sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 26, 2025 ,கார்த்திகை 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

தெரிந்த பாரதம் தெரியாத பாத்திரம் - 2 (2)

/

தெரிந்த பாரதம் தெரியாத பாத்திரம் - 2 (2)

தெரிந்த பாரதம் தெரியாத பாத்திரம் - 2 (2)

தெரிந்த பாரதம் தெரியாத பாத்திரம் - 2 (2)


ADDED : நவ 19, 2014 12:13 PM

Google News

ADDED : நவ 19, 2014 12:13 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அர்ஜூனனின் வனவாசம் கங்கை கரையோரமாக உலூபி என்னும் நாககன்னியைச் சந்திக்கச் செய்து அதன் விளைவாக அரவானை இந்த உலகம் கண்டது. இந்த அரவானுக்கு 'இராவான்' என்றும், 'ராவணன்' என்றும் பெயர் இருந்திருக்கிறது. இருப்பினும் 'அரவான்' என்கிற பெயரே பிரதானமாக அறியப்பட்டதாக உள்ளது.

நாம் இப்போது வாழ்ந்து கொண்டிருப்பது கலியுகத்தில்....

இந்த யுகத்தில் பிறப்புகள் யோனி வழியாகவே நிகழ்ந்தாக வேண்டும்.

இவ்வாறு பிறவாதவர்களை 'அயோனிஜர்' என்பர். பாண்டவர்கள் வாழ்ந்த துவாபரயுகத்தில் யோனி

மட்டுமின்றி, யோக வழியிலும் கருக்கொள்ள இடமளிப்பதாய் இருந்தது. இந்த யோகவழி எப்படிப்பட்டது... இதனால் கருவுறுதல் எப்படி சாத்தியம் என்ற கேள்விக்கான விடையை அறிவியலோடு பொருத்திப் பார்ப்பது

சிரமமே.

ஆனால், மகாபாரத காலத்தில் யோகவழியில் பலர் பிறந்திருக்கின்றனர். பாண்டவர்கள் பிறப்பே யோகவழி முறை தான்! கர்ணனும் அந்த வழியில் காதைக் கருவறையாக கொண்டு பிறந்தவன். பின் அதுவே காரணப் பெயராகி விட்டது. 'கர்ணம்' என்றால் 'காது' என்று பொருள்.

துரியோதனன் உள்ளிட்ட அவன் சகோதர, சகோதரிகள் நூறுபேரும் கூடயோக சக்தியாலே மண் கலயத்தில் உயிர்ப்பிக்கப்பட்டனர்.

திரவுபதியின் தந்தையான துருபதன் கூட பத்துமாத சிசுவாக வளராமல் மிக குறுகிய காலத்தில் 'துரு' என்ற மரத்தின் நிழலில், இரு பாதங்களுக்கு கீழே குழந்தையாக உருவெடுத்து வந்த காரணத்தால் 'துருபதன்' என்றானவனே!

இன்றைய நம் பகுத்தறிவுக்கு பிடிபடாத ஒரு நிலையில் இந்த யோகவழி கர்ப்பம் அன்று இருந்தது. அது தான் ஒரு இரவில் அர்ஜூனனையும் அரவானுக்கு அப்பனாக்கியது.

யோகம் என்பதற்கு 'வழிமுறை, அதிர்ஷ்டம், நிகரற்ற பயம், சேர்க்கை' என்று பல பொருள் உண்டு!

யோகவழி கர்ப்பத்துக்கு இந்த பொருள் செறிவு அவ்வளவும் பல கோணங்களில் பொருந்துகிறது. எனவே, பாரத பாத்திரங்களை அறிந்து கொள்வதோடு புரிந்து கொள்ள விழைகின்றவர்கள் நதிமூல, ரிஷி மூல விஷயங்களை பொருட்படுத்தக் கூடாது. சூட்சும அறிவால் மட்டுமே இவைகளைப் புரிந்து கொள்ள முடியும்.

இவ்வகையில் அரவான், அர்ஜூனனின் வேட்கையினாலோ, பிள்ளை வேண்டும் என்ற விருப்பத்தினாலோ உருவாகவில்லை. ஆனால், இந்த இரண்டும் உலூபிக்கு இருந்தது. அதற்கு அர்ஜூனன் பயன்பட்டான். நாகலோக தர்மப்படி இதைத் தவறாகவும் கருத இடமில்லை. அர்ஜூனன் போன்ற அங்கலட்சணம் பொருந்திய மாவீரர்கள் ஒரு சராசரி வீரனுக்கு உண்டான விளைவுகளை மட்டும் உருவாக்குபவர்கள் அல்ல..... அவர்களால் பலவிதமான விளைவுகள் ஏற்பட்டன.

இம்மட்டில், அர்ஜூனனே விரும்பினாலும் இந்த விளைவுகளை தடுத்து நிறுத்த முடியாது என்பதே யதார்த்தம். இதற்கு ஏற்பவே அர்ஜூனனால் இன்னொரு புத்திரன் உருவாகும் ஒரு சூழல் ஏற்பட்டது.

உலூபியின் விருப்பத்தை நிறைவேற்றிய பின், அர்ஜூனன் கங்கைக் கரையை திரும்ப அடைந்து தன் பயணத்தை தொடர்ந்தான்.

