ADDED : அக் 06, 2023 03:04 PM

விஸ்வரசு புஷ்போத்கடை
மார்க்கண்டேயர் ராமாயணத்தைக் கூறத் தொடங்கினார்.
''தர்மா... திரவுபதியைப் பற்றிப் பேசி நீங்கள் வருந்தினீர்கள். ஆனால் உங்களை விடவே அதிகம் கஷ்டப்பட்டவன் தான் ஸ்ரீராமன். அந்த ராமனை விட அதிகம் கஷ்டப்பட்டவள் சீதை!
திரவுபதியை பஞ்ச பூதங்களில் நெருப்பு தந்தது என்றால் சீதையை பஞ்ச பூதங்களில் மண் தந்தது என்று ஆரம்பித்தவர் ஆசனத்தில் அமர்ந்து விரித்துரைக்கத் தொடங்கினார்.
''விதேக தேசத்து அரசனான ஜனகன் தானொரு ராஜ்யாதிபதி என்ற எண்ணமே இல்லாதவன். அதனால் ராஜாக்களுக்கு என அளிக்கப்படும் எந்த மதிப்பையும் தனக்கு தரத் தேவையில்லை என்று கூறி விட்டவன்.
ராஜாதி ராஜ, ராஜ மார்த்தாண்ட, ராஜகுல திலக என்கிற கட்டியம் கூறும் மரபு அவன் ஆட்சியில் கிடையாது. பிரஜைகள் கூட அவன் எதிரில் நின்று பேச மாட்டார்கள். அமர்ந்து தான் பேசுவார்கள். அது மட்டுமல்ல தனக்கான கால் செருப்பை கூட அவன் தானே தைத்துக் கொண்டான். ஒரு உழவனைப் போல கலப்பை கொண்டு தன் நிலத்தையும் தானே உழுதான். அப்படி ஒருநாள் அவன் உழுத போது மண்ணில் ஒரு பேழைக்குள் முத்து போல கிடைத்தவள் தான் சீதை! மண் தந்த சீதனம் அவள்! அதனால் அவளுக்கு சீதை என்றே பெயரிட்டு வளர்த்தான். சுயம்வர காலம் வரவும் சுயம்வரம் நிகழ்த்தினான். சுயம்வரம் என்று வந்தாலே போட்டியும் வந்து விடும். அதில் வென்றாலே தகுதி உண்டாகும். தகுதியையும், ஆற்றலையும் அறிவதற்காக அரசர்களுக்கு நிகழ்த்தப்படுவதே சுயம்வரப் போட்டி. இதை நீங்களும் அறிந்தவர்கள் தானே'' என்ற மார்க்கண்டேயர் சுயம்வரம் பற்றியும் விரிவாகக் கூறத் தொடங்கினார்.
''ஆட்சி அதிகாரம் மட்டும் இருந்தால் ஒருவன் முழுமையான ஆண்மகனாகி விட மாட்டான். அரசன் என்பவன் சத்ரிய வர்ணம் சார்ந்தவன். அவனுக்கு நாட்டு மக்களை காப்பதே கடமையும் தர்மமும் ஆகும். அப்படி காத்திடும் கடமையை புரிந்திட தோள்வலி மிக முக்கியம். அதை பரிசோதித்து அறிந்து கொள்ளவே சுயம்வரத்திலும் போட்டிகள் நிகழ்த்தப்பட்டது. அதனால் சத்ரியனுக்கு பாகம் தோள் என்று மனுவால் நியதியும் உருவாக்கப்பட்டது. அந்த தோள்வலியை சிலர் வாள் கொண்டு சண்டையிட்டு நிரூபிப்பர். உங்களில் அர்ஜுனன் கூட தனுராயுதப் போட்டியில் இலக்கை நேரில் பார்க்காமல் நீரில் பிம்பமாக பார்த்து இலக்கை அம்பால் வீழ்த்தித் தானே திரவுபதியை மணந்தான்?
