ADDED : செப் 19, 2013 03:39 PM

அர்ஜூனன் தான் தொடங்கிய யாத்திரையில், மேற்கு திசையிலுள்ள ஒரு தீர்த்தத்தைக் கூட விடவில்லை. அனைத்திலும் நீராடியவனாக பிரபாச தீர்த்தம் என்னும் தீர்த்தத்தை அடைந்தான்.
தீர்த்தங்களில் நீராடுவதை ஒரு லட்சிய கடமையாகவே கருதினான். காரணம், குருநாதராகிய துரோணர் அவனுக்கு வித்தையை புகட்டியபோதே பல அறக்கருத்துக்களையும் உபதேசம் செய்திருந்தார். ''அர்ஜூனா! பஞ்ச பூதங்களில் சூரியன் சொரூபங்களைக் காட்டுபவன். அப்படி காட்டுவதை பார்ப்பதனாலேயே மனம் உருவாகும். வேறெந்த ஜீவராசியிடமும் இல்லாத அற்புதமே மனித மனம். இந்த பிறப்பில் மனம், வாக்கு, உடலால் நன்மை மட்டும் ஏற்படுவதில்லை. அறிந்தும் அறியாமலும் தீமையும் ஏற்படுகின்றன. தீமையை தவத்தால் விலக்கிக் கொள்ளலாம். அதற்கு வழியில்லாத நிலையில் தீர்த்த யாத்திரை மேற்கொள்வது தான் ஒரே வழி. ஓடும் நீரில் நீராடுவதால் பாவங்களை விடுக்கிறோம். குளத்திலோ புண்ணியத்தை எடுத்துக் கொள்கிறோம். இந்தச் செயல்பாடு எப்போதும் உன்னை ஒளியோடு வைத்திருக்கும்,'' என்று கூறியிருந்தார்.
துரோணர் சொன்னதில் பிரதானமான கருத்து,'ஒரு நல்ல ஞானமுள்ளவன் இந்த மண்ணில் ஓடும் ஒரு நீரையும் விட மாட்டான்' என்பது தான். அதை அர்ஜூனன் உறுதியாகப் பற்றிக் கொண்டான். அந்தவகையில் அறுபதுக்கும் மேலான தீர்த்தங்களில் நீராடியவனாக, பிரபாச தீர்த்தத்துக்கு வந்தான்.
இங்கே கதன் என்பவனைச் சந்திக்கிறான். அவன் யாதவ குலத்தவன். துவாரகாதிபதி கிருஷ்ணனின் தங்கையான சுபத்ரை பற்றி அர்ஜூனனிடம் சொல்லி மாய்ந்து போனான்.
''பாண்டவ வீரரே! உங்களை முப்பத்து இரண்டு லட்சணங்களும் உடையவர் என்று எல்லாரும் சொல்லக் கேள்விப் பட்டிருக்கிறேன். ஆனால், எங்கள் மன்னவரான கிருஷ்ணரின் சகோதரி சுபத்ரை, உங்கள் லட்சணங்களை எல்லாம் விழுங்கி ஏப்பம் விடும் பேரழகி. பார்த்தால் நீங்கள் உருகிப் போவது நிச்சயம். அவள் தோற்றத்தில் லட்சுமியை விஞ்சியவள்,'' என்று கதன் சொல்லச் சொல்ல, அர்ஜூனனுக்குள் அவள் மீது காதல் வந்து விட்டது.
அதே சமயம் சுபத்ரை யாரோ அல்ல! கிருஷ்ணரின் தங்கை. கிருஷ்ணனோ அர்ஜூனனுக்கு ஆத்மகுரு. குரு துரோணரே அர்ஜூனனிடம், கிருஷ்ணரைக் காணும் சமயம் கெட்டியாக பற்றிக் கொள்ளச் சொன்னது நினைவுக்கு வந்தது. எனவே, சுபத்ரை குறித்த எண்ணத்தை மானசீகமாய் கிருஷ்ணனிடம் கூறி விடுவதே சரி என்று தியானத்தில் அமர்ந்து விடுகிறான் அர்ஜூனன்.
அர்ஜூனனின் எண்ணம் கிருஷ்ணனின் திவ்ய ஞானத்தில் சென்று சேர்ந்தது. அதை எண்ணி கிருஷ்ணனும் புன்னகை பூத்தான், அருகில் இருந்த பாமா, ருக்மிணி இருவரும் அதற்கான காரணம் கேட்டனர்.
''தேவியர்களே.... என் அத்தை மகனான அர்ஜூனன், நம் சுபத்ரையை எண்ணி ஏங்கத் தொடங்கி விட்டான். அதே சமயம், என்னை மீறி எதுவும் செய்ய தயாரில்லை. சர்வம் கிருஷ்ணார்ப்பணம் என்று தியானிக்கத் தொடங்கி விட்டான்,'' என்றான்.
பாமா ருக்மிணி இருவரும், ''நாங்கள் பாண்டு புத்திரனான அர்ஜூனனை காண ஆவலாக உள்ளோம். அவன் விருப்பத்திற்கு சுபத்ரையும் உடன்பட வேண்டுமே'' என்றனர்.
''அர்ஜூனன் சர்வ சாமுத்ரிகா லட்சணன். சுபத்ரையும் அவனுக்கு பொருந்தும் அழகினை உடையவள். எனவே, எல்லாம் இனிதாகவே முடியும்,'' என்று சொல்லி புறப்படுகிறார்.
