ADDED : அக் 01, 2013 12:25 PM

நாரதர், ''பாண்டு புத்திரர்களே! எனக்கு பிரம்மபுத்திரன் என்றொரு பெயர் உண்டு. நான் பிரம்மதேவரின் மானசபுத்திரன். அந்த வகையில் பார்த்தால் பிரம்ம சபை என் உரிமைக்கு உட்பட்டது. ஆனால், என்னாலேயே சூரியனின் தயவும், ஆயிரம் ஆண்டு தவமும் இல்லாமல், பிரம்மசபைக்குள் நுழைய முடியவில்லை என்றால் பிரம்மசபையில் நித்யசூரியாக திகழ்வது எவ்வளவு கடினமென்பதும், அது எத்தனை பெரிய பாக்கியம் என்பதும் உங்களுக்குப் புரியும் என்று நினைக்கிறேன்,'' என்று பலமான பீடிகையுடன் கூறத் தொடங்கினார்.
''நான் சந்தித்த சபைகளிலேயே என்னையே பிரமிக்க வைத்த சபை பிரம்மசபை என்பேன். அங்கு நிலவும் தட்பவெப்பமும் அலாதியானது. பசி, தாகம், களைப்புக்கு அங்கே இடமேயில்லை. பூமியில் பிரம்மவேளை என்று சூரியோதய பொழுதைச் சொல்வார்கள். மிக உற்சாகமான ஒரு காலகட்டம் அது. அங்கிருந்த வரை அந்த பிரம்மவேளையின் தன்மையை நான் உணர்ந்தேன். எங்கும் சபைகளை தூண்கள்அல்லவா தாங்கி நிற்கும்! ஆனால், பிரம்மசபையில் தூண்களே இல்லை. எப்போதும் சுகந்த நறுமணம் வீசியபடி இருக்கும்.
அங்கே, தக்ஷர், பிரசேதஸ், புலஹர், மரீசி, காஸ்யபர், பிருகு, அத்ரி, வசிஷ்டர், கவுதமர், அங்கீரஸ், புலஸ்தியர், க்ரது, பிரகலாதர், கர்த்தமர் என்று 14 சிருஷ்டி கர்த்தாக்கள் உள்ளனர். அதர்வாங்கிரசர், வாலகில்லியர், மரீசிபர் என்னும் திவ்ய பிரம்ம ரிஷிகளும் இருந்தனர். பெரும் மகிமையுள்ள அகத்தியர், மார்க்கண்டேயர், ஜமதக்னி, பரத்வாஜர், ஸம்வர்த்தர், சியவனர், துர்வாசர், தர்மிஷ்டரான ரிஷ்யசிருங்கர், ஆசாரியரான சனத்குமாரர், அஸிதர், தேவலர், தத்துவஞானியான ஜைகீஷவ்யர் இவர்களோடு எட்டு அங்கங்கள் கொண்ட ஆயுர்வேதம் தேகமெடுத்துக் கொண்டு நிற்கிறது. கூடவே சூரியசந்திரர்கள், மனம், ஆகாயம், வித்தைகள், வாயு, தேயு, நீர், நிலம், சப்தம், ஸ்பரிசம், ரூபம், ரசம், காந்தம், மூலப்பிரகிருதி, விகாரங்கள் என்று பூமியின் பிரதானங்களும் அங்கே இருக்க கண்டேன். நான்கு வேதம், சாஸ்திரம், இதிகாசம், உபவேதம், துன்பங்களைக் கடத்தி வைக்கும் சாவித்திரி, கற்பனை, ஞாபகசக்தி, சொல்வன்மை, திரிகால நோக்கு, உலக அறிவு, புகழ், பொறுமை என்னும் ஏழின் வடிவமான சரஸ்வதி தேவியும் உள்ளனர்'' நாரதர் இப்படி சொல்லிக் கொண்டே போகப் போக பாண்டவர்களின் பிரமிப்பும் ஆச்சரியமும் அதிகரித்தது.
''அடேயப்பா! பிரம்மசபையில் மானுட உலகின் சர்வ அம்சங்களும் இருப்பது புலனாகிறது. பிரம்மதேவர் சதா தியானத்தில் தனிமையில் படைப்பு குறித்து சிந்தித்தபடி இருப்பார் என்று எண்ணியிருந்தோம்,'' என்றான் சகாதேவன்.
நாரதர் சிரித்தார்.''நான் இப்போது சொன்ன பட்டியலில் பிரம்மச்சாரி ரிஷிகள் எண்பத்தி எண்ணாயிரம் பேரையும், சந்ததிகள் உள்ள ரிஷிகள் ஐம்பதினாயிரம் பேர்களையும் சேர்த்துக் கொள். நான் குறிப்பிட்ட அவ்வளவு பேரும் விரும்பும் சமயம், பிரம்ம சபைக்கு வந்து பிரம்மதேவனை ஆராதிக்க முடிந்தவர்கள். பிரம்மாவும் இவர்களை எல்லாம் தேவைக்கு ஏற்ப அழைத்து ஆசீர்வதிப்பார்....'' என்ற நாரதர், ''இத்தனை சபைகளைச் சொன்ன நான் உன்னுடைய சபையைப் பற்றியும் கூற வேண்டும். இந்த சபையே மானிடலோக சபைகளில் சிறந்த சபை,'' என்றும் பாண்டவர் பூரித்துப் போகும் வண்ணம் கூறினார். அதைக் கவனமாகக் கேட்ட தர்மர், நாரதரிடம் ஒரு முக்கிய கேள்வியைக் கேட்க விரும்பினார்.
