ADDED : ஜூன் 25, 2013 03:57 PM

தனது அஸ்திரம் கொண்டு அர்ஜுனனோடு யுத்தம் செய்யத் தயாரான அங்காரபர்ணனை அர்ஜுனன் தன் அக்னியாஸ்திரத்தால் நொடியில் வீழ்த்த அங்காரபர்ணனின் உதிரம் ஆவியாகியது. அவனும் தன் எழில் எல்லாம் நீங்கப்பெற்ற நிலையில் துளியும் சக்தியற்றவனாகி கரியநிறம் கொண்டு பூமியில் விழுந்தான்.
அப்போது ஒரு பெண் புலம்பியபடியே ஓடிவந்தாள். அர்ஜுனன் அவள் யாரென்று பார்த்தநிலையில் அவள் அவன் காலில் விழுந்து கதறத் தொடங்கினாள்.
""மாவீரனே! நான் இந்த கந்தர்வனின் மனைவி. என் பெயர் கும்பீனஸி. உங்களை நான் சரணம் செய்கிறேன். அரை உயிரும் உடலுமாய் உள்ள இவரை மேலும் வதம் செய்யாமல் விட்டுவிடுங்கள்,'' என்று கதறினாள். அவளது கதறல் குந்தியை, தர்மரை என்று சகலரையும் இரக்கங்கொள்ளச் செய்தது.
தர்மரும் அர்ஜுனனிடம் இனி அஸ்திரத்தை தொடாதே என்பதுபோல பார்த்திட, அர்ஜுனனும் தன் அக்னியாஸ்திரத்தை அம்பறாதூளியில் கிடத்தினான். அங்காரபர்ணனும் அர்ஜுனின் வீரத்தை உணர்ந்தவனாக தள்ளாடியபடியே எழுந்துநின்றான். பின் ""பிராமண வடிவில் இருக்கும் நீங்கள் யார்? நிச்சயம் நீங்கள் பிராமணரல்லர். உங்கள் முகத்து ராஜகளையும் நீங்கள் பிராமணரல்லர் என்றே கூறுகிறது,'' என்றான்.
அர்ஜுனனும் ஒப்புக்கொண்டு தாங்களே பஞ்சபாண்டவர்கள் என்றிட அங்காரபர்ணனிடம் மகிழ்ச்சி.
"அர்ஜுனா...! கந்தர்வ மமதையால் ஆற்றில் குளிப்பதில்கூட நான் விதிகளைப் பற்றி பேசிவிட்டேன். அது தவறு. கங்கையில் நீராட காலநேரமே இல்லை. எவர் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் நீராடலாம் என்னும் உண்மையை இனி உலகறியட்டும்.
உன்னிடம் நான் தோற்றவன். தோற்ற எனக்கு இனி ரதமோ, ராஜ்ய சுகங்களோ தேவையில்லை. எனது ரதத்துக்கு சித்ரரதம் என்று பெயர். இது நினைத்த மாத்திரத்தில் தோன்றி நினைத்த இடத்துக்கு அழைத்துச்செல்ல வல்லது. அதற்கு இனி நீயே
உரியவன். அது மட்டுமல்ல. ஆறுமாத காலம் ஒற்றைக்காலில் நின்று தவம் செய்து நான் ஒரு வித்தையை பெற்றுள்ளேன்.
அதன்படி மூன்று உலகங்களில் நான் எதைப் பார்க்க விரும்பினாலும் அது என் கண்ணில் படும். அந்த வித்தையை நான் உனக்கு தாரை வார்த்துதர விரும்புகிறேன். அது மட்டுமல்ல... எங்கள் கந்தர்வ லோகத்தில் பிறந்து வளர்ந்த நூறு குதிரைகளையும் நான் உனக்கு தர விரும்புகிறேன். இந்த குதிரைகள் இந்திரனின் வஜ்ராயுதத்துக்கு ஒப்பானவை. இம்மட்டில் ஒரு பிராமணனுக்கு அவனது கைதான் வஜ்ரம். க்ஷத்ரியனுக்கோ அவன் ஏறிச்செல்லும் ரதம் வஜ்ரம். வைசியர்களுக்கு அவர்கள் அள்ளித்தரும் கொடை வஜ்ரம். சூத்ரர்களுக்கு தொழில் வஜ்ரம். கந்தர்வர்களான எங்களுக்கு குதிரைகளே வஜ்ரம். இப்படிப்பட்ட இந்த குதிரைகள் உனக்கு பேருதவியாக இருக்கும்' என்றான் அங்காரபர்ணன்.
