ADDED : ஜூலை 15, 2013 12:53 PM

அந்த கல்மாஷபாதன் அதிருஸ்யந்தியை விழுங்கப் பார்த்தான். அதைக் கண்ட வசிஷ்டர் தன் தவசக்தியால் அவனைத் தடுத்ததோடு, அந்தச் சக்தியை அர்ப்பணம் செய்து கல்மாஷ பாதனின் அசுரத்தன்மையை போக்கி விஸ்வாமித்திரர் ஏவி விட்ட கிங்கரப் பிசாசையும் விரட்டியடித்தார்.
கல்மாஷபாதன் ராமர் அவதாரம் செய்த சூரியவழியான இக்ஷ்வாகு வம்சத்தில் வந்தவன். வசிஷ்டர் அவனுக்கு சாப விமோசனம் அளிக்கவும் பெரிதும் மகிழ்ந்து அவர் காலில் விழுந்து ஒரு வரம் கேட்டான்.
வசிஷ்டரும், ''நீ கேட்கும் வரம் எதுவாக இருந்தாலும் அளிக்கிறேன்,'' என்றார்.
''வாக்கு கொடுத்து விட்டபடியால், நீங்கள் மாறவோ மறுக்கவோ கூடாது,'' என்றான்.
''நீ முதலில் வரத்தைக் கேள்,'' என்றார் வசிஷ்டர்.
''ஐயனே... பிரம்மரிஷிக்கு இலக்கணம் தாங்கள். பொறுமையில் இமயமாக திகழ்கிறீர். உங்களை துக்கத்துக்கு ஆளாக்கிய விஸ்வாமித்திரர் மேல் உங்களுக்கு துளியும் வருத்தமோ, கோபமோ இல்லை. நடப்பதை எல்லாம் வினைவழிச் செயல்பாடாக கருதி அப்படியே ஏற்றுக் கொள்கிறீர். இதெல்லாம் உத்தம லட்சணங்கள். இதில் எதுவும் என்னிடமில்லை. ஆனால், எனக்கோ உங்களைப் போல ஒரு பிள்ளை வேண்டும் என்று என் மனம் விரும்புகிறது. எனவே, என் மனைவியோடு தாங்கள் கூடி எனக்கு உங்களைப் போல ஒரு பிள்ளையை தர வேண்டும். இக்ஷ்வாகு குலமும் அதனால் மாண்பு பெற வேண்டும்,'' என வேண்டுகிறான் கல்மாஷபாதன்.
சந்ததி விருத்திக்காக பிரம்மரிஷிகளிடம் கூடுவதை அன்றைய யுகதர்மம் ஏற்றுக் கொண்டிருந்தது. பிரம்மரிஷிகளும் அதை ஒரு வரமாகக் கருதி அளித்தனர். இங்கே அற்பமான காம சுகத்துக்கோ, கற்பு நெறிக்கு கேடோ இதனால் இல்லை. வசிஷ்டரும் கல்மாஷபாதன் கேட்ட வரத்தைத் தந்தார். காலநேரம் கணித்து அவளுடன் கூடினார். 'அஸ்மகன்' என்னும் ஒரு ராஜரிஷி பிறந்தான்.
இவனாலே இக்ஷ்வாகு குலம் தழைக்கத் தொடங்கியது.
இந்த நேரத்தில், வசிஷ்டரின் மருமகளான அதிருஸ்யந்திக்கும் ஒரு பிள்ளை பிறந்தது. இந்த பிள்ளை தான் புகழ்பெற்ற பராசர மகரிஷி. இவரால் தான் இமய மலையின் வலது பாகத்தில் ஒரு அழியாத அக்னி இன்றும் எரிந்து கொண்டு இருப்பதாக
கூறுவார்கள். 'வடவாக்னி' என்று இதற்கு பெயர். இதனால் தான், அங்கே வெந்நீர் ஊற்றுகள் உருவாகி ஓடியபடி இருக்கின்றன.
இந்த வடவாக்னி பராசரரால் எப்படி உருவானது தெரியுமா?
தனது பேரன் பராசர் மேல் மிகுந்த பாசத்தோடும் அன்போடும் இருக்கிறார் வசிஷ்டர். பராசரரும் வசிஷ்டரை தந்தையாகக் கருதி 'அப்பா' என்றே அழைக்கிறார். பராசரரின் இந்தப் போக்கு தாயான அதிருஸ்யந்தியை உறுத்துகிறது.
'மகனே பராசரா! இவர் உன் தந்தையல்ல.... உன் தந்தையின் தந்தை. உனது பாட்டன். பாட்டனைத் தந்தை என்று அழைப்பது தகாது,'' என்கிறாள் அதிருஸ்யந்தி.
''அப்படியென்றால் என் தந்தை எங்கே?'' என பராசரர் கேட்கிறார். அந்தக் கேள்விக்கான பதிலை அதிருஸ்யந்தியும் சொல்லி முடிக்கிறாள். அப்படி சொல்லும்போது, 'விஸ்வாமித்திரர் தான் குற்றவாளி அவர் உன் தந்தையை மட்டுமல்ல, உன் தந்தையோடு பிறந்த உடன்பிறப்புக்களையும் ஒருவர் விடாமல் அழித்து விட்டார். அவ்வளவு பேரும் நரமாமிசமாக ஆகிப் போனார்கள். வசிஷ்ட வாரிசுகள் ஒரு பிசாசுக்கு உணவாகிப் போவது எத்தனை பெரிய சாபக்கேடு?'' என்று அதிருஸ்யந்தி சொல்லி கண்ணீர் விடுகிறாள். உடனே, பராசரரிடமோ கோபாக்னி கொழுந்து விடத் தொடங்குகிறது.
