தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/கதைகள்/தெரிந்த பாரதம் தெரியாத பாத்திரம்-3 (2)

தெரிந்த பாரதம் தெரியாத பாத்திரம்-3 (2)

தெரிந்த பாரதம் தெரியாத பாத்திரம்-3 (2)


ADDED : ஜூன் 09, 2015 10:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 09, 2015 10:10 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பரசுராமர் தன் சக்தியை இழந்ததையும், மீண்டும் அதைப் பெற்றதையும் பற்றி லோமசர் கூறத் தொடங்கினார்.

''ரிசீக முனிவரின் புத்திரரான ஜமதக்னியின் புத்திரர் பரசுராமர். இவரது தாய் தான் ரேணுகா தேவி. தந்தை சொல் மிக்க மந்திரமில்லை

என்றொரு பழமொழி உண்டு தெரியுமா?'' என்று லோமசர் கேட்க, தர்மன் புன்னகைத்தபடியே, 'மகரிஷி...அப்படியே தாயும் உயர்ந்தவள் தானே,'' என்றான்.

''சரியாகச் சொன்னாய் தர்மா...! ஆனால், பரசுராமனைப் பற்றிக் கூறும் போது மட்டும் முதலில் தந்தையே உயர்ந்தவர் என்ற கருத்து நினைவுக்கு வரும். ஏனென்றால், தந்தையின் கட்டளை என்பதன் பொருட்டு தன் பரசு என்கிற கோடரியாலே தன் தாயான ரேணுகாதேவியை வெட்டி வீழ்த்தியவன் தான் பரசுராமன்,'' என்று லோமச முனிவர் கூறவும் அனைவரிடமும் அதிர்வு...

''மகரிஷி.. தந்தை பேச்சைக் கேட்டு தாயையே கொன்றாரா பரசுராமர்... இது என்ன கொடுமை?'' என்று பீமன் ஆவேசமாகக் கேட்டான்.

''அது ஒரு தனிக்கதை... அதற்குள் இப்போது நாம் செல்லத் தேவையில்லை. இங்கே நீங்கள் பரசுராமர் குறித்து தெரிந்து கொள்ள நிறைய நுட்பமான சங்கதிகள் உள்ளன. தன் சொல்லுக்காக மகன் தாயைக் கொன்றதை எண்ணி ஆச்சரியப்பட்ட ஜமதக்னி முனிவர்.

''மகனே! உனக்கு என்ன வரம் வேண்டுமோ கேள்,'' என்றவுடன், ''என் தாய் உயிர் பெற்று எழ வேண்டும்'' என்ற வரத்தையே கேட்டான். அவரும் அவ்வாறே செய்தார்.

பரசுராமர், இப்படி தாய், தந்தை இருவர் மீதும் அன்பு கொண்டிருந்தார். இவர் வசமுள்ள பரசு என்ற கோடரியை இவருக்கு தந்தவர் சிவபெருமான். கடும்தவம் செய்து அதன் பயனாகப் பெற்றதே 'பரசு'. இதைப் பெற்ற பின், தனக்கு நிகரான வீரனோ அல்லது பெற்றோரை மதிப்பவனோ பூவுலகில் இல்லை என்று கருதினார். இப்படி கருதினாலே ஆபத்து தானே... இவருக்கு அயோத்தியை அரசாட்சி செய்த ராமன் பற்றி பிறகே தெரிய ஆரம்பித்தது.

'ராமபிரான் பற்றி நீங்கள் அறிவீர்கள் அல்லவா?'' - என்று லோமசர் கேட்க, 'அந்த விஷ்ணு அவதார மூர்த்தியை அறியாது இருப்போமா?'' என்று திருப்பிக் கேட்டாள் திரவுபதி.

'நல்லது... அயோத்தி ராமனுக்கும், இந்த பரசுராமனுக்கும் ஒரு சமயம் யுத்தம் மூண்டது என்றால், உங்களுக்கெல்லாம் ஆச்சரியமாய் இருக்கும்'' - லோமசர் இப்படி கூறவும் ஐவரும் வியப்புடன் பார்த்தனர்.

'என்ன பார்க்கிறீர்கள்?''

'பார்க்கிறோமா... திகைத்துப் போய் விட்டோம்...''

'எதனால்?''

