sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

தெரிந்த பாரதம் தெரியாத பாத்திரம் - 40

/

தெரிந்த பாரதம் தெரியாத பாத்திரம் - 40

தெரிந்த பாரதம் தெரியாத பாத்திரம் - 40

தெரிந்த பாரதம் தெரியாத பாத்திரம் - 40


ADDED : அக் 20, 2023 05:41 PM

Google News

ADDED : அக் 20, 2023 05:41 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சத்யவான் சாவித்ரி

அன்றைய பாரதத்தில் நுாற்றுக்கணக்கான தேசங்கள்! அதில் மந்தர தேசமும் ஒன்று. அதன் அதிபதி அஸ்வபதி என்ற அரசன். இவனுக்கும் ஒரு வருத்தம் இருந்தது. அதுதான் மகப்பேறு இல்லை. ஒருநாள் சன்யாசினி ஒருவர் அரசவைக்கு வந்து அவன் காதுகளில் சாவித்ரி மந்திரத்தை உபதேசித்து, 'இதை நீ விரதமிருந்து உபாசி' என்றாள். அத்துடன், ''ஒரு பகல் பொழுதை எட்டாக பகுத்து அதில் ஆறாவது காலத்தில் மட்டும் உணவு உட்கொண்டு நீ வாழ வேண்டும். இப்படி 18 ஆண்டுகள் உபவாசம் இருந்தால் உன் பூர்வ கெட்ட கர்மம் முழுமையாக நீங்கி அழகிய மகள் ஒருத்தி மகவாய் பிறப்பாள்'' என்றாள்.

நாள் தவறாமல் சாவித்ரி மூல காயத்ரியையும் கூறி வந்தான். சாவித்ரி தேவி என்பவள் பிரம்மனின் பத்தினியர்களில் ஒருத்தியாவாள். அவளை அனுதினமும் ஆராதித்ததன் பயனாக 18ம் வருட முடிவில் அஸ்வபதிக்கு அழகிய பெண் குழந்தையும் பிறந்தது. சாவித்ரி என பெயரிட்டு வளர்க்கலானான் அஸ்வபதி. நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக வளர்ந்த சாவித்ரி மணப்பருவம் அடைந்தாள். அவளுக்குரிய வரனைத் தேர்வு செய்திட அஸ்வபதியும் மகளிடம், ''உனக்கு சுயம்வரம் நிகழ்த்த விரும்பு கிறேன். அதில் நீ விரும்பிய வரனைத் தேர்வு செய்'' என்றான். ஆனால் சாவித்ரி மறுத்தாள். ''வேண் டாம் தந்தையே... ஆடவர் களை அழைத்து அவர்களுக்கு இடையே போட்டியை உருவாக்கி அதில் ஒருவர் வென்றிட மற்றவர் தோற்ற வருத்தமுடன் வெளியேறிட, வென்றவரை நான் மணப்பது என்பது ஒரு கோணத்தில் சிறப்பாக இருந்தாலும், தோற்றவர்களின் மனநிலையை எண்ணிப் பார்க்கிறேன்.

பலர் வருந்திட ஒருவர் கழுத்தில் மாலையிடுவதை விட, எவருடைய வருத்தத்திற்கும் இடமின்றி மணாளனை தேர்வு செய்ய விரும்புகிறேன்'' என்றாள். ''அப்படியானால் பல நாடுகளுக்கும் சென்று பல இளவரசர்களைக் கண்ட பிறகல்லவா தேர்வு செய்ய வேண்டும்? இதனால் தாமதம் ஆகுமே... என்றான் அஸ்வபதி.

''ஆகட்டும் தந்தையே... உரியவனை அந்த சாவித்ரி தேவியே காட்டியருள்வாள்'' என்றாள் சாவித்ரி. அஸ்வபதியும் வரன் தேடும் படலத்திற்காக பயணத்திட்டம் வகுத்து மிகுந்த பரிசுப் பொருட்கள், தாதியர்களுடன் எட்டு குதிரைகள் பூட்டிய ரதம் ஒன்றில் அவளை அனுப்பினான்.

சாவித்ரியும் பயணத்தின் போது வனம் ஒன்றில் தங்க நேரிட்டது. அங்கே சால்வ தேச அரசனான தியுமத்சேனன் என்ற அரசனை ஒரு யோகி வடிவில் கண்டாள். பார்வையை இழந்து விட்ட நிலையில் எதிரிகள் இவரது சால்வ தேசத்தை அபகரித்து விட்டு மனைவி, குழந்தையுடன் இவனை ஓட விட்டிருந்தனர். இவரும் காலம் கனிந்து வரும் என்ற நம்பிக்கையுடன் காட்டில் குடிசை ஒன்றில் வாழ்ந்தார். இவரது ஒரே மகனான சத்யவான் என்பவன் பெற்றோரைப் பாதுகாத்தான். இந்த சத்யவானிடம் உயர்ந்த பண்புகள் மிக இருந்தன. காட்டில் ஓடும் ஆற்றில் சாவித்ரி நீராடும் போது அவள் மேலாடையை ஆற்று நீர் கொண்டு சென்று மறுபுறம் நீராடியபடி இருந்த சத்யவான் முகத்தை மூடியது. அந்த ஆடையைத் தருவதற்காக சத்யவான் சாவித்ரியைச் சந்திக்கும் முன் தன் கண்களைக் கட்டிக் கொண்டு வந்து அதை அவளது தோழியர் வசம் சேர்ப்பித்து, ''இது காட்டாறு கவனமாக குளியுங்கள்'' என எச்சரித்தும் சென்ற செயல் சாவித்ரியை பெரிதும் கவர்ந்தது. அவன் சால்வ நாட்டு அரச உரிமை உடையவன். வஞ்சிக்கப்பட்டு விட்டவன் என்பதை பின்னர் அறிந்த சாவித்ரி மணந்தால் அவனையே மணப்பது என்ற முடிவுக்கு வந்தாள். தன் நாடான மந்திர தேசம் திரும்பினாள். தந்தையிடம் சத்யவான் பற்றிக் கூறினாள். மகனின் கூற்றைக் கேட்ட அஸ்வபதி திடுக்கிட்டான்.