ஆனால், அர்ஜுனன் அவை எதையும் அங்காரபர்ணனிடம் இருந்து பெற விரும்பவில்லை. "அங்காரபர்ணா! இப்போது நீ என் அடிமை. நான் நினைத்தால் உன்னை என்ன வேண்டுமானாலும் செய்யலாம். ஒரு அடிமையிடம் இருந்து எதைப் பெற்றாலும் அது இழிவு. எனவே உன்னிடமிருந்து நான் எதையும் பெற விரும்பவில்லை,'' என்றான்.
அங்காரபர்ணனோ விடுவதாயில்லை.
""அர்ஜுனா! என்னை அடிமை என்று இழிவுபடுத்தாது நண்பனாக்கிக்கொள். நண்பனாகி விட்டால் நாம் சமம். இருவரும் ஒருவருக்கொருவர் எதையும் தரலாம், பெறலாம்,'' என்றான்.
அதைக்கேட்டு அர்ஜுனனும் யோசிக்க இங்கே சகாதேவன் அர்ஜுனனிடம், ""அண்ணா, இதனால் நலமே விளையும். சரி என்று சொல்லுங்கள்,'' என்றான். முக்கால ஞானியான சகாதேவனுடைய கருத்தை ஏற்று அர்ஜுனனும் அங்காரபர்ணனை நண்பனாக ஏற்று, அவன் மேல் விழுந்த அக்னியாஸ்திரத்தை திரும்பப் பெற்றான். அங்காரபர்ணனும் பூரண நலத்துடன் எழுந்து நின்றான். பின் இருவரும் தங்கள் அஸ்திரங்களை பரிமாறிக் கொண்டனர். இதன்மூலம் அர்ஜுனனிடம் கந்தர்வாஸ்திரம் வந்து சேர்ந்தது.
இவ்வேளையில் அங்காரபர்ணன் பாண்டவர்களிடம் ஆழமான ஒரு கருத்தையும் கூறினான்.
""பாண்டு புத்திரர்களே! உங்களுக்கு அக்னியுமில்லை. ஹோமமுமில்லை. நீங்கள் பிராமண வேடத்தில் இருக்கிறீர்கள். நிஜமான பிராமணர்கள் உங்கள் முன் இல்லை. இவ்வாறே நீங்கள் உங்கள் பயணத்தை தொடர்ந்தால் உங்கள் யட்சர்கள், ராட்சஷர்கள், பட்சிகள், நாகங்கள், பிசாசங்கள் என்று எவையும் எதுவும் செய்யும்.
ஒரு பிராமணன் முன் இருக்க அவன் துணையோடு நீங்கள் செல்லும்போது இவை எதுவும் உங்களை எதுவும் செய்யாது. அது மட்டுமல்ல.. பிரம்மசர்யம் ஒரு சிறந்த தர்மம். அதனாலேயே உன்னால் என்னை அடக்க முடிந்தது. எனவே பிரம்மச்சரியத்தை நீ நன்கு புரிந்துகொள். என் போன்றோர் ஒன்று பிரம்மச்சரியம் உள்ளவர்களுக்கு கட்டுப்படுவோம். இல்லையேல் பிராமணர்களுக்கு கட்டுப்படுவோம். நீங்கள் உங்களுக்கென்று ஒரு புரோகித பிராமணரை துணை கொள்ளுங்கள். அவ்வாறு செய்தால் அனைத்தும் உங்களுக்கு வெற்றி உறுதி!'' என்றான்.