''தாயே...... இது கொடுமையிலும் கொடுமை. பிரம்மரிஷி எனப்படும் விஸ்வாமித்திரர் செய்திருப்பது மன்னிக்க முடியாத குற்றம். இப்படிப்பட்டவரை உயிரோடு நடமாட விடுவது கோழைத்தனமான செயல். அவரைக் கண்டிக்காமல் போற்றும் இந்த உலகையும் அழித்து விடுவதே சரியான செயல்பாடு. எனவே, என் தவத்தால் இப்பூவுலகு மட்டுமின்றி எல்லா லோகங்களையும் சர்வநாசமாக்கி விட்டே இனி நான் அடங்குவேன்,'' என்று பராசரர் புறப்படுகிறார். 'பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்காகி விட்டதை' அதிருஸ்யந்தியால் உணர முடிந்தது.
''மகனே.... கோபம் உனக்கு ஆகாது. விஸ்வாமித்திரர் செய்த தவறுக்கு உலகை நாசமாக்க துணிவது துளியும் சரியல்ல..'' என வாதிடுகிறாள்.
ஆனால், பராசரரின் கோபத்தின் முன் அது எடுபடவில்லை. இறுதியில் வசிஷ்டரே பராசரரின் கோபத்தை தவிர்க்க முன்வருகிறார்.
'பெயரனே...! உன் கோபம் நியாயமானது. ஆனால், கோபம் மிகவும் பெரிய சத்ரு. அதனால், நன்மையை விட, தீமையே அதிகம். எனவே, உன் கோபத்தை அடக்கு. என்னாலும் கோபப்பட்டு விஸ்வாமித்திரரை அழித்திருக்க முடியும். ஆனால், அப்படிச் செய்வது அரŒனுக்குரிய செயலாகும். ஒரு பிரம்மஞானி காரணமில்லாமல் காரியமில்லை என்பதை உணர்ந்தவன். அந்த காரணமும் நம் பொருட்டே உருவாகியிருக்கும். அதை உணர பொறுமையும், ஞானமும் வேண்டும்.
அறிவினால் புலன்களுக்கு புலனாவதையே அறிய முடியும். அந்த அறிவாகிய மனதை அடக்கி புலன்களை வென்றாலே ஞானம் வசமாகும். ஞானம் வசமானால் அனைத்துக்கும் காரணம் புரியும். காரணம் புரிந்து விட்டாலே மனது சமாதானமாகி விடும். நான் கூட சமாதானமற்று தற்கொலைக்கெல்லாம் கூட துணிந்தேன். ஆத்மஹத்தி எத்தனை பெரிய பாவம் எனத் தெரிந்தும் அதற்கு முனைந்தேன். ஆனால், பிறகே ஒரு பிரம்மரிஷியால் தற்கொலை செய்து கொள்ள முடியாது என்பது தெரிந்தது. அந்த துக்கத்தில் நீ உன் தாயின் கருவில் இருப்பதை விட, நான் உணராது போய் விட்டேன். உனக்கு இப்போது புத்தி சொல்லும் என்னையே புத்திரசோகம் கண்களை மறைத்து விட்டது. எனவே, மானுடர்களை ஆட்கொள்ளும் மாயா உணர்வுகளை அடக்கி அதை வென்றிட முயல்வதே உத்தமம்'' என்றார் வசிஷ்டர்.
''ஐயனே! தங்கள் உபதேசம் கேட்பதற்கு இனிதாக உள்ளது. ஆனால், நம்மை நாம் மேம்படுத்திக் கொள்வதற்காக, ஒரு தீமையை அதன் போக்கில் போக விடுவது எந்த வகையில் சரி! இதனால் தானே சிவா, விஷ்ணு, பிரம்மா என்னும் மும்மூர்த்திகளும் கூட கையில் ஆயுதங்களுடன் உள்ளனர். அன்பே வடிவான தெய்வத்துக்கு ஆயுதம் தேவையில்லை. ஆனால், தெய்வங்களே ஆயுத
பாணிகளாக இருக்கக் காரணம் அரக்கத்தை அழித்தால் மட்டுமே தேவத்தை வாழ வைக்க முடியும் என்பதால் தானே?'' என்று பராசரர் திருப்பிக் கேட்கவும் வசிஷ்டரால் பதில் கூற முடியவில்லை.
இருந்தும் அவருக்கு அவ்வேளையில் அவுர்வர் நினைவு வந்தார். அவுர்வரின் கதை பராசரரின் கோபத்தை தணிக்கும் என்று வசிஷ்டர் நம்பினார்.
''பெயரனே! உன்னைப் போல கோபாக்னி வசம் அகப்பட்ட அவுர்வர் என்ற ரிஷியின் வரலாற்றைச் சொல்கிறேன் கேள். இதைக் கேட்டால் நிச்சயம் உன் சினம் தணியும்.''
- தொடரும்
இந்திரா சவுந்தரராஜன்