ADDED : பிப் 03, 2015 11:44 AM

மார்க்கண்டேய மகரிஷி பாண்டவர்களை ஆசிர்வதித்து விட்டுச் சென்ற நிலையில், பீமனுக்குள் ஒரு எண்ணம் தோன்றியது. அதை அவன் திரவுபதியிடம் தான் முதலில் பகிர்ந்து கொண்டான்.
''திரவுபதி.... நாம் இப்போது 12 வருஷம் என்னும் கணக்கிற்கு உட்பட்ட வனவாசிகள். இனி இந்த காடு தான் நமக்கு நாடு, இந்தக்
காட்டில் விளைவதே நமக்கான உணவு. அதே சமயம் நம்மை நம்பி காண்டவபிரஸ்தம் என்று ஒரு நாடும், அந்த நாட்டுக்கென மக்களும் உள்ளனரே.... அவர்களை நாம் மறந்து இப்படி வனத்தில் திரிவது சரியா?'' என்று கேட்டான்.
''சரியான கேள்வியைத் தான் கேட்டிருக்கிறீர்கள் அன்பரே.... ஆனால் இதற்கு என்ன பதிலைச் சொல்வது என்று தான் எனக்குத் தெரியவில்லை...''
''எனக்கென்னவோ இப்படி விதிக்கு கட்டுப்பட்டு வனவாசம் புரிவது புத்திசாலித்தனமாகப் படவில்லை. இதற்கு நாம் ஏன் துரியோதனனோடு போரிட்டு அவனை அழிக்கக் கூடாது?''
''நாம் இப்போது அடிமைகள்... பலமற்றவர்கள்...எப்படி அது சாத்தியம்?''
''சூதினால் அடிமையாவதைக் கூட ஒப்புக் கொள்வேன். பலமற்றவன் என்று கூறாதே திரவுபதி... இப்படி காட்டில் வாழ்வதை விட,
போராடிச் சாவது மேல் அல்லவா?'' -பீமனிடம் கோபம் சீற்றமாக வெளிப்பட அதைக் கேட்டபடி வந்த தர்மரும், மற்ற சகோதரர்களும் பீமனை தேற்ற முயன்றனர். அப்போது வியாச முனிவர் வந்தது தான் ஒரு நல்ல விஷயம்!
வியாசர் பீமனின் எண்ணத்தை அறிந்து புன்னகைத்தபடியே, அவர்களுக்கு வழிகாட்டும் நோக்கத்தில் பேசலானார்.
''பாண்டவர்களே! உங்கள் வீரத்தில் எந்த குறையுமில்லை. ஆனால், இன்னமும் விவேகம் உங்களுக்கு வேண்டும். அந்த விவேகம்
இருந்திருந்தால் ஒருமுறைக்கு இருமுறை சூதாட்டமே நடந்திருக்காது. ஆனால், சூதிலும் ஈடுபட்டு நாடோடிகளாகவும் ஆகி விட்டீர்கள்.
நீங்கள் இப்போது நாடோடிகளானாலும், தர்மவான்களாகவே கருதப்படுகிறீர்கள். அஸ்தினாபுரத்துக்கு அரசனாக துரியோதனன் விளங்கினாலும் அவனை குற்றமுள்ளவனாகவே எல்லாரும் பார்க்கின்றனர். எங்கே இருக்கிறோம் என்பதை விட, எப்படி பார்க்கப்படுகிறோம் என்பதே முக்கியம். அந்த வகையில், உங்களுக்கு இருக்கும் நற்பெயர் அங்கே கவுரவர்களுக்கு இல்லை. அடுத்து அங்கே விதிவசத்தால் துரோணர், பீஷ்மர், அஸ்வத்தாமன், கிருபர் ஆகியோர் உள்ளனர். இவர்களை எல்லாம் வெல்வது சுலபமில்லை'' என்றார்.
அதைக் கேட்ட அர்ஜூனன், ''வியாசமுனிவரே! யுத்தம் எங்கள் நோக்கமல்ல. ஆனால், யுத்தம் மட்டுமே துரியோதனனை வீழ்த்தும் என்பது தான் எல்லோரின் கருத்தாகவும் உள்ளது,'' என்றான்.