அப்படி மணப்பதே சத்ரிய தர்மமும் கூட! அப்படித்தான் ஸ்ரீராமனும் சுயம்வரத்தில் சிவதனுசுவை ஒடித்துக் காட்டி மணம் புரிந்தான்'' என்று சிவதனுசு பற்றியும் விரிவாகக் கூறத் தொடங்கினார்.
''ஒரு தனுராயுதத்தின் வளைந்த பாகம் மனித உடலின் முதுகெலும்புக்கு இணையாகும். அதன் நாண் உடலின் நரம்புக்கு இணையாகும். அதன் மையப்பகுதி சிரசின் கபால மையமான உயிர் துவாரமாகும். அதை சகஸ்ராரம் என்போம். ஆயிரம் இதழ் தாமரை விரிந்தால் இன்பம். விரியும் முன் அது மொட்டாகிக் கிடத்தல் என்பது துன்பம்.
அந்த மையத்தை விரித்து அதன்வழி செலுத்தும் அம்பு தான் கருவி. அந்த அம்பு நீளமானது அகலமானது கூர்மையானது என்ற முத்தன்மை உடையது. நீளம் காலத்தையும், அகலம் அந்த காலத்தின் அறிவையும், கூர்மை அதன் நுட்பத்தையும் குறிப்பதாகும்.
அப்படிப்பட்ட முத்தன்மை கொண்ட அம்பாலே இலக்கைத் தாக்கும் போது இலக்கு பொடிப் பொடியாகும். இலக்கு என்பது இங்கே நம் எதிரில் நம்மை அழிக்க எண்ணும் வஸ்து. அதை அம்பானது அழித்து தன்னைக் காத்துக் கொள்கிறது.
சொரூப ரீதியான இந்த செயலை மானசீகமாக சிந்தித்தால் ஒருவன் தன்னை அறிந்து கொள்வதை அது உணர்த்தும். சிவதனுசு என்பது இங்கே தன்னை ஒருவன் சீவனாக உணர்ந்து பின் சிவமாக உணர்வதை குறிக்கும். தான் வேறு அந்த சிவம் வேறு அல்ல அதன் துளியே தான் என உணர்ந்திடும் போது ஜீவாத்மா பரமாத்மா கலப்பு உண்டாகிறது. அதை மோட்சம் என்கிறோம்.
ராமன் சிவதனுசை உடைத்து அந்த மோட்ச கதிக்கு உரியவன் நானே என்பதை உணர்த்தி பூதேவி புத்திரியை அதாவது சீதையை மணந்தான்'' என்றவர் சற்று இடைவெளி விட்டு தொடர்ந்தார்.
''மனம் மலர் போலானால் மணம்! அந்த வார்த்தையை கவனி. ஒற்றைச்சுழி இரட்டைச்சுழியாகிறது. அதாவது ஒருவர் இருவராகின்றனர். பின் இருவர் இணைந்து ஒருவர் ஆகின்றனர். தாம்பத்யம் உணர்த்துவதும் அதையே... அதனாலேயே ரிஷிகளும் பிரம்மச்சரியத்தை விடுத்து இல்லறம் மூலம் சந்ததிகள் தொடர்வதை வழிமுறையாக கொண்டனர்.
ராமனும் சீதையை மணந்து சத்ரிய தர்மத்தையும், தாம்பத்ய தர்மத்தையும் நிலைநிறுத்தினான். கூடுதலாக தன் வரையில் சகலத்திலும் ஒன்றே தர்மம் என்பதை உணர்த்த ஒரு பாணம், ஒரு சொல், ஒரு மனைவி என்று ஒன்றில் நின்றான். அதனாலேயே 'ஏகபத்தினி விரதன்' என்றும் புகழப்பட்டான்.
