sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 20, 2025 ,கார்த்திகை 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

கண்ணன் என்னும் மன்னன்! (4)

/

கண்ணன் என்னும் மன்னன்! (4)

கண்ணன் என்னும் மன்னன்! (4)

கண்ணன் என்னும் மன்னன்! (4)


ADDED : ஏப் 25, 2014 01:49 PM

Google News

ADDED : ஏப் 25, 2014 01:49 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

''எதற்கு இந்த ஓட்டம்... என்னாயிற்று?''... கண்ணனும் கேட்டான்.

''ப்ரபோ... நம் துவாரகைக்கு ஆதித்த பகவான் எழுந்தருளியுள்ளார்.... தெருவில் அவர் நடந்து வரும் அழகே அழகு...'' என்றான் ஒருவன்.

''எம் இரு கண்களால் பகவானை, பார்க்கக் கூட முடியவில்லை. அப்படி ஒரு பேரொளி.... அவர் துவாரகை வந்திருப்பதே உங்களைக் காணத்தான் என்பதால் தான், நாங்களும் இங்கே வந்தோம்...'' என்றான் இன்னொருவன்.

அதை எல்லாம் கேட்ட கண்ணன் முகத்தில் ஒரு முறுவல். ருக்மிணிக்கு அதன் பொருள் புரியவில்லை.

''ப்ரபோ... நம் திருமணத்தில் பங்கெடுத்துக் கொள்ள இயலாது போனதால், அது குறித்து ஆசி கூற ஆதித்தன் வந்திருக்கிறாரோ?'' - என்று கேட்டாள்.

கண்ணனும், தன் நீல நயனங்களை சற்று மூடி மோனத்தில் ஆழ்ந்தான். பின் திருவாய் மலர ஆரம்பித்தான்.

''ருக்மிணி.... வந்திருப்பது ஆதித்தன் இல்லை. அவனது அணி...'' என்றான்.

''அணியா... என்ன சொல்கிறீர்கள்?''

''ஆம்... அவன் அணி தான் துவாரகைக்குள் வந்துள்ளது. எல்லாம் சத்ராஜித்தின் ஆதித்த பிரேமத்தால் விளைந்தது எனலாம்...''

''ஆதித்த பிரேமமா.... நீங்கள் என்ன சொல்கிறீர்கள். எனக்குப் புரியவில்லை. ஆமாம். அது யார் சத்ராஜித்..?''

''இந்த துவாரகையின் பெரும் செல்வந்தன்..''

''உங்களை விடவா?''

''ஆ...ருக்மிணி.. நான் செல்வந்தன் என்று யார் சொன்னது?''

''என்றால் உங்களை விடவும் ஒரு செல்வந்தனா?''

''ஏன் இருக்கக் கூடாதா?''

'' அது எப்படி? நீங்கள் அல்லவா துவாரகாதிபதி....?''

''மெல்லப் பேசு. அண்ணா பலராமர் காதில் விழுந்தால், முதலில் ஆச்சரியப்படுவார். பிறகு வருத்தப்படுவார்!''

''இதில் வருத்தப்பட என்ன இருக்கிறது?''

''நிறைய இருக்கிறது. வாஸ்தவத்தில் மதுராவின் மன்னவரான உக்ரசேனர் தான், துவாரகைக்கும் மரியாதைக்குரிய ராஜா. இருப்பினும் அண்ணா பலராமர் இங்கே ஆட்சி புரிந்து வருகிறார். நான் இளவரசன் என்று வேண்டுமானால் கூறிக் கொள்ளலாம்''

''ப்ரபோ என்ன இது... எனக்குள் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியை அளிக்கிறீர்களே... தங்களை அல்லவா நான் மன்னாதி மன்னன் என்று எண்ணிக் கொண்டிருக்கிறேன்....''

''உனக்கு நான் மன்னாதி மன்னன் தான்! அதில் என்ன சந்தேகம்? இந்த புவனங்களுக்கெல்லாம் சக்கரவர்த்தி என்று கூட கருதிக் கொள். மனதில் கற்பனை செய்து கொள்ளும் ஆற்றலே, அதன் பொருட்டு தானே உள்ளது!''

''போதும் விளையாட்டு..... இப்படி தங்களை தாழ்த்தி, மற்றவர்களை உயர்த்துவதால், அவர்கள் உயர்ந்து விடவும் போவதில்லை. நீங்கள் தாழவும் போவதில்லை''

''நீ எப்படி நினைத்தாலும் சரி தான்....''

-கண்ணனும் ருக்மிணியும் சத்ராஜித்தின் சமந்தகமணியால் பலவித சிந்தனைகளுக்கு ஆட்பட, சத்ராஜித்தும் தன் மாளிகை ஏகி, அங்குள்ள தன் பட்டமகிஷியிடமும், அருமைப் புதல்வி சத்யபாமாவிடமும், அன்புத்தம்பி ப்ரசேனஜித்திடமும் சமந்தகமணியைக் காட்டிப் பூரித்துப் போனான்.

