ADDED : ஜன 27, 2015 12:31 PM

கிருஷ்ணன் 'சால்வன்' என்ற பெயரை உச்சரித்ததும் தர்மர் உள்ளிட்ட பாண்டவர்கள் முகத்தில் ஒரு அதிர்வு!
ஏனென்றால், இந்த சால்வன் தான், ராஜசூய யாகத்தின் போது கிருஷ்ணனுக்கு முதல் மரியாதை செய்யக் கூடாது என்று சொன்ன சிசுபாலனின் சகோதரன்! சிவனிடம் பல வரங்களைப் பெற்றவன். தன் அண்ணனைக் கொன்ற கிருஷ்ணனைக் கொல்லத் துணிந்து, துவாரகை மீது போர் தொடுத்தவன்.
அந்த சமயத்தில், கிருஷ்ணன் துவாரகை அருகிலுள்ள ஆனர்த்தம் என்னும் இடத்தில் இருந்தார். சால்வன் துவாரகை சென்று, 'எங்கே கிருஷ்ணன்?' என்று முழக்கமிட்டான். சால்வனின் சேனாதிபதிகளான க்ஷேம தூர்த்தி, வேகவானன், விவிந்தியன் ஆகியோர்
அசுரபலத்துடன் துவாரகையை நாசம் செய்யத் தொடங்கினர்.
அசுரர் என்றாலும், தேவர் என்றாலும் யுத்தம் என்று வந்து விட்டால் அதற்கென நடைமுறை உள்ளது. அதைப் பின்பற்றியே தீர வேண்டும். யுத்தத்தில் இருந்து பின்வாங்கக் கூடாது. மார்பில் குத்து வாங்கி உயிர் விட்டால் வீர சொர்க்கம் கிடைக்கும்.
சரணடைந்தவர்களை கொல்லக் கூடாது. குழந்தை, பெண்கள், முதியவர், ஆயுதம் இல்லாதவர், தலைமயிர் அவிழ்ந்தவர்
ஆகியோருக்கு தீங்கு செய்யக் கூடாது.
ஆனால், சால்வனுடன் வந்தவர்கள் இதைப் பின்பற்றாமல் மதயானை போல துவாரகையை அழிக்க முற்பட்டனர்.
கிருஷ்ணரின் பிள்ளைகளான சாம்பன், பிரத்யும்னன் இருவரும் சால்வனுடன் போர் புரியத் தயாராயினர். சாம்பன் கிருஷ்ண பத்தினியான ஜாம்பவதியின் புதல்வன். பிரத்யும்னன் ருக்மணியின் புதல்வன்.
இருவருமே பாலகர்கள். ஆனால், துணிவுடன் போர் செய்யத் தொடங்கினர்.
சால்வன் அவர்களைப் பாலகர் என்று கூடப் பார்க்கவில்லை. அவர்களைத் தாக்கி ஓட ஓட விரட்டினான். இதை அறிந்த கிருஷ்ணர் ஆனர்த்த பாகத்தை விட்டு வேகமாகத் திரும்பினார். சால்வனோடு மோதினார். சால்வன், கிருஷ்ணரிடமே மாயையை காட்டியது விந்தையாக இருந்தது.
சால்வனின் மாயாஜாலத்தை உணர்ந்த கிருஷ்ணனும் சக்கராயுதத்தை ஏவி விட்டார். அக்னி தகிப்போடு பிரகாசமாகக் கிளம்பிய சக்கரத்தைக் கண்டதும் சால்வன் ஓடத் தொடங்கினான். துவாரகாவாசிகள் கைகொட்டிச் சிரித்தனர். அவனை வீழ்த்தி விட்டு கிருஷ்ணரிடமே வந்து நின்றது.
ஒருவாரமாக நடந்த யுத்தம் முடிவுக்கு வந்தது. இவ்வேளையில் தான் தர்மரும், சகுனியோடு சூதாடி அனைத்தையும் இழந்து விட்டார்.
இந்த விஷயங்களை கிருஷ்ணர் தர்மரிடம் சொல்லி முடித்தார். முத்தாய்ப்பாக, ''தர்மா.... திரவுபதி.... நீங்களும் என்னை அந்த வேளையில் நினைக்கவில்லை. என்னாலும், அப்போது உங்களை நினைக்க முடியவில்லை. இதைத் தான் விதி என்கிறோம். உங்களை இப்படி வனத்தில் தேசாடனர்களாக பார்க்க வேண்டும் என்றாகி விட்டதை என்னவென்று சொல்வது? இனி நடக்க இருப்பதையாவது நல்ல முறையில் எண்ணி, அடுத்து ஆகவேண்டியதைப் பாருங்கள்,'' என்றார்.
''ஆம்.... சூதாட்டவிதி எங்கள் ஐவரை மட்டுமே கட்டுப்படுத்தும். எங்களோடு மாதா குந்திதேவியார், சுபத்ரை உள்ளிட்ட எங்கள் புத்திரர்கள் கஷ்டபடத் தேவையில்லையே, '' என்று சொல்லிய தர்மர் அவர்களை எல்லாம் கிருஷ்ணரோடு அனுப்பி வைக்க முடிவு செய்தார். அந்த வகையில் திருஷ்டத்யும்னன், திரவுபதி புத்திரர்கள், திருஷ்டகேது, நகுலனின் மனைவி ரேணுமதி, சுபத்ரை, அபிமன்யு அனைவரையும் தன்னோடு அழைத்துக் கொண்டு கிருஷ்ணர் புறப்பட்டார்.
