ADDED : பிப் 24, 2015 12:19 PM

ஊர்வசி சாபமிட்டதும், அர்ஜுனன் கலங்கிப் போனான். இப்படி அரவாணியாகும்படி சபித்து விட்டாளே என்பதற்காக அல்ல.....
''தான் ஒரு நெறியோடு வாழ ஆசைப் பட்டும் அதனால் இப்படி சாபம் விளைகிறதே?'' என்பதே அவன் வருத்தமாக இருந்தது. பின்னர், அவன் சாபம் பெற்ற சம்பவம் இந்திரனுக்குத் தெரியத் தொடங்கியது.
இவ்வேளையில் இந்திரன் அர்ஜுனனை எண்ணி பெருமிதமே கொண்டான். அவனை அழைத்து ஆறுதலாக பேசவும் செய்தான்.
''விஜயா! உன் நேரிய செயலை எண்ணி பெருமிதம் கொள்கிறேன். ஒரு தேவமாதுவின் பேரெழிலை நீ துச்சமாகக் கருதியது உன் ஆண்மையைக் காட்டுகிறது. அதே சமயம் அவளை ஒரு தாயாகக் கருதி, நீ அவளைப் பணிந்த செயல் உன் ஞானத்தின் விளைவாகும். உன்னை நினைக்க எனக்கு பெருமிதம் மட்டுமல்ல.. பிரமிப்பும் ஏற்படுகிறது,'' என்றான்.
அருகில் இருந்த இந்திராணியோ அர்ஜுனனுக்கு திருஷ்டி கழித்தாள். பின் இந்திரனிடம்,''இவனது சாபமே வரமாகிட செய்ய வேண்டியதைச் செய்யுங்கள். அஸ்திரப் பயிற்சி பெற வந்த மாணவன் அர்ஜுனன். இந்திரலோகத்தில் அவன் சாபத்திற்கு ஆளானான் என்று நாளை யாரும் பேசக் கூடாது'' என்றாள்.
இந்திரனும் அதற்கேற்ப அர்ஜுனனின் சாபத்தில் ஒரு திருத்தம் செய்தான்.
''விஜயா...ஊர்வசி அளித்த சாபம் உனக்கு பெரும் நன்மையாக மாறிடும். அக்ஞாத வாசத்தின் போது அரவாணித் தன்மை எதிரியிடம் இருந்து காத்து நிற்கும். அந்தக் காலம் முடியும் போது இந்த சாபமும் நீங்கி நன்மை உண்டாகும்,'' என்றான்.
இந்திர லோகத்தில் இவ்வாறு இருக்க, பூவுலகில் துவைத வனத்தில் பாண்டவர்களில் மற்ற நால்வர்கள் தங்களின் வனவாச காலத்தைக் கழித்தபோது அர்ஜுனன் இந்திரலோகம் சென்றதே தெரியாதவர்களாக இருந்தனர். அவர்களைக் காண லோமசர் என்னும் ரிஷி வந்தார். இவர் சர்வலோகங்களுக்கும் சென்று வரும் வல்லமை படைத்தவர். மனத்தால் நினைத்த மாத்திரத்தில் நினைத்த இடத்திற்குச் செல்லக் கூடியவர். இந்திரலோகத்தில் அர்ஜுனன் இருக்கக் கண்ட அவர் மூலமே, விஷயம் பாண்டவர்களுக்குத் தெரிய வந்தது.
இதை எண்ணி தர்மன், பீமன், நகுலன், சகாதேவன், திரவுபதி எல்லோரும் பூரித்து போனார்கள். இங்கே பூரிப்பு என்றால் அஸ்தினாபுரத்தில் நேர் எதிரான நிலை!
சஞ்சயன் மூலமாக அர்ஜுனன் தவம் புரிந்து பசுபதாஸ்திரம் பெற்றது முதல் இந்திரலோகம் சென்றது வரை சகலத்தையும் தெரிந்து கொண்டான் திருதராஷ்டிரன். துரியோதனன் கூட, பாண்டவர்களை வன வாசம் அனுப்பியதே தவறோ எனக் கருதினான்.
இப்படி இருந்த சூழ்நிலையில், ஒருநாள் தர்மர் உள்ளிட்ட நால்வரையும் பிருகதஸ்வர் என்னும் மகரிஷி சந்திக்க வந்தார். அவரை பாதபூஜை செய்து வரவேற்றனர். பிரகதஸ்வர் மனம் குளிர்ந்தார்.
''வனவாசம் எப்படியிருக்கிறது?'- என்று கேட்டார்.
தர்மர் புன்னகையோடு,''நாங்கள் இங்கே ஒரு குறையுமின்றி இருக்கிறோம்,'' என்றான்.
ஆனால், பீமன் அதைக் கேட்டு முகம் சுளித்தான். நகுலனும் சகாதேவனும் கூட அதையே எதிரொலித்தனர்.
சகாதேவன் ஒரு படி மேலே போய் பேசினான்.
