sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 26, 2025 ,கார்த்திகை 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

தெரிந்த பாரதம் தெரியாத பாத்திரம் - 2 (8)

/

தெரிந்த பாரதம் தெரியாத பாத்திரம் - 2 (8)

தெரிந்த பாரதம் தெரியாத பாத்திரம் - 2 (8)

தெரிந்த பாரதம் தெரியாத பாத்திரம் - 2 (8)


ADDED : ஜன 14, 2015 11:55 AM

Google News

ADDED : ஜன 14, 2015 11:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீகிருஷ்ணன் என்ன கொடுத்தான்?' என்ற கேள்வியைத் தொடர்ந்து துரியோதனன் அந்தக் காட்சியை மனதில் எண்ணிப் பார்த்தான். பதினான்காயிரம் யானைகள், பாகன்களையும் துவாரகையில் இருந்து வருவித்து அவற்றை நெற்றிப் படாகத்துடன் வழங்கிய காட்சி அவன் கண்களில் மின்னியது.

அதை அப்படியே விவரித்தான்.

முடிவில் ''தந்தையே.... இந்த ராஜசூய வேள்வி குறித்த எண்ணம் உங்களுக்குத் தோன்றாமல் போனது மிக வருத்தத்திற்குரிய விஷயம். சகுனி மாமா.. எதை எல்லாமோ பேசினார்! இப்படி ஒரு விஷயம் பற்றி அவர் பேசவே இல்லை. அப்படிப் பேசியிருந்தால் நான் முந்திக் கொண்டிருப்பேன். இன்று தர்மன் காலில் விழுந்த அவ்வளவு பேர்களும் என் காலில் விழுந்து வணங்கி என்னையே இந்த பூவுலகின் சாம்ராஜ்யாதிபதியாக, ஏக சக்கரவர்த்தியாக கருதும் நிலை வந்திருக்கும். அதை நான் இழந்து விட்டேன்,'' என கைகளைப் பிசைந்தபடியே மனம் புழுங்கினான்.

இதை அறிந்த சகுனி சதித்திட்டம் தீட்டினான்.

''துரியோதனா....வீணாகக் கவலைப்படாதே....தர்மனையும், அவன் தம்பியரையும் நமது அடிமைகளாக ஆக்கி, இந்த நாட்டை விட்டே துரத்த முடியும்! இந்த வேள்வி நடத்தி சக்கரவர்த்தி என மார்தட்டிக் கொள்வது பெரிய விஷயம் அல்ல. சக்கரவர்த்தியாக தொடர்ந்து சாதிப்பது தான் சிறந்தது. அப்படி வாழும் விதிப்பாடு பாண்டவர்களுக்கு இல்லை,'' என்றான்.

இது துரியோதனனுக்கு ஆச்சரியத்தை மட்டுமல்ல, ஆறுதலையும் அளித்தது.

''எப்படி மாமா அது சாத்தியம்?'' என்று கேட்டான்.

இப்படி கேட்ட இடத்தில் சகுனி சொன்னது தான் சூதாட்டவிஷயம்.

''பாண்டவர்களோடு இணக்கமாகி விட்டது போல் நடித்து, அவர்களை விருந்துக்கு அழைப்பது போல அழைத்து வா. தர்மன் எதிரில் சூதாட அமர்ந்தால் போதும். மற்றதை நான் பார்த்துக் கொள்வேன்,'' என்றான்.

இறுதியில் அவன் நினைத்தபடியே நடந்து முடிந்தது. சூதாட்டத்தில் தர்மன் நாடு, நகரத்தோடு, திரவுபதியையும் இழந்தான். துச்சாதனன் திரவுபதியின் துகில் உரிய முயன்றான்.

கிருஷ்ணனின் உதவியால் அவள் அவமானத்தில் இருந்து தப்பினாள். அவள் கவுரவர்களை அழித்திடுவதாக சபதமிடுவதைக் கண்ட

திருதராஷ்டிரன் அவளுக்கு வரம் தருவது போல இழந்த நாடு, நகரங்களை திரும்பக் கொடுத்தான். இதை துரியோதனனும், சகுனியும் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.

பாண்டவர்களும் தங்களின் விடுதலையை ஒரு வெற்றியாகவோ, நல்ல விஷயமாகவோ கருதவில்லை. திருதராஷ்டிரன் போட்ட பிச்சை போலத் தான் உணர்ந்தனர்.

இந்நிலையில் தான் திரும்பவும் சூதாட அழைத்தான் துரியோதனன். இம்முறை தூண்டி விட்டதும் சகுனி தான். இதற்கு திருதராஷ்டிரன் மறுத்தான். உடனே சகுனி, திருதராஷ்டினுடைய 'பிள்ளைப் பாசம்' என்ற பலவீனத்தை ஆயுதமாக எடுத்து, அதைக் கையில் வைத்துக் கொண்டு பேசினான்.

''அரசே! பாண்டவர்கள் துரியோதனாதியர்களைப் பழி வாங்காமல் விட மாட்டார்கள். பாஞ்சாலி நமது சபையில் போட்ட சபதத்தை, ஒருபோதும் விட்டுத் தர மாட்டாள். அப்படிப்பட்டவர்கள் ராஜாக்களாக இருப்பது அவர்களுக்கு கூடுதல் பலம். நமக்கு அது எப்போதும் எச்சரிக்கை...'' என்றெல்லாம் பேசி திரும்பச் சூதாட சம்மதம் பெற்று விட்டான். இந்த இரண்டாம் முறை சூதாட்டத்திற்கு தர்மன் சம்மதித்தது தான் எல்லோராலும் பெரும் தவறாகப் பார்க்கப்பட்டது.

