sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 23, 2025 ,கார்த்திகை 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

தெரிந்த பாரதம் தெரியாத பாத்திரம் - 10

/

தெரிந்த பாரதம் தெரியாத பாத்திரம் - 10

தெரிந்த பாரதம் தெரியாத பாத்திரம் - 10

தெரிந்த பாரதம் தெரியாத பாத்திரம் - 10


ADDED : மார் 27, 2023 12:47 PM

Google News

ADDED : மார் 27, 2023 12:47 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நகுஷன்

அந்த பாம்பு பேசியதைக் கேட்ட அவனுக்கு, அது சாபத்தால் அப்படியான மானிடன் என்பது புரிந்தது.

''சர்ப்பமே... யார் எனத் தெரியாமல் என்னை பற்றி விட்டாய். நீ சபிக்கப்பட்ட ஆத்மா என்பது புரிகிறது. என்னை விட்டு விடு! இல்லாவிட்டால் என் பலத்தை காட்டுவேன்'' என்றான் பீமன்.

ஆனால் அதைக் கேட்ட பாம்பு சிரிக்கவே, அது குகையிலும் எதிரொலித்தது.

''என்னை கோபப்பட வைக்காதே... நானும் பல வரசித்திகள் உடையவன். அதில் ஆயிரம் யானை பலமும் ஒன்று. ஆனால் ஒரு யானை பலம் போதும் உன்னை பிய்த்துப் போட...!''

பீமன் தொடர்ந்து எச்சரித்தான். அதுவோ சீற்றமுடன் பதில் கூறத் தொடங்கியது.

''வாயை மூடு! ஆயிரம் அல்ல... பல்லாயிரம் யானை பலமே இருந்தாலும் உன்னால் ஒரு துரும்பைக் கூட இந்த குகைக்குள் நீ அசைக்க முடியாது. என்னை நெருங்கி நான் விடும் மூச்சுக் காற்றை சுவாசிப்பவர் மும்மூர்த்திகளில் ஒருவராகவே இருந்தாலும் அவர் தன் சக்தி அவ்வளவையும் இழந்து விடுவார், இது எனக்கான வரசித்தி'' என்ற பாம்பை முதல் முறையாக அச்சத்தோடு பார்த்தான் பீமன். பின் அது சொன்னது உண்மையா என அறிய வேண்டி தன் பலத்தை திரட்டி பாம்பின் பிடியில் இருந்து விடுபட முயன்றான். ஆனால் முடியவில்லை. மாறாக மூச்சு முட்டி களைப்பு ஏற்பட்டது. சோர்வுடன் ''பாம்பே யார் நீ? முதலில் அதைச் சொல். உனக்கு பசித்தால் உண்பதற்கு ஏற்ப வனத்தில் எருமை மாடுகளும், கிழட்டு யானைகளும் எவ்வளவோ உள்ளன. நான் மானிடன். உன் பசிக்கு பத்தில் ஒரு பங்கு கூட நான் உணவாக மாட்டேன். என்னை விட்டு விடு'' என்றான்.

''அப்படியெல்லாம் உன்னை விட்டு விட மாட்டேன். அதே சமயம் நீ அஞ்சாமல் பேசுவது வியப்பளிக்கிறது. நீ யார்?'' என்ற பாம்புக்கு பீமன் பதில் கூறினான்.

''நான் ஹஸ்தினாபுரி மன்னரான பாண்டுவின் மகன் பீமசேனன். என் தாய் குந்திக்கு நான் வாயு அம்சமாக பிறந்தவன். என் சகோதரர்களே தர்மன், அர்ஜுனன், நகுலன், சகாதேவன் ஆகியோர். ஐவருக்கும் பொதுவான பத்னியாக அக்னி அம்சமாய் விளங்குபவள் திரவுபதி. இப்போது ஒரு சூழ்ச்சியால் நாட்டை இழந்து வனவாசம் மேற்கொள்ள வேண்டியவர்களாகி விட்டோம். வனவாசத்தின் போது உணவு தேடி வந்த நான் உன்வசம் சிக்கிவிட்டேன்'' என்றான் பீமன்.

