ADDED : மார் 10, 2015 02:21 PM

புனிதமான கங்கை ஆற்றங்கரையில் இருந்த அந்த அழகான ஆஸ்ரமத்தில் துறவி ஒருவர் வசித்தார். அவர் மறை நூல்களை ஆழமாகப் படித்தவர். கண்ணன் மேல் பக்திபாடல்கள் பாடுவதில் வல்லவர். அவரிடம் பல சீடர்கள் இருந்தார்கள். கங்கையாற்றின் மறு கரையை ஒட்டியிருந்த யாதவர் குடியிருப்பில் யசோதை என்ற இடையர் குலப் பெண் ஒருத்தி வசித்து வந்தாள். ஆஸ்ரமத்திற்கு வேண்டிய பால், தயிர், வெண்ணெய், நெய்யை அவள் கொடுத்து வந்தாள். துறவிக்குப் பல செல்வந்தர்கள் சீடர்களாக இருந்தார்கள். அதனால் யசோதை கொடுக்கும் பால் பண்டங்களுக்கு சந்தை மதிப்பைவிட அதிமாகவே கொடுத்துவந்தார் துறவி.
அந்த வருடம் மழை பெரிய அளவில் பெய்த காரணத்தால் கங்கை பெரும் பிரவாகமாக ஓடிக்கொண்டிருந்தது. ஒருநாள், யசோதை பெரிய மூங்கில் தட்டைத் தலைக்கு மேல் வைத்துக்கொண்டு காலையிலேயே கங்கையாற்றங்கரைக்கு வந்துவிட்டாள். அந்தக் காலத்தில் ஓடம் மூலமாகத்தான் ஆற்றைக் கடக்க வேண்டும். வெள்ளத்தைப் பார்த்த ஓடக்காரர்கள் வர மறுத்துவிட்டார்கள். யசோதை ஊரைச் சுற்றிப் பல காத தூரம் நடந்து ஆஸ்ரமத்தை அடைந்த போது நண்பகலாகிவிட்டது.
அதனால் ஆஸ்ரமத்தில் பெரிய குழப்பம் உண்டானது. காலையில் கண்ணனுக்கு நிவேதனம் செய்யப் பால் இல்லை. ஆஸ்ரமத்தில் உள்ளவர்கள் அருந்தப் பால் இல்லை. உணவுக்கு நெய்யும் தயிரும் இல்லை.
''ஏனம்மா இப்படிச் செய்துவிட்டாய்?'' என்று ஆதங்கப்பட்டார் துறவி.
''கங்கையில் வெள்ளம். ஓடக்காரர்கள் வர மறுத்துவிட்டார்கள். ஊரைச் சுற்றி வர வேண்டியிருந்தது, '' என்று தயங்கித் தயங்கித் தன்பக்க நியாயத்தைச் சொன்னாள் யசோதை.
துறவி வாய்விட்டுச் சிரித்தார்.
''உன் பெயர் யசோதை. நீ கண்ணனுக்கு நிவேதனம் செய்யப் பால் கொண்டு வருகிறாய். உனக்கு ஓடம் எதற்கு? நாளை ஓடக்காரர்கள் வர மறுத்தால் கண்ணனின் பெயரைச் சத்தமாகச் சொல்லியபடியே ஆற்றில் இறங்கிவிடு. கண்ணன் உன்னைத் தண்ணீரின் மேல் நடக்க வைப்பான்.''
''நிஜமாவா சாமி?''
''கண்ணன் பெயரைச் சொல்லி அவனவன் சம்சாரம் என்ற ஆழம் காணமுடியாத மகா சமுத்திரத்தையே ஒரு நொடியில் கடந்து
விடுகிறான். இந்த கங்கை எம்மாத்திரம்.! வேண்டுமானால் நாளை முயற்சி செய்துதான் பாரேன்.''
''சரி சாமி.''
''ஆனால் இரண்டு கடுமையான நிபந்தனைகள் இருக்கின்றன. ஒன்று நீ இப்படிச் செய்வது வேறு யாருக்கும் தெரிய வேண்டாம். இரண்டாவது கண்ணன் இதைச் செய்வான் என்று நீ மனமார நம்பவேண்டும். உன்னிடம் நம்பிக்கையில்லையென்றால் இந்த சித்து வேலை பலிக்காது! புரிகிறதா!''
