sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

கண்ணன் என்னும் மன்னன்! (12)

/

கண்ணன் என்னும் மன்னன்! (12)

கண்ணன் என்னும் மன்னன்! (12)

கண்ணன் என்னும் மன்னன்! (12)


ADDED : ஜூலை 02, 2014 04:04 PM

Google News

ADDED : ஜூலை 02, 2014 04:04 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவர்கள் தங்களுக்குள் இப்படி கேள்விகளில் முட்டிக் கொண்டு நிற்க, அங்கிருந்து ஒரு பெரும் காலடித் தடம் ஒன்று தெரிந்தது. கண்ணன் அந்த அத்தடத்தை தொடர முற்பட்டான்.

அந்த குன்றின் சரிந்த பாகம் அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்று முடிந்தது. பெரும் மரங்கள் குடை போலக் கவிழ்ந்திருக்க, ஆங்காங்கே மலைப்பாம்புகள் நெளிந்து கொண்டிருந்தன.

கண்ணனும் அவன் சகாக்களும் வரவும், வழியில் திரிந்த புள்ளிமான்கள் விடைத்துப் போய் பார்த்தன. சில

எருமைகளும், காளைகளும் கூட கண்ணனை அங்கே எதிர்பாராமல் திகைத்துப் பார்த்தன.

ஒரு வகையில், அவை எல்லாம் மிகக் கொடுத்துவைத்தவை. ஆனால், அந்த உண்மை அவைகளுக்கே

தெரியாது. அவைகள் என்ன காரணத்தினாலோ மிருகங்களாகப் பிறந்து விட்டன. ஆறாம்அறிவு இல்லாததால் தங்கள் பிறப்பை பற்றியே தெரியாது என்னும் போது, தாங்கள் பரம்பொருளையே பார்க்கிறோம் என்பது மட்டும் எப்படித் தெரிய முடியும்?

அந்த வனமும் அதன் தாவரங்களும் கூட கொடுத்து வைத்தவை தான். தங்களைப் படைத்தவனே மானிடனாகப் பிறவி எடுத்து அதன் வரம்புகளுக்குள் தன்னை அடைத்துக் கொண்டு அந்த காட்டுக்குள்ளே ஒரு தேடுதல் வேட்டை புரிந்தபடி இருக்கிறான் என்பது தெரியாமல் அவன் கை படவும், கால் படவும் குழைந்து கொடுக்கின்றன.

கர்ம விடுதலைக்கு கீதையைத் தந்தவன் தானே ஒரு உதாரணம் என்பது போல, கால் நோக அந்த வனத்தில் நடக்கிறான். சில இடங்களில் முட்கள் உரசிட சிராய்ப்பும் ஏற்படுகிறது. அதை ரசனையோடு ஏற்றுக்

கொள்கிறான். காலத்தின் பிடியில், அதைப் படைத்த பரம்பொருளே ஒரு நடிகனாகி நடித்துக் கொண்டிருக்கிறான்.

இதற்கிடையில், சத்ராஜித் தன் அரண்மனை போன்ற மாளிகையின் முகப்பில் தவிப்போடு வெளியே பார்த்தபடி நின்று கொண்டிருந்தான். ஒவ்வொரு நொடியும் பிரசேனஜித் வந்து விட மாட்டானா என்கிற எதிர்பார்ப்பு முகத்தில் தெரிந்தது. அதற்கேற்ப, அவனது மாளிகையின் எதிரில் குதிரை ஒன்று பாய்ந்து வரவும்

ஆவலுடன் ஓடி வந்தான்.

நல்ல ஆகிருதியான வெண்ணிற குதிரை அது. அதன் மேல் வந்தவன் கண்ணன் அனுப்பிய தூதுவன்.

அவனைக் காணவும் எல்லோரிடமும் பதட்டம்.

அவனும் சத்ராஜித்தை பணிந்தவனாக துக்கத்தோடு முகம் காட்டினான்.

''என்னாயிற்று.... காட்டிற்கு கண்ணனோடு சென்றவர்களில் ஒருவன் தானே நீ?''

''ஆம்... நான் அவர்களோடு சென்றவனே! ஆனால், எப்படி சொல்வது என்று தான் தெரியவில்லை..!''

''என்ன சொல்கிறாய் நீ.... எங்கே பிரசேனஜித்... அதற்கு முதலில் பதில் கூறு...''

''முதலில் நீங்கள் அமைதியாக அமருங்கள். நானும் நடந்ததைக் கூறுகிறேன்...'' - அவன் சத்ராஜித்தை அமைதிப்படுத்தி விட்டு நடந்ததைச் சொல்லி முடித்தான். பிரசேனஜித்தை சிங்கம் விழுங்கி விட்டது என்று கேட்ட மறுவினாடியே சத்ராஜித்துக்கு மயக்கம் வந்து விட்டது.

தொடர்ந்து மணியையும் அந்த சிங்கத்தையும் தேடிக் கொண்டு கிருஷ்ணப்பிரபு சென்றிருக்கிறார் என்னும் செய்தி சத்ராஜித் காதில் விழவில்லை. ஆனால், அருகில் இருந்த சத்யபாமா காதில் விழுந்தது.

