ADDED : பிப் 16, 2016 10:32 AM

கும்பகோணத்தில் மகாமகத்தன்று காவிரி தீர்த்தவாரி விசேஷம். இங்குள்ள பெருமாள் கோவில்களில் உள்ள உற்சவர்கள், காவிரிக்கரைக்கு எழுந்தருள்வார்கள். இந்த காவிரிநதி கும்பகோணம் வருவதற்கு காரணமாக இருந்தவர் யார் தெரியுமா? 'ஹேரண்டகர்' என்னும் மகரிஷி.
'ஹேரண்டம்' என்றால் 'ஆமணக்கு'. ஹேரண்டகர் பிறந்த ஊர், அவரது இயற்பெயர், பெற்றோர் பற்றிய விபரம் தெரியவில்லை.
சந்நியாசியான இவர் கும்பகோணம்- சுவாமிமலை சாலையிலுள்ள கொட்டையூர் என்ற கிராமத்துக்கு வந்தார். இங்கு கோடீஸ்வரர் கோவிலில் தங்கி தியானத்தில் ஆழ்ந்தார்.
ஆமணக்கு காட்டிலுள்ள கோவிலில் தியானம் செய்ததால் இவரை 'ஹேரண்டகர்' என அழைத்தனர்.
அந்தப்பெயரே நிலைத்து விட்டது. அப்போதெல்லாம் தமிழகத்தில் காவிரி நதியே கிடையாது. தலைக்காவிரியில் பிறந்து சிறிது தூரமே ஓடி கடலில் கலந்து விட்டதாம் அந்த நதி!
அப்போது கும்பகோணம் பகுதியை ஆண்ட மன்னர் ஒருவர், காவிரியின் பெருமையை பற்றி அறிந்தார். ஆகாயத்தில் இருந்த கங்கையை பூமிக்கு பகீரதன் கொண்டு வந்தது போல, தானும் காவிரியை தலைக்காவிரியில் இருந்து தமிழகம் கொண்டு வர விரும்பினார்.
தலைக்காவிரிக்குப் புறப்பட்டார். அங்கு அகத்தியர் தவம் செய்து கொண்டிருந்தார்.
'மகரிஷி! தங்களுக்கு தொண்டு செய்ய வந்திருக்கிறேன். என்னைச் சீடராக ஏற்க வேண்டும்,'' என்றார். அகத்தியரும் அவரை சீடராக ஏற்றார். மன்னரின் சேவையைக் கண்ட அகத்தியரின் மனம் குளிர்ந்தது.
ஒருநாள் அகத்தியரிடம், 'சுவாமி! தாங்கள் உருவாக்கிய இந்த காவிரியை எங்கள் ஊருக்கும் அனுப்புங்கள். மக்கள் விவசாயம் செய்து பிழைத்துக் கொள்வார்கள். சுவையான இந்த தண்ணீரை குடித்து மகிழ்வார்கள். தவித்த வாய்க்கு தண்ணீர் கொடுப்பதை விட சிறந்த புண்ணியம் ஏதுமில்லையே,'' என்றார்.
அகத்தியருக்கு என்ன செய்வதென புரியவில்லை.
'சீடனே! என்னால் நீ கேட்பதை தரவும் முடியவில்லை. தராமல் இருக்கவும் முடியவில்லை. காரணம் என் மனைவியே இந்த நதி வடிவில் ஓடுகிறாள். அவள் என் கமண்டலத்துக்குள் தீர்த்தமாக அடங்கிக் கிடந்தாள். காகம் வடிவில் வந்த விநாயகர் அதைத் தட்டி விட்டதால், நதியாக உருவெடுத்தாள். என்னைப் பிரிய மனமின்றி, குறுகிய தூரத்துக்குள் ஓடிக் கொண்டிருக்கிறாள். நீயோ தஞ்சை
மண்ணில் பிறந்தவன். உன் ஊர் நீண்ட தூரத்தில் உள்ளதே. சரி...மக்களுக்காக என கேட்கிறாய். எனவே இந்த நதியை அங்கு வரை வர
அனுமதிக்கிறேன்,'' என்று அருள் செய்தார்.
