sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 24, 2025 ,கார்த்திகை 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

கண்ணன் என்னும் மன்னன்! (21)

/

கண்ணன் என்னும் மன்னன்! (21)

கண்ணன் என்னும் மன்னன்! (21)

கண்ணன் என்னும் மன்னன்! (21)


ADDED : செப் 03, 2014 04:54 PM

Google News

ADDED : செப் 03, 2014 04:54 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சத்ராஜித் அநியாயமாக உயிரை விடவும், வந்த வேகத்தில் சததன்வா அந்த சமந்தகமணியைத் தேடினான். அதுவோ, பூஜையறையில் சூரிய பகவானின் சிலாரூபத்தில்(சிலை) கழுத்தில் கிடந்தது. பிரசேனஜித்தின் மரணத்தால் சூதக காரியம் காரணமாக பூஜையின்றி இருந்தது. சூதகம் முடிந்த பின்னும், சத்ராஜித் அதை பெரிதாகக் கொண்டாடவில்லை. அந்த அளவு சோகம் ஏற்பட்டு விட்டது.

சமந்தக மணிக்குரிய கட்டுப்பாடுகளை சரிவர கடைபிடிக்காவிட்டால் எதிர்விளைவு ஏற்படும் என சூரியன் எச்சரித்தபடியே நடந்து விட்டது. உச்சபட்சமாக, சத்ராஜித் உயிரையே குடித்து விட்டது தான் கொடுமையிலும் கொடுமை.

சமந்தகமணியைத் தன் ரத்தம் தோய்ந்த வாளாலேயே எடுத்த சததன்வா, தன் கழுத்தில் மாலையாக அணிந்து கொண்டான். பெரும் சத்தத்துடன் சிரித்தான்.

'இனி நான் தான் பேரரசன். எனக்கு இணையானவர் எவரும் கிடையாது...'' என்று முழங்கினான். நடுங்கியபடியே அங்கிருந்த ஊழியர்களும், சேடிப்பெண்களும் அதைக் கேட்டனர்.

அப்படியே நிலம் அதிர நடந்தவன் சத்ராஜித்தின் மாளிகையை விட்டு வெளியேறி, சிட்டாகப் பறந்தான். அவனது ரதம் துவாரகையை விட்டு மதுராபுரி நோக்கி சென்றது. கண்ணனும், பலராமனும் இல்லாத துவாரகை அரண்மனை வெறிச்சோடிக் கிடந்தது.

குறிப்பாக, நந்தவனத்தில் மயில்களும், மான்களும் கூட கண்ணன் இல்லாத சோகத்தை எதிரொலித்தபடி இருந்தன. பூக்களுக்கு கூடவா கண்ணன் இல்லை என்பது தெரியும்? பாதி பூத்தும் மீதி பூக்காமலும் இருந்தன.

நந்தவனம் பக்கமாய் பூப்பறிக்க வந்துஇருந்தாள் பாமா. அவளும் நந்தவன சோகத்தை உணர்ந்தாள். உள்ளே

ருக்மிணி வீணை இசைத்துக் கொண்டிருந்தாள். பாமா அங்குள்ள மான் ஒன்றை அருகில் அழைத்து, அதன் கழுத்தை வளைத்து தன் கன்னத்தோடு பொருத்தி, 'அடியே! கருங்கண்ணி .... நீ என்ன என்னை விட சோகமாக இருக்கிறாயே! என் மணவாளர் உன்னைக் கூட இப்படி கெடுத்து வைத்திருக்கிறாரே....'' என்று வாஞ்சையோடு வருந்தினாள்.

அப்போது தான் சேடிப்பெண் ஒருத்தி, அலை பாய அங்கு ஓடி வந்து, சததன்வா சத்ராஜித்தை கொன்று விட்டு சமந்தக மணியையும் கவர்ந்து சென்று விட்டதை கூறினாள்.

அந்த நொடியே பாமாவுக்கு 'அப்பா....' என்று உள் மனது ஓலமிட்டது. அடுத்து உதடுகளும் பாசத்தோடு குரல் கொடுக்க, சத்ராஜித் மாளிகை நோக்கி ஓடினாள். மாளிகையில் சத்ராஜித்தின் உடல் ரத்த வெள்ளத்தில் கிடந்தது. அந்தக் காட்சி அவளை உலுக்கி எடுத்தது. அவளிடம், நடந்து முடிந்ததை அப்படியே காட்சிப்படுத்தினர் அங்குள்ள சேடிப் பெண்கள்.

''அம்மா..... நல்லவன் போல் வந்து நயவஞ்சகமாய் கொன்று விட்டானம்மா.... அந்த சததன்வா.... வெறி பிடித்தவன் போல, சமந்தக மணியை எடுத்து அணிந்து கொண்டு அவன் புறப்பட்டுச் சென்றது அதை விடக் கொடுமை....'' - என்றாள் ஒரு சேடிப்பெண்.

பாமா அந்த நொடியே கண்கள் சிவக்க எழுந்தாள்.

