ADDED : ஜூலை 08, 2014 02:16 PM

கண்ணெதிரே கோபுரம் இருக்கிறது.
பார்க்காமலே அசட்டையாகச் செல்கிறார்கள் பார்வையுள்ளவர்கள். தலையை அப்படியே உயர்த்தி, ஒரு கும்பிடு போட்டு விட்டு சென்றால், எவ்வளவு புண்ணியம் என்பதை அவர்கள் உணர்வதில்லை. ஆனால்,
பார்வையற்ற குழந்தைகள் காஞ்சி மகாபெரியவரை மனக்கண்ணால் தரிசிக்க வந்த சம்பவம் பற்றி
உங்களுக்குத் தெரியுமா!
ஒருசமயம், காஞ்சிபுரத்திலுள்ள தேனம்பாக்கம் சிவாஸ்தானத்தில் மகாபெரியவர் தங்கியிருந்தார். அப்போது, பூந்தமல்லியில் உள்ள பார்வையற்றோர் பள்ளி ஆசிரியர் ஒருவர் பெரியவரைத் தரிசனம் செய்ய வந்தார். அவர் சுவாமிகளிடம், ''அடுத்த ஞாயிற்றுக்கிழமை எங்கள் பள்ளிக்குழந்தைகள் சுவாமிகளைத் தரிசிப்பதற்கு அழைத்து வரலாமென இருக்கிறேன். அவர்கள் பார்வை இல்லாதவர்கள். தங்களைத் தரிசிக்க முடியாது. எனவே, பெரியவர், அவர்களோடு இரண்டொரு வார்த்தைகள் பேசினால், ரொம்பவே சந்தோஷப்படுவார்கள். தங்கள் திருவாய் மொழி அவர்களுக்கு அனுக்கிரகத்தைத் தரும்,'' என்றார். பெரியவர் அதைத் தன்
திருச்செவிகளால் கேட்டுக் கொண்டார். பிறகு, ஆசிரியர் சென்று விட்டார்.
சொன்னது போல், ஞாயிறன்று ஒரு தனி பஸ்சில் குழந்தைகளையும் அழைத்து வந்து விட்டார். பெரியவரின் தரிசனத்திற்காக அவர்களைக் காத்திருக்கச் சொன்னார்.
அப்போது, பெரியவருடன் இருந்தவர்கள், ''பெரியவர் மவுனவிரதம் இருக்கிறார். பார்வையுள்ளவர்கள்
என்றாலாவது, தரிசனத்திற்காவது அனுமதிக்கலாம். இவர்களிடம் பேச வேண்டும் என்கிறீர்கள். அது எப்படி
சாத்தியம்?'' என்றனர்.
இதைக் கேட்ட ஆசிரியர் அழுதே விட்டார்.
''ஐயையோ! குழந்தைகளுக்கு ஆசை வார்த்தை சொல்லி அழைத்து வந்து விட்டேனே! பெரியவருடன் பேச முடியாவிட்டால், அவர்கள் ரொம்பவே ஏமாந்து போவார்களே! பார்வையற்ற அந்த பிஞ்சுகளின் உள்ளம்
புண்ணாகிப் போகுமே!'' என்று புலம்பினார்.
அப்போது யாரும் எதிர்பாராத வகையில், பெரியவர் அங்கே வந்தார். ஆசிரியரின் அழுகையை நிறுத்தச் சொன்னார். ஒவ்வொரு குழந்தையாக அழைத்து, அவர்களின் பெயர், ஊர், பார்வைக்குறைபாடு எப்படி ஏற்பட்டது என்றெல்லாம் அன்புடன் விசாரித்தார். அவர்களை ஆசிர்வதித்தார். பழங்கள், கற்கண்டை ஆசிரியரிடம் கொடுத்து அவர்களுக்கு கொடுக்கச் சொல்லி விடை கொடுத்தார்.
ஒரு சமயம், ஜனாதிபதி வி.வி.கிரி, பிரதமர் இந்திரா ஆகியோர் காஞ்சி மடத்திற்கு வந்த போது, பெரியவர் மவுனவிரதம் அனுஷ்டித்துக் கொண்டிருந்தார். அவர்களிடம் பெரியவர் பேசவில்லை. ஆனால், பார்வையற்ற
குழந்தைகளுக்காக தனது மவுனத்தைக் கலைத்தாரே! அந்தக் குழந்தைகள், என்றும் அவரை தம் மனக்கண்களால் கண்டு கொண்டிருப்பார்கள் தானே!
சி.வெங்கடேஸ்வரன்

