ADDED : மே 16, 2018 03:10 PM

நிரந்தர நரகம்
''எங்கள் மதத்தில் சில பாவங்களுக்கு நிரந்தர நரகமே தண்டனை. அதிலிருந்து விடுதலையே இல்லை. அப்படி உங்கள் மதத்தில் இருக்கிறதா?''
வேற்று மதத்து நண்பர் கேட்ட போது மனதுக்குக் கஷ்டமாக இருந்தது. பாவம் எவ்வளவு கொடியதாக இருந்தாலும் அதற்கு நிரந்தர நரகம் என்பது அதை விடக் கொடிய தண்டனை. நமது புராணங்களில் பல இடங்களில் முனிவர்களின் கொடிய சாபங்கள் பற்றிப் படித்திருக்கிறேன். ஆனால் விமோசனமில்லாத சாபமும், விடுதலையில்லாத நரகமும் இருக்க முடியாது என்று தான் தோன்றுகிறது. ஒருவேளை அப்படி இருந்தால்... நினைக்கவே குலை நடுங்குகிறது. நான் பெரிய பாவியும் இல்லை. அப்பழுக்கில்லாத உத்தமனும் இல்லை. என்றாலும் ஏதோ ஒரு சந்தர்ப்ப சூழ்நிலையில் கொடிய பாவம் ஒன்றைச் செய்ய நேர்ந்து விட்டால்..
அப்புறம் என் ஆன்மா நிரந்தரமாக நரகத்தில் வேக வேண்டியதுதானா? எனக்கு விமோசனமே கிடையாதா?
இந்தச் சிந்தனையோடு இரவு நேரத்தில் நடந்து கொண்டிருந்த நான், வீட்டை விட்டு வெகுதுாரம் வந்து விட்டேன் போலும்.
போக்குவரத்து அதிகமில்லாத அழகர்கோவில் சாலையில் நின்றபடி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்.
''இந்த இடம் எங்கே இருக்கிறது?''
என் முன்னால் ஒரு அழகான பெண் நின்று கொண்டிருந்தாள். பாவம் இந்த இரவு நேரத்தில் இவள் எப்படித் தனியாக, வழியும் தெரியாமல்... என்று மனதில் எண்ணம் எழுந்தது.
''நான் வழிதேடி வந்தவள் இல்லை. வழிகாட்ட வந்தவள்'' என்றாள் அவள்.
அந்த உறுதியான வார்த்தைகளில் வெளிப்பட்ட அழுத்தமான அன்பு அன்னையைக் காட்டிக் கொடுத்துவிட்டது. பொது இடம் என்றும் பார்க்காமல் அவளின் கால்களில் விழுந்தேன்.
''இங்கே உட்கார்ந்து கொண்டு பேசுவோம்'' என்ற அன்னையின் காலடியின் கீழ் அமர்ந்து, கருணை பொங்கும் அவள் கண்களைப் பார்ப்பதை விடச் சிறந்த சொர்க்கம் எதுவும் இல்லை.
''உன் மனதை அரித்துக் கொண்டிருக்கும் கேள்வியைக் கேள்''
கேட்டேன்.
''அங்கே என்ன நடக்கிறது என்று பார்''
அது மதுரையின் புகழ் பெற்ற பெண்கள் கல்லுாரி. மணி காலை ஒன்பதரை. கல்லுாரியின் பெரிய கதவுகள் மூடப்பட்டிருந்தன. வெளியே ஒரு டஜன் மாணவிகள் கவலை தோய்ந்த முகத்துடன் நின்று கொண்டிருந்தார்கள்.
''என்ன நடக்கிறது தெரிகிறதா?''
''தாயே... வெளியே நிற்கும் அந்தப் பெண்கள் கல்லுாரிக்குத் தாமதமாக வந்திருக்கிறார்கள். குறித்த நேரத்திற்கு வராத மாணவிகளை அவர்கள் கல்லுாரிக்குள் விட மாட்டார்கள். அரை மணி நேரம் காத்திருக்க வேண்டும். அதன் பின்னர் ஆசிரியை ஒருவர் வந்து மாணவியரின் பெயர், வகுப்பு விபரங்களைக் கேட்பார். கல்லுாரிக்குக் குறித்த நேரத்தில் வர வேண்டியதன் அவசியம் குறித்து விலாவாரியாகச் சொல்வார். அதன் பின் மாணவிகள் வகுப்பிற்குள் செல்ல அனுமதிக்கப்படுவர்''
''அது எப்படி இவ்வளவு துல்லியமாகச் சொல்கிறாய்?''
