sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

கண்ணன் என்னும் மன்னன் (11)

/

கண்ணன் என்னும் மன்னன் (11)

கண்ணன் என்னும் மன்னன் (11)

கண்ணன் என்னும் மன்னன் (11)


ADDED : ஜூன் 17, 2014 02:09 PM

Google News

ADDED : ஜூன் 17, 2014 02:09 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கண்ணில் பட்ட பிரசேனஜித்தின் உடலைப் பார்க்கவே கொடூரமாக இருந்தது. பரிதாபத்துடன் கிருஷ்ணனும் அதைப் பார்த்து கண்களை மூடினான்.

சற்று தள்ளி பிரசேனஜித்தின் குதிரையும் சதைப் பிண்டங்களின் மிச்சத்தோடு கிடந்தது.

''கொடுமை.... கொடுமை.... பிரசேனஜித்துக்கு இப்படி ஒரு நிலை வந்திருக்கவே கூடாது...,'' என்றார் ஒரு துவாரகைக்காரர்.

''உண்மை தான்.... யார் செய்த கொடுமை இது?'' என்று கேட்டார் ஒருவர்.

''இது மனிதச் செயல் போலவே தெரியவில்லை. கொடிய மிருகத்தின் கைவரிசை தான் இது...'' என்றார் மூன்றாமவர்.

''ஆம்... இது மிருகச் செயல் தான். இந்த காட்டிலிருக்கும் சிங்கத்தின் செயலாக இருக்க வேண்டும். பிரசேனனும் அதைக் கொல்ல வந்ததாகவே கேள்வி....''

''சரிதான்.... என்றாலும் சமந்தக மணிக்கு சிங்கத்திடம் இருந்து காப்பாற்றும் சக்தி கிடையாதா?''

''ஒருவேளை அதன் சக்தி மனிதர்களிடம் மட்டும் தானோ என்னவோ?''

''அது சரி... அந்த மணி எங்கே போயிற்று....? சிங்கம் கொலை செய்திருந்தாலும், சிங்கத்திற்கு மணி எதற்கு? அதற்கு ரத்தமும் சதையும் தானே தேவை!''

- அவர்களிடம் இப்படி பலவிதமான கேள்விகள்.. பதில்கள்.

கண்ணனிடம் மட்டும் தீர்க்கமான மவுனம். அதைக் கண்டவர்கள் கண்ணனிடமும் விவாதிக்க ஆரம்பித்தனர்.

''பிரபோ.....முதலில் தங்களைச் சந்தேகித்தோம். தாங்கள் இல்லை என்பது இப்போது உறுதியாகி விட்டது. இவ்வேளையில் தாங்கள் எதுவும் பேசாமல் இருந்தால் எப்படி?''

கண்ணனும் பேசத் தொடங்கினான்.

''நான் பிரசேனஜித்துக்கு நேரிட்ட கொடூரத்தை எண்ணி கலக்கத்தில் உள்ளேன். நான் மன்னனாக இருந்தால் என்ன! என் அண்ணா பலராமர் மன்னனாக இருந்தாலென்ன! எங்கள் ஆட்சியில் ஒரு மனித உயிர் இப்படி போய் விட்டதே என்பதே என் வருத்தம்....''

''உண்மையே..! இப்படி மிருகத்தின் பசிக்கு இரையாகிப் போனது கொடியது தான்....'' என்றார் ஒருவர்.

கண்ணனும் மறுமொழி கூறலானான்.

''இத்தனை பெரிய கோரம் நிகழ்ந்துள்ளது என்றாலும் அது மணியின் குற்றமன்று! சமந்தக மணிக்கு உள்ள சக்தி பூஜைக்குரியது. மிகப் பொதுவானது. அது சுயநலத்துக்கும் வெறும் பொருளுக்கும் மட்டும் என்றாகும் போது இப்படி விபரீதம் ஏற்பட்டு விடுகிறது.

நெருப்பைக் கையாளுபவர்கள்

எப்படி கவனமாக இருக்க வேண்டுமோ அப்படி கவனமாக இருக்க வேண்டும். அந்த கவனம் இல்லாத போது தீயானது காட்டை அழிப்பது போல விசேஷ சக்திகள் அதை உரியவர்களை அழித்து விடும்...''

''உண்மை தான் கிருஷ்ண பிரபு ... அதே சமயம் ஒரு சிங்கம் மணியை வைத்துக் கொண்டு என்ன செய்யும் உங்களுக்குத் தெரியாதா தாங்கள் திரிகால ஞானியாயிற்றே ? '' என ஒருவர் கேட்டதும் கண்ணனிடம் அந்த நொடி ஒரு சிரிப்பு.

''இப்படி சிரிப்பதன் பொருள் தெரியவில்லையே...?''

