ADDED : மார் 05, 2023 08:10 AM

1978ல் ஆந்திரா குண்டக்கல் அருகிலுள்ள ராஜபுரம் கிராமத்திற்கு சென்றார் காஞ்சி மஹாபெரியவர். சீடர்கள் உருவாக்கிய கூடாரம் ஒன்றில் தங்கினார். 18 கி.மீ., துாரம் தொடர்ந்து நடந்ததால் களைப்பால் அனைவரும் ஓய்வெடுத்தனர். அங்குள்ள கிணற்றில் கையால் எடுக்கும் அளவுக்கு தரை மட்டத்திற்கு அருகில் நீர் இருந்தது. அதனால் சில நாட்கள் ராஜ புரத்திலேயே தங்குவோம் என சீடர்கள் வேண்டினர்.
ஆனால் அன்று மதிய உணவு முடிந்ததும் மஹாபெரியவர் புறப்பட்டார். வெயிலும் கடுமையாக இருந்ததால் சீடர்கள் வருத்தமுடன் நடந்தனர். சிறிது நேரத்தில் பலத்த காற்று வீசவே மழை ஆரம்பித்தது. செல்வது சாலையா அல்லது வயலா எனத் தெரியாத அளவுக்கு மழை நீர் ஓடியது. சிரமத்துடன் 17 கி.மீ., துாரம் நடந்து திம்மம்சர்லா என்னும் ஊரை அடைந்தனர். அங்குள்ள அனுமன் கோயிலுக்கு செல்ல இரவு ஆனது. ராஜபுரத்தில் தங்கியிருந்தால் மழையால் சிரமப்பட்டிருப்போம் என எண்ணிய சீடர்கள் நிம்மதி அடைந்தனர். முக்காலமும் உணர்ந்த முனிவர் மஹாபெரியவர் என்பதை உணர்ந்து மகிழ்ந்தனர்.
மற்றொரு சமயம் ஹகரி என்னுமிடத்தில் முகாமிட்டிருந்த போது கிராமத்தினர் சிலர், வறட்சியால் வாடும் எங்களுக்கு வழிகாட்ட வேண்டும் என வேண்டினர். ''உங்கள் ஊர் சிவனுக்கு 1000 குடம் நீரால் அபிஷேகம் செய்யுங்கள்'' என்றார் மஹாபெரியவர். இந்த பஞ்ச நேரத்தில் அவ்வளவு தண்ணீருக்கு எங்கே செல்வது என மக்கள் யோசித்தனர். இருந்தாலும் வெளியூரில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து அபிஷேகம் செய்தனர். அன்றிரவு தொடங்கிய மழை ஏழு நாள் நீடித்தது. கிராமமே திரண்டு வந்து மஹாபெரியவருக்கு நன்றி தெரிவித்தது.
இதைப் போலவே மகாராஷ்டிரா மாநிலம் சதாராவில் தங்கி விட்டு பண்டரீபுரம் செல்லும் வழியில் கிராமத்தினர் சிலர் வறட்சி நிலவும் இப்பகுதியில் மழை பெய்ய அருள்புரியுங்கள் என வேண்டினர். 'சுபிட்சம் நிலவும்' என சுவாமிகளும் ஆசியளித்தார். அதன்படி மழை பெய்யவே மஹாபெரியவரின் மகிமையைக் கண்டு கண்ணீர் விட்டனர்.
காஞ்சி மஹாபெரியவரின் உபதேசம்
* எல்லோரும் நலமுடன் வாழ கடவுளை வேண்டுங்கள்.
* குலதெய்வத்தை ஆண்டுக்கு இரண்டு முறையாவது தரிசியுங்கள்.
* தேய்பிறையில் செய்யும் வழிபாடு பிரச்னையை போக்கும்.
* வளர்பிறையில் செய்யும் வழிபாடு வளர்ச்சியை தரும்.
* தாய் மதத்தை பழிப்பது தாயை பழிப்பதற்கு சமம்.
* மனதை கெடுக்கும் சினிமா, 'டிவி' தொடர்களை பார்க்காதீர்கள்.
உடல்நலம் பெற...காஞ்சி மஹாபெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்
அஸ்மிந் பராத்மன் நநு பாத்மகல்பே
த்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!
அநந்த பூமா மமரோக ராஸிம்
நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!
எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா! பிரம்மாவைத் தோற்றுவித்தவரே! நீயே நோய்களைப் போக்கி நலம் தர வேண்டும்.
எஸ்.கணேச சர்மா
ganesasarma57@gmail.com