''அந்த வஞ்சகனை பழிக்குப் பழி வாங்குவேன். என் மணவாளர் இல்லாத தருணத்தில் அவன் வந்து

போனதில் இருந்தே அவன் எத்தனை பெரிய வீரன் என்பது புலனாகி விட்டது. அவன் மண்ணோடு மண்ணானால் தான் என் தந்தையின் ஆத்மா சாந்தியுறும்'' என்றவள், அப்போதே இரு தாக்கோலைக்காரர்களை அழைத்து கிருஷ்ண பிரபுவுக்கு நடந்ததை விளக்கி, கடிதம் ஒன்று எழுதி, ஹஸ்தினாபுரம் நோக்கி அனுப்பினாள்.

''வீரர்களே! இதைத் தருவதோடு அவரை கையோடு அழைத்து வாருங்கள். அவர் வந்தால் தான், இங்கே என் தந்தையின் ஈமக்காரியங்கள் நடக்க இயலும்'' - என்று கண்ணீர் விட்டவளை, ருக்மிணி வந்து கட்டிக் கொண்டு ஆறுதல் அளிக்கத் தொடங்கினாள்.

''பாமா..... வருந்தாதே! நம் பிரபு வருவார்..... அந்த சததன்வாவை நரகத்துக்கும் அனுப்பி வைப்பார். அவன் விதி நல்ல விதியில்லை. அவன் நயவஞ்சகன். நம் பிரபுவைப் பற்றி தெரிந்திருந்தும் அவன் செய்யக் கூடாததை செய்து விட்டான். இனி அவனும் அவனைச் சார்ந்தவர்களும் மண்ணோடு மண்ணாவர்'' என்று சபதம் செய்தாள்.

இதனிடையே சமந்தக மணியோடு வந்து சேர்ந்த சததன்வா முதலில் சென்று நின்றது அக்ரூரரிடம் தான். தகவல் அறிந்து அங்கேயே வந்து விட்டான் கிருதவர்மா. சததன்வா உடையில் அங்கங்கே ரத்தக்கறையைக்

கண்ட அக்ரூரர், ''சததா... நீ சொன்னபடியே செய்து விட்டாயா? '' என்று தான் கேட்டார் அக்ரூரர்.

''இது என்ன கேள்வி... பார்த்தால் எப்படி தெரிகிறது? ஜொலிக்கும் சமந்தகமணி அசலானது அக்ரூரரே...!''

''அது சரி... அதற்காக இப்படியா ஆபரணம் போல அணிந்திருப்பாய். இது பூஜைக்குரியது.... பூஜித்த சத்ராஜித்தையே குலத்தோடு அழிந்து விட்டது. நீ இப்படி நிற்பதைப் பார்த்தால் என் வயிற்றையே கலக்குகிறது...''

''பயப்படாதீர்கள்... அச்சமே நரகம் என்பதை அறியாதவரா நீங்கள்?''

''அது மட்டுமல்ல.. அடாத செயல்களும், ஆசைகளும் கூட நரகத்தில் தான் தள்ளும் சததன்வா...''

''என்ன உபதேசமா... இது என்னை பாராட்ட வேண்டிய தருணம்''

''இருக்கலாம். ஆனால், கிருஷ்ணனை நினைத்து என்னால் கலங்காமல் இருக்க முடியவில்லை''

''கிருஷ்ணன்... பொல்லாத கிருஷ்ணன்... அவனை வெல்ல இந்த மணியே உதவாதா என்ன?''

''இது என்ன காமதேனுவா.... கேட்டதை எல்லாம் தர! இது பொன்னை மட்டும் தர வல்லது....''

''பொன்னே போதும் அக்ரூரரே.... எனக்கு உதவிட முன் வருபவர்க்கெல்லாம் நான் இதன் மூலம் கிடைக்கும் பொன்னை அள்ளித் தருவேன் என்னும் போது எவர் எனக்கு உதவாமல் போவார்கள்...''

''சததன்வா... முதலில் இதை பாதுகாப்பாக வைத்து விட்டு வா. பிறகு பேசலாம். முதலில் புறப்படு...'' - அக்ரூரர் படபடத்தார். கிருதவர்மாவோ ஸ்தம்பித்தே போயிருந்தான்.

நீங்கள் இருவரும் வீரர்கள் இல்லை. நான் அப்படியல்ல! வரட்டும் அந்த கிருஷ்ணன்! அவனா... நானா... என்று பார்த்து விடுகிறேன் ஒரு கை! முன்னதாக, அந்த மாயாவிக்கு எதிரான அவ்வளவு பேரையும் ஒன்று திரட்டுகிறேன்'' - சததன்வா சபதமிட்டபடியே புறப்பட்டான். ஆதித்தனும்

வானத்தில் இருந்து சுடர் விட்ட படியே தான் அளித்த ஒரு மாலை, பூலோகத்தில் பாடாய் படுத்துவதையும், பாடாய் படுவதையும் பார்த்தபடி இருந்தான்.

- இன்னும் வருவான்

இந்திரா சவுந்தர்ராஜன்






      Dinamalar
      Follow us