sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 26, 2025 ,கார்த்திகை 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

கண்ணன் என்னும் மன்னன்! (25)

/

கண்ணன் என்னும் மன்னன்! (25)

கண்ணன் என்னும் மன்னன்! (25)

கண்ணன் என்னும் மன்னன்! (25)


ADDED : அக் 06, 2014 02:55 PM

Google News

ADDED : அக் 06, 2014 02:55 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நான்காம் பிறை பற்றி நாரதர் கூறவும் கண்ணனும் தன் நினைவுகளை பின்னோக்கி செலுத்தத் தொடங்கினான். பாமா ருக்மிணி இருவரும் நாரதர் சொன்னதைக் கேட்டு நான்காம் பிறைக்கும் இப்போதுள்ள சிக்கல்களுக்கும் என்ன சம்பந்தம் என்பது போல யோசிக்கத் தொடங்கினர்.

கண்ணனுக்கும் பிரசேனஜித்தைத் தேடிப் போனபோது நான்காம்பிறையைப் பார்த்தது நினைவுக்கு வரவும் நாரதரிடம், ''அதைப் பார்த்ததால் என்ன?'' என்று ஏதுமறியாதவரைப் போல கேட்டான்.

பாமா, ருக்மிணியும், ''நாரத மகரிஷியே.... நான்காம்பிறைக்கும், இப்போது நேர்ந்திருக்கும் சிக்கலுக்கும் என்ன சம்பந்தம்?'' என்று கேட்டனர்.

''சிக்கல் நேர்ந்து விட்டதாகவா கருதுகிறீர்கள்?'' என்று நாரதர் திருப்பிக் கேட்டார்.

''சிக்கல் இல்லாவிட்டால் அபவாதம் என்று கூட சொல்லலாம்'' என்றாள் ருக்மிணி.

''சரியாகச் சொன்னீர்கள் தாயே... அபவாதம் தான்! தீயே தீண்ட அஞ்சும் திவ்ய மதுரர் நம் பிரபு. ஆனால், இவரை இன்று உடன்பிறந்த சகோதரரே சந்தேகப்படுகிறார். இப்படியே நீடித்தால் நீங்கள் இருவரும் கூட சந்தேகப்பட ஆரம்பித்து விடுவீர்கள்...'' - நாரதர் சொன்னதைக் கேட்டு இருவரும் மவுனமாக இருந்தனர்.

கண்ணனோ மீண்டும்,''நாரதரே.... நான்காம் பிறையைப் பார்த்ததாலா இப்படி ஆகிறது?'' என்று கேட்டான்.

நாரதர் பெருமூச்சுடன்,''ஆட்டுவிப்பவனும் நீ... ஆடுபவனும் நீ...நீ அறியாததா கண்ணா?'' - என்று திருப்பிக் கேட்டார்.

'' நான் எல்லாம் அறிந்தவனாக இருந்தால், சமந்தகமணி இருக்கும் இடத்தை கண்டறிந்திருப்பேனே..

நாரதரே....''.

பாமாவோ படபடப்புடன், ''அபவாதத்திற்கும் நான்காம் பிறைக்கும் என்ன சம்பந்தம் சொல்லுங்கள்,''

என்றாள்.

''சொல்கிறேன். நைமிசாரண்யத்தில் முனிவர்களின் கேள்விக்கு, ஸுகர் சொன்ன பதிலையே நான் இப்போது இங்கு கூறப் போகிறேன். நான்காம் பிறையை பார்க்கக் கூடாது என்பது மகாகணபதி இட்ட சாபம்.

மீறிக் காண நேர்ந்தால் அப்படிக் கண்டவர் பூலோகத்தில் பலவிதமான அபவாதங்களுக்கு ஆளாவார்கள்.''

''என்ன விநோதம் இது... கணபதி எதற்காக இப்படி சாபம் அளித்தார்?''

''எல்லாம் அந்த சந்திரனின் கர்வத்தால் வந்த கேடு தான்...''

''விபரமாக கூறுங்களேன்.....''

'கூறுகிறேன்... இது சற்று நெடிய கதை. அமர்ந்து பேசலாமா?''

''தாராளமாக... தங்களை அமர்விக்க கூடத் தோன்றாமல் நின்றபடியே பேசியது எங்கள் பிழையே... மகரிஷியே! பொறுத்தருள வேண்டும்....'' என்றாள் பாமா.