அங்காரபர்ணனின் கருத்தைக் கேட்ட தர்மர், ""கந்தர்வனே! என் முன்னோர் வசிஷ்ட மகரிஷியை புரோகிதராய் கொண்டவர்கள். எனவே எங்களுக்கு பிராமண சகாயம் இல்லை என கருதவேண்டாம்,'' என்றார். அதைக்கேட்ட கந்தர்வன் சிரித்தபடியே, ""உங்களுக்கு வசிஷ்ட மகரிஷி பற்றி தெரியுமா?' என்று கேட்டான். "அவரைப்பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் அவர்
கீர்த்தி பற்றியோ, வல்லமை பற்றியோ தெரியாது. உனக்குத் தெரிந்தால் சொல்,'' என்றான் அர்ஜுனன்.
கந்தர்வனும் வசிஷ்டர் பற்றி சொல்லத் தொடங்கினான்.
"வசிஷ்ட மகரிஷி பிரம்மதேவனுக்கு மானஸ புத்திரர்! பதிவிரதா தேவியான அருந்ததிக்கு கணவர்! காம குரோதங்களை ஜெயித்தவர். அதனால் அவை இரண்டும்தான் அவர் கால்களை தினமும் பிடித்துவிடும். இந்திரியங்கள் அவ்வளவையும் வசப்படுத்தியவர் என்பதாலேயே அவருக்கு வசிஷ்டர் என்ற பெயர் உண்டானது.
விஸ்வாமித்திரருக்கும் இவருக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம். விஸ்வாமித்திரரால் பாதிக்கப்பட்டபோதெல்லாம் ஒரு நொடியில் அவரை அழிக்கும் வல்லமை இருந்தும் அதை பிரயோகிக்காமல் கட்டுப்படுத்திக் கொண்டார். இறந்துவிட்ட
புத்திரர்களை நேரே எமனிடம் சென்று மீட்டுக் கொண்டுவர முடிந்தும் இவர் அப்படிச் செய்யவில்லை. அப்படிச் செய்வது தெய்வ நிந்தனையாகும். பரம்பொருளின் விதிப்பாட்டை மீறிய ஒழுக்கக் கேடாகும் என்று தெய்வமே வியக்கும் வண்ணம் தன்னை தவத்தால் கட்டுப்படுத்திக் கொண்ட மகா பிரம்மயோகி,'' என்று வசிஷ்டர் பற்றி கூறி முடித்தான் கந்தர்வனான அங்காரபர்ணன்.
வசிஷ்டரின் பெருமைகளை கேட்ட பாண்டவர்கள் மகிழ்ந்தனர். ""இப்படிப்பட்டவர் உங்கள் வம்சத்தவர்க்கு குருவாக இருந்தார் என்று சொன்னீர்கள்... உங்களுக்கும் இவர்போல் ஒருவர் குருவாக திகழ்வதே உத்தமம்!' என்று தொடர்ந்த அவனிடம் அர்ஜுனன் "வசிஷ்டருக்கும் விஸ்வாமித்திரருக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம் என்றீர்களே! அது எப்படி?'' என்று கேட்டான்.
அதைக்கேட்ட அங்காரபர்ணன் மென்மையாக சிரித்தான்.
""எதற்காக இந்த சிரிப்பு?''
""இருண்ட இந்த இரவில் கங்கை நதிக்கரையில் உங்களுக்கு நான் வசிஷ்ட புராணத்தை சொல்ல நேர்ந்ததை எண்ணினேன். நானே காம லோப மாச்சர்யங்களில் மூழ்கி கிடக்கும் ஒருவன். ஆனால், இந்த கங்கையில் நீராடிய புண்ணியம் வசிஷ்டர் என்னும் புண்ணிய ஆத்மாவை பற்றி உங்களிடம் பேச எனக்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித் தந்துள்ளது.
வசிஷ்ட புராணம் என்னும் அவர் கதையை பிறருக்கு உரைப்பதும் சரி, கேட்பதும் சரி பேரின்பம். அது ஆயிரம் பிராமணர்களுக்கு அன்னமளித்த புண்ணியத்தை தரும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். உங்களால் எனக்கு இப்போது அந்த புண்ணியம் சித்திக்கப் போகிறது,'' என்றான்.
-தொடரும்
இந்திரா சவுந்தரராஜன்