''மகரிஷி....தாங்கள் திரிகால ஞானி! இங்கே நாங்கள் தண்டனையை அனுபவித்தபடி இருப்பது தெரிந்தும், இந்த வனவாசம் எப்படியிருக்கிறது? என்று கேட்டால் எப்படி? தர்மர் அண்ணா தகிக்கும் தீக்குள் இருக்கும் போதும் நலமாக இருப்பதாகவே எண்ணுவார். அதையே கூறவும் செய்வார். நாங்கள் அப்படியல்ல! நாங்கள் சூதினால் பாதிப்புக்குள்ளானவர்கள். அரச போகத்துக்கு விதியிருந்தும் இந்த காட்டின் காய்கனியை உண்டு ஜீவிப்பவர்கள். மாவீரர்களாக இருந்தும் அதனால் ஒரு புண்ணியமுமில்லை. எங்களால் பாவம்.... இதோ இந்த திரவுபதியும் பாடாய் படுகிறாள்...'' என்றான்.
''சகாதேவன் கருத்தை நான் அப்படியே வழி மொழிகிறேன். எத்தனை தான் அருள் சார்ந்தவர்கள் எங்களுக்காக வருந்தினாலும் பேசினாலும் அதனால் ஒரு பயனுமில்லை. விதி வலியது என்பதற்கு நாங்கள் உதாரணமாகி விட்டோம். மதியும் அதன் தர்மச் செயல்பாடுகளும் எதற்கென்றே தெரியவில்லை...'' - என்றான் நகுலன்.
பீமனோ தன் வருத்தத்தை அருகிலுள்ள மரத்தண்டில் ஆவேசமாக குத்திக் காட்டினான்.
இதையெல்லாம் கண்ட பிரகஸ்தவர், ''உங்கள் வேதனை எனக்குப் புரிகிறது. நீங்கள் ஒவ்வொருவரும் உங்களின் நிலையைச் சொல்லி விட்டீர்கள். ஆனால், நீங்கள் படும் துன்பத்தை விடவும் அதிக துன்பம் அனுபவித்த அரசன் ஒருவன் இந்த உலகில் வாழ்ந்தான். அவன் வரலாற்றைக் கேட்டால் உங்கள் துன்பம் ஒன்றுமேயில்லை என்பதை உணர்வீர்கள்...'' என்று பீடிகை போட்டார்.
அனைவரும் அவரைக் கூர்ந்து பார்த்தனர்.
''என்ன பார்க்கிறீர்கள்..? மானுட வாழ்வு என்பது கோடானுகோடி வண்ணம் கொண்டது. அதில் வெகு சிலர் வாழ்வோ அந்த வண்ணம் அவ்வளவையும் கொண்டதாகி விடுகிறது. அப்படி ஒருவன் தான் அந்த அரசன்! கஷ்டப்பட்டாலும் ஆறுதல் கூறிக் கொள்ள நீங்கள் ஒருவருக்கு ஒருவர் இருக்கிறீர்கள்! உங்களுக்கெல்லாம் ஆதார சக்தியாக திரவுபதி கூடவே இருக்கிறாள்.
ஆனால், அந்த அரசன் பாவம்...! ஒருவர் துணையுமின்றி துன்பப்பட்டான். கல் நெஞ்சமும் அவன் கதை கேட்டால் கரைந்து விடும். அதைக் கேட்பது உங்களுக்கு நன்மையளிக்கும். ஏனென்றால், அந்த அரசனின் சரிதம் சொல்லவும், கேட்கவும் உகந்தது. பரிகாரம் செய்த பலனைக் கொடுக்கும். அப்படி ஒரு வரமும் அவன் பெற்றான்,'' என்றார்.
'' மகரிஷி அவர்களே... அதை முதலில் எங்களுக்கு கூறுங்கள்,'' என்று வேகமாக மண்டியிட்டு அமர்ந்தாள் திரவுபதி.
''மகரிஷி அந்த அரசன் யார்? முதலில் கூறுங்கள்...'' என்றான் பீமன்.
பிரகதஸ்வரும் கூறத் தொடங்கினார்.
''தர்மா... பீமா....நகுல சகாதேவா! தாயே திரவுபதி.... அந்த அரசன் தான் நளன்!
நளச்சக்கரவர்த்தி என்றால் ஒரு காலத்தில் பூவுலகமே திரும்பிப் பார்க்கும். நிஷித தேசத்து மன்னரான வீரசேனனின் புத்திரன் அவன்.
ஆயகலைகள் அறுபத்து நான்கும் கற்றறிருந்தான். அதிலும் குதிரையேற்றம், சமையல்கலை இரண்டிலும் உச்சத்தை தொட்டவன் அவன்.''
- இவ்வாறாக, பிரகதஸ்வர் சொன்ன நளசரிதத்தில் அவர்கள் மூழ்கத் தொடங்கினர்.
- தொடரும்
இந்திரா சவுந்தர்ராஜன்