பாண்டவர்கள் திரவுபதியுடன் வனவாசத்தை தொடர்ந்தனர்.
அப்படி அவர்கள் வனவாசம் புரிவதிலும் ஒரு கட்டுப்பாடு இருந்தது. எந்த நிலையிலும் மக்கள் வந்து செல்லும் வனமாக அது
இருக்கக் கூடாது.
ஆள் நடமாட்டமே இல்லாத வனத்தில் தான் அவர்கள் இருக்க வேண்டும் என்பது சூதாட்ட விதிகளில் ஒன்றாக இருந்தது. ஆனால், அதற்கு எதிராக பாண்டவர்களைக் காண வேண்டும் என்ற ஆவலில் காண்டவபிரஸ்தத்தில் இருந்து மக்கள் வரத் தொடங்கினர்.
இதனால், தர்மர் அர்ஜூனனிடம், வேறொரு வனத்திற்குச் செல்ல வேண்டும் என்று கூறினார்.
''அண்ணா.... நான் தீர்த்தயாத்திரை சென்ற போது என் காலடி படாத வனமே இல்லை என்பேன். அந்த யாத்திரை அனுபவத்தை வைத்துச் சொல்கிறேன். 'த்வைத வனம்' தான் நமக்கு மிகவும் உகந்தது,'' என்றான்.
''த்வைத வனமா?''
''ஆமாம். த்வதை வனமே தான்... சோகம், மோகம் இரண்டையும் போக வைக்கும் வனம் என்பது பொருள். நாம் இனி நாட்களை அங்கே தான் கழிக்க வேண்டும்,'' என்றான் அர்ஜூனன்.
அதன் பின், அவர்கள் ஆறுபேரும் த்வைத வனத்தை அடைந்தனர். அங்கு குடில் அமைத்து வாழ்வு நடத்தினர். அபூர்வமான மார்க்கண்டேய மகரிஷி அவர்களைக் காண வந்தார்.
மார்க்கண்டேய மகரிஷி தலைசிறந்தவர்.
மரணத்தை வென்று யுகங்கள் கடந்து வாழ்ந்து வருபவர். அவரது வருகை பாண்டவர்களுக்கு உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் தந்தது.
அவர்களை வனவாசிகளுக்குரிய ஆடையில் பார்த்த மகரிஷி புன்னகைத்தார். அதைக் கண்ட பீமனுக்கு வருத்தம் ஏற்பட்டது.
''மகரிஷி.... எங்களைப் பார்த்து உங்களால் எப்படி புன்னகை செய்ய முடிகிறது? சூதாட்டத்தால் இப்படி ஒரு நிலைக்கு ஆளாகி விட்டோமே என்ற ஏளனமா?'' என்று கேட்டான்.
மார்க்கண்டேயர் மறுப்புடன் பார்த்து விட்டு பதிலளித்தார்.
''பீமா... என் சிரிப்பின் பொருளே வேறு... அதன் காரணத்தைக் கூறினால், உனக்கும் அர்த்தம் புரியும். உங்களை எப்படி இந்த வனத்தில் பார்த்தேனோ அதே போலவே, முன்பு ராமச்சந்திர மூர்த்தியை, லட்சுமணர், சீதாதேவியுடன் கண்டேன்.
ராமச்சந்திரபிரபு சர்வ வல்லமை பொருந்தியவர். ஆனாலும் கூட ஒரு சாமான்ய மனிதனைப் போல வனத்தில் திரிந்தார். ஒரே காரணம் தான்! தந்தைக்கு கொடுத்த வாக்குறுதி.. கைகேயி தாயாரின் விருப்பத்தை நிறைவேற்றல்... இதுவே அவர்களை வனத்துக்கு அனுப்பியது. இன்று உங்களையும் காலம் அனுப்பியுள்ளது. தர்மநெறியில் வாழ்பவர்களுக்குச் சோதனை ஏற்படுவதை என்னவென்பது? அதை நினைத்தேன்.
சிரித்தேன்''
- மார்க்கண்டேயர் ராமனைத் தரிசித்தவர் என்பதை அறிந்த பாண்டவர்கள் மனம் நெகிழ்ந்தனர். வணங்கியபடி, ''மகரிஷியே... தாங்கள் எங்களை ஸ்ரீராமனோடு ஒப்பிட்டதை எண்ணி சிலிர்த்துப் போகிறது நெஞ்சம். நாங்கள் புண்ணியசாலிகள்'' என்றார் தர்மர்.
''உண்மை தான் தர்மா! இந்த நொடியே நீயும் உன் சகோதரர்களும் துரியோதனனையும், அவன் சார்ந்த சகலரையும் அழித்து விட சபதம்
செய்தால் அவர்கள் இல்லாமல் போவது உறுதி. ஆனால், உன் தர்ம சிந்தை அதற்கெல்லாம் ஆசைப்படவில்லை. மாறாக, நீ ஒரு கர்மயோகியாக வாழ்ந்து வருகிறாய். உன்னைப் பாராட்ட என்னிடம் வார்த்தைகள் இல்லை,'' என்றார்.
இதன்பின், பாண்டவர்கள் வடக்குத் திசைநோக்கிச் செல்லத் தொடங்கினர்.
- தொடரும்
இந்திரா சவுந்தர்ராஜன்

