ADDED : ஜூலை 24, 2013 11:31 AM

அவுர்வரின் கதையை ஆரம்பித்தார் வசிஷ்டர்.
பிருகு வம்சத்து அரசன் கிருதவீர்யன், தன் அவையில் இருந்த பார்க்கவ குலத்தவரைக் கவுரவப்படுத்தி ஏராளமாய் தானம் தந்தான். பார்க்கவர்கள் அதை சேமிப்பதற்காக புதைத்து வைத்தனர். இந்நிலையில் கிருதவீர்யன் இறந்து போனான். பின்னால், அரசபதவிக்கு வந்தவர்களுக்கு ஒரு கட்டத்தில் பெரும்நிதி நெருக்கடி ஏற்பட்டது. . எனவே, அவர்கள் பார்க்கவர்களிடம் திரும்பக் கேட்டனர்.
பார்க்கவர்களோ, தானமாய் தந்ததை திரும்பக் கேட்பது கேவலம் என்றனர். இதனால், கோபப்பட்ட பிருகுவம்ச அரசன் பார்க்கவ குலத்தை அழிக்க தீர்மானித்தான். ஒரு கர்ப்பவதியைக் கூட விடாமல் அழிக்க முனைந்தான்.
அவர்களில் மிக அழகிய தொடைகளை உடைய ஒருத்தி கர்ப்பமாக இருந்தாள். அவளை அழிக்க வீரர்கள் வரவும், அவள் கர்ப்பம் கலைந்து குழந்தை வெளியே வரப் பார்த்தது. ஆனால், அவளோ அக்குழந்தையை தன் வலிமையான அழகிய தொடையில் வாங்கித் தாங்கிக் கொண்டாள்.
அது ஒரு அபூர்வ கர்ப்பம்!
அந்தக் குழந்தை தாயின் கர்ப்பத்தில் இருந்தபோதே, வேதம் சொன்னதோடு பிரம்மதேஜசோடு விளங்கியது. அந்த பெண்ணும் அந்த குழந்தையைப் பெற்றெடுத்தாள். அந்த குழந்தை தான் 'அவுர்வர்'. அந்த குழந்தை சூரியனைப் போல பிரகாசித்தது. அதைக் கொல்ல வந்த ராஜாங்கத்து வீரர்கள், குழந்தையின் தேஜசை (ஒளியை) பார்க்க முடியாமல் கண்களை இழந்து விட்டனர்.
கண் பார்வை இழந்த வீரர்கள், அவுர்வரிடமே கெஞ்சினர். ஆனால், அவர் மன்னிக்கத் தயாராக இல்லை. அவர் பிருகு வம்சத்தை மட்டுமல்ல, சர்வலோகங்களையும் அழிக்க தயாரானார்.
பிரம்மஞானியான அவர் கோபிக்கக்கூடாது என்று அவருக்கு சிலர் அறிவுரை வழங்கினர். அப்படி வெளிக்காட்டியே தீர வேண்டுமானால், அந்த கோபாக்னியை சமுத்திரத்தில் விடும்படியும், நெருப்பை நீர் விழுங்கி விடும்' என்றும் கூறினர்.
அவுர்வரும் தன் கோபத்தை சமுத்திரத்தில் விட்டார்.
அது குதிரை தலை போலாகி, அஸ்வமுகாக்னி' என்ற பெயரில், சமுத்திரத்தை இன்றும் குடித்தபடியே இருக்கிறது,'' என்று வசிஷ்டர் அவுர்வர் வரலாற்றைக் கூறி முடித்தார்.
உடனே பராசரரும் தன் கோபத்தை இமயத்து பனியில் விட்டார். அதுவே அக்னி நீரூற்றுகளோடு கொதித்தபடி உள்ளது. அதுவே 'வடவாக்னி' எனப்படுகிறது.
பராசரர் தன் கோபத்தை கைவிட்ட போதிலும், ராட்சஷர்களை அழிக்க 'ராட்சஷ ஸத்ரம்' என்னும் யாகம் செய்தார். அப்போது, புலஸ்தியர் என்னும் மகரிஷி அதை நிறுத்தச்சொன்னார். உன் முன்னோர் அழிந்தது விதிப்பயன். இருப்பினும், அவர்கள் இப்போது சொர்க்கத்தில் உள்ளனர்,'' என்று சமாதானப்படுத்திய பிறகு தான் பராசரருக்கு கோபம் முற்றிலும் அடங்கியது.