''தம்பி.... நான் இனி இந்த துவாரகையின் பல செல்வந்தர்களில் ஒருவனில்லை. நான் மட்டுமே பெரும் செல்வந்தன். இந்த மணி தினம் தினம் எட்டு யானைகள் அளவு சுவர்ணத்தை கொட்டிக் குவிக்கப் போகிறது. அந்த தங்கத்தால், நம் மாளிகையையே சுவர்ண மாளிகையாக ஆக்கி விடலாம். நான் மனது வைத்தால், இந்த துவாரகையைக் கூட சொர்ணபுரியாக மாற்றி விடுவேன். இனி துவாரகையை எண்ணும் போது என் நினைப்பு தான் எல்லோருக்கும் வர வேண்டும். வேறு எவர் நினைப்பும் வரக் கூடாது....'' என்று கண்ணனை மறைமுகமாக குறிப்பிட்டான்.

அவர்களும் பூரித்துப் போனார்கள். அந்த சமந்தக மணிமாலையை, தன் மாளிகையின் பூஜை அறையில் இருக்கும் சூரிய பகவானின் சிலாரூபத்தின் கழுத்திலேயே அணிவித்து, அதற்கு மேல் மலர் மாலைகளை எல்லாம் சூட்டி, வணங்கினான்.

அதன் பின், துவாரகாவாசிகள் அதைப் பற்றிக் கேள்விப்பட்டு ஒரு கோயிலுக்கு வந்து கர்ப்பகிரகத்து சிலாரூபத்தை தரிசிப்பது போல தரிசித்தும் செல்லத் தொடங்கினார்கள். அதுவும் பொன்னைக் கொட்டிக் குவித்தது. சத்ராஜித்தும் அதை வாரி இறைக்கத் தொடங்கினான். தன் மாளிகை வாசற்படியில் இருந்து கால் செருப்பில் கூட தங்க இழைகள் ஓடியபடி இருக்க வேண்டும் என்றும் விரும்பி, அதற்கேற்ப நடந்து கொள்ளத் தொடங்கினான்.

செல்வந்தச் செருக்கு, அவனை இறுக்க ஆரம்பித்தது. அதோடு சமந்தக மணியின் அருளம்சம் காரணமாக, நோயுற்றவர்களில் இருந்து பொருள் வேண்டுவோர் வரை சகலரும் சத்ராஜித்தை வந்து பார்த்து பெரும் பொருளோடும் நலத்தோடும் திரும்பத் தொடங்கினர்.

மொத்தத்தில் துவாரகை என்றாலே, அது சமந்தகமணி என்றும், சத்ராஜித் என்றுமே பேசும் படியான ஒரு சூழல் உருவானது. இது ருக்மிணியை சற்று கவலை கொள்ளச் செய்தது.

ருக்மிணி தனக்கேற்பட்ட கவலையோடு கண்ணனை நாடிச் சென்று நின்றாள். அவள் முகக்குறிப்பே கண்ணனுக்கு அவள்

மனநிலையை உணர்த்தி விட்டது.

''என்ன தேவி... எதனால் இந்த சலனம்.. கிலேசம் ?'' என்று தெரியாதவன் போல கேட்டான்.

''ஒன்றும் தெரியாதவர் போல என்னிடம் பேச வேண்டாம்....'' - என்று வேகமாய் ஒரு பதிலைச் சொன்னாள் ருக்மிணி.

''சரி நான் பேசவில்லை. நீ வாழ்க.... உன் கிலேசம் வாழ்க...'' என்று வாழ்த்தினான் கண்ணன்.

''உங்கள் வாயால் அப்படி எல்லாம் வாழ்த்தி விடாதீர்கள். நான் படும் பாடே போதும். அது மேலும் வளர வேண்டுமாக்கும்?''

''ப்ரியே... எப்படி பேசினாலும் சலித்துக் கொண்டால் எப்படி.. மனம் விட்டு பேசினால் அல்லவா எனக்கு விளங்கும்!''

ருக்மிணியும் துவாரகையே 'சத்ராஜித்... சத்ராஜித்..' என்று, அவன் பேச்சையே பேசியபடி இருப்பதைக் கூறி முடித்தாள்.

அதைக்கேட்டு, கண்ணனின் முகத்தில் சிந்தனை ஓட்டம். அவன் சிந்திக்க தேவையில்லை.... சிந்தனை தனியாக தனக்கென்று சிந்திக்குமா என்ன? ஆனாலும், மானிட தேகமென்றால், அது அதற்கேற்ற இயல்புகளைக் கொண்டிருக்க வேண்டுமே?

''என்ன சிந்தனை... இப்படி ஒரு மணியை நாம் அடையாமல் போய் விட்டோமே என்று வருத்தமாக இருக்கிறதா?'' - ருக்மிணி தான் அப்படி கேட்டாள்.

கண்ணனுக்கே அதைக் கேட்க சற்று சுருக்கென்று தான் இருந்தது.

- இன்னும் வருவான்

இந்திரா சவுந்தர்ராஜன்






      Dinamalar
      Follow us