sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

கிருஷ்ண ஜாலம் (8)

/

கிருஷ்ண ஜாலம் (8)

கிருஷ்ண ஜாலம் (8)

கிருஷ்ண ஜாலம் (8)


ADDED : நவ 13, 2016 12:27 PM

Google News

ADDED : நவ 13, 2016 12:27 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ண ஜாலத்தில் நம்மைச் சிந்திக்க வைக்கும் ஜாலம் கோவர்த்தனகிரியை தூக்கி நின்றபடி காட்சியளித்தது தான். கோவர்த்தனன் ஆக மட்டுமல்லாமல், கோவிந்தனாகவும் இங்கிருந்தே கிருஷ்ணன் திருநாமங்களைப் பெற்றான்.

விஷ்ணு சகஸ்ர நாமங்களில் கோவிந்த நாமத்திற்கு பல சிறப்புகள் உண்டு. வழிபாட்டு பாடல்களிலும், ஸ்லோகங்களிலும் இந்த நாமம் மட்டும் மூன்று முறை இடம்பெறும்.

மூன்று முறை ஒரு விஷயத்தைச் சொன்னால் அதுவே நித்யமானது, ஒப்பற்றது என்பது பொருள். இந்த கோவிந்தன் என்ற பெயர், முதன் முதலாக தேவர்கள் தலைவனான இந்திரனால் தான் சொல்லப்பட்டது.

எங்கே எப்போது எப்படி என்று கிருஷ்ணரின் வரலாற்றைப் பார்த்தால் விஷயம் தெளிவாகும். கிருஷ்ணன் தேவகியின் மகனாக சிறையில் பிறந்தாலும், நள்ளிரவில் அவன் இடம் மாறி நந்தகோபன் மற்றும் யசோதையின் மகனாக வளர்ந்ததெல்லாம் கோகுலத்தில் தான்!

இங்கே தான் பிருந்தாவனம் என்னும் துளசிவனமும், பல மலைகளும், அடர்ந்த காடுகளும் இருந்தன. பச்சைப் பசுமை மிக்க இந்த வனம் யாதவர்களின்

பெருஞ்செல்வமான பசுக்களுக்கு பிரியமான உணவாக இருந்தன. யாதவர்களின் பசுக்களில் தேவலோகப் பசுக்களான கபிலம், கிருஷ்ணம்(கருமை), சுக்லம்(வெண்மை), புகை(சாம்பல்), செம்மை(சிவப்பு) ஆகியவையும் காணப்பட்டன. இந்த பசுக்கள் விசேஷமானவை. பாற்கடல் கடையப்பட்ட போது வெளிப்பட்ட காமதேனுவோடு, இவை வெளிப்பட்டு பூலோகத்தில் இனவிருத்தி அடைந்தன.

இவைகளை வைத்திருப்பதால் யாதவர்கள் புண்ணியர்களாக கருதப்பட்டனர். இவைகளை வளர்க்க மழை வளம் தேவையானதாக இருந்தது. மழைக்கு அதிபதியான இந்திரன் கோகுலவாசிகளால் பிரத்யேகமாக வணங்கப்படும் ஒரு தேவனாக இருந்தான். இவனுக்காகவே ஒரு யாகம் வளர்த்து, அதில் ஆஹுதி அளிப்பது என்பது அவர்களின் வழக்கம். மழை பொழியாத நேரத்தில் இந்திரன் தங்களின் மீது கோபத்துடன் இருப்பதாக கருதிக் கொண்டு, உருகித்

துதிப்பதும் வழக்கத்தில் இருந்தது.

இயற்கையின் நியதிப்படி இந்திரன் மழைக்கு காரணகர்த்தாவாக இருப்பினும், அவன் அதை மனிதர்களின் கர்ம அடிப்படையில் தான் நிர்வகிக்க வேண்டும். மழைப்பயனோ அல்லது பஞ்சமோ உயிர்களின் கர்மவினையை அடிப்படையாக கொண்டது. தானம், தவம், கருணை, தர்மம், மரியாதை போன்றவை இல்லாவிட்டால் இந்திரன் விரும்பினால் கூட மழைக்கு வாய்ப்பில்லை.

