ADDED : செப் 11, 2013 01:58 PM

நாரதர், பாண்டவர்களிடம் திலோத்தமையைப் பற்றிக் கூறினார்.
''திலோத்தமையும் அசுரர்களின் முன்தோன்றி நடமாடத் தொடங்கினாள். அதுவரை ஒற்றுமையாக இருந்த 'சுந்தோப சுந்தர்' இருவரும் திலோத்தமைக்காக போட்டி போட்டனர்.
திலோத்தமைக்கும் அவர்கள் அழிந்து போக வேண்டும் என்பது தானே விருப்பம்! அது நிகழத் தொடங்கியது. ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டனர். ஆளுக்கொரு வாள் கொண்டு சண்டையிட்டு இருவரும் உயிரையும் விட்டனர்! திலோத்தமையை என் தந்தையான பிரம்மதேவர் உருவாக்கிய நோக்கமும் ஒரு வழியாக ஈடேறியது''
நாரதர் கூறி முடித்தார். பாண்டவர்களிடம் ஒரு ஆழ்ந்த அமைதி.
'சுந்தோபசுந்தர்' கதையை நாரதர் கூறியது ஏன் என்பதும் அவர்களுக்குப் புரிந்தது.
அவ்வளவு ஒற்றுமையானவர்களையே, ஒரு பெண்ணின் அழகு பலி வாங்கி விட்டது. இங்கும் பாஞ்சாலி பேரழகி! இவளால் ஒற்றுமை சிதையாது என்று எப்படி கூற முடியும்? இருந்தும் பாண்டவர்களிடம் பெரிய சலனமோ சஞ்சலமோ இல்லை. தர்மர் நாரதர் எதிரில் உடனடி தீர்வாக சில முடிவினை அறிவித்தார்.
''மகரிஷியே! சுந்தோபசுந்தர் போல நாங்கள் அடித்துக் கொள்ளுதல் ஒருக்காலும் நேராது. அதே வேளையில், விதிவசம் என்று
ஒரு கருத்தை மறுப்பதற்கில்லை. அதை உத்தேசித்து சில முடிவுகளை எடுத்துள்ளேன். அதன்படி, பாஞ்சாலி எங்கள் ஒவ்வொரு
வருடனும் தனித்தனியே ஒரு வருடம் வாழ்வாள். அப்படி அவள் ஒருவரோடு வாழ்ந்திடும் நாளில் மற்றவர்கள் பிரம்மச்சர்யம் காப்பவர்களாவோம். அப்படி வாழும்நாளில் இருவரையும் பார்க்க நேர்ந்தால், பரிகாரமாக ஒரு வருடம் வனவாசம் மேற்கொள்வோம். இதன் மூலம் நாங்கள் இறுதிவரை ஒற்றுமையுடன் வாழ முடியும் என்று கருதுகிறேன்,'' என்றார். மற்ற நால்வரும் அதை மகிழ்வோடு ஏற்பதாக கூறினர்.
நாரதருக்கும் அவர்களுக்கு ஒரு நல்லவழியை காட்டி விட்ட நிறைவு!
பஞ்ச பாண்டவர்களின் இந்த கட்டுப்பாடான வாழ்க்கையில், அதிக சோதனை நேர்ந்தது அர்ஜூனனுக்குத் தான்..... நாரதரால் ஏற்பட்ட உடன் படிக்கைப்படி தர்மபுத்திரரும், பாஞ்சாலியும் தனியே வாழ்ந்து வரும் நாளில் ஒரு பிராமணனால் அர்ஜூனனுக்கு சோதனை ஏற்பட்டது.
அந்த பிராமணன் ஒரு பசுக்கூட்டத்தை வைத்து வாழ்ந்தான். அவனது பசுக்களை கள்வர் கவர்ந்து விட்டதால், அரசவைக்கு வந்து பசுக்களை மீட்டுக் கொடுக்கும்படி கண்ணீர் விட்டான்.
பசுக்களை சிலர் திருடுவதை அறிந்த அர்ஜூனன், தானே அவர்களை அடக்கி, பசுக்களை மீட்க முனைந்து வெற்றியும் பெற்றான். இந்த நேரத்தில் எதிர்பாராமல் அர்ஜூனன் தர்மரையும், பாஞ்சாலியையும் பார்த்து விட நேர்கிறது. உடனே, உடன்பாட்டின்படி வனவாசம் மேற்கொண்டு விடுகிறான்.
வனவாசத்திலும் அர்ஜூனனுக்கு விசித்ரமான அனுபவங்கள். கங்கைக்கரையில் வனம் ஒன்றில் வசித்த அவன் ஒருநாள் கங்கையில் நீராடும் போது பார்த்த உலூபி என்னும் நாககன்னி காதல் கொள்கிறாள். தந்திரமாக அவனை நாகலோகத்திற்கு அழைத்துச் செல்கிறாள். தன் காதலை ஏற்கச் சொல்லி வற்புறுத்துகிறாள். அர்ஜூனனோ சகோதரர்கள் தங்களுக்குள் செய்து உடன்படிக்கையால் அவள் காதலை ஏற்க மறுக்கிறான். உலூபி அதை மறுத்துப் பேசுகிறாள்.
