sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

உன்னை அறிந்தால்... (22)

/

உன்னை அறிந்தால்... (22)

உன்னை அறிந்தால்... (22)

உன்னை அறிந்தால்... (22)


ADDED : ஏப் 19, 2019 03:04 PM

Google News

ADDED : ஏப் 19, 2019 03:04 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எல்லாம் உனக்காக

''உலகம் பிறந்தது எனக்காக ஓடும் நதிகளும் எனக்காகமலர்கள் மலர்ந்தது எனக்காக அன்னை மடியை விரித்தாள் எனக்காக'' இது ஒவ்வொன்றும் நமக்குள் நம்பிக்கை, உற்சாகத்தை ஏற்படுத்தும் அற்புத வரிகள்.

மனிதா! உனக்காக பிறந்த உலகம் இது! பூமியை வளப்படுத்தும் நதியாக நீ ஓடிக்கொண்டிரு. மணம் கமழும் மலராக நறுமணம் பரப்பு. இயற்கையை ரசித்து வாழக் கற்றுக் கொள்.

ரசித்து வாழ்ந்தவர்களால் தான் இத்தனை கலைக்கோயில்கள் எழுந்தன. பல்லவர், பாண்டியர், சோழர், சேரர் என மன்னர்கள் அனைவரும் விண்ணை முட்டும் கோபுரங்களுடன் கலை பொக்கிஷங்களை உருவாக்கினர். வேறெங்கும் இல்லாத இப்பெருமை தமிழகத்திற்கு உண்டு.

நாட்டை விரிவுபடுத்த எப்போதும் போரில் ஈடுபடும் மன்னர்களால் கலைப்படைப்பான கோயில்களை எப்படி கட்ட முடிந்தது?

மன்னர்கள் தங்களின் வாழ்க்கையை ரசித்ததால் தான்.

ரசித்தால் மட்டுமே வாழ்வு இனிக்கும்.

இப்படி ரசனையுடன் ஏழாம் நுாற்றாண்டில் வாழ்ந்த பல்லவ மன்னர் ராஜசிம்மன். காஞ்சிபுரத்தில் கைலாசநாதர் கோயிலைக் கட்ட விரும்பினார். குறிப்பிட்ட காலத்திற்குள் கோயிலைக் கட்டி முடித்து கும்பாபிேஷகத்திற்கு நாள் குறித்தார். அன்றிரவு மன்னரின் கனவில் தோன்றினார் சிவன்.

''ராஜசிம்மனே! எமக்காக கோயில் கட்டியதில் மகிழ்ச்சி. ஆனால் கும்பாபிேஷகத்திற்காக குறித்த நாளில் எம்மால் வர இயலாது. திருநின்றவூர் என்னும் திருத்தலத்தில் புதிய கோயில் கட்டியுள்ளார் பக்தர் ஒருவர். அவரும் இதே நாளை தேர்வு செய்துள்ளார். அங்கு செல்ல விரும்புகிறேன். வேறொரு நாளில் நீ நடத்து; யாம் வருகிறோம்'' என்று சொல்லி மறைந்தார்.

மறுநாள் காலையில் திருநின்றவூரை தேடி காவலர்களுடன் புறப்பட்டார் மன்னர். தான் கட்டிய கைலாசநாதர் கோயிலை விட பக்தர் கட்டிய கோயில் எப்படி இருக்குமோ என பார்க்க மன்னர் மனம் துடித்தது. திருநின்றவூரில் எங்கு தேடியும் கோயில் தென்படவில்லை. கட்டுமானத்திற்குரிய கல், மண், பணியாளர்கள் யாரும் அங்கில்லை.

ஆனாலும் அங்குமிங்கும் அலைந்தார் மன்னர். ஒரு மரத்தடியில் சிவனடியார் ஒருவர் இருப்பதைக் கண்டார். அருகில் சென்ற மன்னர் , ''நான் பல்லவ மன்னன் ராஜசிம்மன். இந்த ஊரில் பக்தர் ஒருவர் புதிதாக சிவன் கோயில் கட்டியிருப்பதாக கேள்விப்பட்டேன். அந்தக் கோயில் கும்பாபிேஷகம் நடக்க இருப்பதால், காஞ்சிபுரத்தில் நான் கட்டிய கோயில் கும்பாபிேஷகத்தை இன்னொரு நாள் வைக்கும்படி கனவில் சிவன் உத்தரவிட்டுள்ளார்'' என்றார் மன்னர்.

