின் சன்னதியில் இருந்தன.

“ஏன் ஓரவஞ்சனை, தாயே? சேதுவிற்கு நிறைவான வாழ்வைத் தந்தீர்கள். எனக்கு வலியும் வேதனையும் நிறைந்த வாழ்வை தந்தீர்கள். நான் என்ன பாவம் செய்தேன்”

“உன் வாழ்வை நீதானே தேர்ந்தெடுத்தாய்?”

“எனக்கு மட்டும் ஏன் இத்தனை துன்பம்?

“சில இடங்களில் இருபதடி தோண்டினாலே தண்ணீர் வந்துவிடும். அப்படிப்பட்ட மனம் சேதுவிடம் இருந்தது. சில இடங்களில் அறுநுாறு அடி தோண்டினால்தான் கொஞ்சம் தண்ணீர் வரும். உன்மனம் அந்த ரகம்”

“எப்படிச் சொல்கிறீர்கள் தாயே”

“சூழ்ச்சியின் மூலம் அடுத்தவனைக் கெடுத்து நீ வாழ நினைத்தது அன்பின்மையின் வெளிப்பாடு. அதனால் உன் மனதின் ஆழத்தில் இருந்த அன்பைக் வெளிக் கொணர துன்பங்களைக் கொடுத்தேன். துன்பம் இல்லாமலேயே சேதுவின் அன்பு வெளிப்பட்டுவிட்டது. பத்தடி துாரத்தில் தண்ணீர் கிடைத்தபின் மேலும் ஏன் தோண்ட வேண்டும்?”

“செய்த பாவங்களுக்கு நான் தண்டனை அனுபவித்துவிட்டேன். சேது செய்த நன்மைகளுக்கு அவன் நல்ல வாழ்க்கை வாழ்ந்துவிட்டான். இப்போது எங்கள் இருவரின் வாழ்க்கையுமே முடிந்துவிட்டதே! இப்போது என்ன வித்தியாசம், தாயே?”

பராசக்தி சிரித்தாள்.

“மதுரையிலிருந்து சென்னைக்கு ரயிலில் போக ஒருவன் தீர்மானிக்கிறான். ஒரே ஒரு ரயில்தான் உள்ளது என வைத்துக் கொள்வோம். அதில் பலதரப்பட்ட பெட்டிகள் இருக்கும் அல்லவா?

“முதல் வகுப்பு 'ஏசி'யில் பயணித்தால் சுகமாக இருக்கும். துாங்கலாம். களைப்பே தெரியாது. இரண்டாவது வகுப்பு 'ஏசி'யில் அந்தளவுக்கு சுகம் இருக்காது என்றாலும் அந்தப் பயணமும் வசதியாகத்தான் இருக்கும்.

சாதாரண படுக்கை வசதி உள்ள பெட்டியில் வசதி மிக குறைவாக இருக்கும்.

“பதிவு செய்யப்படாத பெட்டியில் பயணம் செய்வது சித்ரவதையாக இருக்கும். கூட்டம் அதிகம். அங்கே இங்கே நகர முடியாது. துாக்கம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை.

“அதுபோல்தான் ஆன்மிகப் பயணமும். அதற்கு கொடுக்கவேண்டிய கட்டணம் அன்பு. நீ குறைவாகவே கட்டணம் செலுத்தினாய். பதிவு செய்யப்படாத பெட்டியில் இடிபாடுகளுக்கு இடையே பயணித்தாய். சேது அன்பை வாரி வழங்கினான். முதல் வகுப்பில் பயணித்தான். பயணம் சுகமாக இருந்தது” அப்படியும் வாசு விடவில்லை.

“எந்தப் பெட்டியில் பயணித்தாலும் சென்னையை அடைந்தபின் வித்தியாசம் கிடையாதே. முதல் வகுப்புப் பெட்டியும் இரண்டாம் வகுப்புப் பெட்டியும் ஒரே சமயத்தில்தானே சென்னை போய்ச் சேரும்?”

“சென்னையோடு பயணம் முடியாதே! இன்னும் பயணிக்க வேண்டிய துாரம் நிறைய உள்ளது. சென்னை வரை சுகமாகப் பயணித்த சேது அடுத்த கட்ட பயணத்துக்குத் தயாராக இருக்கிறான். அதற்கு இன்னும் அதிக அன்பைக் கொடுக்கவும் சித்தமாக இருக்கிறான். அதனால் விமானத்தில் பயணிக்கலாம். என்னை விரைவில் வந்தடைவான்.

“ரயில் பயணத்திலேயே துவண்டுவிட்ட நீ அடுத்த கட்ட பயணத்தைத் தொடங்கவே நாளாகும். அவ்வளவு களைப்பில் உள்ளாய்''

வாசு தாயின் கால்களில் விழுந்து,“எனக்கு நல்ல வார்த்தை சொல்லி என் பயணத்தையும் சுகமாக்கக் கூடாதா?”

“அன்பை வாரி வழங்கு. அடுத்த கட்ட பயணம் சுகமாகும். என் ராஜ்ஜியத்தில் அன்பு ஒன்றே செலாவணி. பணம், பதவி, செல்வம், புகழ் எதுவும் எடுபடாது. இது புரிந்தால் உன் பயணம் இனிக்கத் தொடங்கும்”.

அன்னையை வணங்கினேன்.

“சேது போல உனக்கும் சுகமாக ஆன்மிகப் பயணம் செய்யும் ஆசை வந்து விட்டதா?”

“இல்லை, தாயே! இன்னும் எத்தனையோ பேர் வாசுவைப் போல் தவறான பயண வழியைத் தேர்ந்தெடுத்து மரண வேதனையை அனுபவிக்கிறார்கள். அவர்களின் பயணத்தை இனிமையாக்க வேண்டும்.”

“உன் பயணத்தைப் பற்றி?”

“கொத்தடிமைக்கு ஏது தாயே பயணமும் பரங்கிக்காயும்? காலமெல்லாம் உங்கள் காலடியில் கிடக்கும் நான் எதற்காக, எங்கே, எதை நோக்கிப் பயணிக்க வேண்டும்?”

-தொடரும்

வரலொட்டி ரெங்கசாமி

varalotti@gmail.com






      Dinamalar
      Follow us