sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 26, 2025 ,கார்த்திகை 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

தெரிந்த பாரதம் தெரியாத பாத்திரம் - 2 (4)

/

தெரிந்த பாரதம் தெரியாத பாத்திரம் - 2 (4)

தெரிந்த பாரதம் தெரியாத பாத்திரம் - 2 (4)

தெரிந்த பாரதம் தெரியாத பாத்திரம் - 2 (4)


ADDED : டிச 09, 2014 02:29 PM

Google News

ADDED : டிச 09, 2014 02:29 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சுவேதகிராஜன் 12 ஆண்டுகள் புரிந்த அக்னிவேள்வி ஆனது அக்னி தேவனுக்கு பெரும்பசியை உருவாக்கி விட்டது.

வேள்வி முடியவும் தன் பொலிவு குறைந்து, சக்தியும் குறைவது போல அக்னி உணர்ந்தான். செக்கச் சிவந்த அவனது வண்ணம் மெல்ல வெண்ணிறத்துக்கு மாறி விட்டது. இதைக் கண்டு அக்னிதேவனே கலக்கமுற்றான். அக்னி தேவனைப் பார்த்த மற்ற தேவர்களும் அஷ்டதிக் பாலகர்களும் அவனை ஒரு நோயுற்றவன் போல உணர்ந்தனர். அக்னியும் ஒரு முடிவுக்கு வந்து பிரம்மாவிடம் சென்று தனக்கேற்பட்ட தளர்ச்சியைச் சொல்லி வருந்தினான். பிரம்மா அக்னியின் நிலையைப் புரிந்து கொண்டார்.

''பன்னிரண்டு வருட காலம் இடையறாது விழுந்து நெய்யையும், அவிசையும் உண்ட காரணத்தால் ஏற்பட்ட தளர்ச்சி இது. இது காலத்தால் சரியாகி விடும்! உரிய வேளையில் நானே அதற்கு வழி செய்வேன்,'' என்றார்.

அக்னியோ,''பிரம்ம தேவனே..... என் உபாதை இப்போதே சரியாக வேண்டும். என் சோர்வு நீங்கி, நான் என் பழைய பொலிவைப் பெற நீங்கள் இப்போதே வழிகாட்ட வேண்டும்'' என்று மன்றாடினான்.

இதைத் தொடர்ந்து பிரம்மாவுக்குள் நினைவுக்கு வந்தது காண்டவ வனம் தான்! காண்டவ வனத்தில் உயிரினங்களில் மிகுந்த கொழுப்பை உடைய பிராணிகள் பலவற்றோடு தேவர்களுக்கு எதிரான சத்ருக்களும் ஒளிந்து வாழ்ந்து கொண்டிருந்தனர். அவர்கள் அக்னிக்கு இரையாகும் பட்சத்தில் அக்னி புதிய பொலிவை அடைவதோடு காண்டவ வனமும் கொடிய சூழலில் இருந்து விடுபடும். வனத்துக்குள்ளே ஒன்றைச் சார்ந்து ஒன்று பிழைப்பதே வனதர்மம். சிறுபூச்சியை தவளை விழுங்கும், அந்த தவளையை பாம்பு விழுங்கும். பாம்பை பருந்து விழுங்கும். புல்லை மானும், மானைப் புலியும், புலியை முதலையும் விழுங்கி உயிர் வாழும். இது ஒரு வட்டச் சுழற்சி! ஒன்றுக்குள் ஒன்று இரையாகி, இரையானதன் இனத்தில் மீண்டும் பிறக்கும். இவை அவ்வளவும் ஒரு சமயம் அக்னிக்கு இரையாகும். அபூர்வமாக பிரளயத்தில் நீருக்கு இரையாகும். அக்னிக்கு இரை ஆகிறவை மண்ணோடு கலந்து பின் தாவரமாய், நீரினமாய்ப் பிறக்கும்.

இந்த மாற்றம் சிருஷ்டியின் மாறாத அம்சமாகும். அப்படிப்பட்ட மாற்றம் காண்டவ வனத்தோடு தேவைப்படுவதை வைத்தே, பிரம்மா அந்த வனத்தை இரையாக்கிக் கொள்ளச் சொன்னார்.

அக்னியும் ஒரு புதிய தெம்போடு காண்டவ வனம் நோக்கிப் புறப்பட்டான்.

அகன்று விரிந்து பசுமையுடன் காட்சி தந்த அந்த வனத்தில் ஆங்காங்கே நீர்ச்சுனைகளும், மடுக்களும் காணப்பட்டன. அவைகளில் தான் ஆயிரக்கணக்கான யானைகள் தாகசாந்தி செய்து கொண்டிருந்தன. காட்டு எருமைகளோ மடுக்களில் மூழ்கி தங்களை மறந்து கிடக்க, அவைகளை விழுங்க மலைப்பாம்புகள் தருணம் பார்த்துக் கொண்டிருந்தன. இந்நிலையில் அக்னி அங்கே வந்து தன் சிவந்த தீ நாக்குகளால் அந்த வனம் முழுக்க பரவி அப்படியே மொத்த வனத்தையும் அழிக்க முற்பட்டான். இதை சற்றும் எதிர்பாராத யானைகள் அலறி ஓடி சுனைகளிலுள்ள நீரை உறிஞ்சி வந்து எரிகின்ற நெருப்பின் மேல் பீறிடச் செய்து கொடிய அக்னியை அணைக்க முயன்றன.

அக்னியின் செயலை வாயுவும் விரும்பாததால் அவனும் தன் பங்குக்கு வேகம் கொண்டு எரியும் நெருப்பை அணைத்தான். இதனால், அக்னியால் வேகமாக செயல்பட முடியவில்லை.

