sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 20, 2025 ,கார்த்திகை 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

கண்ணன் என்னும் மன்னன்! (5)

/

கண்ணன் என்னும் மன்னன்! (5)

கண்ணன் என்னும் மன்னன்! (5)

கண்ணன் என்னும் மன்னன்! (5)


ADDED : ஏப் 29, 2014 01:42 PM

Google News

ADDED : ஏப் 29, 2014 01:42 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

''ருக்மிணி! நீயா என்னைப் பார்த்து இப்படி கேட்கிறாய்?''

''ஏன்.... நான் கேட்டதில் என்ன தவறு....? தெய்வீகமானவைகள் தங்களைப் போன்ற தெய்வீகர்களிடம் இருப்பது தானே அழகு?''

''அது சரி... தெய்வீகத்துக்கு எதற்கு ருக்மிணி இன்னொரு தெய்வீகம்...?''

''நான் சொன்னதை வைத்தே எனக்கு பதிலா?''

''என் கேள்விக்கு பதில் சொல்லாமல், நீ இப்படி கேட்பதும் அழகா?''

''என்னைப் பொறுத்தவரை, உங்களை விட உயர்வாக எதுவும் சிந்திக்கப்படக் கூடாது. அப்படி சிந்திப்பதாக இருந்தால், அது உங்களுக்கே சொந்தமாக வேண்டும். அதிலும், என் புகுந்த வீடாகிய துவாரகாபுரி பட்டணத்திலேயே, உங்களை ஒரு மணி

விஞ்சப் பார்ப்பதை, என்னால் ஜீரணிக்க முடியவில்லை பிரபு....!''

''அது எங்கே விஞ்சிற்று...? அதைப் பார்த்து உனக்குள் ஏற்பட்ட தாக்கம் தான் அச்சமாகி, உன்னை அதன் முன் நீ தோற்று விட்டது போல காட்டுகிறது. எதையும் எங்கிருந்து எப்படி பார்க்கிறோம் என்பதில் தான் இருக்கிறது ருக்மிணி!''

''உங்கள் பதிலால் எல்லாம் என் மனம் சமாதானம் அடையாது பிரபு...'' - ருக்மிணி ஒன்றும் சாமான்யப் பெண் இல்லை. ஆதிலட்சுமியின் அம்சம் தான் அவள். ஆனாலும், பூலோக மாயை, அவளையும் சாமான்யப்பட்ட பெண் போல சிந்திக்க வைத்தது. அப்படி பேசவும் வைத்தது.

அவளை மட்டுமா அது அப்படி சிந்திக்க வைத்தது? கண்ணனின் அண்ணன் பலராமனையே அது சிக்கலாக சிந்திக்க வைத்து விட்டது.

துவாரகைக்குள் ரதத்தில் ஏறிக் கொண்டு உலா சென்ற அவர், எதிரில் கூட்டம் கூட்டமாக அந்தணர்களும், புலவர்களும் சத்ராஜித்

மாளிகை நோக்கிச் சென்ற வண்ணமிருந்ததைப் பார்த்தார். தன் ரதசாரதியான தாருகனிடம் இதுபற்றி கேட்டார்.

''தாருகா.... இவர்கள் எங்கே செல்கிறார்கள். கண்ணன் எனக்குத் தெரியாமல் ஏதாவது சதஸ் நடத்துகிறானா?'' என்று கேட்டார்.

தாருகனும் சற்றே சலனமுடன், சத்ராஜித்துக்கு கிடைத்த சமந்தக மணி பற்றியும், அது தரும் எட்டு யானை அளவுப் பொன்னை சத்ராஜித் தன்னை புகழ்பவர்களுக்கும், வாழ்த்துபவர்களுக்கும் அள்ளி வழங்குவது பற்றியும் குறிப்பிட்டான்.

''நல்ல காரியம் தான்... ஆனால், இது சத்ராஜித்தை மமதையில் ஆழ்த்தி விடுமே....''

''ஆழ்த்தி விட்டது அரசே... சத்ராஜித் இப்போது தன்னைத் தான், துவாரகாபுரியின் அரசனாக கருதிக் கொண்டிருக்கிறான். ஒரு புலவரிடம், 'பேருக்கு தான் நீங்கள் அரசர்! உண்மையான அரசன் நான் தான்' என்று அவன் சொன்னதாக ஒரு செய்தி என் காதுக்கும் வந்தது...''

''இது கண்ணனுக்கு தெரியுமா?''

''அவர் அறியாத ஒன்றும் இருக்க முடியுமா அரசே?''

''ரதத்தை திருப்பு.... நான் இது குறித்து கண்ணனிடம் நிறைய பேச வேண்டி உள்ளது....'' - பலராமர் உத்தரவுப்படி, நான்கு குதிரைகள் பூட்டப்பட்ட அந்த ரதம் சரேலென்று திரும்பியது. பலராமரும் அதிர் நடை போட்டு ஆலோசனை மண்டபத்தை அடைந்து, கண்ணனையும் வரச் சொல்லி பேச்செடுத்தார்.