அங்கிருந்து இமயமலை சாரலுக்குச் செல்ல ஆரம்பித்தான். அங்கு நைமிசாரண்யத்தை அடைந்தபோது, உத்பிலினி, நந்தா, அபரநந்தா, கவுசிகி, கயா, மகாநதி போன்ற புண்ணிய நதிகளில் எல்லாம் நீராடினான். அப்படியே அங்கு வசிக்கும் அந்தணர்களின் காலில் விழுந்து ஆசி பெற்றான். அவர்களின் தேவைக்கு ஏற்ப தானமும் செய்தான்.

பின் அங்கம், வங்கம், கலிங்கம் என்னும் தேசங்களில் உள்ள புண்ணிய நதிகளில் நீராடி விட்டு, கோதாவரி

தீரத்துக்கு வந்தான். அதை தொடர்ந்து மகேந்திரகிரி என்னும் மலைப்பகுதியையும் கடந்து, காவிரி பாயும் பூம்புகாரை கடல் வழியாக அடைந்தான். அங்கிருந்து, ராமேஸ்வரம் வழியாக மதுரை அருகிலுள்ள மணலூரை அடைந்தான். இந்த மணலூரே அந்த நாளில் பாண்டிய நாட்டின் தலைநகராக இருந்தது. அப்போது பாண்டிய மன்னனாக இருந்தவன் சித்ரவாகனன். அவனுடைய ஒரே மகள் சித்ராங்கதை.

இவள் ஒரு ஆண்மகனைப் போல வளர்க்கப்பட்டிருந்தாள். நடை, உடை, பாவனை என சகலத்திலும் ஆணுக்குரியவளாக இருந்தாள். உச்சபட்சமாக சித்ரவாகனன் தன் மகளை 'சித்ராங்கி' என்றோ, 'சித்ராங்கதை' என்றோ அழைக்காமல் 'சித்ராங்கா' என்று ஆண்பால் பெயராலேயே அழைத்தான்!

அர்ஜூனன் மணலூர் வந்த நிலையில் சித்ரவாகனனை சந்தித்த சமயம் அவன் மகளை மகனாகக் கருதுவது ஏன் என்று கேட்டான்.

சித்ரவாகனனும் அர்ஜூனனிடம் தங்களின் பரம்பரை வரலாற்றை பகிர்ந்து கொள்ள தொடங்கினான்.

'பாண்டு புத்திரரே! பாண்டிய நாட்டுக்கு வந்த உங்கள் வரவு நல்வரவாகட்டும். உங்கள் திருவடிகள் பட்டதால் எம் பாண்டிய நாடும் பெரும் பெயர் பெறட்டும். என் முன்னோர்கள் அவ்வளவு பேருக்குமே ஒரு சாபத்தால் இது நாள் வரை ஒரே ஒரு ஆண் வாரிசு மட்டுமே உருவாகிற்று. அந்த வகையில் ஆண்வாரிசே தொடர்ந்து வந்தது. முதல் முறையாக சித்ராங்கதை பெண்ணாக எனக்குப் பிறந்து விட்டாள்.

தோற்றத்தில் பெண்ணாக இருந்தாலும், மகனாகவே கருதி வளர்த்து விட்டேன். அதே சமயம் இவள் மூலம் பிறக்கும் வாரிசு என் வாரிசாக இருக்க வாய்ப்பில்லை என்பதை எண்ணி கவலையோடு இருக்கிறேன்,'' என்றான்.

மன்னனின் கவலையை அறிந்த ராஜரிஷி அதை தீர்க்க ஒரு வழியைக் காட்ட முன் வந்தார்.

''சித்ரவாகனா! உன் மகளுக்கு பிறக்கும் புத்திரனை உன் பிள்ளையாக்கிக் கொள்ள சாஸ்திரத்தில் இடமுண்டு. இதற்கு 'புத்திரிகா புத்திரன்' என்று பெயர். இதை அடைய வேண்டுமானால், நீ உன் மகளை கன்னிகா தானம் செய்யும் போதே சங்கல்பம் செய்து கொள்ள வேண்டும். இதற்கு மாப்பிள்ளையாக வருபவனும் சம்மதிக்க வேண்டும். அதற்கு பதிலாக மாப்பிள்ளை விரும்பும் பொன்னை அளிக்க வேண்டும்'' என்றார்.

மன்னன், ''ராஜரிஷியே! இதற்கு யாரும் சம்மதிக்க மாட்டார்களே!'' என வருந்தினான்.

அவரோ அர்ஜூனனைப் பார்த்தவராக,''அர்ஜூனா! நீ மனம் வைத்தால், சித்ரவாகனனின் மனக்குறையைப் போக்கலாம். தீர்த்த யாத்திரை மூலம் புண்ணியத்தை சேர்க்கும் நீ இந்த பாண்டியனுக்கு ஒரு வாரிசைத் தந்து இன்னும் புண்ணியத்தை சேர்க்கலாம். இது ஒன்றும் தவறு ஆகாது. ஏனென்றால் உன் போன்ற சாமுத்ரிகா லட்சணம் உள்ளவர்கள் விதிப்பாடே வேறானது,'' என்றார்.

அர்ஜூனனும் சம்மதித்து சித்ராங்கதையை மணந்து அவளோடு சில காலம் கழித்தான். இந்த காலத்தில் அவன் அழகர்மலை மீதிருக்கும் நூபுர கங்கையில் நீராடியதாக குறிப்புகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் சித்ராங்கதைக்கும், அர்ஜூனனுக்கும் 'பப்ருவாகனன்' என்னும் மகன் பிறந்தான்.

- தொடரும்

இந்திரா சவுந்தர்ராஜன்






      Dinamalar
      Follow us