sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 18, 2025 ,கார்த்திகை 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

கண்ணன் என்னும் மன்னன்(3)

/

கண்ணன் என்னும் மன்னன்(3)

கண்ணன் என்னும் மன்னன்(3)

கண்ணன் என்னும் மன்னன்(3)


ADDED : ஏப் 21, 2014 02:59 PM

Google News

ADDED : ஏப் 21, 2014 02:59 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துவாரகையில் கண்ணனுக்குத் தான் பேரும் புகழும் இருந்தது. அவனது வசீகரம் காந்தம் போல் கவர்ந்திழுக்கும் பார்வை, கம்பீரப் புன்னகை, ராஜநடை, மிடுக்கு என்று சகலத்திலும் கண்ணனே மன்னன். இது சத்ராஜித்துக்குள் ஒரு மெல்லிய பொறாமையை உருவாக்கி விட்டது.

கண்ணனை அவதார புருஷன் என்று சொல்வதெல்லாம் கூட ஒரு மிகையான சொல்லாகவும், செயலாகவும் அவனுக்குத் தோன்றியது. எனவே, எல்லா வகையிலும் கண்ணனைப் பின்னுக்குத் தள்ளி தன்னை முன்னிறுத்த அவனது மனம் துடித்தது. சூரிய வழிபாடு சத்ராஜித்துக்கு நம்பிக்கையை அளித்தது. எனவே, சூரிய வழிபாட்டில் மனம் லயித்து வந்தான்.

இத்தனைக்கும் சத்ராஜித் சாமான்யன் அல்ல...

மாட மாளிகையும், கூட கோபுரமுமாய் செல்வந்தனாக வாழ்பவன் அவன். ஆனாலும், துவாரகை என்றதும், கண்ணன் நினைவு தான் வருமே ஒழிய, மற்ற யார் நினைப்பும் வருவதில்லை.

நிதர்சனமான கண்கண்ட தெய்வமான சூரியனை விட சிறந்த தெய்வம் இல்லை எனக் கருதிய சத்ராஜித்தின் தவம் வீண் போகவில்லை. சூரியனும் நேரில் பிரசன்னமாக சத்ராஜித் பூரித்தான்.

''ப்ரபோ... தாங்களா? என் தவத்திற்கு இரங்கி எனக்கு காட்சி தந்து விட்டீர்களே'' என்று மகிழ்ந்தான்.

''சத்ராஜித்... உன் நெடுநாள் தவத்தை நான் அறிவேன். உன் பக்தியை மெச்சுகிறேன். என்னால் ஆகவேண்டியதைச் சொல். நிறைவேற்ற முயல்கிறேன்,'' என்றான் சூரியன்.

''ப்ரபோ... என் அன்றாட வாழ்வில் ஒரு மலர்ச்சியில்லை. பசித்தால் உண்டு, இரவு வந்தால் உறங்கி, பகலானால் விழித்து உடம்பை வளர்ப்பது மட்டுமா வாழ்க்கை!''

''அது அவரவர் பார்வையைப் பொறுத்தது சத்ராஜித்...''

''ஐயனே.... நான் பெரும் வல்லாளனாக இந்த துவாரகையில் மட்டுமல்ல.... இந்த உலகிற்கே வலியவனாக பொன், பொருள், எழில் என்று சகலத்திலும் முதல்வனாக வாழ விரும்புகிறேன்...''

''புரிகிறது..... குறையாத நிதி, பெரும்புகழ், அதே சமயம் பொறுப்பற்ற ஒரு ஏகாந்த வாழ்வு..... இவை தானே உன் லட்சியம்?''

''கிட்டத்தட்ட அப்படித் தான்.. உலகிற்கே அரசனாவதிலும் எனக்கு விருப்பமில்லை. அதன் நிர்வாகச் சுமையை என்னால் எல்லா நாளும் சுமந்து கொண்டிருக்க முடியாது. ஆனால், உலகிற்கே பேரரசனாக விளங்கும் ஒருவனை விட, பெரியவனாக நான்

அனைவர் முன்னும் காட்சி தர வேண்டும். குறிப்பாக, இந்த துவாரகையில் எனக்கு பிறகே, எவராக இருந்தாலும் சிந்திக்கப்பட வேண்டும்''.

சத்ராஜித் எங்கு வருகிறான் என்பது சூரிய தேவனுக்குப் புரிந்து விட்டது. கண்ணன் மேல் சத்ராஜித்துக்கு இருக்கும் காழ்ப்பும் புரிந்தது. சில வினாடி மவுனம் காத்தான் சூரியன்.