''தர்மா..... நீ எதையோ கேட்க விரும்புகின்றாய் என்பது உன் முகக்குறிப்பில் புலனாகிறது. எதுவானாலும் கேள்'' என்றார் நாரதர்.
''சுவாமி.... சகல சபைகளையும் அதன் கீர்த்தியையும் அறிந்தோம். இவைகளில் உறைந்திருக்கும் மகானுபாவர்களையும் அறிந்தோம். நீங்கள் எல்லோரைப் பற்றியும் கூறியபடி வந்தபோது, இந்திரசபையில் அரிச்சந்திரன் இருப்பதாக குறிப்பிட்டீர். இந்த மண்ணில் மானுடப் பிறப்பெடுத்த பெருவாழ்வு வாழ்ந்த ரவிகுல அரசனான அரிச்சந்திரன் தன் காலம் முடிந்தநிலையில் இந்திரசபைக்கு எவ்வாறு செல்ல முடிந்தது? இது என் முதல்கேள்வி..... எங்கள் தந்தையான பாண்டு, இப்போது பிதுர்லோகத்தில் உள்ளாரா.. இல்லையேல் அவர் எங்கு உள்ளார்? அவரை நீர் சந்தித்தீரா?'' என்று தர்மன் கேட்க, நாரதரும் பதில் கூறத் தொடங்கினார்.
''தர்மா... அரிச்சந்திரன், விஸ்வாமித்திரரால் பேணப்பட்ட திரிசங்குவின் புத்திரன் ஆவான். சத்தியத்தை பூலோகத்தில் தன் உயிரைக் கொடுத்து காப்பாற்றியவன் இவன். பொய்யே சொல்லாத புண்ணியன். ஆனால், இதனால் எல்லாம் அரிச்சந்திரன் இந்திரலோகத்தில் இந்திரனுக்கு
இணையாக அமர்ந்து விடவில்லை. அவனுக்கு அந்த சிறப்பைக் கொடுத்தது 'ராஜசூயம்' என்னும் வேள்விதான்!
உன் தந்தையாகிய பாண்டுவை நான் பிதுர்லோகத்தில் சந்தித்தபோது அவரும் இந்த ராஜசூயம் பற்றி என்னிடம் கூறினார். அதாவது, நீங்கள் பூவுலகில் ராஜசூய யாகத்தை நிகழ்த்தினால், பாண்டுவும் இந்திரலோகம் சென்று, அரிச்சந்திரன் அருகில் அமரும் பாக்கியம் பெறுவார். நாரதர் அவ்வாறு சொன்ன நொடியே, பாண்டவர்களுக்குள் அந்த வேள்வியை எப்படியாவது செய்து விட வேண்டும் என்ற எண்ணம் தோன்றி விட்டது. கிருஷ்ணனிடம் ஆலோசனை கேட்க முடிவெடுத்தனர். பாண்டவர்களின் இன்றைய இருப்புக்கு காரணமே அவர் தானே!
கிருஷ்ணனும் தர்மரின் விருப்பத்தைக் கேட்டான்.
''தர்மா... ராஜசூயம் செய்து இந்த பாரில் வெல்லப்பட முடியாதவனாக வாழ வேண்டும் என்கிற விருப்பம் உனக்கு எதனால்
ஏற்பட்டது?'' என்றான்.
''கிருஷ்ணா... ஏகபோக சக்கரவர்த்தியாவது என் எண்ணம் இல்லை. எங்கள் தந்தைக்கு இந்திரசபையில் மதிப்பான இடம் கிடைக்க வேண்டும். அரிச்சந்திர மகாராஜா போல் அவரும் நித்யசூரியாக திகழ வேண்டும். இதுவும் கூட என் விருப்பம் அல்ல. அவர்
விருப்பமே.... நாரதர் மூலம் இது எனக்கு தெரிய வந்தது,'' என்றான் தர்மன். கிருஷ்ணன் பலத்த சிந்தனையில் ஆழ்ந்தான்.
''கண்ணா... என்ன யோசனை? எங்களுக்கு அதற்கு தகுதி இல்லை என்று நினைக்கிறாயா?'' என்று அர்ஜூனன் இடையிட்டான்.
''நிச்சயமாக இல்லை''
''பின் என்ன யோசனை?''
''அது எவ்வளவு சுலபமில்லை....''
''திரவுபதி சுயம்வரம் கூட சுலபமில்லை தான். ஆயினும் நான் வெல்லவில்லையா?''
''அதைப் போல இது பல மடங்கு கடினமானது''
''எந்த வகையில்?''
''எல்லா வகையிலும்....''
''விளக்கமாக சொல்ல முடியுமா?''
''ஒரு வார்த்தையிலும் சொல்லமுடியும்...''
''அந்த வார்த்தை?''
''ஜராசந்தன்!''
கிருஷ்ணன் கூறிட அனைவரிடமும் திகைப்பு.
- தொடரும்
இந்திரா சவுந்தரராஜன்