இப்படியாக கந்தர்வன் அங்கராபர்ணன் துவக்கிய வசிஷ்டர் கதை, பராசரர் வரை வந்து நிறைவு பெற்றது.
அங்கராபர்ணன் ஏற்கனவே சொன்ன ஆலோசனைப்படி, தாங்கள் செல்லும் வழியில் யட்சர்கள் முதலானோரிடமிருந்து தப்பிக்க தவுமியர் என்னும் அந்தணரை குருவாகக் கொண்டனர். இவர் கங்கைக்கு அப்பாலுள்ள உத்கோசம் என்ற இடத்தில் வசித்தவர்.
இந்த சமயத்தில் துருபதன் தன் மகள் திரவுபதிக்காக சுயம்வரம் ஏற்பாடு செய்திருந்த தகவல் தவுமியருக்கு வந்தது. அதுபற்றி அவர் பாண்டவர்களிடம் கூற, அவர்கள் பாஞ்சால நாடு சென்றனர்.
துருபதன் இந்த சமயத்தில் ஒரு கணக்கு போட்டிருந்தான். தன்னை கட்டி இழுத்துச் சென்ற அர்ஜூனனின் வீரம் அவனை மிகவும் கலவரப்படுத்தியிருந்தது. அதனால், அவனைப் போன்ற வீரர்கள் எதிரிகளாக வெளியே இருப்பதை விட தனக்கு உறவாக உள்ளே இருப்பது தான் உத்தமம் என்று தோன்றியது. இதற்காக போட்டி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தான். ஒருவில்லும், சுழலும் பொறியும் அவனிடம் இருந்தது. வில்லைக் கொண்டு பொறியிலுள்ள கிளி பொம்மையை நேரில் பார்க்காமல், கீழேயுள்ள ஜலத்தில் உள்ள பிம்பத்தை வைத்தே வீழ்த்த வேண்டும். இதை அர்ஜூனனால் மட்டுமே செய்ய முடியும் என்பதை அவன் அறிந்திருந்தான்.
பாண்டவர்கள் அங்கு என்ன தான் நடக்கிறது என்று அறிய விரும்பியே சென்றிருந்தனர்.
அவர்கள் எதிர்பார்த்தபடியே, பெரும் கூட்டம் வந்திருந்தது.
திரவுபதியின் சகோதரன், திருஷ்டத்துய்மன் அங்கு வந்திருந்தவர்களின் பெயர்களை வரிசையாகச் சொல்லத் தொடங்கினான்.
துரியோதனன், துர்விஷகன், துர்முகன், துஷ்பிரதர்ஷணன், விகர்ணன், ஸஹன், துச்சாதனன், வாயுவேகன், பீமவேகன், உக்ராயுதன், பலாகி, கனகாயு, விரோசனன், குண்டகன், சித்ரசேனன், கர்ணன் என்று கவுரவர்கள் பெயர்களை சொல்லி முடித்தான்.
சகுனி, வ்ருஷசன், அஸ்வத்தாமன், போஜன், பிருகந்தன், மணிமான், தண்டதாரராஜன், ஸஹதேவன், ஜயத்சேனன், மேகசந்திராஜன் என்று 20 பேர் பெயரை சொன்னான்.
அடுத்து துவாரகாதிபதி கிருஷ்ணன், பலராமன், ருக்மணி புத்திரனான பிரத்யும்னன், ஜாம்பவதி புத்திரனான சாம்பன், பிரத்யும்ன புத்திரனான அனிருத் என்று யாதவர்கள் பெயரை சொன்னான்.
அடுத்து மகாரதன் சல்லியன், சிந்து தேசாதிபதி தேத்ரதன், ப்ருஹத்ரதன், பாஹ்லீகன், உலூகன், சித்ராங்கதன், சுபாங்கதன், கோசல தேசாதிபதி சிசுபாலன், ஜராசந்தன் என்று எல்லார் பெயர்களைச் சொல்லி அவர்களது பிரதாபத்தைக் கூறி முடிக்கவே, அரைநாளைக்கும் மேலாகி விட்டது. அடுத்து என்ன நடக்கப் போகிறது
- தொடரும்
இந்திரா சவுந்தரராஜன்