sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

கண்ணன் என்னும் மன்னன் (8)

/

கண்ணன் என்னும் மன்னன் (8)

கண்ணன் என்னும் மன்னன் (8)

கண்ணன் என்னும் மன்னன் (8)


ADDED : மே 20, 2014 04:08 PM

Google News

ADDED : மே 20, 2014 04:08 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புலன்களை அடக்கி தியானத்தில் ஆழ்பவர்கள் காலத்தின் சக்தியை உணரும் திறமை பெற்றவர்களாக இருப்பார்கள். துவாரகையிலும் அதுபோல ஒரு ஞானிஇருந்தார். காலகண்டர் என்பது அவர் பெயர். அவர் சத்ராஜித் மாளிகை மேல் ஆந்தை வந்து அமர்ந்ததைப் பார்க்க நேர்ந்தது.

ஆந்தை வந்தமர்ந்த நொடியே சத்ராஜித்தை நோக்கி காலன் வரத் தொடங்கி விட்டதாக காலகண்டருக்கு தோன்றியது. அதே வேளை கூடவே ஒரு எண்ணம். சத்ராஜித் வசம் சமந்தகமணி இருக்கும்போது, இந்த ஆந்தை எப்படி இங்கே வர முடியும்? அந்த மணி இருக்கும் இடத்தில் நல்லது மட்டும் தானே நடக்க முடியும் என்ற கேள்வியும் எழுந்தது. அதை தெளிவுபடுத்தும் நோக்கில் அவர் சத்ராஜித்தைக் காண வந்தார்.

சத்ராஜித்தும் அவரை வரவேற்றான்.

''வாருங்கள் காலகண்டரே.... வாருங்கள். இங்கே அமருங்கள்...'' என்றான்.

முன்பெல்லாம் எதைச் சொன்னாலும் கூடவே, ''ஆதித்தபிரான் அருளால் எங்கும் நலங்களே விளைவதாக!'' என்றும் சொல்லுவான்.

இன்று அவன் வரையில், ஆதித்தபிரான் மறந்து போய்விட்டிருந்தார். காலகண்டர் அதையும் நுட்பமாக உணர்ந்தார்.

''சத்ராஜித்... உன் வசமுள்ள சமந்தக மணியை கண்குளிரப் பார்த்து வணங்கிச் செல்ல வந்தேனப்பா....'' என்றார்.

''அடடே! அதை என் தம்பி பிரசேனஜித் அணிந்து கொண்டு வேட்டைக்கு போயிருக்கிறானே...'' என்றான் சத்ராஜித்.

''அப்படியா சங்கதி... இப்போது புரிகிறது எனக்கு..'' என்றார் காலகண்டர்.

''என்ன புரிகிறது உங்களுக்கு....?''

''ஒன்றுமில்லை.... நான் புரிந்து கொண்டதை நீயும் புரிந்து கொள்ள நேர்ந்தால் வருத்தப்படுவாய்... விட்டுவிடு....'' என்றார் காலகண்டர்.

''புதிர் போட்டு பேசாமல் விளக்கமாக கூறுங்கள் காலகண்டரே...''

''சமந்தக மணி பூஜைக்குரியது. அது பூஜையறையில் தூய்மையாக வைத்து பூஜிக்கப்படுவதே சரி. உன் சகோதரன் காட்டில் அதன் தூய்மையைப் பேணத் தவறினால் பேராபத்தாக முடியுமே...''

''கவலை வேண்டாம். பிரசேனன் என்னை விடவும் அதன் தூய்மையை பெரிதாக கருதுபவன்...''

''கருதினால் நல்லது. அதே சமயம் அதை நீ பிரிந்திருப்பது துளியும் நல்லதல்ல...''

''நல்லது.. இனி பிரியாதிருக்க முயற்சிக்கிறேன்.''

''இப்போது பிரிந்திருப்பதே கூட உனக்கு கேட்டை விளைவிக்கலாம்..''

''எந்த வகையில்?''

''சொல்ல விருப்பமில்லை. இந்த நொடி முதல் இஷ்ட தெய்வமான ஆதித்தனையே நினைப்பது தான் உனக்கு நல்லது. உன் தம்பி சமந்தகமணியோடு நலமாகவும், விரைவாகவும் திரும்பி வர வேண்டிக் கொள். நான் வருகிறேன்,'' என்றபடியே காலகண்டர் புறப்பட்டார்.

சத்ராஜித்தின் மனம் கல் விழுந்த குளம் போல சலன வட்டத்தில் ஆழ்ந்தது. காலகண்டர் சொன்ன ஆதித்த தியானம் நினைவுக்கே வரவில்லை. மாறாக கவலையும், பயமும் ஆட்கொள்ளத் தொடங்கியது.....

துவாரகை அரண்மனை!