'இரண்டு ராமர்களுமே மோதிக் கொண்டார்கள் என்கிறீர்களே.. எப்படி திகைப்பு நேராது போகும்...'' 'அங்கே தான் மனித மனங்களை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். மனதைப் போல விசித்திரமான ஒன்று, இந்த உலகில் மட்டுமல்ல... புவனம் பதினான்கிலும் கூட கிடையாது...''

'எப்படி என்று சற்று விளக்கமாக கூறுங்களேன்...''

''கூறுகிறேன்... பரசுராமருக்கு தன் வசமுள்ள பரசுவே மேலானது என்றும், தானே நிகரில்லாதவன் என்றும் செருக்கு ஏற்பட்டது என்றேன் அல்லவா?

'ஆமாம்''

'அங்கே தான் ஆரம்பமானது பிரச்னை..''

'தெய்வீக புருஷர்களுக்குமா செருக்கு?''

'நல்ல கேள்வி... சாமான்யர்களின் செருக்கு அவர்களையே அழித்து விடும். தெய்வீகர்களின் செருக்கு திருவிளையாடலாகி உலகிற்கு பாடமாகி விடும்''

'புரிகிறது.... ராமரும், பரசுராமரும் எங்கே எப்போது மோதிக் கொண்டனர்''

'அயோத்தி ராமரின் பெருமையைக் கேள்விப்பட்ட பரசுராமர், தன்னையும் விஞ்சும் அளவுக்கு ஒரு வீரனா என்ற எண்ணத்தில் பரிசோதித்துப் பார்க்க விரும்பினார். அயோத்தி புறப்பட்டார். ராமனும் அவரைப் பணிந்து வரவேற்றான். பரசுராமரோ அலட்சியத்துடன், தன் வசமிருந்த சிவதனுசுவை ராமனிடம் கொடுத்து, ''ராமா.... நீ சுத்த வீரன் என்றால், இந்த வில்லில் அம்பைப் பூட்டி நாணேற்று,'' என்றார்.

'ஏன் இந்த சோதனை?'' என்றார் ராமர்.

'உன்னைப் பற்றி நான் கேள்விப்பட்டது எல்லாம் உண்மையா என்பதை அறிய வேண்டாமா?''

'நான் ஒதுங்கிக் கொள்கிறேன் பரசுராமரே''

'நீ என்னை மதிப்பது உண்மை என்றால், இந்த வில்லை எடுத்து நாணைப் பூட்டு. பிறகுபேசு....''

'நான் விளையாட்டுக்கு வேண்டுமானால், நாணேற்றிப் பார்க்கிறேன். ஒருவேளை இயலாது போனால் பரிகாசம் செய்யாதீர்கள்....''

'எனக்கும் அது தானே வேண்டும்...'' - இப்படி வாக்கு வாதம் நடந்தது. ராமரும் நாணேற்ற ஆரம்பித்தார்.

அவரைக் கண்டு உலகமே நடுநடுங்கியது.

'பூமியிலும் பெரும் நடுக்கம். கடலிடமும் தடுமாற்றம். ராமர் நாணேற்றி முடித்ததும், பரசுராமர் தடுமாறிப் போனார். அப்படியே, விஷ்ணுவாக விஸ்வரூபம் எடுத்த ராமரைக் கண்ட பரசுராமர், கைகளைக் கூப்பி கண்ணீர் பெருக தரிசித்தார்.

பின் அப்படியே பரசுராமர், தன் தோல்வியை ஒப்புக்கொண்டு, சந்நியாசி கோலம் ஏற்றார். தவறான நோக்கத்தில் தான் செய்த பாவம் நீங்க, ஓராண்டு வரை தவத்தில் ஆழ்ந்தார்.பின் பிருகு தீர்த்தத்தில் நீராடிய பின்னரே பாவம் விலகியது. முகப்பொலிவு, எண்ணத் தெளிவு, மன அமைதி மூன்றும் கிடைக்கப் பெற்றார். அன்று முதல் நீராடுவோர் அனைவருக்கும் இந்த நற்பலனை எல்லாம் இத்தீர்த்தம் வாரி வழங்குகிறது,'' என்று முடித்தார் லோமச முனிவர்.

- தொடரும்

இந்திரா சவுந்தர்ராஜன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us