ADDED : மார் 17, 2015 12:34 PM

மகேந்திரபுரி நாட்டை மகேந்திரவர்மன் சிறப்பாக ஆண்டு வந்தார். மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தனர். ஆனால், மன்னருக்கு மட்டும் கவலை. தனக்குப் பின் நாட்டை ஆள வாரிசு இல்லையே என்று! மந்திரிப் பிரதானிகள் ஆளாளுக்கு அறிவுரை சொன்னார்கள். ஒருவர்
மன்னரை இன்னொரு திருமணம் செய்து கொள்ளச் சொன்னார். மற்றவர் ஒரு மகனைத் தத்தெடுக்கச் சொன்னார். இன்னொருவர் யானையின் கையில் மாலையைக் கொடுத்து யார் கழுத்தில் மாலையைப் போடுகிறதோ அவரையே மன்னராக்கலாம் என்ற மரபைச் சொன்னார். இன்னொருவரோ, வீர விளையாட்டு நடத்தி அதில் வெற்றி பெறுபவரை மன்னராக்குவதே உசிதம் என்றார்.
இறுதியாக மன்னர் தன் கருத்தைச் சொன்னார்.
''இந்த வழிகளில் எல்லாம் எனக்கு ஒரு மகன் கிடைக்கலாமே தவிர நாட்டையாள நல்ல மன்னன் கிடைக்க மாட்டான். அதனால் நான் ஒரு வழி சொல்கிறேன்,''.
மன்னர் சொன்னதை கேட்டார்கள் அமைச்சர்கள்.
இரண்டு வாரங்கள் கழித்து ஒரு நாள்...
நாடெங்கும் தண்டோரா போடப்பட்டது. தலைநகரத்துக்கு வெளியே உள்ள பெரிய நிலப்பரப்பில் ஒரு பெரிய கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதைத் தண்டோராக்காரன் சத்தமாகச் சொன்னான்.
அறிவிப்பின் மிக முக்கியமான பகுதி கடைசியில் வந்தது.
அந்தக் கண்காட்சியில் எங்கேயோ ஒரு இடத்தில் மன்னர் மறைந்து கொண்டிருப்பார். நாட்டியம் ஆடும் கூட்டத்தில் இருக்கலாம். பாடகராக, பிச்சைக்காரராக, கழைக்கூத்தாடியாக எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். மன்னரை யார் முதலில் கண்டுபிடிக்கிறார்களோ அவருக்கே இளவரசர் பட்டம் சூட்டப்படும்.
கண்காட்சியைக் காண மக்கள் திரண்டார்கள். போட்டியில் வென்றால் கிடைப்பது ராஜ பதவியாயிற்றே! வந்தவர்கள் மூலை முடுக்கெல்லாம் மன்னரைத் தேடினார்கள். யார் கண்ணிலும் அவர் படவில்லை.
மக்கள் சலித்துப் போனார்கள்.
இன்னும் 15 நாட்கள்தான் கண்காட்சி நீடிக்கும் என்று அறிவிப்பு வெளியானது. நாட்கள் கடந்ததே தவிர, மன்னர் அகப்படவில்லை. அமைச்சர்கள் நம்பிக்கை இழந்தார்கள். மன்னர் கவலைப்படவில்லை. ''இந்த நாட்டையாளும் நல்லவன் விரைவில் வருவான்'' என்று
நம்பிக்கையோடு சொன்னார்.
ஒரு கிராமத்தில் வசித்த விவசாயியின் மகன் மணிமாறன், கண்காட்சிக்கு வந்தான். தான் மன்னனாகிவிட்டால், தாயும் தந்தையும் வேகாத வெயிலில் வயல் வேலை செய்ய வேண்டாமே என்று நினைத்துத்தான் அங்கே வந்திருந்தான். கண்காட்சி முழுவதையும் ஒரு சுற்றுச் சுற்றி வந்தான். எல்லாரும் எளிதாகக் கண்டுபிடிக்கும் இடத்தில் மன்னர் இருக்க வாய்ப்பில்லை என்று அனுமானித்தான். எனவே, பொழுதுபோக்கு அரங்குகளை ஒதுக்கிவிட்டு, மற்ற இடங்களை நுட்பமாகக் கவனித்தான்.
