தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/கதைகள்/தெரிந்த பாரதம் தெரியாத பாத்திரம் - 3 (4)

தெரிந்த பாரதம் தெரியாத பாத்திரம் - 3 (4)

தெரிந்த பாரதம் தெரியாத பாத்திரம் - 3 (4)


ADDED : ஜூலை 01, 2015 03:30 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 01, 2015 03:30 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விஸ்வரூபனை இழந்து விட்ட அவன் தந்தையான துவட்டா, இந்திரனை அழிக்க ஒரு பெரும் வேள்வி செய்தான்.

அந்த வேள்வித்தீயில் இருந்து விருத்திகாசுரன் என்னும் அசுரன் தோன்றினான். அவனை இந்திரன் வஜ்ராயுதத்தோடு எதிர்த்தான். ஆனால், அது ஒடிந்து போனது தான் மிச்சம். அசுரனை எதிர்க்க முடியாமல் புறமுதுகிட்டு ஓடினான். இதன்பின், விண்ணுலகைக் கைப்பற்றிய விருத்திகாசுரன், தன் கொடுங்கோல் ஆட்சியைத் தொடங்கினான்.

இந்திரனின் தவறால், அவன் மட்டுமல்ல... தேவலோகமே பாதிப்படைந்தது. இந்நிலையில், அவன் பிரம்மதேவரிடம் சென்று முறையிட, அவர் இதற்குரிய தீர்வை மகாவிஷ்ணுவே தரமுடியும் என்று அனைவரோடும் வைகுண்டத்துக்கு சென்று நின்றார்.

மகாவிஷ்ணுவும் ஏதுமறியாதது போல, என்ன நடந்தது என்று கேட்க இந்திரன் கதறிக் கொண்டு காலில் விழுந்து நடந்ததைச்

சென்னான்.

''இந்திரா.... நீ தலைவன்! தலை இருப்பதால் மட்டும் தலைமைப் பொறுப்பு வந்து விடுவதில்லை. தலையைத் தாங்கும் உடல் போல, நீ தேவர்களைத் தாங்கினால் தான் நீ கடமையைச் சரியாகச் செய்தவனாவாய். உன் தவறால் எத்தனை பெரிய விளைவு உண்டாகி விட்டது பார்த்தாயா?'' என்று கேட்க, இந்திரனும் தவறை ஒப்புக்கொண்டான்.

''மகா பிரபு..... இது எனக்கு மட்டுமல்ல. இனி வரும் காலத்தில் சகலருக்கும் ஒரு பாடமாக இருக்கட்டும். நான் எக்காலத்திலும் குரு நிந்தனை செய்ய மாட்டேன். உல்லாச கேளிக்கையில் ஈடுபட மாட்டேன்,'' என்றான்.

கண்களை மூடித் திறந்த மகாவிஷ்ணு, 'விருத்திகாசுரனை எதிர்த்து நீ வெல்வதே இதற்கான பரிகாரமாக அமையும். வஜ்ராயுதத்தை விட ஆயிரம் மடங்கு பலம் வாய்ந்த ஆயுதம் இப்போது தேவை. அதனை தேவர்களாகிய நீங்களே செய்வது தான் உங்களுக்கும் பெருமை.

விருத்திகாசுரன் வேள்வித்தீயில் தோன்றியவன். நெருப்பை நீர் அணைப்பது போல, வேள்விப்பயனை அதற்கு மேலான தியாகத்தால் மட்டுமே வெல்ல முடியும். இதற்கு தியாக உள்ளமே முதல் தேவை. அதன் பிறகு தான், ஆயுதத்துக்கான மூலத்தை தேடிச் செல்ல இயலும்,'' என்று பீடிகையுடன் பேசிய விஷ்ணுவைக் கண்ட தேவர்கள் புரியாமல் விழித்தனர்.

புன்னகைத்த விஷ்ணு, ''நீங்கள் ததீசி என்னும் முனிவரிடம் செல்லுங்கள். அவர் தன்னலம் இல்லாதவர். பாற்கடலைக் கடைந்த போது தேவர், அசுரர்கள் தங்களிடமிருந்த ஆயுதங்களை எல்லாம் அந்த முனிவரிடம் அளித்தனர். அதன் பின் அமிர்தம் பெற்ற அவர்கள், ஆயுதம் இனி தேவையில்லை எனக் கருதி விட்டு விட்டனர். ஆபத்தான அந்த ஆயுதங்களை தனக்குள் ஐக்கியப்படுத்திக் கொண்ட முனிவர், அவற்றைத் தன் முதுகெலும்பாக்கி கொண்டார். அந்த எலும்பினால் செய்யப்படும் ஆயுதத்தை விருத்திகாசுரனால் வெல்ல முடியாது'' என்று கூற இந்திரன் தயங்கி நின்றான்.