மன்னரின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. கொங்கு நாடு, திருச்சி வழியாக காவிரியைத் தஞ்சைக்கு அழைத்து வந்தார் மன்னன்.
கும்பகோணம் வந்த காவிரிக்கு எங்கு சென்று கடலில் கலப்பதென தெரியவில்லை. ஏனெனில் கும்பகோணம் பக்கம் கடலே இல்லை. வேறு வழியின்றி காவிரித் தாய் ஒரு துவாரத்தை ஏற்படுத்தி அதில் மறைந்து கொண்டாள்.
மன்னர் வருத்தத்துடன், 'காவிரி இந்த கும்பகோணத்தோடு நின்று விட்டாளே! என் நாடு இன்னும் ஐம்பது மைல் நீளமிருக்கிறதே! இவளை துவாரத்திலிருந்து வெளியே எப்படி வரவழைப்பது,'' என கலங்கினார்.
கொட்டையூரில் ஹேரண்டக மகரிஷி தவம் இருப்பதாகவும், அவரிடம் கேட்டால் இதற்கான வழி கிடைக்கும் என்று ஆலோசனை கூறினார் ஒரு அமைச்சர். மன்னரும் மகரிஷியின் காலில் விழுந்தார். அகத்தியரின் சீடராகி காவிரியை தமிழகத்துக்கு அழைத்து வந்தும் தண்ணீர் கடைமடை வரை செல்லவில்லையே என்று சொல்லி வருத்தப்பட்டார்.
மகரிஷி, 'மன்னா! இதையே பாவத்தின் பலன் என்பர். மக்கள் தவறு செய்வதை வாடிக்கையாக்கி விட்டதால் தான் காவிரி பள்ளத்தில் மறைந்து விட்டாள். பரிகாரம் செய்தால் மீண்டும் வெளியே வருவாள்,'' என்றார்.
'என்ன பரிகாரம்,'' என்றார் மன்னர்.
இதையடுத்து மகரிஷி சொன்ன பரிகாரம் அதிர்ச்சி தருவதாக இருந்தது.
'மக்களின் பாவம் மன்னரைச் சேரும். ஏனெனில் மக்களை நல்வழிப்படுத்தும் பொறுப்பு மன்னருக்கு உரியது. பொறுப்பில் இருந்து தவறிய ஆட்சியாளர், தன் உயிரைக் கொடுக்க வேண்டும். அல்லது அவரது அரசாட்சிக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் ஒரு துறவியின் உயிரை பலியிட வேண்டும். இப்படி செய்தால் காவிரி மீண்டும் மேலே வருவாள்,'' என்றார்.
மன்னர் சற்று நேரம் சிந்தித்தார்.
'சுவாமி! மக்கள் பாவம் செய்யக் காரணமாக அமைந்ததால் நானே பிராயசித்தம் தேடுகிறேன். என் உயிரை தியாகம் செய்யவும் தயார்,'' என்றவராய் காவிரி மறைந்த பள்ளத்திற்குள் குதிக்க முயன்றார்.
ஹேரண்டக மகரிஷி மன்னரைத் தடுத்து, 'நீ இறந்தால் மக்கள் வழிகாட்டி இல்லாமல் வருந்துவர். நானோ தனிக்கட்டை. நான் இறப்பதால் யாருக்கும் பாதிப்பு இருக்காது. உயிர்த் தியாகம் செய்வதன் மூலம் மக்களுக்கு நன்மை கிடைக்கிற சந்தோஷமே மேலானது,'' என்றார்.
அதன்படி பள்ளத்தில் இறங்கி சுழலில் சிக்கி மறைந்தார். சற்று நேரத்தில் காவிரியும் பொங்கி ஓடினாள். காவிரிபூம்பட்டினம் வரை சென்று கடலில் கலந்தாள். தியாகியான மகரிஷியை சிவன் காப்பாற்றினார். பின் ஹேரண்டகர் கொட்டையூருக்கே திரும்பி தியானத்தில் ஆழ்ந்தார்.
காவிரித்தாய் தமிழகம் வரக் காரணமாக இருந்த இந்த மகரிஷியை மகாமக காலத்தில் நினைவு கூர்வோம்.