''உங்கள் உடன்படிக்கை திரவுபதிக்கு ஊறு நேராமல் தடுப்பதற்காகத் தான். அதில் நீ பிரம்மச்சரியத்தோடு இருப்பது அவசியமற்றது. இந்திரபிரஸ்தத்தில் இருக்கும்போது தான் அது பொருந்தும். இது நாகலோகம். எனக்கும் பிற்காலத்தில்
ஆதரவாகவும், பித்ருகாரியம் செய்யவும் ஒரு புத்திரன் தேவைப்படுகிறான். அவனுக்காகவாவது நீ ஒரு உதவியைப் போல இதைச் செய்தாக வேண்டும்,'' என்று கெஞ்சுகிறாள்.
அர்ஜூனனின் மனம் இரங்கியது. அன்றே உலூபி கருக்கொள்கிறாள். மறுநாள் உலூபி அவனை கங்கைக்கரைக்கு கொண்டு வந்து விட்டாள். தனக்கு செய்த உதவிக்காக எந்த ஜலத்திலும், எவராலும் வெல்லப்படாத ஒருவரத்தை அர்ஜூனனுக்கு அளித்தாள். உலூபிக்கு, அர்ஜூனனால் பிறந்த பிள்ளைதான் அரவான்!
அர்ஜூனனின் வனவாசப் பயணம் தொடர்ந்தது. கலிங்கம், விராடம், காந்தாரம் என்று பல நாட்டின் வனப்பகுதியில் அலைந்து தென்பகுதிக்கு வருகிறான். மகேந்திர மலையில் தங்குகிறான். பின் கோதாவரி, காவிரி போன்ற நதிகளில் நீராடுகிறான்.
இவன் பயணத்தில் பாண்டிய நாட்டின் தலைநகரான மணலூரை அடைகிறான். மணலூருக்குப் பிறகே இந்திரனால் மதுரை உருவானது. அர்ஜூனன் மணலூர் சென்ற போது, சித்ரவாகனன் என்பவன் அரசாண்டு வந்தான். இவன் மகள் சித்ராங்கதை!
இவள் மூலமாகப் பெறும் புத்திரனைக் கொண்டு தான், தன் பிள்ளையில்லாக் குறையை சித்ரவாகனன் போக்கிக் கொண்டாக வேண்டும். ஆனால், மகள்வழிப் பேரனை இன்று கூட சொந்தம் கொண்டாட முடியாது என்பதே யதார்த்தம். இருப்பினும், இதற்கு இசைவாக ஒரு நல்ல மாப்பிள்ளை அமைய வேண்டுமே!
இந்த வேளையில் தான், சித்ரவாகனன், அர்ஜூனனைக் காண்கிறான். அர்ஜூனனும் சித்ராங்கதையைக் கண்டு அவளது அழகால் ஈர்க்கப்படுகிறான். சித்ராங்கதைக்கும், அர்ஜூனனுக்கும் பிறப்பவனே பப்ருவாகனன். இவனாலேயே 'பூரு' என்னும் வம்சமும் விருத்தியடைந்தது.
அர்ஜூனனின் பயணம் மேலும் தொடர்ந்தது. தீர்த்தயாத்திரை புரியத் தீர்மானித்தான்.
தீர்த்தயாத்திரைக்கு தனிச்சிறப்பு உண்டு. இதில் மட்டுமே ஒரே நேரத்தில் இரு நல்லவிஷயம் நிகழ்கின்றன. பாவம் நீங்குவதோடு புண்ணியமும் சேர்கிறது. அர்ஜூனன் பாரத தேசத்தின் எல்லா தீர்த்தங்களிலும் நீராடுகிறான். அந்த நாளில் தென் சமுத்திரக்கரையில் ஐந்து தீர்த்தங்கள் ரிஷிகளால் ஒதுக்கப்பட்டிருந்தது. அகத்திய, சவுபத்ர, பவுலோம, காரந்தம, பரத்வாஜ தீர்த்தங்களே அவை. அவற்றில் வசிக்கும் ஒரு முதலை, நீராட வருபவர்களை விழுங்கப் பார்த்தது. அதனால், ஒருவர் கூட நீராடவில்லை. இதை அறிந்த அர்ஜூனன், சவுபத்ர தீர்த்தமடுவில் இறங்கினான். முதலையும் அவனை உணவாக்கப் பாய்ந்தது. அவனோ, அதை அப்படியே தூக்கி வெளியில் வீசினான். நீரை விட்டு நீங்கியதும், அழகிய அப்சர கன்னியாக மாறி நின்றது. அவள் அர்ஜூனனை வணங்கினாள்.
''நான் ஒரு அப்சர கன்னிகை. சாபத்தால் இப்படி ஆனேன். என் பெயர் வர்க்கை. குபேரனின் ஆசைக்கு உரியவள்,'' என்று தன்னை பற்றிக் கூறி விட்டு, மற்ற தீர்த்தங்களிலும் சபிக்கப்பட்ட அப்சர கன்னியர் முதலையாக இருப்பதைக் கூறிட, அவர்களுக்கும் சாபவிமோசனம் உண்டானது.
இப்படி அர்ஜூனனின் வனவாசம், தீர்த்தயாத்திரையால் அவனுக்குப் பலர் அறிமுகமாயினர். இந்தநிலையில் அர்ஜூனனை அடுத்து சந்தித்த பாத்திரம் யார் தெரியுமா?
- தொடரும்
இந்திரா சவுந்தரராஜன்