ஆசனத்தில் இடமளிக்க நாரதரும் அமர்ந்தார். கண்ணனும் புன்முறுவலுடன் நாரதரின் தும்புராவை பக்குவமாக கழற்றி பக்கமாய் வைத்தான். அப்போது, ''நாராயணா... நாராயணா.... கிருஷ்ண பிரபு என்னை பாவியாக்காதீர்கள்'' என்று நாரதர் பதறினார்.

''இப்போது நான் தான் பாவி.... நீங்கள் இந்த பாவிக்கு விமோசனம் அளிக்க வந்துள்ளீர். இம்மட்டில் நீங்கள் குரு ஸ்தானத்தில் இருக்கிறீர்கள். உங்களுக்கு பாத பூஜையே செய்யலாம்...'' - கண்ணன் சொன்னது நாரதரை மேலும் பதறச் செய்தது.

''மகாபிரபு...போதும்....போதும்... நான் தேவியருக்கு அறிந்ததைக் கூறி விட்டு புறப்படுகிறேன்'' - தவித்தபடியே பேசினார் நாரதர்.

''முதலில் அந்த சாப வரலாற்றை சொல்லுங்கள்'' என்றாள் பாமா.

''சொல்கிறேன்.... சொல்கிறேன்..'' என்ற நாரதர் ஒருமுறை தொண்டை செருமிக் கொண்டார். பாமாவும், ருக்மிணியும் குழந்தை போல கதை கேட்கத் தயாராயினர்.

''தெரிந்த ஒன்றை தெரியாதது போல கருதிக் கொண்டு அதை தெரிந்தவர்களிடமே தெரிவிப்பது என்பது எல்லாம் தெரிந்தவருக்கு அழகல்ல... '' என்று நாரதர் கண்ணனைப் பார்த்தபடியே பேசவும் பாமா, ருக்மிணிக்கு குழப்பம் உண்டானது.

''நாரதரே... என்னாயிற்று உங்களுக்கு?'' வார்த்தையை பிடித்துக் கொண்டு சொக்கட்டான் விளையாடுவது போல பேசினால் என்ன அர்த்தம்?''

''தேவி.... நான் இருப்பதால், நாரதர் பேசத் தயங்குகிறார் என்று கருதுகிறேன். நான் வேண்டுமானால் தூரச் சென்று விடுகிறேன். நீங்கள் தடையின்றி சந்திரனின்கர்வபங்கமான கதையைக் கேளுங்கள்'' என்று விலகிச்

செல்ல, நாரதரும் 'அப்பாடா' என்று மூச்சு விட்டவராக அந்த வரலாற்றைச் சொல்லத் தொடங்கினார்.

''ஒருநாள் கணபதி தன் மூஷிக வாகனத்தில் ஏறி சந்திரலோகத்திற்குச் சென்றார். அப்போது சந்திரன் அவரைப் பார்த்து பரிகாச எண்ணத்துடன் சிரித்து விட்டார். ஒரு எலியின் மீது, யானைமுகம் கொண்ட கணபதி அமர்ந்து வரும் கோலத்தைக் கண்டதே சிரிப்பிற்கான காரணம். அதைக் கண்ட கணபதிக்கு கோபம் உண்டானது.

''அடே சந்திரா... ஏன் சிரித்தாய்?'' என்றார் ஆவேசத்துடன்.

சந்திரனோ அலட்சியமாக,''சிரிப்பு வந்து விட்டது. சிரித்தேன். யானை முகம், முறம் போல காது, பானைவயிறு.. உன்னைப் பார்க்கும் யாரும் சிரிக்கத் தான் செய்வார்கள்,'' என்றான் சந்திரன்.

இதைக் கேட்டு விநாயகர் விக்கித்துப் போனார்.

''சந்திரா... நீ வெண்மையாக இருப்பாதல் கர்வத்தோடு பேசுகிறாய். சூரிய ஒளியைக் கடன் வாங்கி ஜொலிக்கும் உனக்கே இவ்வளவு கர்வமா? நான் யார் என்று தெரிந்திருந்தும் ஏளனமாகப் பேசிய உன் அழகெல்லாம் போகட்டும். இன்று முதல் சந்திரன் என்கிற நீ இருளன் ஆகி இல்லாமல்போவாய்,'' என்று சபித்தார். இதைக் கேட்ட சந்திரன் நடுங்கிப் போனான்.

- இன்னும் வருவான்

இந்திரா சவுந்தர்ராஜன்






      Dinamalar
      Follow us