இயற்கையின் நியதி இப்படி இருக்க, இந்திர வழிபாட்டால் மழை பொழியும் என்று யாதவர்களின் எண்ணத்தை கிருஷ்ணன் மாற்ற விரும்பினான்.

நந்தகோபர் இந்திரனுக்காக யாகம் நடத்த முயன்ற போது பல கேள்விகளைக் கேட்டான். அவரால் கிருஷ்ணனுக்கு சரியான பதில் சொல்ல முடியவில்லை. இந்திர வழிபாட்டைத் தவிர்க்க முடியாத கடமையாக அச்சத்தோடு அவர்கள் செய்தது தான் கிருஷ்ணனை கவனிக்கச் செய்தது.

“தந்தையே! இந்த யாகம் தவறானது. இந்திரன் தேவர்களின் தலைவனாக நியமிக்கப்பட்டவன். மனிதன் செய்த கர்மவினைப்படி பலனளிக்கவே அவனால் முடியும். நீங்களோ அவன் மழையை உருவாக்கி உயிர்கள் வாழ உறுதுணையாக நிற்பவன் போலக் கருதி விட்டீர்கள். உலகில் உயிர்களின் வளர்ச்சிக்கும், அழிவுக்கும் சத்வ குணம் (சாந்தம்), ரஜோ குணம் (கருணை), தாமச குணம் (மந்தம்) என்னும் முக்குணங்களே அடிப்படையானவை. இதில் மழை, ரஜோ குணத்துடன் தொடர்புடையது. இதைப் புரிந்து கொள்ளுங்கள். நம் பகுதியை ஒட்டியுள்ள கோவர்த்தனமலை ரஜோகுணத்தைக் கொண்டுள்ளது. இதனாலேயே பசுக்கள் உயிர் வாழ முடிகிறது. நமக்கும் நதியில் நீர் கிடைக்கிறது. இந்த மலை அசையாமல் நின்று செய்யும் கடமையின் முன்னால் இந்திரன் மிகச் சிறியவன். எனவே வழிபடுவதாக இருந்தால் இந்த மலையை வழிபடுங்கள்,” என்று விளக்கம் அளித்தான்.

இதன் மூலம் 'தான்' என்ற எண்ணம் இல்லாத இயற்கையே சிறந்தது. பரம்பொருளான கடவுள் அதில் நிறைந்திருக்கிறார் என்பதையும் கிருஷ்ணன் உணர்த்தினான்.

அதன்பின் அவர்கள் அந்த கோவர்த்தன கிரிக்கு பூஜை நடத்தினர். இந்திரனுக்குரிய யாகத்தை கை விட்டனர். இதை அறிந்த இந்திரன் கோபம் கொண்டான்.

கிருஷ்ணன் விஷ்ணுவின் அம்சம் என்பதும், அவன் மனிதனாக வாழ்ந்து பல நெறிமுறைகளை உருவாக்குகிறான் என்பதையும் இந்திரனால் விளங்கிக் கொள்ள முடியவில்லை. விஷ்ணுவின் மாயை அவனது கண்களைக் கட்டி விட்டதாகக் கூடச் சொல்லலாம்.

வானுலகில் இருந்து பூலோகம் வந்தான் இந்திரன். கண்கள் சிவந்தபடி, “என்னை அலட்சியப்படுத்திய உங்களை என்ன செய்கிறேன் என்று பாருங்கள். என் கோபம் தான் பெருமழை. என் கொந்தளிப்பே இடிமுழக்கம். என் சக்தி தான் இடிச்சத்தம் என்று எக்காளமிட்டு பெரும் மழைப்பொழிவை உருவாக்கினான். வருணன், வாயு, எமன், அக்னி என்று சகலரையும் தன் ஆணைப்படி ஆட்டுவித்தான்.