''ஓ... பாண்டுவின் புத்திரனா... பலே! நீ யார் எனக் கூறி விட்டாய். இப்போது நான் யார் எனக் கூறி விடுகிறேன். என் பெயர் நகுஷன்! நாக வம்சத்தை சேர்ந்தவன். ஆயினும் இது என் சாப உடலே! நாக இனத்துக்கே ரத்தினத்தை உருவாக்கி உமிழும் ஆற்றல் உண்டு. மலைப்பாம்பாக பிறப்பெடுப்பது பாவ கர்மங்களால் மட்டுமே ஏற்படும். கோயில்களை அழிப்பவர்கள், பூஜைகளைக் கெடுப்பவர்கள், அந்தணர், யோகியர் சாபத்துக்கு ஆளானவர்கள் என் போல பிறவி எடுப்பர். அப்படி ஒரு யோகியின் சாபத்தால் இப்படி ஆகி விட்டேன்''

''அப்படியா... உன்னை சபிக்கும் அளவு சக்தி படைத்தவரா அவர்?''

''ஆம்... அகத்தியரே அந்த யோகி! தேவர்களுக்கு இணையானவர் அவர். அதனாலேயே அந்த மகாதேவரின் திருமணம் நிகழ்ந்த இமயப்பகுதி தாழவும், அதைச் சமப்படுத்த தென்பகுதிக்கு அவரை அனுப்பி வைத்தார். நிலமும் சமமானது. அப்படிப்பட்டவரை அகந்தையுடன் காலால் எட்டி உதைத்தேன். இப்போது அதை நினைத்தாலும் வருத்தம் ஏற்படுகிறது''

''அகத்தியரை எட்டி உதைத்தாயா? என்ன கொடுமை இது... ஏன் அப்படி நடந்தாய்?''

''விதி என்பது தான் அதற்கான பதிலாகச் சொல்ல முடியும்''

''விதி பூலோக மனிதர்களுக்கானது அல்லவா... நாகஜாதியை சேர்ந்த உங்களுக்குமா பொருந்துகிறது''

''ஹும்... சகல உயிருக்கும் பொதுவானது மானிடனே! பிரம்ம சிருஷ்டியின் ஒரு உன்னதம் அது என்று கூடச் சொல்வேன்''

''சரி.அவரை நீ எட்டி உதைக்கக் காரணம்?''

''இந்திரபதவி தான்''

''இந்திர பதவியா...''

''ஆம்... தேவர்களுக்கே தலைவனாகும் பதவியே இந்திர பதவி! விருத்திகா சூரனால் தேவர்களின் தலைவன் இந்திரன் ஓடி ஒளிந்த போது, அந்த பதவிக்கு நான் ஆசைப்பட்டேன். இந்திராணியை அடையவும் துணிந்தேன். அதற்கேற்ப துணிந்து செயல்பட்டேன். என் அதிகாரத்தை இந்திர சபையை அலங்கரித்திடும் சப்த ரிஷிகளிடம் கூட காட்டினேன். அவர்களை என் பல்லக்கை சுமக்கும்படி செய்தேன். அப்படி அவர்கள் பல்லக்கை சுமந்த போது அவர்களில் ஒருவராக அகத்தியரும் இருந்தார். குட்டை உருவமுள்ள அவர் பல்லக்கை மற்றவர்களுக்கு சமமாக சுமக்க முடியாமல் சிரமப்பட்டார். இதனால் பல்லக்கு ஆடிக் கவிழப் பார்த்தது. பல்லக்கின் உள்ளிருந்த நான் திரைச்சீலையை விலக்கிப் பார்த்தேன். அகத்தியர் தடுமாறுவது தெரிந்தது. உடனேயே என் இடது காலால் எட்டி உதைத்து ஒழுங்காக சுமக்கும்படி கட்டளையிட்டேன். கோபித்த அகத்தியர் அப்போதே 'சர்ப்ப சர்ப்ப' என மலைப்பாம்பாகும்படி சபித்து விட்டார்.

