sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

தெரிந்த பாரதம் தெரியாத பாத்திரம் -30

/

தெரிந்த பாரதம் தெரியாத பாத்திரம் -30

தெரிந்த பாரதம் தெரியாத பாத்திரம் -30

தெரிந்த பாரதம் தெரியாத பாத்திரம் -30


ADDED : ஆக 04, 2023 12:01 PM

Google News

ADDED : ஆக 04, 2023 12:01 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணரை சரணடைவோம்

துர்வாச மகரிஷி ஐந்தாயிரம் சீடர்களோடு வருவார் என்பதை பாண்டவர்கள் கற்பனை கூட செய்து பார்த்திருக்கவில்லை. அந்த செய்தியை சொன்ன சீடர்களுக்கு என்ன பதில் கூறுவது என்றும் தெரியவில்லை. இருந்தும் சகாதேவனே சூழலை சமாளிக்க தயாரானான்.

''சீடர்களே... அவர் இங்கு எப்போது வருவார் என துல்லியமாக கூற முடியுமா''

''வழியில் சித்ரா நதியில் நீராடி சந்தியாவந்தன கடமையை முடித்து விட்டு வருவது என்பதே அவரின் உத்தேசம்''

''தங்களுக்கும் அந்த கடமை உண்டல்லவா''

''நிச்சயமாக''

''அப்படியாயின் தாங்களும் அந்த கடமையை முடித்து விட்டு வாருங்கள். இங்கே எல்லாம் தயாராக இருக்கும்'' சகாதேவன் அப்படிக் கூறவும் சீடர்கள் திரும்பிச் சென்றனர். அவர்கள் விலகவும் திரவுபதியை பாண்டவர்கள் சுற்றி நின்றனர்.

''என்ன திரவுபதி... ஐந்தாயிரம் பேர் வருகிறார்கள் என்றவுடன் எப்படி அத்தனை பேருக்கும் பரிமாறப் போகிறோம் என மலைப்பாக உள்ளதா'' என்றான் நகுலன்.

''நிச்சயம் மலைப்பாகத் தான் இருக்கும் ஆயினும் அவ்வளவு பேருக்கும் உணவு தயாரித்து தானே தீர வேண்டும். அட்சய அன்னத்தை உண்டு மகிழ யாருக்குத் தான் ஆசை இருக்காது. ஆதித்த பிரசாதம் அல்லவா அது'' என்று கேட்டான் அர்ஜூனன்.

ஆனால் தர்மன் மட்டும் கலங்கிய படியே இருந்தான்.

''அண்ணா... என்ன யோசனை'' அர்ஜூனன் கேட்டான்.

''சகாதேவன் சகுனப் பிரசன்னம் பலிக்கப் போகிறது அர்ஜூனா'' என்றான் தர்மன்.

''என்ன சொல்கிறீர்கள்''

''அட்சய பாத்திரத்தின் அன்றாட பயன்பாடு எப்படிப்பட்டது என்பது மறந்து விட்டதா''

''ஓ... இன்றைய பயன்பாடு முடிந்து விட்டதோ... அடடா... அதை மறந்தேனே''

இப்படி ஒரு நிலையில் துர்வாசர் ஒரு நுாறு பேரோடு வருவதாக இருந்தால் கூட சமாளித்து விடலாம். பீமனே விரைந்து சமைத்து விடுவான். ஆனால் ஐந்தாயிரம் பேர் அல்லவா வருகின்றனர்''

''ஆம்... இப்போது என்ன செய்வது''

பாண்டவர்கள் தம் நெற்றியை தேய்த்துக் கொண்டு யோசித்தனர்.

சகோதரர்கள் தங்களுக்குள் இவ்வண்ணம் பேசியபடி இருக்க திரவுபதி மட்டும் கண்களை மூடிக் கொண்டு ஏதோ பிரார்த்தனையில் இருப்பவள் போல் தென்பட்டாள்.

