ADDED : அக் 17, 2013 04:57 PM

ஜராசந்த வதத்தை தொடர்ந்து, ராஜசூய யாகத்தின் ஒரு அம்சமான திக்விஜய நிகழ்வு நடந்தது. அர்ஜூனன் வடக்கிலும், பீமன் கிழக்கிலும், நகுலன் மேற்கிலும், சகாதேவன் தெற்கிலும் பயணம் மேற்கொண்டனர்.
தர்மர் காண்டவபிரஸ்தத்தில், தன் சகோதரர்கள் திக்விஜயம் செய்து வரும் வரை காத்திருந்தார். திக்விஜயத்தில் எதிர்த்த அரசர்களை எல்லாம் அர்ஜூனனும், பீமனும் அடக்கி வெற்றி கண்டனர். இப்படி எதிர்த்தவர்களில் சிசுபாலனும் ஒருவன். பீமனின் வீரத்துக்கு கட்டுப்பட்ட சிசுபாலன், ஒரு நிபந்தனை மட்டும் விதித்தான்.
''தர்மபுத்திரர் ராஜசூயயாகம் நடத்துவதில் எனக்கு ஆட்சேபணை இல்லை. ஆனால், யாகத்தில் தகுதியில்லாதவருக்கு முதல் மரியாதை தருவது கூடாது'' என்றான். பீமன் அதை ஆட்சேபிக்கவில்லை. ஆனால், அதில் தான் பெரும் சிக்கல் உருவாகப் போவதை அவனால் உணர முடியவில்லை.
திக்விஜயம் முடிந்து வெகு விமரிசையாக ஆயிரம் குண்டங்களோடு பிரதான மேரு குண்டம் அமைத்து, தர்மபுத்திரர் யாகத்தைத் தொடங்கினார்.
அக்னியில் ஆறு வகைகள் உண்டு. ஆரம்பணியம், ஷத்திரம், த்ருதி, வியுஷ்டி, த்விராத்திரம், தசபேயம் என்பதே அவை. இந்த ஆறாலும் யாகம் நிகழ்வது சிறந்த முறை. இதற்கு யாக விதியும் அனுமதிக்க வேண்டும். இதற்கு ராஜசூய யாகத்தில் இடம் இருந்தது. நாரதரும் யாகத்தில் பங்கு கொண்டார். பெரும் முனிவர்கள், ரிஷிகள், அரசர்கள் பங்கு கொண்ட யாகத்தின்
நிறைவில் அனைவருக்கும் மரியாதை செய்யும் ஐதீகம் தொடங்கியது. இவ்வேளையில் முதல் மரியாதை யாருக்கு என்ற கேள்வி பிரதானமாக எழுந்தது.
திரிகால ஞானியான நாரதர், கிருஷ்ணனை விஷ்ணுவாகக் கண்ட நிலையில், கிருஷ்ணன் உள்ள இடத்தில் வேறு யாரும் பெரிதாக இருக்க வாய்ப்பில்லை என்பதை புரிந்து கொண்டார். முதல்மரியாதை கிருஷ்ணருக்கே என்று முன்மொழிந்தார். அனைவரும் அதை மகிழ்வோடு ஏற்றுக் கொண்டனர். ஆனால், சிசுபாலன் மட்டும் ஏற்க மறுத்து ஆட்சேபித்தான்.
சிசுபாலன் சேதிராஜன் புதல்வன். பிறக்கும்போதே நெற்றியில் ஒரு கண்ணும், நான்கு கைகளும், கழுதையின் குரலும் கொண்டவன். இவன் அருகில் வரவே, எல்லோரும் பயந்தனர். அதே சமயம் சேதிநாட்டு அரசனுக்கு பதிலாக அசரீரி ஒன்று ஒலித்தது.
''அரசனே..... இந்த பிறப்புக்கு காரணம் ஒரு வரமே! தேவனாக இருந்தும் அசுர புத்தியோடு நடந்து கொண்டதால் வந்த வினை. இதன் தொடக்கம் வைகுண்டம். இதன் முடிவும் வைகுண்ட பதியால் தான்! இவனை சம்ஹாரம் செய்யப் போகிறவன் மடியில் இவன் கிடத்தப்படும் போது இவனது நெற்றிக் கண்ணும், கூடுதலான இரு கரங்களும் நீங்கி விடும்,'' என்றது அந்த அசரீரி.
அதைக் கேட்ட சிசுபாலனின் தாய் தவித்தாள். தன் புதல்வனுக்கான காலன் யார் என்பதைத் தெரிந்து கொள்ளவும், அவனது விகார ரூபம் நீங்கவும், அவள் மிகவே முயன்றாள். அதன் பொருட்டு அந்த விகாரப் பிள்ளையை, பார்ப்பவர் மடியில் எல்லாம் கிடத்த தொடங்கினாள். அந்த வகையில் சேதி நாட்டுக்கு ஒரு யாத்திரையாக கிருஷ்ண பலராமர்கள் வரவும், அவர்கள் மடியில் பிள்ளையை விட்டாள். அதில் கிருஷ்ணன் மடியில் குழந்தை விழுந்த நொடி, நெற்றிக் கண்ணும், கரங்களும் நீங்கி எல்லோரையும் போல மாறி குழந்தை அழத் தொடங்கியது. அதைக் கண்டசேதி நாட்டு ராணி கண்ணீர் உகுத்தாள். கிருஷ்ணனுக்கு காரணம்
புரிந்தது.