அவனது ஏகபத்தினி விரதச் சிறப்புக்கு எதிரான ஒருவனும் அப்போது இருந்தான்.அவன் தான் ராவணன். வயணம் என்பதே வணம் எனப்படுகிறது. அதாவது ரா எனப்படும் இரவை வயப்படுத்தி, அந்த இரவுக்குரிய இன்பங்களை வாழ்க்கையாக கொண்டவன் என்பது அவன் பெயர்க் காரணம். உண்மையில் அவனுக்கு தசக்ரீவன் என்பதே இயற்பெயர். அதாவது பத்து தலைகளை உடையவன். புலன்கள் ஐந்து. நீர், நிலம், நெருப்பு, ஆகாயம், காற்று என்னும் பூதங்களும் ஐந்து. ஆக புலனும் பூதமும் கலந்த பத்தினை சிரங்களாக கொண்டவன் என்பதால் தசக்ரீவன் என்றும் பெயர்.
புலன்களை ஒடுக்கியவன் ராமன் என்றால் அதை அடுக்கியவன் ராவணன். இவர்கள் இடையே சீதை பட்ட பாடே ராமாயணம். அந்த சீதையின் பாடுமுன் திரவுபதியின் பாடு ஒன்றுமே இல்லை என்பதையே நான் கூறப் போகிறேன்'' என்று மார்க்கண்டேயர் ராமாயணத்திற்கான ஒரு முகவுரையை சொல்லி முடித்தார். பாண்டவர் மட்டுமல்ல திரவுபதியுடன், தவுமியரும், தாத்ரேயிகையும் கூட அவரது முகவுரையால் பிரமித்தனர். ராமாயணம் பற்றி கூறத் தொடங்கிய அவர் சுயம்வரம், சிவதனுசு பற்றியும், ஜனகராஜா பற்றியும், சீதை பற்றியும், ராமன் பற்றியும், இறுதியாக ராவணன் பற்றியும் தனித்தனியே விளக்கிய விதத்தால் அவர்கள் மலைத்தும் போய் விட்டிருந்தனர்.
மார்க்கண்டேயர் தொடர்ந்தார். ''நாம் எல்லோருக்கும் ஒன்றே சிரசு. ஆனால் ராவணனுக்கு மட்டும் எதனால் பத்து சிரசு என்ற கேள்வி எழுகிறதல்லவா?'' என அவர் மீண்டும் தொடங்கிட அனைவரும் அதை ஆமோதிப்பதோடு பார்த்தனர்.
'' ராவணன் ஒரு விசித்ரமான பிறப்பு. இவன் பிறப்பு பற்றி அறிய வேண்டும் என்றால் இவன் தந்தையான விஸ்ரவசு பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். இந்த விஸ்ரவசு, புலஸ்தியர் என்கிற ரிஷியின் அம்சமாவான். புலஸ்தியரோ பிரம்மாவின் மானச புத்திரர். அதாவது பிரம்மா தன் மனப்பிரேமையாலேயே சிருஷ்டித்த பலரில் ஒருவர். பிரம்மாவின் மானச புத்திரர்கள் பலர். நாரதரும் அவர்களில் ஒருவர். அந்த வகையில் நாரதரின் சகோதரனே விஸ்ரவசு. இந்த விஸ்ரவசுவுக்கு மூன்று மனைவிகள். புஷ்போத்கடை, ராகை, மாலினி என்பவர்களே அவர்கள். இவர்களில் புஷ்போத்கடைக்கு பிறந்தவர்கள் இருவர். ஒருவன் ராவணன், இன்னொருவன் கும்பகர்ணன். மாலினி புத்திரனே விபீஷணன், ராகைக்கு பிறந்தவர்களே சூர்பனகையும், கரன் என்பவனுமாவான்.
இவர்களை அறிந்து கொள்ளும் போது நீங்கள் குபேரனையும் அறிந்து கொள்ள வேண்டும். குபேரனும் ராவணனின் சகோதர்களில் ஒருவனே'' என்று மார்க்கண்டேயர் குபேரனிடம் வந்து நின்றார்.
-தொடரும்
இந்திரா செளந்தர்ராஜன்
98947 23450