அவள் அந்த தூதுவனைப் போகச் சொல்லி விட்டு, சத்ராஜித்தின் மூர்ச்சையை தெளிவித்தாள்.

சத்ராஜித் எழுந்து அமர்ந்ததும், அவனைக் கண் கலங்கப் பார்த்தாள்.

''பாமா... பாமா.... எங்கே அந்த தூதன். அவன் கூறியது நிஜமா?.. என் தம்பியை சிங்கமா விழுங்கி விட்டது! நம்ப முடியவில்லையே... எவ்வளவு பெரிய கொடுமை இது! உண்மை இது தானா அல்லது மாயக்கண்ணன் ஆடும் நாடகமா?'' என சத்ராஜித் வெடித்துச் சிதறினான்.

''அப்பா... கிருஷ்ண பிரபுவை வீணாக கொச்சைப்படுத்தாதீர்கள்...''

''எந்த நம்பிக்கையில் நீ இப்படி பேசுகிறாய் பாமா?''

''தூதனாக வந்தவர் பிரபுவின் விசுவாசியல்ல..... நம்மால் அனுப்பப்பட்டவர். சித்தப்பாவை சிங்கம் தான் கொன்றிருக்கிறது. சித்தப்பா வேட்டைக்கு புறப்படும் போதே சொன்னேன். நீங்கள் தான் அவரைத் தடுத்து நிறுத்தாமல் சமந்தக மணியையும் அணிவித்து அனுப்பினீர்கள்''

''அது அவனுக்கு பாதுகாப்பு என்றல்லவா கருதினேன். மணி இருக்கும் போது எப்படி இப்படி நடந்தது?''

''மணியை பொதுநலனுக்காக பயன்படுத்தாமல், வேட்டையாடுவதற்கெல்லாம் பயன்படுத்த தொடங்கியது தவறு என்பது உங்களுக்குத் தெரியவில்லையா அப்பா?''

''பாமா... நீயா இப்படி பேசுகிறாய்?''

''நான் பேசாமல் வேறு யாரப்பா பேசுவார்கள். அந்த மணி எப்படி எல்லாம் உங்களை மாற்றியது என்பதை மிக அருகில் இருந்து பார்ப்பவள் நான் தானே!''

''போதும் பாமா... வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சாதே...''

''வேலைப் பாய்ச்சவில்லை. உணர்த்த முற்படுகிறேன்... நீங்கள் வேண்டுமானால் பாருங்கள்! கிருஷ்ண பிரபு நிச்சயம் அந்த மணியோடு வருவார். உங்கள் வசம் அதை ஒப்படைப்பதோடு, நீங்கள் கொண்டிருக்கும்

சந்தேகத்தையும் துடைப்பார்..''

''இனி என்ன கிடைத்தும் பயன் இல்லையம்மா... என் அருமைத் தம்பியை இழந்து விட்டேனே...''

''அப்போதே மணியை கிருஷ்ண பிரபு சொன்னது போல, உக்ரசேன மகாராஜாவிடம் ஒப்படைத்திருந்தால்,

மதுராபுரி மக்களுக்கு அதைப் பயன்படுத்தியிருப்பார். இப்படிப்பட்ட விபரீதமும் நடந்திருக்காது அல்லவா?''

''உண்மை தான்... இப்போது சொல்கிறேன். கேட்டுக் கொள். கண்ணன் அந்த மணியோடு வந்து, தான் குற்றவாளியல்ல என்பதை நிரூபித்தால் கண்ணனை சந்தேகித்த குற்றத்துக்கு பரிகாரம் தேடுவதோடு,

அந்த மணியை நான் கண்ணன் விரும்பியபடி உக்ரசேன மகாராஜாவிடமே கொடுத்து விடுவேன். இது உன்

தாய் மேல் ஆணை. போதுமா?''

-சத்ராஜித் அப்படிக் கூறவும் பாமாவிடம் ஒரு பரவச உணர்வு எழுந்தது. கண்களை மூடி உருக்கத்துடன் ஆதித்த பகவானை தியானிக்கத் தொடங்கினாள்.

''சூரிய மகாபிரபுவே... நீ வழங்கிய மணி என்னும் அதிசயம் என் மனம் கவர்ந்த கிருஷ்ண பிரபு வசம் கிடைக்க வேண்டும். இனி நடப்பதாவது எல்லாம் நல்ல விதமாக நடக்க வேண்டும். தாங்கள் அதன் பொருட்டு அருள்புரிய வேண்டும்,'' என்றாள்.

இதற்கிடையில், வனத்தில் அந்த காலடித்தடம் ஒரு குகை வாசலில் முடிந்தது. உள்ளே குழந்தை அழும் சப்தம்!

காலடித் தடத்தை தொடர்ந்து வந்து நின்றிருந்த கண்ணனும், அவனுடன் வந்த மற்றவர்களும் குழந்தை அழும் சப்தம் கேட்டு ஆச்சரியத்தோடு ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

- இன்னும் வருவான்

இந்திரா சவுந்தர்ராஜன்






      Dinamalar
      Follow us