சத்ராஜித் அச்சமுடன் பார்த்து, ''நான் தவறாக எதையாவது பேசி விட்டேனா பிரபு...?'' சிரித்தபடியே சூரியனும், ''அப்படி எல்லாம் இல்லை...'' என்றபடியே தன் ஒளி பொருந்திய கரங்களில் சிவந்த ஒளியைச் சிந்துகிற ஒரு மணியை வரவழைத்தான். சூரியனின் கையில் அது தகதகத்தது.

சத்ராஜித்துக்கே அதைக் காண கண்கள் கூசியது.

''ப்ரபோ! என்ன இது?''

''அருகில் வா... மாலையாக அணிவிக்கிறேன். இதன் பெயர் சமந்தகமணி...'' என்றான் சூரியன்

''சமந்தக மணியா? அப்படி என்றால்....?''

சத்ராஜித் சூரிய பகவானைப் பார்த்து வியந்து போய்க் கேட்க, சூரிய பகவானும் அதை அவன் கழுத்தில் மாலையாக

அணிவித்தபடியே அந்த சமந்தகமணி பற்றிக் கூறத் தொடங்கினான்.....

''சத்ராஜித் இது என்னுடைய அம்சம். இந்த மணி, ஒரு நாளைக்கு எட்டு யானைகளின் எடை அளவு தங்கத்தை உனக்கு தந்தபடியே

இருக்கும். அடுத்து இது உள்ள இடத்தில் அமங்கலங்கள் நிகழாது. துர்மரணங்கள் ஏற்படாது. பிணி, கவலை எதுவும் அணுகாது.

மொத்தத்தில் இது உள்ள இடம் ஒரு சொர்க்கம் என்றால் அதில் துளியும் மிகை கிடையாது. அதே சமயம், இது அருளோடு கொண்டாடப்பட வேண்டிய ஒன்றாகும்.

இது உள்ள இடத்தில் பொறாமையோ, துர்எண்ணங்களோ துளியும் கூடாது. குறிப்பாக, தூய்மை என்னும் ஆகாரம் இதற்கு மிக முக்கியம். எனவே, நீ இதை உன் பூஜை அறையில் வைத்து போற்றி வா. இது உனக்கான உத்தமமான பரிசு தான். ஆனால் கவனம்... கவனம்... கவனம்..!''- என்று மூன்று முறை எச்சரித்தவனாக விடை பெற்றான் சூரியன்.

சத்ராஜித்திடம் ஒரே பூரிப்பு! உற்சாகத்தில் துள்ளிக் குதித்தான். கழுத்தில் தரித்திருந்த சமந்தகமணி மாலை, அவன் மார்பில் இன்னொரு சூரியனாக ஜொலித்தது. தெருவில் சத்ராஜித் அந்த மாலையோடு நடந்த போது துவாரகைவாசிகள் அவன் மேல் வைத்த விழியை எடுக்க வில்லை. சிலர் அப்படியே ஒளிப்புனலாய் வருவது அந்த சூரியனே தானோ என்று கூட கருதினர்.

சிலர் இதுபற்றி முன்னதாக செய்தி சொல்ல, கண்ணனின் அரண்மனை நோக்கி ஓடினார்கள்.

கண்ணன் தன் அந்தப்புரத்தில் புதிதாய் மணமாகி வந்திருந்த ருக்மிணியோடு சொக்கட்டான் விளையாடிக் கொண்டிருந்தான்.

அவள் முத்துக்களை நகர் காய்களாக வைத்துக் கொண்டிருந்தாள். கண்ணனோ செம்பவழ மணிகளை தன் காய்களாக வைத்துக்

கொண்டிருந்தான்.

சொக்கட்டான் ஐம்பொன்னால் செய்யப்பட்டு தரை மீது உருளும் போது அழகாய் சப்தமிட்டது. அது கேட்பதற்கு நல்ல சங்கீதமாகவும் இருந்தது. கண்ணன் வளர்த்திடும் மயில்களில் சில, மாடங்களில் வாகான இடங்களில் நீண்ட தோகையோடு ஏறி அமர்ந்து, கண்ணன் விளையாடுவதை ரசித்தன. ருக்மிணிக்கு அருகில் சில சக்கரவாகப்பட்சிகள் வந்து நின்றபடி இருந்தன.

அற்புதமான சூழல்... ஆனந்தமயம்!

அப்போது தான் ஓடி வந்தவர்கள், கண்ணன் முன்னால் மூச்செறிந்து நின்றனர்.

-இன்னும் வருவான்

இந்திரா சவுந்தர்ராஜன்






      Dinamalar
      Follow us