ஆனால், தர்மன் காண்டவப் பிரஸ்த மாளிகைக்கு, நாரதர் விஜயம் செய்த போது சொன்ன கருத்துக்களினால் தான் மறுமுறையும் சூதாட சம்மதித்தான் என்பது புதுத்தகவல்.

''13 ஆண்டுகள் கழிந்து வரும் 14ம் ஆண்டில் பாண்டவர்கள் மற்றும் கவுரவர்கள் என்னும் இரு சாராரில், ஒரு சாரார் மட்டுமே உயிரோடு இருப்பீர்கள். மற்றவர்கள் முற்றாக அழிந்து போவார்கள். அதற்கான யுத்தம் எந்த ஒரு காரணம் கொண்டும் உருவாகலாம்'' என்று கூறியிருந்தார்.

நாரதர் கூறிய கருத்து தர்மனை வதைத்தது. இதனால், தோற்போம் என்று தெரிந்தே தர்மன் சூதாடச் சென்றான்.

தர்மன் தங்கள் எல்லோருடைய நலனையும் உத்தேசித்தும், துரியோதனன் விருப்பப்படி அவனை விட்டு ஒதுங்கவும் எண்ணம் கொண்டே இரண்டாம் முறை சூதாட சம்மதித்து சகலத்தையும் திரும்பவும் இழந்தான்.

சூதாட்ட விதிப்படி 12 ஆண்டு வனவாசம், 13ம் ஆண்டு அக்ஞாதவாசம் மேற்கொள்ளப்பட வேண்டும். அக்ஞாதவாசத்தில் பாண்டவர்கள் மறைந்து வாழ வேண்டும். இவர்களை துரியோதனன் கண்டுபிடித்து விட்டால் மீண்டும் வனவாசம் செல்ல வேண்டும். பாண்டவர்கள் தலையெடுத்து விடக் கூடது என்பதே துரியோதனனின் எண்ணம்.

வியாசர் போன்ற சான்றோர்கள், துரியோதனனின் போக்கைக் கண்டித்தனர். அவர்களின் குறிப்பிடத்தக்கவர் மைத்ரேய மகரிஷி. தவசீலரான அவர் வனவாசத்தில் பாண்டவர்களைச் சந்திக்கிறார். நாடாள வேண்டியவர்கள் காட்டில் காய், கனிகளை உண்டு வாழ்வதைக் கண்டு வருந்துகிறார். துரியோதனனின் அநீதியான செயலைக் கண்டிக்க ஹஸ்தினாபுரம் வருகிறார். திருதராஷ்டிரன் அவருக்கு பாதபூஜை செய்து ஆசி தரும்படி வேண்டுகிறான்.

மைத்ரேயரோ அதைக் கேளாதவராக அவையில் வீற்றிருக்கும் பீஷ்மர், துரோணர், கிருபர் உள்ளிட்ட சகலரையும் பார்த்து, 'நான் தீர்த்த யாத்திரை சென்ற சமயம் காம்யக வனத்தில் பாண்டவர்களைப் பார்க்கக் கூடாத கோலத்தில் கண்டேன். அவர்கள் சூதாட்டத்தில்

அனைத்தையும் இழந்து வனவாசியானதை அறிந்து கொண்டேன். இது அநீதி.

சான்றோர்கள் இருக்கும் இந்த இடத்தில் சூதாடக் கூடாது. அதுவும் ஒரு முறைக்கு இரு முறை நடந்துள்ளது. உண்மையில் பாண்டவர்கள் தோற்கவில்லை. அவர்கள் சூதாட்டத்தை சாக்காக வைத்து ஒதுங்கி வாழ்கின்றனர். அவர்கள் திரும்பி வந்தால் இந்த நாடு தாங்காது....,'' என்று சொல்ல துரியோதனன் கொதித்தான்.

''முனிவரே.... உங்களுக்கு எதற்கு இந்தப் பேச்சு? பாண்டவர்கள் விஷயம் முடிந்த கதை. நீங்கள் வந்த வேலையை மட்டும் பாருங்கள்,'' என்றான்.

''துரியோதனா... நான் வந்திருப்பதே உன்னை எச்சரிக்கத் தான்! பாண்டவர்களைச் சமாதானப்படுத்து. இல்லாவிட்டால் நீ வாழவே முடியாது...''

''என்ன மைத்ரேயா.... பயமுறுத்துகிறாயா?''

''ஆணவத்தில் தவறாக பேசாதே துரியோதனா.... திரும்பவும் சொல்கிறேன். இந்தத் தவறு நீடித்தால் நீங்கள் பூண்டோடுஅழிந்து போவீர்கள்.''

''நான் எதற்கும் அஞ்சாதவன்'' என்று அரியாசனத்தில் இருந்து எழுந்து தன் தொடையைத் தட்டினான் துரியோதனன்.

''துரியோதனா.... நான் உன்னைப் போல ஒரு க்ஷத்திரிய வீரன் இல்லை. புலனை அடக்கிய துறவி. என்னிடமே தொடை தட்டுகிறாயா?''

''உம்மிடமென்ன... எவரிடமும் தட்டுவேன். என் தொடை... என் கரம்!''

''அத்தனை ஆணவமா உனக்கு?'' இப்போது சொல்கிறேன் கேட்டுக் கொள். நீ எந்தத் தொடையைத் தட்டி சவால் விடுவது போல பேசினாயோ, அதன் வழியாகவே உன் உயிர் பிரியும்,'' என மைத்ரேயர் சபிக்கஅவையே திடுக்கிட்டது.

திருதராஷ்டிரனுக்கோ தலையில் இடியே விழுந்த மாதிரி இருந்தது.

- தொடரும்

இந்திரா சவுந்தர்ராஜன்






      Dinamalar
      Follow us