ADDED : ஜூன் 03, 2013 12:57 PM

காஞ்சி மகாபெரியவர் மாணவராக இருந்த காலத்தில், நாடகத்தில் நடித்தார் என்பது உங்களுக்குத் தெரியுமா!
காஞ்சிப்பெரியவரின் இளவயதுப் பெயர் சுவாமிநாதன். 'விளையும் பயிர் முளையிலே' என்பதற்கேற்ப பள்ளி படிப்பிலேயே அவர் திறமை மிக்கவராக திகழ்ந்தார். 1906ல் நான்காம் பாரத்தில் அவர் படித்துக் கொண்டிருந்தார். வயது 12. ஒருமுறை பள்ளி ஆண்டுவிழாவுக்கு ஏற்பாடானது. அதில் ஷேக்ஸ்பியர் எழுதிய 'ஜார் மன்னர்' என்னும் நாடகம் நடத்த முடிவானது.
சுவாமிநாதனுக்கு அதில் நடிக்க வேண்டுமென்ற ஆசை இருந்தது. நாடகத்தில் 'ஆர்தர் இளவரசன்' என்னும் பாத்திரத்தில் நடிக்க சரியான ஆள் கிடைக்கவில்லை. சுவாமிநாதன் அதில் நடிக்க முன்வந்தாலும், வகுப்பாசிரியர் வயது காரணமாக அவரைப் புறக்கணித்து விட்டார்.
ஆனால், தலைமை ஆசிரியரோ அவரை நடிக்க வைப்பதில் ஆர்வம் கொண்டார். இளவரசன் வேடத்தில் நடிக்க அனுமதி அளித்தார். இந்த விபரத்தை சுவாமிநாதன் பெற்றோரிடம் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். அந்த கதாபாத்திரத்திற்கு தகுந்த ஆடைகளைத் தைத்து தரும் படி அம்மாவை வேண்டினார். பழமையில் ஊறிய அந்தப் பெற்றோர், தங்கள் மகன் நாடகத்தில்
நடிப்பதற்கு சம்மதம் கொடுப்பது பற்றி மிகவும் யோசித்தனர். இருந்தாலும் மகனின் மனம் வருந்தக்கூடாது என சம்மதித்தனர்.
இரண்டே நாளில் சுவாமிநாதன், நாடக வசனத்தை மனப்பாடம் செய்தார்.
ஆண்டுவிழாவில், அனைவரும் வியக்கும் விதத்தில் வசனம் பேசி நடித்தார். மாணவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். அவருக்கு முதல்பரிசும் கிடைத்தது.
மறுநாள் ஆசிரியர் மாணவர்கள், சுவாமிநாதன் வீட்டுக்கு வந்து பாராட்டி மகிழ்ந்தனர். சுவாமிநாதனின் அம்மா, தன் அருமைக் குழந்தையான 'நடிகர் திலகத்திற்கு' கண் பட்டு விடுமோ என பயந்து திருஷ்டியே சுற்றி போட்டு விட்டார்.
'நீலக்கல்' சி.என். முத்துஸ்வாமி சாஸ்திரி