கிருஷ்ணன் அர்ஜூனனை பிரபாச தீர்த்தத்தில் சந்தித்து, அவனை ஒரு சந்நியாசியாக மாற்றி, துவாரகைக்கு அழைத்து வருகிறார். அர்ஜூனனை பலராமரும் ஒரு பூரண சந்நியாசியாக எண்ணி உபசரிக்கிறார்.
துவாரகைக்கு வரும் சந்நியாசிகளை கன்னிமாடத்தில் தங்க வைத்து, அங்குள்ள திருமணமாகாத கன்னியர்களைக் கொண்டு சேவை செய்யச் செய்வது அவர்களின் மரபு. இவ்வாறு செய்தால், அந்த கன்னியருக்கு சந்நியாசிகளின் பூரண ஆசியுடன் மனம் போல மணவாழ்வு அமையும் என்பது தான் இதற்கு காரணம்.
அர்ஜூனனுக்கும், கன்னிமாடத்தில் இருக்கும் சுபத்ரைக்கும் சந்திப்பு நிகழ்கிறது. எல்லாம் கண்ணனின் உள்கணக்கு. அந்த 'கிருஷ்ண கணக்கு' வீண் போகவில்லை. சுபத்ரை அர்ஜூனன் இருவருக்குள்ளும் காதல் ஏற்படுகிறது. இவ்வேளையில் துவாரகையை ஒட்டியுள்ள கடல்தீவில், மகாதேவபூஜை உற்ஸவம் நடக்கிறது.
துவாரகையிலுள்ள அவ்வளவு யாதவர்களும் கப்பல்களில் ஏறி அந்த தீவுக்குச் சென்று 34 நாட்கள் தங்கி இருந்தனர்.
இதன் பின்னே அர்ஜூனன் சாத்திர சிந்தனையை சுபத்ரைக்கும் உருவாக்கினான்.
''சுபத்ரா! தந்தையால் கன்னிகாதானமாக அளிக்கப்படுபவள் பத்தினி! ஒரு ஆண் தன்னைக் காப்பாற்ற வேண்டி மணக்கும் பெண் பார்யை! சாத்திரப்படி கன்னிகாதானம் செய்யப்படுபவள் தாரம்! தன் விருப்பப்படி எதிர்கால வாரிசுகளை வேண்டி திருமணம் செய்து கொள்பவள் பிரஜாவதி!
இந்த நால்வரும் அக்னி சாட்சியாக திருமணம் புரிபவர்கள். ஆனால், காந்தர்வ விவாகத்திற்கு எந்த கிரியையும் இல்லை. எப்போதும் திருமணத்திற்கு மாதங்களில் வைகாசியும், பட்சங்களில் வளர்பிறையும், கரணத்தில் பவமும், லக்னத்தில் மகரமும் சிறந்தவை. எல்லாவற்றுக்கும் மேலாக மைத்ரம் என்னும் முகூர்த்தமும் விவாகத்திற்கு உகந்தது. இவை அனைத்தும் இன்று இரவு வருகிறது. இப்படி ஒருநாள் வாய்ப்பது அரிது... இந்த நாளில் நமக்கு திருமணம் நடப்பது இனியது,'' என்றான் அர்ஜூனன்.
சுபத்ரையும் அதை விரும்பினாள். இதுவும் கண்ணனின் திருவுள்ளமே! அர்ஜூனன் விருப்பம் இந்திரபிரஸ்தத்தில் அரசாண்டு வரும் தர்மர் மற்றும் சகோதரர்கள், குந்தி, திரவுபதிக்கும் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், தந்தையான வசுதேவர், சகோதரனான கிருஷ்ணர், பலராமர் என்று யாரும் இல்லாமலா?
சுபத்ரையின் எண்ணம் அர்ஜூனனுக்கு புரிந்தது. உடனேயே தனக்கு ஆத்ம தந்தையான இந்திரனை எண்ணி தியானித்தான். அது நாரதரோடு, இந்திர லோகத்தையே அங்கு வரவழைத்து விட்டது.
கிருஷ்ணரும் பலராமரை விட்டு விட்டு, மற்றவர்களுடன் துவாரகைக்கு வந்து விட்டான். வசுதேவரிடம் இந்திரனே, அர்ஜூனனுக்காகப் பெண் கேட்க அவரால் மறுக்க முடியவில்லை. திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்க இந்திரனோடு வந்த நாரதர், விவாக காரியங்களைத் தொடங்கலாம் என்றார். கஷ்யப மகரிஷி ஹோமம் செய்தார். அஷ்டதிக்கு பாலகர்கள் அர்ஜூனனை சந்நியாச கோலத்திலிருந்து மாப்பிள்ளை கோலத்திற்கு மாற்றினர். அதன்பின் திருமணம் இனிதாக நடந்தேறியது. சுபத்ரை ஒரு இடையர் குலப்பெண்ணாக திரவுபதியைச் சந்தித்து, 'தீர்க்க சுமங்கலியாக வாழ்வாயாக' என ஆசி பெற்ற பிறகே, தான் சுபத்ரை என்பதை அவளுக்கு உணர்த்தியிருந்தாள்.
அர்ஜூனன்- சுபத்ரைக்கு அபிமன்யு பிறந்தான். 'அபி' என்றால் பயமற்றவன். 'மன்யு' என்றால் கோபமுள்ளவன். அநீதியை பயமின்றி எதிர்ப்பவன் அவன். சுபத்ரை அபிமன்யுவைப் பெற்றதைப் போலவே, திரவுபதியும் ஐவருக்கும் ஐந்து பிள்ளைகளைப் பெற்றாள். அவர்கள் யார் தெரியுமா?
- தொடரும்
இந்திரா சவுந்தரராஜன்