''சரி, சாமி. அப்படியே செய்யறேன்.''
துறவியின் பேச்சுக்கு எதிர்ப்பேச்சு பேசும் துணிச்சல் யசோதைக்கு இல்லை. அன்று முழுவதும் கண்ணனின் படத்திற்கு முன் அமர்ந்தபடி தனக்கு அந்த நம்பிக்கையை அந்தக் கண்ணன்தான் தர வேண்டும் என்று வேண்டிக்கொண்டிருந்தாள்.
மறுநாள் காலை... வெள்ளம் இன்னும் வடிந்தபாடில்லை. ஓடக்காரர்கள் அன்றும் வர மறுத்துவிட்டார்கள். துறவி சொன்ன வழியில் முயன்றுதான் பார்ப்போமே என்று யாரும் இல்லாத ஒரு இடத்திற்குச் சென்றாள் யசோதை. கண்ணனின் நாமத்தைப் பலமாகச் சொன்னபடி கண்ணை மூடிக்கொண்டு ஆற்றில் காலை வைத்தாள். என்ன ஆச்சரியம்! அவள் தண்ணீரில் மூழ்கவில்லை. தரைமேல் நடப்பது போல் தண்ணீரின் மேல் நடந்து போனாள். குறித்த நேரத்தில் ஆஸ்ரமத்திற்குப் பால் பண்டங்கள் வந்து சேர்ந்தன.
ஒரு வாரம் கழித்துத் துறவிக்குத் தான் யசோதையிடம் சொன்னது நினைவிற்கு வந்தது. மறுநாள் யசோதையிடம் கேட்டார் ''இப்போதெல்லாம் காலத்தில் வந்துவிடுகிறாயே, எப்படி?''
''எல்லாம் நீங்க சொல்லிக் கொடுத்த மந்திரம்தான் சாமி. கண்ணான்னு சொல்லிட்டு ஆத்து மேல நடக்க ஆரம்பிப்பேன். வேகமா வந்துருவேன். உங்க மகிமையே மகிமை சாமி.''
''என்னிடம் பொய் சொல்லாதே.''
''சத்தியமா சாமி''
''எங்கே நடந்து காட்டு பார்க்கலாம்.''
துறவியும், நூற்றுக்கணக்கான சீடர்களும் பார்த்துக்கொண்டிருக்க யசோதை அநாயாசமாகத் தண்ணீரின் மேல் நடந்து காட்டினாள்.
துறவி அசந்து போனார்.
''இப்ப நீங்க நடங்க சாமி.''
நாம் சொல்லிக்கொடுத்தே இவளால் நீரின்மேல் நடக்க முடிகிறதென்றால் நம்மால் ஏன் முடியாது? என்று நினைத்த துறவி ஆற்றிற்குள் இறங்க முற்பட்டார்.
யசோதை கலகலவென்று சிரித்தாள். துறவி அவளை முறைத்துப் பார்த்தார்.
''என்ன சாமி! உங்க கைய நம்பற அளவுக்குக் கூட அந்தக் கண்ணன நம்பமாட்டேங்கறீங்க? பாருங்க, துணி நனஞ்சிரப் போகுதுன்னு உங்க கையால தூக்கிப் பிடிச்சிக்கிட்டு இருக்கீங்க? இந்த உலகத்தையே முழுங்கி ஏப்பம் விட்டவன் கண்ணன். அவன் உங்களக் கைவிட்ருவானா என்ன? சாமி உங்க கையவிட உங்க நம்பிக்கைதான் முக்கியம். நம்பிக்கையில்லேன்னா மந்திரம் பலிக்காதுன்னு நீங்கதானே சொல்லிக் கொடுத்தீங்க சாமி?''
அசட்டுச் சிரிப்புடன் கையைவிட்டு நடக்க முற்பட்டார் துறவி. அடுத்த நிமிடம் பெரிய சத்தத்துடன் ஆற்று நீரினுள் விழுந்தார்.
இது ராமகிருஷ்ண பரமஹம்சர் சொன்ன கதை. இதில் பெரிய சூட்சுமம் அடங்கியிருக்கிறது.