இதற்கு பதிலளித்த வியாசர்,''ஆம்... என் கால ஞானம் கூட யுத்தம் நிகழ வாய்ப்பிருப்பதையே உணர்த்துகிறது. அப்படி யுத்தம் வரும் போது, அங்கே வீரம் தான் பேசப்பட வேண்டும். வேறு உணர்வுகளுக்கும் அந்த களத்தில் இடம் கிடையாது,'' என்றார்.
''நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்?''
''இந்த வனவாச காலத்தை உங்களை வலிமைப்படுத்திக் கொள்ளும் காலமாக மாற்றிக் கொள்ளுங்கள்...''
''எப்படி?''
''புலன்களை அடக்கி ஆள்பவனாலேயே புவனங்களையும் அடக்கியாள முடியும்...''
''அதற்கு என்ன செய்ய வேண்டும்?''
''புலனடக்க யோகம் வசப்பட வேண்டும்.''
''தவம் புரியச் சொல்கிறீர்களா?''
''ஆம்... உங்கள் அவ்வளவு பேரையும் சொல்லவில்லை. உங்களில் ஒருவர் தவம் புரிந்தாலும் போதும்.''
''அது யார்?''
''அதை தர்மன் தீர்மானிக்கட்டும். நான் இந்த வேளையில் புலன்களை அடக்கப் பயன்படும் மந்திரத்தை தர்மனுக்கு குருவாக இருந்து
உபதேசிக்கிறேன். அதன்பின் அவன் உங்களுக்கு வழிகாட்டுவான்.'' -வியாசர் அப்போதே தர்மனைத் தன் முன் மண்டியிடச் செய்து யோக மந்திரத்தை உபதேசித்தார். பின்னர் விடை பெற்றார்.
தர்மன் இப்போது புது தெளிவுடன் அர்ஜூனனைப் பார்த்தான். அவனுக்குப் புரிந்து விட்டது.
''அர்ஜூனா..... நீ வில் வித்தையில் உச்சம் தொட்டவன். உனக்கு அஸ்திரங்கள் வசப்படுவது தான் சரியானது. அதனால், வியாசர் உபதேசித்த மந்திரத்தை உனக்கு உபதேசிக்கிறேன். வியாசர் நம் ஐவருக்கும் உபதேசிக்கும் பொருட்டே எனக்கு உபதேசித்தார். ஆனால், பீமா.. நீ சரீர பலம் கொண்டவன். அஸ்திர பிரயோகம் உனக்கு அவசியமில்லை. நகுல, சகாதேவர்களே.... உங்கள் பலங்களும் அஸ்திரங்களுக்கு ஏற்றதில்லை.
அர்ஜூனனே அஸ்திரப் பிரயோகத்திற்குத் தகுந்தவன். எனவே, உங்களின் ஒப்புதலோடு அவனுக்கு மந்திரத்தை உபதேசிக்கப் போகிறேன்...'' என்றான். மந்திரம் மூலம் புலன்களை அடக்கி, இந்திரனை நோக்கி தவமிருக்கச் சொன்னான்.
அர்ஜூனனும் அதன் நிமித்தம் ஒரு யோகியாக தன்னை மாற்றிக் கொண்டு, இமயமலையிலுள்ள இந்திர நீலமலை என்னும் இந்திரனுக்குரிய இடம் நோக்கி நடந்தான். அங்கு சென்று தவச்சுடராகவே மாறினான். சுடரொளி இந்திரனை தேவசபையில் இருந்து இழுத்து வந்தது.
இந்திரன் பிரசன்னமாகி, ''புத்திரனே! உனக்கு என்ன வரம் வேண்டும்?'' - என்று கேட்க, இந்திரன் வசமுள்ள அஸ்திரம் அத்தனையும் தனக்கு வேண்டும்,'' என கேட்டான் அர்ஜூனன்.
''தருகிறேன்... ஆனால், அதற்கு இந்த தவவலிமை போதாது. முக்கண்ணரான சிவபெருமானைத் தரிசிக்கும் அளவுக்குரிய தவத்தை
மேற்கொண்டால் என் அஸ்திரங்கள் உனக்கு கிடைக்கும்,'' என்றான்.
அர்ஜூனனும் சிவனை நினைத்து தவத்தில் ஆழ்ந்தான். தவம், உக்கிரமாகி கால் கட்டை விரலால் மட்டும் தரையில் நிற்கும் அளவுக்குச் சென்றது. இப்படி உடல் பளு அவ்வளவையும் கட்டைவிரலில் சுமந்து தவம் செய்வது முனிவர்களுக்குக் கூட அரிதான செயல்.
