
அறியாமையில் உழலும் மக்களுக்கு வழிகாட்டவே மகான்கள் பிறக்கிறார்கள். அப்படிப்பட்ட அவதார புருஷர்தான் காஞ்சி மஹாபெரியவர். அவரது பக்தர்களில் ஒருவர் முனைவர் எஸ்.ஓ.ராமகிருஷ்ணன். சிதம்பரத்தில் இவர் இருந்த போது காஞ்சி மஹாபெரியவர் அங்கு முகாமிட்டிருந்தார். 'ஆதிசங்கரரின் அத்வைதம்' பற்றிய தன் ஆய்வுக் கட்டுரையை பெரியவரிடம் காட்டி ஆசி பெற வந்தார். 'நிதானமாக முழுவதும் படித்து விட்டு தருகிறேன்' என்றார் பெரியவர். அத்வைத தத்துவத்தில் மூழ்கித் திளைக்கும் துறவி, கட்டுரை முழுவதும் படிக்க விரும்புவதைக் கண்டு மகிழ்ந்தார்.
இதே போல வேறொரு சம்பவம் ஒன்றும் நடந்தது. 1974ல் ராமகிருஷ்ணனுக்கும், அவரது மேலதிகாரிக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டது. இது குறித்து மஹாபெரியவரிடம் முறையிட்டார்.
ராமகிருஷ்ணன் எங்கு சென்றார், யாரை பார்த்தார், என்ன பேசினார் என்பதை எல்லாம் பார்த்தது போல விவரித்தார் பெரியவர். ஆச்சரியப்பட்ட ராமகிருஷ்ணன், அதிகாரியைத் திட்டுவார் என எதிர்பார்த்தார். ஆனால் அவரோ, ''சவுக்கியமாக இருப்பாய் ராமகிருஷ்ணா. போய் வா'' என பிரசாதம் கொடுத்தனுப்பினார். சில ஆண்டுக்குப்பின் அந்த அதிகாரி வலிய வந்து நட்புடன் பழகினார். ராமகிருஷ்ணனும் அதை ஏற்றதோடு, தவறு செய்தவரிடமும் அன்பு காட்ட வேண்டும் என மஹாபெரியவர் தனக்குள் இருந்து உணர்த்தியதாக தெரிவித்தார்.
ஒருமுறை ராமகிருஷ்ணன் காஞ்சிபுரம் அருகிலுள்ள தேனம்பாக்கம் வந்திருந்தார். அப்போது பெரியவர் ஜபம் செய்து கொண்டிருந்ததால் காத்திருக்க நேர்ந்தது. அப்போது ஊருக்கு வெளியே ஒதுக்குப்புறமான வீட்டில் அவர் குடியிருந்தார். இருட்டிய பின் செல்வதற்கு சிரமமாக இருக்கும் என்பதால் பெரியவரை தரிசிக்காமலேயே கிளம்பினார். ஆனால் மடத்தில் ஜபத்தை முடித்த பெரியவர் அருகிலுள்ள சிவன் கோயிலுக்கு புறப்பட்டார். அரிக்கன் விளக்குடன் சீடர்களும் பின்தொடர்ந்தனர். காஞ்சி வரதராஜர் கோயில் மாடவீதி வந்தது. அந்த வழியாக போய்க் கொண்டிருந்த ராமகிருஷ்ணன் மகானை தரிசிக்கும் பேறு பெற்றார். இருட்டில் தனியாக நடந்தவருக்கு 'நானிருக்க பயமேன்' என மஹாபெரியவரின் ஆசி கிடைத்தது. மஹாபெரியவரைச் சரணடைந்தால் நமக்கும் நல்வாழ்வு கிடைக்கும்.
காஞ்சி மஹாபெரியவரின் உபதேசம்
* தாய் மதத்தை பழிப்பது தாயை பழிப்பதற்கு சமம்.
* எல்லோருக்கும் நல்ல நாளாக அமைய கடவுளை வேண்டுங்கள்.
* குலதெய்வத்தை ஆண்டுக்கு இருமுறையும் இஷ்ட தெய்வத்தை வாய்ப்பு கிடைக்கும் போதும் தரிசியுங்கள்.
* மனதை கெடுக்கும் சினிமா, 'டிவி' தொடர்களை பார்க்காதீர்கள்.
* இன்று செய்த நன்மை, தீமைகளை உறங்கும் முன் சிந்தியுங்கள்.
உடல்நலம் பெற...காஞ்சி மஹாபெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்
அஸ்மிந் பராத்ம நநு பாத்மகல்பே
த்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!
அநந்த பூமா மமரோக ராஸிம்
நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!
எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா! பிரம்மாவைத் தோற்றுவித்தவரே! நீயே நோய்களைப் போக்கி நலம் தர வேண்டும்.
'ஓம் ஸ்ரீ மஹா பெரியவா சரணம்' என தினமும் 108 முறை சொல்லுங்கள்
எஸ்.கணேச சர்மா
ganesasarma57@gmail.com