ஒருமுறைக்கு ஏழுமுறை அக்னி முயலவும் காண்டவ வன மிருகங்களும், வாயுவும் ஒன்று கூடி அக்னியை செயல் இழக்கச் செய்தனர். இதனால், மனம் வருந்திய அக்னி மீண்டும் பிரம்மாவிடம் தஞ்சம் புகுந்தான்.

பிரம்மாவும் நடந்ததை ஞான திருஷ்டியால் உணர்ந்தவராக சில காலம் பொறுத்திருக்கச் சொன்னார். அவர் சிலகாலம் என்று குறிப்பிட்டது பூவுலகில் கிருஷ்ணனும், அர்ஜூனனும் பிறந்து கிருஷ்ணார்ஜூனர்கள் என்று இணைபிரியாதவர்களாக அழைக்கப்படும் காலத்தைத் தான்....

அப்படி ஒரு காலமும் வந்து கிருஷ்ணார்ஜூனர்களும் காண்டவ வனத்துக்கு அருகில் ஒன்றாக இருந்த தருணத்தில் தான், அக்னியும் பிரம்மாவின் ஆலோசனைப்படி அவர்களின் உதவியை நாடி வந்தான்.

ஒரு க்ஷத்திரியனிடம், பிராமணன் ஒருவன் வந்து யாசகம் கேட்கும் போது அவன் கேட்கும் யாசகத்தை எப்பாடு பட்டாவது கொடுக்கவே பார்ப்பான். அல்லாத பட்சத்தில் பிராமணனுக்கு இல்லை என்று சொன்ன தோஷத்தோடு, உதவி செய்தால் கிடைக்கும் புண்ணியமும் கிடைக்காமல் போகும்.

இதனாலேயே யாசகம் பெற்று விடத் துடிப்பவர்கள், பிராமண வேடத்தில் செல்வதை ஒரு தந்திரமாகக் கருதினர். இங்கே அக்னியும் அப்படியே வந்து தான் காண்டவ வனத்தை எரிக்கும் போது நீராலும், காற்றாலும் தான் பரவுவது தடைபடக் கூடாது என்று வேண்டிக் கொண்டான்.

இருந்தும் வந்திருப்பது அக்னி என்பதை கிருஷ்ணனும், அர்ஜூனனும் தெரிந்து கொண்ட நிலையில், போர்க்களத்தில் வேகமாகச் செல்லும் ரதத்தை கேட்க, அக்னியும் தர சம்மதித்தான்.

இதன் பிறகு அக்னி வனத்தையே கபளீகரம் செய்யத் தொடங்கினான். இதை இந்திரன் துளியும் விரும்பவில்லை. வருணனை அழைத்து மழை பொழியச் செய்தான். கிருஷ்ணார்ஜூனர்கள் அளித்த வாக்குறுதியைக் காப்பாற்ற, தங்கள் பங்கிற்கு அஸ்திரங்களை கையில் எடுத்தனர். அவை மிருகங்கள் வனத்தை விட்டு தப்ப முடியாத படி தடுத்து நிறுத்தின.

அந்த வனத்தில் தட்சகன் என்னும் பாம்பு அரசன் வசித்து வந்தான். காண்டவ வனம் எரிந்த போது, அவன் குருக்ஷேத்திரம் போயிருந்தான். அவன் பிள்ளை அசுவசேனனைக் காக்கும் நோக்கில், அவன் தாயானவள் அப்படியே அவனை விழுங்கியவளாக வானத்தில் பறந்தாள். ஆனால், அர்ஜூன பாணம் அவளை மூன்று துண்டாக்கியது. அசுவசேனனை மட்டும் உமிழ்ந்து தப்பிக்கச் செய்த நாகராணியான அவள் மாண்டு போனாள். இதைக் கண்ட இந்திரன் ஐந்திராஸ்திரத்தை ஏவினாலும், அர்ஜூனன் தகர்த்து எறிந்தான்.

வனமே முழுமையாக அக்னிக்கு இரையானது.

வனத்தில் ஒளித்திருந்த மயன் என்னும் தேவசிற்பியை அர்ஜூன பாணம் துரத்தத் தொடங்கியது.

புத்திசாலியான மயன், கிருஷ்ணார்ஜூனர்களை வெல்ல முடியாது என்பதை உணர்ந்து 'சரணம் சரணம் அபயம் அபயம்' என்று கத்தியபடி அவர்களின் காலில் விழுந்தான். அவனை அர்ஜூனன் ஏதும் செய்யாமல் விட்டான்.

இறுதியில் வனத்தில் அசுவசேனன் என்னும் நாகனும், சிற்பி மயனும் மட்டும் உயிர் பிழைத்திருக்க, நான்கு சாதகப்பறவைகள் வானில் பறந்து உயிர் தப்ப முயன்றன. அவைகளை அர்ஜூனன் வீழ்த்த முயன்றபோது, அக்னி தேவனே தடுத்தான்.

''அர்ஜூனா.... அந்த பறவைகளை விட்டு விடு! அவைகளுக்கு எந்த காலத்திலும் என்னால் ஆபத்து நேராது என்னும் வரத்தை நான் வழங்கியுள்ளேன். அவைகள் மந்த பாலரிஷி என்னும் மகாஞானியின் பிள்ளைகள். அவருக்கு நான் வரம் அளித்துள்ளேன்,'' என்றான்.

அர்ஜூனன் ஆச்சரியத்துடன், 'யார் அந்த மந்தபாலரிஷி? அவருக்கு சாதகப்பறவைகள் வடிவில் பிள்ளைகள் எப்படி?'' என்று கேட்பது போல அக்னியைப் பார்த்தான்.

- தொடரும்

இந்திரா சவுந்தர்ராஜன்






      Dinamalar
      Follow us