என் நண்பர் ஒருவர் அனைத்துத் தன்னம்பிக்கை நூல்களையும் கரைத்துக் குடித்தவர். சங்க இலக்கியம், திருக்குறள், பகவத் கீதை, எல்லாம் அத்துப்படி. யாராவது அவரிடம் வாழ்க்கையில் கஷ்டம் என்று சொன்னால் போதும். அரைமணி நேரம் நிறுத்தாமல் உபதேசம் செய்வார். ஆன்மிக நூல்களிலிருந்து மேற்கோள்களை அள்ளிவிடுவார். நானே பலரை அவரிடம் அனுப்பியிருக்கிறேன்.
அவருடன் பேசிவிட்டு வந்தவர்கள் எல்லோரும் புத்துணர்வுடன் தங்கள் வாழ்க்கைப் பிரச்சினையை எதிர்நோக்குவார்கள். இறைவன் உனக்குக் கொடுத்த மகத்தான பரிசு இதுவென்று அவரைப் பலமுறை வாழ்த்தி இருக்கிறேன்.
இதற்கிடையில் நண்பர் பெரிய அளவில் முதலீடு செய்திருந்த நிறுவனம் திடீரென்று திவாலாகிவிட்டது. அவரைப் பார்க்கப் போனேன். ஒரே புலம்பல். ''ஊருக்கெல்லாம் உதவி செய்த என்னை ஆண்டவன் இப்படி நடுத்தெருவில் நிற்கவைத்துவிட்டானே,'' என்று அழுதார்.
''அதனால் என்ன? நீ ராபர்ட் ப்ரூஸ் என்ற மன்னனின் கதையைப் பலரிடம் சொல்லியிருக்கிறாயே! அதை மனதில் நிறுத்திக் கொண்டு நீ மீண்டும் வாழத் தொடங்கலாமே.''
''போய்யா போ. எனக்கு வந்திருக்கறது நிஜ பிரச்னை. அதுக்குக் கதையெல்லாம் உதவாது. தனக்கு வந்தாத்தான் தெரியும் கழுத்து வலியும் திருகுவலியும்! போய்யா வேலையப் பாத்துக்கிட்டு! என் பிரச்னை தீர வழியே இல்லை. அது தானாத் தீர்ந்தாத்தான் உண்டு.''
அவர் ஒரு பிரபலமான மதபோதகர். புற்று நோயைக் கூட ஜெபம் செய்து குணமாக்கி விடலாம் என்று நம்புபவர். அவரது
பிரார்த்தனையால் அபூர்வமாக ஒரு சிலருக்கு நோய் குணமாகியும் இருக்கிறது. ஆனால் அவருக்கு சாதாரணக் காய்ச்சல் வந்துவிட்டால் போதும்.. கத்திக் களேபரம் செய்துவிடுவார். மருந்து மாத்திரை ஊசி என்று சுற்றியிருப்பவர்களைக் கலங்கடித்து விடுவார்.
இன்று பலரும் கதையில் வரும் துறவியைப் போல்தான் இருக்கிறார்கள். அவர்கள் சொல்வதை ஊரார் நம்புகிறார்கள் - ஆனால் பாவம்..
அவர்களே அவர்களை நம்புவதில்லை. துறவி சொன்னதை நம்பி ஒரு பால் விற்கும் பெண்ணால் கங்கையாற்றின் மேல் நடக்க
முடிகிறது; அந்த வித்தையை அவளுக்குக் கொடுத்த துறவியால் அதைச் செய்யமுடியவில்லை. காரணம் அவரிடம் நம்பிக்கையில்லை.
இது போன்ற தன்னம்பிக்கைக் கதைகளை மேடைப் பேச்சிற்காகவும் நண்பர்களைப் பிரமிக்கவைக்கவும் மட்டும் பயன்படுத்தாதீர்கள். அவற்றில் பொதிந்திருக்கும் மகத்தான உண்மைகளை உணர்வு பூர்வமாக நம்புங்கள்.
நமக்குத் தேவை அந்தத் துறவியின் மனநிலை அல்ல. நம்பினால் சாதிக்க முடியும் என்ற ஆயர்குலப் பெண்மணியின் மனநிலைதான்! அது இருந்தால் வாழ்க்கையில் என்றும் மகிழ்ச்சியே!
- இன்னும் மலரும்
வரலொட்டி ரெங்கசாமி