''கண்ணா...... துவாரகாபுரி இப்போது எப்படி இருக்கிறது என்று தெரியும் தானே?''

''இது என்ன அண்ணா கேள்வி... உங்களுக்கும் எனக்கும் வேலையே இன்றி சத்ராஜித்தால் சுவர்ண தானமும், இதர தானங்களும்

அமர்க்களப்படுகிறது.''

''இது தெரிந்து எப்படி உன்னால் சலனமின்றி இருக்க முடிகிறது?''

''அண்ணா.... இதில் நானோ.. இல்லை.. நீங்களோ சலனப்பட என்ன இருக்கிறது? சத்ராஜித், ஆதித்தனுக்காக தவமிருந்தான். வரமாய் சமந்தக மணியைப் பெற்றான். அதைக் கொண்டு அவன் இப்போது ஒரு அரசனைப் போலவும் நடந்து கொள்கிறான்.''

''இந்த துவாரகைக்கென்று ஒரு அரசனாய் நானிருக்க, இளவரசனாய் நீ இருக்க, அவன் இது போல செயல்படுவது சரிதானா?''

''அது தவறு என்றால் எந்த வகையில் என்று நீங்கள் தான் கூற வேண்டும்...''- கண்ணன் ஒன்றும் தெரியாதவன் போல பேசினான்.

- பலராமரின் பேச்சைக் கேட்ட கண்ணன் புருவத்தை உயர்த்தி நின்றான்.

''கண்ணா!....''

''என்ன?''

''உனக்கு தெரியாதா! ஒரு தேசத்து அரசன் இருக்க, அவனுக்கு தெரியாமலோ அல்லது அவனை விஞ்சியோ எந்த செயலும் அவன் ராஜ்யத்தில் நடக்கக் கூடாது. சமந்தகமணி போல அதிசயப் பொருள் அரசர்களிடம் இருப்பதே நல்லது. நாளையே சமந்தகமணியை அபகரிக்க எண்ணி, ஒருவன் சத்ராஜித்தை கொலை செய்து விட்டால், அந்த பழி என்னைத் தானே சேரும்?''

''தாங்கள் பழிக்கு அஞ்சுவது எனக்கு புரிகிறது. ஆனால்....''

'' என்ன ஆனால்....?''

''இதை சத்ராஜித்திடம் சொன்னால், அவன் நம் எண்ணத்தைப் புரிந்து கொள்ள வேண்டுமே....!''

''அவன் தவறாகப் புரிந்து கொள்வான் என்பதற்காக என்னை வேடிக்கை பார்க்கச் சொல்கிறாயா?''

''அப்படியல்ல அண்ணா! நாம் பொறாமைப்பட்டு அந்த மணியை கேட்பதாகத் தான் எண்ணுவான்...''

''சரி... இதற்கு தீர்வு என்ன?''

'' இது ஒன்றும் சிக்கலான விஷயம் இல்லை. நான் சத்ராஜித்தை சந்திக்க நேர்ந்தால் வாழ்த்தவே செய்வேன்... விரைவில்,

இந்த துவாரகையை நீ பொன்னகராக்கி விடுவாய் என்பேன்...''

''கண்ணா! பெருந்தன்மை பெருமைக்குரிய விஷயம் தான். ஆனால், அதை விட மதிப்பும், மரியாதையும், கடமை உணர்வும் பெரிதல்லவா? ''

''சரி அண்ணா! நான் என்ன செய்யட்டும்! சொல்லுங்கள்''

''சமந்தக மணி நமக்கு வேண்டாம். மதுராபுரி மன்னரும், யதுகுல மகாபுருஷருமான உக்ரசேனரிடம் ஒப்படைத்து விடச் சொல்.

அவரிடம் சேர்வது தான் சிறந்தது. இதனால் மதுராபுரியே மகிழும்.''

''உத்தரவு அண்ணா.... இப்போதே புறப்படுகிறேன். அதே சமயம் இதை ஒரு அரச உத்தரவாக நீங்கள் இட முடியாது. சமந்தகமணியைப் பெற சத்ராஜித் தவம் செய்திருக்கிறான். தவத்துக்கான வரத்தை நாம் ஆணையிட்டு தடுக்க முடியாது.''

''கண்ணா... அந்த மணி பற்றி என்னை விட உனக்கு நன்றாகத் தெரியும். நான் சொல்ல வேண்டியதைச் சொல்லி விட்டேன். அதனால் ஒரு அபகீர்த்தி எனக்கோ, உனக்கோ வரவே கூடாது. மற்றதை நீ பார்த்துக் கொள்....'' பலராமர் முத்தாய்ப்பாக கூறியதை தொடர்ந்து. கண்ணனின் பிரவேசமும் ஆரம்பமானது.

- இன்னும் வருவான்

இந்திரா சவுந்தர்ராஜன்






      Dinamalar
      Follow us