'' மன்னா! நீங்கள் சொல்வது உண்மையே. என் பெயர் பூசலார். நான் கட்டிய கோயிலில் தான் கும்பாபிேஷகம் நடக்க இருக்கிறது. அதற்கு சிவன் வர இருப்பதை அறிந்து மகிழ்கிறேன்'' என ஆனந்தக் கண்ணீர் விட்டார்.

''பூசலாரே! தாங்கள் கட்டிய கோயில் எங்கிருக்கிறது?'' என்றார் மன்னர்.

''மன்னா! தங்களைப் போல செல்வம் இல்லையே! நான் கட்டிய கோயில் இங்கு தான் இருக்கிறது'' என்று தனது மார்பைக் காட்டினார். அஸ்திவாரம் தோண்டியதில் இருந்து இதயம் என்னும் கருவறையில் சுவாமியை பிரதிஷ்டை செய்தது வரை அனைத்தும் என் பங்களிப்பே'' என்றார் பூசலார்.

தான் கட்டிய கற்கோயிலை விட இதயத்திற்குள் மானசீகமாக பக்தர் கட்டிய கோயிலுக்கு கடவுள் முதலிடம் அளித்ததை எண்ணி வியந்தார் மன்னர். பிற்காலத்தில் திருநின்றவூரில் 'இருதயாலீஸ்வரர்' என்னும் பெயரில் கோயில் உருவானது.

நம்பிக்கை இருந்தால் உள்ளக் கோயிலிலும் கடவுள் எழுந்தருள்கிறார் என்பதற்கு இதை விட வேறென்ன சான்று வேண்டும்?

அந்தக் காலத்தில் வயிற்று வலியால் அவதிப்படும் குழந்தைகளுக்கு மருந்தாக விளக்கெண்ணெய் கொடுப்பார்கள். உஷ்ணம் போக்கும் அருமருந்து இது. குடிக்க மறுக்கும் போது வீட்டிலுள்ள பாட்டிகள், '' நீ குடிக்க வேண்டாம்; 'கிருஷ்ணார்ப்பணம்' என்று சொல்லி விட்டுக் குடி; உனக்கு பதிலாக கிருஷ்ணர் குடிச்சிடுவார்'' என்பார்கள்.

அதை நம்பி குழந்தைகளும் குடித்து விடும். நம்பினால் எதுவும் சாத்தியம் தானே!

கீதை உபதேசித்த கண்ணனுக்கு ஒருமுறை கூடை கூடையாக பூக்கள் பறித்து பூஜை செய்தான் அர்ஜுனன். பூக்கள் மலையாக குவிந்து கண்ணனை மூடிவிட்டது.

பூக்களை தள்ளி விட்டு வெளியே வந்த கண்ணனிடம், ''நான் கூடை கூடையாக பூக்களை கொட்டி பூஜித்தேனே'' என பெருமிதத்துடன் கேட்டான் அர்ஜுனன். கண்ணன் பதிலளிக்கவில்லை. பூக்கள் பூத்துக் குலுங்கும் நந்தவனத்திற்கு அவனை அழைத்துச் சென்றார் கண்ணன்.

அந்த வழியாக வந்த பீமன் ''இந்த நந்தவனத்து பூக்கள் எல்லாம் கண்ணனுக்கு அர்ப்பணம்'' என்ற சொல்லியபடி அவர்களின் முன் சென்றான். ஒரு பூவைக் கூட பறித்து அவன் பூஜிக்கவில்லை. இருவர் செய்த வழிபாட்டையும் ஒன்றாக தான் கருதுவதை அர்ஜுனனுக்கு உணர்த்தினார் கண்ணன்.

அர்ஜுனன் செய்த பூஜை போன்றது மன்னர் ராஜசிம்மனின் கோயில்பணி. பீமன் செய்த பூஜையைப் போன்றது பூசலாரின் கோயில் பணி. எதுவாக இருந்தாலும்

'எல்லாம் உனக்காக' என கடவுள் மீது நம் மனம் ஈடுபட வேண்டும். அதாவது ஆத்ம சர்ப்பணமாக செய்ய வேண்டும்.

தொடரும்

அலைபேசி: 98408 27051

லட்சுமி ராஜரத்னம்






      Dinamalar
      Follow us