ஒரு மூலையில் காவியும் வெள்ளையும் பூசப்பட்ட சுவர் இருந்தது. கண்காட்சிக்குள் கோயிலா? சரி..கடவுளைப் பிரார்த்தித்துவிட்டு, தேடலைத் தொடங்கலாம் என்று நினைத்து உள்ளே சென்றான். ஒரு பூஜாரி மட்டும் இருந்தார்.
''மன்னன் இருக்கும் இடம் உங்களுக்குத் தெரியுமா சுவாமி?''
''தெரிந்தால் நான் ஏனைய்யா பூஜாரியாக இருக்கிறேன்?''
''சரி நான் கிளம்புகிறேன். கோயிலில் வேறு யாரும் இல்லை. உள்ளே இருட்டில் அதிக நேரம் இருக்க வேண்டாம்.''
மணிமாறன் கோயில் சுவர்களைக் கூர்ந்து நோக்கியபடி நடந்து கொண்டிருந்தான்.
ஓரிடத்தில், கோயில் சுவரின் ஒரு கல் சற்றே பிதுங்கியிருப்பதைப் போல் தோன்றியது.
அது கண்காட்சிக்காக அவசரம் அவசரமாகக் கட்டிய கோயில் அல்லவா? அதனால் சரியாகப் பொருத்தியிருக்க மாட்டார்கள் என்று நினைத்து அதை ஆட்டிப் பார்த்தான். அசைந்து கொடுத்தது.
'ஒரு வேளை இது ரகசியப் பாதையாக இருக்குமோ?' கல்லை நகர்த்தினான். உள்ளே ஒரே இருட்டு... பாம்பு, பூச்சி இருக்குமோ?
புதுக்கோயில் என்பதால் அதற்கு வாய்ப்புக் குறைவு என்று தேற்றிக்கொண்டு தட்டுத் தடுமாறி உள்ளே இறங்கினான். உள்ளே குகை போல் பாதை நீண்டது. முடிவில் ஒரு விளக்கின் ஒளி தெரிந்தது. அதை நோக்கிக் கவனமாக நடந்தான்.
விளக்கின் அருகே சென்றவன் திகைத்தான்.
சற்றுத் தள்ளியிருந்த ஒரு விசாலமான அறையில் அரசவைக் கூட்டம் நடந்து கொண்டிருந்தது.
மணிமாறனைக் கண்டவுடன் மன்னரே எழுந்து நின்று வரவேற்றார்.
''எனக்கு அடுத்து இந்த நாட்டை ஆளப்போகும் நாயகனே வருக.''
மன்னர் அவனைத் தழுவிக்கொண்டார். மந்திரிப் பிரதானிகள் ஆர்ப்பரித்தார்கள். மன்னன் ஆனான் மணிமாறன். அந்த மன்னன் செய்ததைத்தான் கடவுளும் செய்திருக்கிறார். ஆடல் பாடல் கேளிக்கைகள் இன்ப விளையாட்டுக்கள் நிறைந்த இந்த உலகைப் படைத்துவிட்டு, யாருமே போக விரும்பாத ஒரு தனியிடத்தில், மனிதனின் வெற்றியையும் மகிழ்ச்சியையும் ஒளித்து வைத்துவிட்டார்.
இந்த உலகம் என்பதே கண்காட்சி. இதில் மறைந்து நிற்கிறது மகிழ்ச்சியும், வெற்றியும். இதை எல்லாருமே தேடிப் பார்க்கிறார்கள்.
கிடைக்கவில்லை என்றதும், தேடலைத் தொலைத்து விட்டுக் கேளிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். அதனால், வாழ்க்கையையே தொலைத்து விடுகிறார்கள். மணிமாறன் போன்று லட்சத்தில் ஒருவர் தான் வெற்றிக்கான சரியான பாதையைக் கண்டு பிடிக்கிறார்கள்.
சரியான பாதையைக் கண்டுபிடித்தவர்களில் பலர் கூட, கடனே என்று பயணிக்கிறார்கள்... கதையில் வரும் பூஜாரியைப் போல...!
தனிமை, இருள், அச்சம், அபாயம் எல்லாவற்றையும் தாண்டி தீவிரமாகப் பயணிப்பவனே வெற்றி இலக்கை அடைந்து மகுடம் சூட்டி மகிழ்கிறான்.
- இன்னும் வரும்
வரலொட்டி ரெங்கசாமி