ஒரு வேடுவக் கூட்டம் அரண்மனை ஆலோசனை மண்டபத்தில் திமுதிமுவென வந்தது. அதில் ஒருவன் உடம்பு முழுதும் கட்டுப் போட்டபடி நின்றான். இன்னொருவன் கை எலும்பு முறிந்த நிலையில், கழுத்தில் மாலை போல கட்டு போட்டு கைபாகத்தை தொட்டில் குழந்தை போல தொங்க விட்டபடி இருந்தான். பலராமரோ, கிருஷ்ணரோ அங்கு வந்திருக்கவில்லை.

சேனாதிபதி அனாத்ருஷ்டன், குதிரைப் படைத்தளபதி சாத்யகி, மல்லர்கள் தலைவன் கதன் ஆகியோர் மட்டுமே மண்டபத்தில் இருந்தனர். வேடுவர்களிடம் விபரம் கேட்டனர். வனத்தில் இருக்கும் தங்களுக்கு ஒரு சிங்கத்தால் நேர்ந்த தொல்லை இதுவென்று கூறி கண்ணீர் விட்டனர்.

'' சிங்கத்தை உங்களால் வேட்டையாட முடியவில்லையா?'' என்று கேட்டான் கதன்.

''முடியவில்லையே. அது பெரும் மாயச் சிங்கமாக இருக்கிறது. அம்புகள் எவ்வளவு தைத்தாலும் காயம் ஏற்படாமல் தப்பித்து விடுகிறது. அதே வேளையில் எங்களில் ஒருவரை தினமும் தனக்கு இரையாக்கிக் கொள்கிறது...''

''சரி. அரசரிடம் பேசி விட்டு அதை வேட்டையாட ஏற்பாடு செய்கிறோம். நீங்கள் புறப்படுங்கள்'' என்ற அனாத்ருஷ்டன், கிருஷ்ண பலராமரிடம் விஷயத்தை தெரிவிக்கச் சென்றான்.

கிருஷ்ணன் தானே வனத்துக்குச் சென்று சிங்கத்தை வேட்டையாடுவதாகக் கூறினான். ''பிரபோ.... நாங்களும் உங்களுடன் வருகிறோம்...'' என்ற அனாத்ருஷ்டனிடம், ''தேவையில்லை.. ஒரு சிங்கத்துக்கு எதிராக ஒரு படை புறப்படுவது இழுக்கு... நான் ஒருவனே போதும்,'' என்று கூற, யாரும் மறுக்கவில்லை.

கண்ணனும் ரதத்தில் புறப்பட்டான். அதே சமயத்தில் காட்டில், பிரசேனஜித் தன் சகாக்களுடன் மிருகங்களை வேட்டையாடிக் கொண்டிருந்தான். அவன் குறியில் ஒரு மிருகம் கூட தப்பவில்லை.

ஒரு மானுக்கு குறி வைத்த போது, அதைத் தைத்த அம்புப் பாகத்தில் இருந்து பீறிட்ட ரத்தம் பிரசேனஜித் அணிந்திருந்த சமந்தகமணி மேல் பட்டுத் தெறித்தது. ஆனால், அதை பிரசேனஜித் உணரவில்லை. அவனது வேட்டை தொடர்ந்தது. ஒரு கட்டத்தில் அடர்ந்த வனத்தில், சகாக்களை விட்டு அவன் பிரிய நேரிட்டது.

அப்படி பிரிந்தவன் வெகுதூரம் சென்று விட்டான். அவனைத் தவிர வேறு யாருமில்லாத ஒரு நிலை... வீரர்களும் நாலாபுறமும் பிரசேனஜித்தை தேடி அலைந்தனர். அதில் ஒரு கூட்டம் கண்ணன் எதிரில் வருவதைக் கண்டனர்!

கண்ணனும் அவர்களைக் கண்டு புன்னகை பூத்தான்.

அருகே சென்று, ''யாரைத் தேடுகிறீர்கள்?'' என்று கேட்ட கண்ணனிடம், வீரர்கள் பிரசேனஜித்தை தேடுவதாகக் கூறினர்.

''நானும் தேடுகிறேன்'' என்ற கண்ணன் ரதத்தை வனப்பகுதியில் செலுத்தினான்.

அந்த நிலையில் தோளில் வில்லோடு, முதுகுப்புறம் அம்பறாத் தூளியோடு கண்ணனைப் பார்த்த போது, அந்த நாளைய ராமனைப் பார்த்தது போலவே இருந்தது. அந்த ராமன் தானே இன்று இங்கு கண்ணனாக இருக்கிறான்! வனத்துக்குள் கண்ணனின் ரதம் உட்புகுந்து மறைந்திட, வீரர்களும் சிதைந்து மறைந்தனர்.

தனித்து விடப்பட்ட பிரசேனஜித் அண்ணாந்து பார்த்தான். மாலைப் பொழுது வந்து கொண்டிருந்தது. அது அவனை வேகப்படுத்திய அந்த நொடியில் சிங்கம் ஒன்றின் பெரும் கர்ஜனை சப்தம்! தனியாக நிற்கும் பிரசேனஜித் எதிரில் தான் அந்த சிங்கமும் வந்து கொண்டிருந்தது.

- இன்னும் வருவான்

இந்திரா சவுந்தர்ராஜன்






      Dinamalar
      Follow us