''என்ன தயக்கம் இந்திரா?''

''ஓரு முனிவரை அழித்து ஆயுதம் செய்யலாமா?''

''ததீசி போன்ற தியாக மனம் படைத்தோருக்கே வேள்விச் சக்தி கட்டுப்படும். அதனால் தான், இப்போதைய முதல் தேவை தியாகம் என்று கூறினேன்'' என்றார் விஷ்ணு.

இந்திரனும் ததீசி முனிவரிடம் செல்ல, அவரும் மகிழ்ச்சியுடன் தன் முதுகெலும்பைத் தர முன் வந்தார்.

யோகநிலையில் அமர்ந்து தன் உயிரை உடம்பிலிருந்து பிரித்தார். அந்த உயிர் அழியாத சொர்க்கத்தை அடைந்தது. உடலை அக்னியால் சாம்பலாக்க, அதில் முதுகெலும்பு வைரமாக ஜொலித்தது. விஸ்வகர்மா மூலம் அதைப் புதிய ஆயுதமாக்கிப் புறப்பட்டான் இந்திரன்.

அந்த ஆயுத பலத்தை தாங்க முடியாத விருத்திகாசுரன் கடலுக்குள் ஒளிந்து கொண்டான். அந்த ஆயுதத்திடம் இருந்து தப்பிக்க, ஒரு மறைவான இடத்தில் மூச்சை அடக்கி தவத்தில் ஆழ்ந்தான்.

அவனைக் கண்டுபிடிக்க முடியாத இந்திரன், பிரம்மாவிடம் முறையிட்டான்.

''இந்திரா... நீ இப்போதே போய் அகத்திய முனிவரைப் பார். அவர் மனம் வைத்தால் கடல் நீர் முழுவதையும் குடித்து விட முடியும். கடல் வற்றினால் அசுரன் புலப்படுவான்'' என்றார்.

இந்திரனும் அகத்தியரின் உதவியை நாடினான். அவரும் சம்மதித்து கடல்நீரை குடித்தார்.

விருத்திகாசுரன் கண்ணுக்குப் புலப்பட, புதிய ஆயுதத்தால் இந்திரன் கொன்றான். தவத்தில் இருந்தவனைக் கொன்றதால், இதுவும் பிரம்மஹத்தி தோஷமாக மாறி விரட்டியது.

இந்திரனின் இந்த நிலை, நகுஷன் என்ற அசுரனை வேறுவிதமாகத் தூண்டியது.

பிரம்மஹத்திக்கு ஆளானதால், இந்திரனால் தேவர்களுக்கு தலைமை தாங்க இயலாது என்பதை உணர்ந்த அவன், இந்திரலோகத்தை

தன் வசமாக்கியதோடு, இந்திராணியையும் தனது அடிமை என அறிவித்தான்.

அத்துடன் நூறு அஸ்வ மேத யாகங்களையும் செய்து முடித்தான். இதை அறிந்த இந்திராணி மனம் கலங்கினாள்.

ஒருபுறம் தன் கணவன் இந்திரன் சாபப்பட்ட நிலை... மறுபுறம் இந்திரலோகமே அசுரமயமாகி விட்ட கொடுமை.... இதற்கு ஒரே தீர்வாக,

வியாழ குருவின் உதவியை நாடிச் செல்ல முடிவெடுத்தாள்.

ஏனென்றால், இவ்வளவும் குருவை அலட்சியப்படுத்தியதால் தானே விளைந்தது...!

இந்திராணி கண்ணீர் மல்கி, எங்கிருந்தாலும் நேரில் பிரசன்னமாகும் படி வியாழகுருவை வேண்டினாள். தவறினால், தன்னை நெருப்பில் அர்ப்பணம் செய்ய முடிவு செய்தாள்.

இந்திராணியின் இந்த முயற்சி குருவைக் கொண்டு வந்து அவள் முன் நிறுத்தியது. அவளுக்காக இந்திரனை மன்னிக்கத் தயாரானார் அவர்.

இதற்குள் நகுஷன் இந்திர பதவி ஏற்க தயாரானான். அவனை அழைத்து வர சொர்ணப் பல்லக்கு தயாராகி விட்டது. இதை அறிந்த இந்திராணியின் மனம் பதைத்தது. அப்போது வியாழ குரு ஒரு உபாயம் செய்தார். அது....

- தொடரும்

இந்திரா சவுந்தர்ராஜன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us