
திருவண்ணாமலையிலுள்ள பாணிபாத்திர தேவர் மடத்தின் பக்தரான சாமியண்ணா, காங்கேயநல்லூரில் வசித்தார். இவர் திருவண்ணாமலை தீபத்தைக் காண ஊர் மக்களுடன் புறப்பட்டார். கட்டுசாதம் எடுத்துக் கொண்ட அவர்கள் நடந்தே (78 கி.மீ.,) திருவண்ணாமலை சென்றனர். அப்போது காங்கேயநல்லூரில் காலரா நோய் பரவியிருந்த நேரம்.
திருவண்ணாமலையை அவர்கள் அடைந்ததும், ஊர் எல்லையில் சாவடி ஒன்றிருந்தது. அங்கிருந்த சுகாதார அதிகாரி, ''இதில் காங்கேயநல்லூர் வாசிகள் யாராவது உள்ளனரா அந்த ஊரில் காலரா பரவியுள்ளதால், அங்கிருந்து வருபவர்கள் மூலம் திருவண்ணாமலையிலும் பரவலாம். எனவே தடுப்பு ஊசி போட்ட பின்னரே ஊருக்குள் அனுமதிக்க முடியும்,'' என தெரிவித்தார்.
இதைக் கண்டு பயந்த சிலர், தங்களை அனுமதிக்கமாட்டார்களோ என பயந்து, தங்களுக்கு அரக்கோணம், குடியாத்தம், சித்தூர் என்று ஆளுக்கொரு ஊரைச் சேர்ந்தவர்கள் என்று மாற்றிச் சொல்லி ஊருக்குள் நுழைந்தனர். சாமியண்ணாவுக்கு பொய் சொல்ல மனமில்லை.
அதிகாரியிடம், “ஐயா! நான் காங்கேயநல்லூரைச் சேர்ந்தவன்” என்றார்.
அதற்கு அதிகாரி, “அங்கு காலரா இருக்கிறதா?” என்று கேட்க, “ஆம்... இருக்கிறது” என்று பதிலளித்தார்.
“அப்படியானால் திருவண்ணாமலைக்குச் செல்ல அனுமதிக்க முடியாது'' என மறுத்தார் அதிகாரி.
திருவிழாவை தரிசிக்க முடியா விட்டாலும், மனதிற்குள் அண்ணாமலையாரை வணங்கிவிட்டு ஊர் திரும்பினார் சாமியண்ணா.
அவரிடம், “இவ்வளவு தூரம் நடந்து சென்ற நீங்கள் கடவுளுக்காக பொய் சொல்லக்கூடாதா?” என்று அனைவரும் கேட்டனர். அதற்கு சாமியண்ணா, “பொய் சொல்லி அண்ணாமலையாரைத் தரிசிக்க வேண்டிய அவசியமில்லை. என் மனதிற்குள்ளே அண்ணாமலை தீபத்தை தரிசித்து மகிழ்ந்தேன்,” என்று தெரிவித்தார். இந்த சாமியண்ணா யார் தெரியுமா........வாரியார் சுவாமிகளின் தாத்தா!