ADDED : செப் 05, 2016 10:42 AM
ஒரு கணவன், மனைவிக்கு அம்பாள் காட்சி தந்து மூன்று பகடைகளைக் கொடுத்தாள். ஒவ்வொன்றையும் ஒரே ஒரு முறை தான் உருட்ட வேண்டும்
என்றும், உருட்டும் போது மனதில் என்ன நினைக்கிறார்களோ அது நடக்கும் என்றும் சொன்னாள்.
மனைவி கணவனிடம், “நமக்கு நிறைய பணம் வேண்டுமென நினைத்து ஒரு பகடையை உருட்டுங்கள்,” என்றாள்.
கணவன் அவளிடம், “அடியே! நம் இரண்டு பேருக்கும் மூக்கு சரியில்லை. ஊரார் நம்மை 'ஊசி மூக்கு' என பட்டப்பெயர் வைத்து கேலி செய்கின்றனர். எனவே, நம் மூக்கு அழகாகும்படியாக சொல்லி உருட்டுவோம். அடுத்த காயை பணத்துக்கு வைத்து கொள்ளலாம்,” என்றான். அவளும் சம்மதித்தாள்.
காயை உருட்டும் போது, “எங்களுக்கு நல்ல மூக்குகள் கிடைக்கட்டும்” என்று சொல்லி உருட்டினர். 'மூக்கு' என்பதற்கு பதிலாக 'மூக்குகள்' என சொன்னதால், கை, கால், முகம், வாய், வயிறு என எல்லா இடத்திலும் மூக்குகள் முளைத்து விட்டன.
வருத்தப்பட்ட தம்பதியர் அடுத்த காயை உருட்டும் போது, அவசரத்தில், “எங்களுக்கு இந்த மூக்குகள் வேண்டாம்” என சொல்லி விட்டார்கள்.
இப்போது நிஜ மூக்கு உட்பட எல்லா மூக்குகளும் காணாமல் போய்விட்டன. மூச்சு விடத் திணறிய அவர்கள், “அம்பாளே! எங்களுக்கு உயிர் பிச்சை கொடு. முன்பிருந்த மூக்கே போதும்” என்று மூன்றாவது காயையும் உருட்டினர்.
இப்போது நிலைமை சரியாயிற்று. இப்போது எல்லா பகடையும் தீர்ந்து போக, அவர்கள் நினைத்தபடி பணக்காரர்கள் ஆக முடியாமல் போயிற்று.
அழகு சோறு போடாது. கணவர் அழகாக இருக்க வேண்டும் என்று பெண்ணும், மனைவி அழகாக இருக்க வேண்டும் என ஆணும் விரும்புவதில் தவறில்லை. ஆனால், உடல் அழகை விட, உள்ளத்தின் அழகுக்கே முக்கியத்துவம் தர வேண்டும்.