''காட்டுக்குள் கண்களை இழந்த நிலையில், துறவி போல வாழும் நாடிழந்த ஒருவனின் மகனுக்கா தன் மகளைத் தருவது'' என மனம் புழுங்கினான்.

ஆனால் சாவித்ரியின் மன உறுதியின் முன்னால் அவனது பேச்சு எடுபடவில்லை. சரி என சம்மதம் தெரிவித்தான். இந்நிலையில் அஸ்வபதியைக் காண நாரதரே நேரில் வந்தார். திரிகால ஞானி! ஒருவரைப் பார்த்ததுமே முக்காலங்களையும் உணர்ந்து கூறிடும் ஆற்றல் மிக்கவர். அந்த வகையில் நாரதரிடம் சத்யவான் பற்றி அஸ்வபதி கூறிய போது நாரதர் அதிர்ந்தார்.

அதன் பின்புலத்தில் காரண காரியங்கள் இருந்தன. நாரதர் அதிர்ந்து மவுனமாக இருப்பதை அறிந்த அஸ்வபதி காரணம் கேட்டான்.

''என்னவென்று சொல்வேன்.... என் தந்தை பிரம்மாவையும், அவரது படைப்பையும் தான் நினைக்க வேண்டியிருக்கிறது''

''உங்கள் தந்தை பிரம்மா வரை சிந்திக்கிறீர்கள் என்றால் நிச்சயம் ஏதோ பெரிய விஷயம் தான்''

''ஆம்... இப்போது இங்கு வந்தது நல்லதற்கே என்றும் தோன்றுகிற வகையில் நீ அதிர்ஷ்டசாலியே''

''பீடிகை போடாமல் விஷயத்திற்கு வாருங்கள் நாரதரே''

''என்னவென்று சொல்வேன்... அதைச் சொல்வதை விட இந்த வரன் சாவித்ரிக்கு வேண்டாம் எனச் சொல்வதே சிறந்தது. நல்ல வேளை உன் மகள் தப்பித்தாள்''

''இப்படி பட்டும் படாமலும் சொன்னால் எப்படி... புரியும்படி கூறுங்கள் மகரிஷி''

''அஸ்வபதி இந்த பேச்சை

விட்டு விடு. உன் மகளுக்கு வேறொரு

நல்ல வரனைப் பார்''

''மகரிஷி. தொடக்கம் முதலே துளியும் விருப்பமில்லை. ஆனால் சாவித்ரி பிடிவாதமாக இருக்கிறாளே... நான் என்ன செய்வேன்'' என்று அஸ்வபதி கூறும் போது சாவித்ரியே நாரதர் எதிரில் வந்தவளாய் அவரை வணங்கவும் செய்தாள். அவள் வணங்கும் போது, ''பல்லாண்டு

எல்லா நலங்களோடும் பதினாறு பேற்றினையும் பெற்று நீ வாழ்வாயாக''

என்று வாழ்த்தினார் நாரதர். அவளும் மகிழ்ந்தவளாக, ''மகரிஷி... தாங்கள்

என் திருமணத்திலும் பங்கேற்று என்னையும் என் கணவரையும் வாழ்த்திட

வேண்டும்'' என்றாள்.

''நிச்சயம் வருவேன். வாழ்த்துவேன். ஆனால்...'' என நாரதர் இழுக்கவும் சாவித்ரி அவரைக் கூர்ந்து பார்த்தாள்.

''என்ன மகரிஷி ஆனால் என்று கூற வந்து ஏதும் கூறாமல் மவுனமாகி விட்டீர்களே''

''சாவித்ரி... நான் சொல்வதை நீ கேட்பதாக இருந்தால் சொல்கிறேன். எனக்கு அந்த உறுதியை தருவாயா''

''நல்லதை யார் சொன்னாலும் கேட்பவளே இந்த சாவித்ரி''

''நான் கூறப் போவது நல்ல விஷயம் அல்லவே''

''உடைத்துக் கூறுங்கள். நல்லது அல்லாத ஒன்றை தாங்கள் ஏன் எனக்கு கூற வேண்டும்''

''உன் நலம் அதில் அடங்கி உள்ளதே... என் செய்வேன்''

''விஷயத்தையே கூறாமல் இப்படி மர்மமாக பேசினால் எப்படி புரியும் மகரிஷி''

''ஆம்... மகரிஷி... எதுவாக இருந்தாலும் கூறி விடுங்கள்'' என்று அஸ்வபதியும் இடையிட்டான். நாரதரும் கூறத் தொடங்கினார்.

''அஸ்பபதி, சாவித்ரி இருவரும் மனதை திடப்படுத்துங்கள். சத்யவானுக்கு இந்த ஜென்மத்தில் அற்ப ஆயுளே! இன்று முதல் சரியாக ஒரு வருட காலத்துக்குள் அவள் மரிப்பது உறுதி. அதுதான் அவன் விதி'' என்றார் நாரதர். அதைக் கேட்டு இருவரும் அதிர்ந்தனர்.

-தொடரும்

இந்திரா செளந்தர்ராஜன்

98947 23450






      Dinamalar
      Follow us