'' அன்றாடம் நான் பார்க்கும் காட்சி தாயே இது. என் அலுவலகத்திற்குச் செல்லும் வழியில் தான் இந்தக் கல்லுாரி இருக்கிறது''
''பாவம் அந்த மாணவிகளை வெயிலில் வாட விடுகிறார்களே அது நியாயம் தானா?''
''பின்... நேரம்தவறாமை என்னும் நல்ல குணத்தை அவர்கள் எப்படிக் கற்றுக் கொள்வது?''
''செய்யும் பாவங்களுக்கு நான் கொடுக்கும் தண்டனையும் இதே ரகத்தைச் சேர்ந்தது தான். பாவம் செய்தவர்களை அழிப்பது என் நோக்கம் அல்ல. அவர்கள் மனதில் இருக்கும் பாவ எண்ணங்களைப் போக்கி அவர்களையும் நல்லவழியில் வாழவைக்க வேண்டும் என்பதற்குத்தான் தண்டிக்கிறேன்''
''நிரந்தர நரகம் என்று ஏதாவது.. ''
''நிச்சயம் கிடையாது. எந்தக் கல்லுாரியின் நிர்வாகமும் தாமதமாக வரும் மாணவிகளைக் கல்லுாரியை விட்டு வெளியேற்றி விடாது. தொடர்ந்து தாமதமாக வந்தால் இன்னும் அதிக நேரம் காக்க வைப்பார்கள். பெற்றோர்களிடம் புகார் போகும். கல்லுாரி முதல்வரிடம் பேச்சுக் கேட்க வேண்டும் அவ்வளவு தான்''
''தாயே தாமதமாக வருவது என்பது பாவங்களின் தரவரிசையில் மிகச் சிறுபாவம். கொலை, கற்பழிப்பு போன்ற கொடிய பாவங்கள் செய்பவர்களுக்கு...''
''இந்தக் கல்லுாரியில் நடப்பதை உவமையாகத் தான் சொன்னேன். அந்தந்த பாவங்களுக்கு ஏற்றாற் போல் தண்டனை கிடைக்கும். பாவம் எவ்வளவு கொடியதாக இருந்தாலும் சரி நிரந்தர நரகம் என்ற தண்டனை நிச்சயம் கிடையாது. அன்பே உருவான தெய்வம் இருக்கும் போது நிரந்தர நரகம் நிச்சயம் இருக்க முடியாது.. நான் இருக்கிறேன்.. அதனால்...''
எனக்குப் புரிந்தது.
''மனிதர்களுக்குள் சில கொடூரமானவர்கள் இருக்கிறார்கள். சிறுமிகளைக் கற்பழித்துக் கொல்லும் காமுகர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு நிரந்தர நரகம் கொடுக்கலாம் தாயே. தப்பில்லை.''
''எது தப்பு எது சரி என்று எனக்கே வகுப்பெடுக்கிறாயாக்கும்?''
''இல்லை வந்து....''
''அது போல் கொடும்பாவிகளை நீங்கள் மரண தண்டனை கொடுத்து, சமுதாயத்திலிருந்து வெளியே துாக்கி எறிந்து விடுவீர்கள். நான் அப்படிச் செய்ய முடியாதே?''
''ஏனம்மா?''
''எனக்கு வெளியில் என்று எதுவும் இல்லையே!''
''பின்?''
''சட்டையில் கறைபட்டது என்பதற்காக உடலையே வெட்ட வேண்டியதில்லையே. வேறு சட்டை அணியலாம். கொடிய பாவிகளுக்கும் வேறு உடல், சூழலைக் கொடுத்து அவர்களைத் திருத்தும் பொறுப்பு எனக்கு இருக்கிறது''
''அப்படியென்றால் நிரந்தர நரகம் என்பது...''
''நிச்சயம் இல்லை. நிரந்தர சொர்க்கம் என்பதும் இல்லை. அன்பு மட்டுமே நிரந்தரம். இதைப் புரிந்து கொள்ளவேண்டுமென்றால் வேறொரு பாடத்தை நீ அவசியம் புரிந்து கொள்ள வேண்டும்.''
''அது என்னம்மா?''
''பிறப்பு உன் தொடக்கமும் இல்லை; இறப்பு உன் முடிவும் இல்லை.''
''கொஞ்சம் விளக்கமாக...''
''நேரமாகி விட்டது இன்னொரு நாள் அதைப் பார்க்கலாம்.''
இன்னும் வருவாள்
தொடர்புக்கு: varalotti@gmail.com
- வரலொட்டி ரங்கசாமி