இந்த தவம் குறித்த விஷயம் துரியோதனனை அடைந்து தவிக்கலானான். ஏதாவது சதி செய்து தவத்துக்கு இடையூறு செய்ய எண்ணினான்.
அர்ஜூனன் புரிந்த தவம் சிவபெருமானை எட்டியது. அவனோடு திருவிளையாடல் புரியும் எண்ணம் கொண்டார்.
அப்படியே துரியோதனனின் சதியை முறியடிக்கத் துணிந்தார். அதற்காக தன் தேவியான உமையவளுடன் வேடன், வேடுவச்சி கோலம் பூண்டு புறப்பட்டார்.
தவம் செய்யும் இடத்தை அடைந்தார். முன்னதாக, அங்கே மூகன் என்னும் ஒரு அசுரன் பன்றி வடிவில் நடமாடிக் கொண்டிருந்தான். அவன் அர்ஜூனனை கண்டு விழுங்க முற்படவும், அர்ஜூனன் தவம் கலைந்து எதிரில் தெரிந்த பன்றியைக் கண்டு கோபம் கொண்டான். அந்த அசுரப்பன்றியை துரியோதனன் ஏவி விட்டான் என்பதே உண்மை! அதைக் கொல்லும் பொருட்டு காண்டீபம் என்னும் தன்
வில்லைக் கையில் எடுத்தான். இந்த நேரத்தில் சிவபெருமானும் வேடுவனாக அங்கு வர, தன் கையில் இருந்த வில்லை எடுத்து
அம்பு தொடுத்தார். உண்மையில் அர்ஜூனனைக் காப்பதும், மூகாசுரனைக் கொல்வதுமே பரமசிவனாரின் விருப்பம்.
இருவர் தொடுத்த அம்பும் மூகனைத் தாக்கிட, இடி இடித்தது போல சப்தமிட்டபடி உயிரை விட்டான். அப்போது அவனது அசுர உருவம் வெளிப்பட்டது. அருகே சிவனும், தேவியும் வேடன், வேடுவச்சியாக வந்து நின்றிருக்க, அர்ஜூனனும் வந்து, ''யார் நீங்கள்?'' என்பது போல புருவத்தை உயர்த்தினான்.
பரமன் திருவிளையாடலைத் தொடங்கினார்.
'' நான் குறி வைத்துக் கொன்ற அசுரப் பன்றியை நீ எப்படியப்பா பாணம் கொண்டு தாக்கலாம்,'' என ஆரம்பித்தார்.
''நீங்கள் குறி வைத்து கொன்றீர்களா..... வேடிக்கையாக இருக்கிறதே... இது என் பாணத்தால் தான் வீழ்ந்தது''
''அப்படியானால்.. ஒரே இடத்தில் என் பாணம் எப்படி வந்தது?''
''அது நீங்கள் செய்த பிழை.... நான் குறி வைத்ததை நீங்கள் குறி வைத்தது உங்கள் தவறு.''
''அப்படி என்றால், உன் பாணத்தால் தான் இந்த பன்றி அசுரன் உயிர் போனதா?''
''அதில் என்ன சந்தேகம்?''
''நான் கூறுகிறேன்.. என் பாணம் தான் இந்த அசுரனைக் கொன்றது...''
''தவறு.... முதலில் பார்த்தவன் நான்... பாணம் போட்டவன் நான்...''
'' நீ சொல்வது தான் தவறு.... வேடுவன் நான்.... பாணம் போடுவது என் தொழில். உன்னைப் பார்த்தால் தவசி போல இருக்கிறது. தவசிக்கு எதற்கு இந்த வில்?''
''நீ உன்னை வேடுவன் என்கிறாய்... ஆனால், வேடுவன் போல் பேசாமல் என்னை எடை போடுகிறாய்... என்னோடு மோதாமல் வந்த
வழியே செல்....''
''அது எப்படி? கொன்றது நான் தான் என்பதை ஒப்புக் கொள். செல்கிறேன்..''
''எந்த நிலையிலும் என் வீரத்தை தாழ்வாகப் பேசுவதை என்னால் ஏற்க முடியாது. என் குறி என்றும் தப்பியதில்லை...''
- ஈசனுக்கும், அர்ஜூனனுக்குமான விவாதம் சூடேறிக் கொண்டே போனது.
- தொடரும்
இந்திரா சவுந்தர்ராஜன்