''திரவுபதி... கண்களை மூடிக் கொண்டு யாரைப் பிரார்த்திக்கிறாய்'' தர்மன் கேட்டான்.

அவளும் மெல்லக் கண் திறந்தாள். கண்களில் இருந்து கண்ணீர்த்துளிகள் வெளிப்படத் தொடங்கின.

''கண்ணீர் சிந்துகிறாயே'' பதைக்கத் தொடங்கினான் அர்ஜூனன்.

''அச்சமாக இருக்கிறது. துர்வாசர் குறித்து நான் நிறைய கேள்விப் பட்டிருக்கிறேன். ஒரு சிறு பிழைக்குக் கூட பெருங்கோபத்தை காட்டிவிடக் கூடியவர் அவர். அப்படிப்பட்டவர் எதிர்பாராத விதமாக வந்து நின்றால் கூட பரவாயில்லை நாம் அதைச் சொல்லி சமாளிக்க முயலலாம். தகவல் சொல்லி நம்மை தயார்படுத்தி விட்டுத் தான் வருகிறார். அப்படிப்பட்டவரிடம் அட்சய பாத்திரத்தை கவிழ்த்து விட்டேன். இனி நாளையே அது பயனளிக்கும் என்றால் அதை ஏற்பாரா''

''உண்மை தான். ஆனால் அந்த உண்மையை கூறும் நிலையில் அல்லவா இன்று நாம் இருக்கிறோம். கடோத்கஜனின் மாயாஜாலத்தால் உணவைத் தருவிக்கலாம் என்றால் அதற்கான நேரமும் அல்லவா இல்லாமல் இருக்கிறது''

''அட்சய பாத்திர உணவு ஒரு பிரசாதம். மாயாஜால உணவு ஒரு அசுர தயாரிப்பு. துர்வாசர் பசிக்கோ ருசிக்கோ உண்பவரல்ல. பிரசாதம் என்பதாலேயே உண்ண வருகிறார். எனவே நாம் வேறு எந்த வகை ஜாலங்களாலும் இந்த இக்கட்டில் இருந்து விடுபட முடியாது''

''இப்படியே பேசிக் கொண்டிருந்தால் எப்படி... அடுத்து என்ன செய்வது என முடிவு செய்வோம்'' சகாதேவன் துரிதப்படுத்தினான்.

''வருகின்ற துர்வாசரின் கால்களில் விழுந்து கதறுவதைத் தவிர வேறு வழியே இல்லை'' என்று நகுலன் அதற்கு பதில் கூறினான். அவ்வேளை திரவுபதியின் முகத்தில் மட்டும் பளிச்சென்று ஒரு தெளிவு. அதைக் கண்ட தர்மன், ''திரவுபதி உனக்குள் ஒருவழி புலனாகி விட்டது போல தெரிகிறதே'' என்று சரியாகக் கேட்டான்.

''ஆமாம். எனக்குள் இப்போது ஒரு வழி புலனாகி விட்டது. அதைத் தவிர வேறு வழிகளும் இல்லை''

''அதை என்னவென்று கூறு''

''இதை விட ஒரு பெரிய இக்கட்டை நாம் சந்தித்துள்ளோம். அது நினைவில் உள்ளதா''

''இதை விட ஒரு பெரிய இக்கட்டா... எதைச் சொல்கிறாய்''

''நெடிய வனவாச காலத்தில் பழைய கசப்புகள் எல்லாம் மறந்து போயிற்றோ''

''பீடிகை போடாமல் நேராகச் சொல். அது என்ன வழி''

''நான் துகிலுரியப்பட்டதை விடவா ஒரு பெரிய இக்கட்டு வந்து விடப் போகிறது''

''ஆம். அது கொடிதினும் கொடிய சம்பவம்''

''அப்போது ஆபத்பாந்தவனாக கைகொடுத்தது யார்''