பொதுவாக முனிவர்கள் பிறரை சபித்து தவசக்தியை குறைத்து கொள்ள மாட்டார்கள். நடப்பதை சகித்து ஏற்பார்கள். ஆனால் காலால் உதைத்த என் செயல் அகத்தியரையே கோபத்தால் சபிக்கும்படி செய்து விட்டது.

நானும் பிறகே தவறை உணர்ந்து சாப விமோசனத்துக்கு வழி கேட்டேன். ஆத்மா, ஆத்மா அல்லாத ஒன்று என்ற இரண்டுக்குமான பாகுபாட்டை அறிந்த ஒரு மானிடன் நீ கேட்கப் போகும் கேள்விகளுக்கு சரியான பதில் கூறிடும் போது மீண்டும் நகுஷனாவாய் என்றார்''

''அப்படியானால் நீ கேள்வி கேள். என்னால் பதில் கூற முடிகிறதா என்று பார்க்கிறேன்''

''என் வசம் சிக்கிய ஒருவர் கூட என் கேள்விகளுக்கு பதில் கூறியதில்லை. அது உன்னால் சாத்தியமாகும் என்றும் எனக்குத் தோன்றவில்லை''

'' கேள்வி கேட்காமல் முடிவுக்கு வராதே''

''சரி கேட்கிறேன். முதல் கேள்வி இதுதான். 'எவன் பிராமணன் ஆகிறான்?'' எனக் கேட்டது பாம்பு. பீமனும் யோசிக்கத் தொடங்கினான்.

''என்ன யோசனை?''

''உன் கேள்வி குறித்தே யோசிக்கிறேன்''

''அப்படியானால் உன்னிடம் வலிமை மட்டும் உள்ளது. அறிவில்லை என தோன்றுகிறது''

'' சற்று என்னை சிந்திக்க விடு''

''முதல் கேள்விக்கே இப்படி திணறினால் மற்ற கேள்விகளுக்கு எப்படி பதில் தருவாய்?''

''அமைதியாக இரு. ஒரு நெல்லை மண்ணில் இட்ட உடனே முளை விடுமா... அதற்கென ஒரு காலம் உண்டு தானே''

''சரி... உனக்கு மூன்று நாழிகை காலம் தருகிறேன். அதற்குள் பதில் கூறு. இல்லாவிட்டால் உன்னை விழுங்குவதை தடுக்க முடியாது'' - அந்த நகுஷனாக இருந்த மலைப்பாம்பு கெடு விதித்தது.

அதே நேரம் வனத்தில் குடிலில் இருந்த திரவுபதி கவலையுடன் காணப்பட்டாள். பீமன் வரவில்லையே என வருந்தினாள். அதைக் கண்ட தர்மன், ''நான் போய் பீமனுடன் வருகிறேன். அவனுக்கு ஏதோ ஆபத்து என உள்ளுணர்வு சொல்கிறது'' என்றான். அதைக் கேட்டபடி வந்த சகாதேவன்,''அண்ணா'' என தர்மனை தன் பக்கம் திருப்பினான்.

''சொல் சகாதேவா''

''அண்ணா... சகுனங்கள் துளியும் சரியில்லை. தென்புறத்தில் இருந்து நரிகள் ஊளையிட்டு அழுகின்றன. விச்சுளி என்ற பட்சியும் இடைவிடாமல் கத்துகிறது. காகம் ஒன்று குறுக்கும் நெடுக்குமாகப் பறந்து அச்சமூட்டுகிறது. நிச்சயம் பீமனுக்கு ஏதோ ஆபத்துதான் அண்ணா'' என சகாதேவன் கூறவும் திரவுபதி உள்ளிட்ட சகலரும் அதிர்ந்தனர். இந்த வேளை தர்மன் மட்டும் துணிவாக பீமன் சென்ற வனப்பகுதி நோக்கிப் புறப்பட்டான்.

-தொடரும்

இந்திரா செளந்தர்ராஜன்






      Dinamalar
      Follow us