''நீங்கள் என்னோடு வந்திருப்பது எதற்காக?''

''உண்மை நிலவரத்தை தெரிந்து கொள்வதற்காக...''

''தெரிந்து கொண்டீர்களா?''

''எங்கே... இப்போது தானே கொஞ்சம் கொஞ்சமாக தெரிய ஆரம்பித்திருக்கிறது?''

''என்றால் மீதத்தை தெரிந்து கொள்ள முயல்வோம். நான் இப்போது சந்தேகத்திற்கு ஆளாகியிருப்பவன். நீங்களும் சாட்சிகளாக வந்திருப்பவர்கள். நான் திரிகால ஞானி என்றால், சத்ராஜித் அன்றே என் பேச்சைக் கேட்டிருக்க வேண்டும். அண்ணா பலராமர்

கருத்துப்படி மணியை உக்ரசேன மகாராஜாவிடம் ஒப்படைத்திருந்தால் இன்று நாம் இங்கு வந்திருக்கும் நிலையே ஏற்பட்டிருக்காது. எப்போது அப்படி எல்லாம் நடக்கவில்லையோ அப்போதே இந்த ஞானி அஞ்ஞானியாகி விட்டேன். இப்போது இந்த அஞ்ஞானியைப் போய் திரிகாலஞானி என்றதும் சிரிப்பே வந்து விட்டது....''

- கண்ணன் வெகு அழகாகப் பேசினான். அவனது அர்த்தம் மிகுந்த அந்தப் பேச்சில் ஆயிரம் உட்பொருள். அது அவர்களுக்கும் புரிந்தது.

''கிருஷ்ணா... உங்களை அறிவோம். எதற்கு கேலிப்பேச்சு. நீங்களா அஞ்ஞானி..! மறந்து போய் கூட இப்படி எண்ணிடக் கூடாதே.... எத்தனை பெரிய தவறு...'' - ஒருவர் படபடத்தார்.

''போதும்... விசாரமான பேச்சாலோ, வருத்தத்தாலோ எதுவும் ஆகப் போவதில்லை. என்ன செய்வது என்று சிந்திப்போம்....'' என்று கண்ணன் அவர்களை நேர்படுத்த தொடங்கினான். ஒருவரை அழைத்து சத்ராஜித்துக்கு தகவல் தர அனுப்பினான். மற்றவர்களோடு சிங்கத்தைத் தேடிப் புறப்பட்டான்.

முன்னதாக பிரசேனஜித்தின் எச்ச உடலை ஒரு வஸ்திரத்தால் கட்டி ஓரிடத்தில் பத்திரமாக வைத்தான்.

அதன் பின் கண்ணனுக்கு அந்த சிங்கத்தின் காலடித் தடங்கள் வழி காட்டின. எல்லோரும் கண்ணனைத் தொடர்ந்தனர். அது ஒரு குன்றின் உச்சியை நோக்கிச் செல்லத் தொடங்கியது.

மெல்ல உச்சியை அடைந்தனர்.

ஆனால், அங்கே ஆச்சரியம் காத்திருந்தது.

எந்த சிங்கத்தை எதிர்பார்த்து வந்தார்களோ அது அங்கே இறந்து கிடந்தது. அதனுடைய <உடம்பெங்கும் ரத்தத் தோய்வு. அருகில் கருப்பு ரோமங்கள் உதிர்ந்து கிடந்தன.

''பிரபு... என்ன விந்தை?'' - என்றான் ஒருவன்.

''விந்தையிலும் விந்தை...

இத்தனை பெரிய சிங்கத்தை ஒருவர் கொன்றிருக்கிறார் என்றால் வியப்பாக உள்ளது. அநேகமாக அவர் வசமே மணி இருக்க வேண்டும்'' - என்றான் இன்னொருவன்.

''கருப்பு ரோமத்தை பார்த்தால், கருங்குரங்கு, கரடி போன்ற மிருகங்கள் சிங்கத்தோடு மோதியிருக்கலாம் அல்லவா? ஆனால், சிங்கத்தை அவற்றால் வீழ்த்த முடியுமா? மணியை அவை எடுத்துச் செல்லவும் வாய்ப்பில்லையே! மணி இங்கேயே அல்லவா கிடக்க வேண்டும்?''

''அதுவும் சரி தான்.

மணியும் களவு போய், சிங்கமும் இறந்து கிடப்பதைப் பார்த்தால் சிங்கத்தை வெல்லும் ஆற்றல் படைத்த யாரோ தான் இதைச் செய்திருக்க வேண்டும்...''

'அது யார்?'- என்ற கேள்வி அவர்களுக்குள் எழ ஆரம்பித்தது.

- இன்னும் வருவான்

இந்திரா சவுந்தர்ராஜன்






      Dinamalar
      Follow us