''புரிகிறது. நம் கிருஷ்ணனை நீ சொல்கிறாயா''

''சொல்வதா... தியானிக்கப் போகிறேன். அப்போது கூட என் முயற்சிகள் பயனற்றுப் போய் நான் இரு கைகளை உயர்த்தி கிருஷ்ணா என்று சரணடையப் போகிறேன். அதைத் தவிர வேறு வழியில்லை''

''அதற்கு காலமிருக்கிறதா... துவாரகை எங்கே... இந்த காம்யக வனம் எங்கே''

''என்ன ஒரு அறியாமை உங்களுக்கு! கிருஷ்ணன் காலத்தை எல்லாம் கடந்தவன் என்பதை இன்னுமா நீங்கள் உணரவில்லை''

''சரியாகச் சொன்னாய். அவன் அபூர்வன். நமக்கு கிடைத்த ஆதவன். அண்ட பிண்டங்களைக் கடந்தவன். ஆதி அந்தமற்றவன். அவனை சரணடைவோம். இப்போதைக்கு அது ஒன்றே வழி'' என தர்மன் சொல்ல அடுத்த நொடியே திரவுபதி மேலே பார்த்து இரு கைகளையும் உயர்த்திப் பிடித்தாள்.

''கிருஷ்ணா... ஞானபுருஷனே! என் குரல் உனக்கு கேட்கட்டும். எங்கள் சிக்கலும் உன்னால் தீரட்டும். அன்று என் மானம் காத்தாய். இன்று எங்கள் மதிப்பைக் காப்பாற்று. என் அவலக்குரல் மந்திர புஷ்பமாய் மாறி உன் செவிப்புலம் சேரட்டும். கிருஷ்ணா... கிருஷ்ணா... கிருஷ்ணா''

திரவுபதியின் அபயக்குரல் ஒலிக்கத் தொடங்கிய மறுநொடியே அங்கே கஸ்துாரி களபச் சந்தன வாசனை வீசத் தொடங்கி விட்டது. மெல்லிய குழலிசையும் ஒலிக்கத் தொடங்கியது. மயில்கள் அகவும் சப்தமும் கேட்டது. பின், ''தர்மா... அர்ஜூனா...'' என்ற குரல் ஒலியும் கேட்டது. தங்கள் குடில் வாசலில் கிருஷ்ணன் நின்று அழைப்பதை தர்மன் அர்ஜூனனோடு சகலரும் பார்த்திட திரவுபதி, ''அண்ணா'' என்றபடியே ஓடி வந்தாள். அவள் கால் கொலுசிலும் சிணுங்கல். ஓடி வந்தவள் அப்படியே கிருஷ்ணனின் பாதங்களிலும் பணிந்து விழுந்தாள்.

''கிருஷ்ணா வந்து விட்டாயா... இப்போது தான் நினைத்தோம். உடனேயே வந்து விட்டாய். நன்றி கிருஷ்ணா... நன்றி'' என்று தர்மனும் சிலிர்த்தான்.

''ஏதாவது பிரச்னை வந்தால் தான் உனக்கு என் நினைப்பு வருகிறது என்று சொல்'' கிருஷ்ணனும் சற்று வேடிக்கையாக கேட்டான்.

''அண்ணா... வார்த்தைகளைக் கொண்டு விளையாட இப்போது நேரமில்லை. நாங்கள் பெரும் இக்கட்டில் இருக்கிறோம்''

''அதைத்தான் பார்த்தாலே தெரிகிறதே... போகட்டும் முதலில் களைத்துப் போய் வந்திருக்கும் எனக்கு சாப்பிட ஏதாவது கொடு. பிறகு பேசலாம்'' என்ற கிருஷ்ணனை பார்த்து அதிர்ந்தாள் திரவுபதி.

-தொடரும்

இந்திரா செளந்தர்ராஜன்






      Dinamalar
      Follow us