
குருகுல வாசம் முடித்து ஊருக்கு புறப்பட தயாராக இருந்தனர் சீடர்கள். அப்போது அவர்கள் ''குருதேவா! தங்களுக்கு குருதட்சிணை தர விரும்புகிறோம். விரும்பியதைக் கேளுங்கள். எல்லாம் கற்றுக் கொண்டோம். தெரியாதது ஏதுமில்லை'' என அலட்சியமாக தெரிவித்தனர். இதைக் கேட்ட குருநாதர் அவர்களுக்கு பாடம் புகட்ட விரும்பினார்.
“சீடர்களே... நீங்கள் இங்குள்ள காட்டிற்குச் செல்லுங்கள். அங்கிருந்து யாருக்கும் எதற்கும் பயன்படாத பொருள் இருந்தால் எனக்கு கொண்டு வாருங்கள்'' என்றார்.
'போயும் போயும் பயனற்ற பொருளை குருநாதர் கேட்கிறாரே' என அலட்சியத்துடன் காட்டிற்கு புறப்பட்டனர். மரத்தடியில் குவிந்து கிடந்த சருகுகளை, 'பயனற்ற பொருள்' என கருதி ஒரு கூடையில் அள்ளத் தொடங்கினர்.
அப்போது அங்கு வந்த ஒருவர், “இதை நான் சேகரித்து வைத்திருக்கிறேன்.
இதை வயலுக்கு உரமாக போடுவேன்'' என்றான். 'சருகுகள் இப்படியும்
பயன்படுமா' என வியந்து நடக்க ஆரம்பித்தனர்.
ஓரிடத்தில் பெண்கள் சிலர் உலர்ந்த சருகுகளைப் பொறுக்குவதைக் கண்டனர்.
அவர்களிடம், “அம்மா... என்ன செய்கிறீர்கள்'' எனக் கேட்டனர்.
''மூலிகை மரமான இதன் சருகுகளில் இருந்து மருந்து தயாரித்து விற்போம்'' என்றனர்.
அப்போது பறவை ஒன்று சருகு ஒன்றை அலகில் எடுத்துக் கொண்டு பறப்பதைக் கண்டனர்.
'ஓ! பறவைக்கு கூடு கட்டவும் சருகு பயன்படுகிறதே' என ஆச்சரியப்பட்டனர். அப்போது தாகமாக இருக்கவே, தண்ணீர் தேடி குளத்திற்குச் சென்றனர். நீரைக் கைகளில் அள்ளிக் குடித்த போது சருகு ஒன்று மிதந்து வந்தது. அதில் இரண்டு எறும்புகள் இங்கும் அங்கும் ஓடுவதைக் கண்டனர்..
'எறும்புகள் நீருக்குள் மூழ்காமல் இருக்க சருகு பயன்படுகிறது' என்பது புரிந்தது. வெறும் கையுடன் குருகுலத்திற்கு திரும்பினர். சீடர்களைக் கண்ட குருநாதர் புன்னகைத்தார்.
''வாருங்கள் குழந்தைகளே....பயனற்ற பொருள் கிடைத்ததா'' என ஆர்வமுடன் கேட்டார்.
''குருவே...பயனற்றது என்று ஒன்றும் உலகில் இல்லை. உலர்ந்த சருகு கூட பலவிதங்களில் பயன்படுவதை நேரில் கண்டோம்'' என ஒவ்வொரு நிகழ்ச்சியாக விளக்கினர்.
“உலர்ந்த சருகே இத்தனை வழிகளில் பயன்படுமானால் நீங்கள் பிறருக்கு எந்த வகையில் உதவலாம் என்று எண்ணிப் பாருங்கள். இதை உணர்த்தவே இப்படி ஒரு அன்பளிப்பைக் கேட்டேன். நான் சொல்லிக் கொடுத்ததை பிறருக்கும் சொல்லித் தந்து அனைவரையும் முன்னேற்றுங்கள். அதுவே எனக்கான குருதட்சிணை'' என்று சீடர்களுக்கு குரு ஆசியளித்தார்.