கண்ணீர் விடும் சேதிநாட்டு ராணி (சிசுபாலனின் தாய்) கிருஷ்ணனுக்கு அத்தை உறவு. எனவே, கிருஷ்ணனும், ''அத்தை அழாதே.... உன் பிள்ளைக்கு என்னால் தீங்கு நேராது. உன் பொருட்டு, அவன் என்னிடம் பகை பாராட்டினாலும், அவன் பகையை குறிப்பாக தீய செயல்களையும், பேச்சையும் நான் ஒருமுறை அல்ல.. நூறு முறை மன்னிப்பேன். ஆனால், அதற்கு மேல் போனால் என்னாலும் இயலாது,'' என்று கூறிட, ''இது போதும் கிருஷ்ணா.... இது போதும்,'' என்றாள் அந்த தாய்.
இப்படி பிறக்கும்போதே, கிருஷ்ணனே தனக்கான சத்ரு என்பதை தெரிந்து கொண்ட சிசுபாலனும் கிருஷ்ணனை வெறுத்தான். 'இடையன், மாடு மேய்ப்பவன், கருப்பன், குழலூதி, வெண்ணெய் திருடி, பெண்களோடு சரசம் புரிபவன்,'' என்று பார்ப்பவர்களிடம் எல்லாம் கூறி வந்தான். அந்த நூறு என்கிற கணக்கு தடுத்தபடியே வந்தது.
ஆட்சேபம் தெரிவித்த சிசுபாலனை பீஷ்மர் கண்டித்தார். கிருஷ்ண பரமாத்மா யார்? என்பதை தெரிவித்தார். மகாவிஷ்ணுவே கிருஷ்ணராக அவதரித்து வந்திருப்பதை எடுத்துக் கூறினார்.
''சான்றோர்களே! நாராயணரே, சுயம்புவாக தோன்றியவர். தன் நாபிக்கமலத்தில் பிரம்மனைத் தோற்றுவித்தார். பிரம்மன், நாரணர் துணையுடன் உலகைப் படைத்தான். இந்த பிரபஞ்சத்தில் எல்லா உயிர்களுமே நாராயணரின் அங்கத்தைச் சேர்ந்ததே. அவரே மகாயோகி, பரமாத்மா, பரபிரம்மம்..... யோகநித்திரையில் அவர் இருந்தாலும், அவரிடமிருந்தே அழிவில்லாத பிரகிருதியானது உற்பத்தியாகி, பிரிந்து பிரிந்து, நான், நீ, நாம் என்று ஆகியுள்ளது. இந்த சிசுபாலனும் அதில் ஒருவன். இவன் இகழ்ச்சியும் அதில் ஒன்று. பொலிவான உடம்பில் உருவாகும் வியர்வை போல் உருவாகும் இவர்களை, வியர்வை வழிப்பது போல வழிப்பதும் அழிப்பதும் அறச்செயலே! அப்படியே, நாராயணன் அவதாரங்கள் எடுத்து வந்து மது, கைடபரில் தொடங்கி கம்சன் வரை வதம் புரிந்துள்ளார். அதன் தொடர்ச்சியில் இந்த சிசுபாலனும் வதமாவது உறுதி,'' என்று முடித்தார் பீஷ்மர்.
சிசுபாலனும் அதற்கேற்பவே நடந்து கொண்டான். விதியும் அவனை கிருஷ்ணரைத் தூற்றும்படி பேச வைத்தது. ஏச்சும் பேச்சும் நூறைக் கடந்தது. கிருஷ்ண சக்கரம் சிசுபாலனின் சிரசை வெட்டி வீழ்த்தி, அவனுயிரை தன்னோடு இணைத்துக் கொண்டது.
பாண்டவர்கள் யாகத்தை நிறைவு செய்து, வழிகாட்டியாக இருந்த கிருஷ்ணனை இருகரம் கூப்பி வணங்கினர்.
தர்மர், பீஷ்மர் கூறியதை மனதில் எண்ணியபடி கிருஷ்ணனை விஷ்ணுவாகவே பார்த்தார். கிருஷ்ணனும் ஒருவினாடி தன் விஸ்வரூப தரிசனத்தை தர்மருக்கு காட்டினார். சிலிர்த்துப் போன தர்மர், ''கிருஷ்ணா, முகுந்தா, மாதவா ,கேசவா, திரிவிக்ரமா, ஜனார்த்தனா, பரந்தாமா.....'' என்று நாமாவளி சொல்லத் தொடங்கினார்.
அதைப் போல நாமும் கிருஷ்ணனின் திருநாமங்களைச் சொல்லி அவரின் அருளைப் பெறுவோம்.
- முற்றும்
இந்திரா சவுந்தரராஜன்