அவர்களையும் தவறு செய்யத் தூண்டினான்.

பிருந்தாவனமே வெள்ளக்காடானது. சுற்றியுள்ள மலைப்பகுதி மூழ்கும் அளவுக்கு மழையும், காற்றுமாக இருந்ததால் யாதவர்கள் செய்வதறியாமல்

திகைத்தனர். எந்த கோவர்த்தன கிரியை வணங்கச் சொன்னானோ, அதை கிருஷ்ணன் ஒரு நாய்க்குடை போல விரல்களால் தூக்கினான். அதன் நடுவில் விரல் வைத்து அதாவது ஆள்காட்டி விரலால் சக்கரத்தை ஏந்தியிருப்பது போல ஏந்தத் தொடங்கினான். அதன் அடியில் பசுக்கூட்டங்களும், யாதவர்களும் தஞ்சம் அடைந்தனர். சுட்டுவிரலால் மலையைத் தூக்கிப் பிடித்தபடி நிற்கும் அதிசயத்தையும் பார்த்து வாய் பிளந்தனர்.

'உண்மையில் யார் இந்த கருப்பன்?'இவனால் மட்டும் எப்படி முடிகிறது?

இதைக் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத அதிசயம் ஆயிற்றே!

உயிர்களின் சக்திக்கெல்லாம் அப்பாற்பட்ட சக்தி படைத்த இவனோ பரம்பொருள்?”

இப்படி அந்த வேளையில் இந்த அதிசயக் காட்சியை பார்த்தபடி நிற்பவர் மனங்களில் எல்லாம் பல கேள்விகள் பிறந்தன.

கிருஷ்ணன் கோவர்த்தனகிரியைத் தன் சுண்டுவிரலால் தூக்கிப் பிடித்த கோலத்தில் நிமிடம், மணி, நாள் என்பதை எல்லாம் கடந்து, ஒருவாரம் என்ற கணக்கையும் கடந்து விட்டான். இந்த நேரத்தில் வாயுவுக்கும், வருணனுக்கும் சலிப்பு உண்டானது. பெய்யும் மழை நீர் பாதாளத்தில் இறங்கி விட, பொட்டு தண்ணீர் கூட யார் மீதும் படவில்லை. பசுக்கள், கோபர்கள், கோபியர், மலர்கள், தாவரங்கள் என்று அனைவரும் கிருஷ்ண லீலையில் தங்களை மறந்து நிற்பதையும் வாயுவும், வருணனும் கண்டனர்.

இந்திரனிடம் சென்ற அவர்கள், “இனி எங்களால் இயலாது” என்பதை தெரிவித்தனர். இதன் பிறகே இந்திரன் விஷ்ணுவின் அவதாரமாக கிருஷ்ணனைக் கண்டு ஓடி வந்தான். கிருஷ்ணனின் பாதங்களில் விழுந்து வணங்கினான்.

“இந்த பாதாரவிந்தம் கோக்களாகிய பசுக்கள் சரணடையும் திருவடிகள். 'கோ' என்னும் அரசன் மற்றும் தலைவன் என்னும் பொருள் கொண்ட நானும் சரணடையும் விந்தம் (திருவடி). ஆகவே இது கோவிந்தம்! பஜ கோவிந்தம், பல கோவிந்தம் என்று கூறி துதி செய்தான்.

கிருஷ்ணனும் அகந்தை நீங்கிப் பணிந்த இந்திரனை மன்னித்து அருள்புரிந்தான்.

அவனுக்கு மட்டுமா?

அந்த நேரத்தில் இக்காட்சியை கண்ட யசோதை, நந்தகோபர், கோபர், கோபியர்கள் என அனைவரும் கிரிதர கோபாலனைக் கண்டு சிலையாகிப் போனார்கள்.

கோவிந்த நாமம் பிறந்த இந்த கோவர்த்தன லீலை சிந்தனைக்குரியது. கர்மவினையே உயிர்களின் எல்லாவிதமான குறிப்பாக இட, வல அசைவுகளுக்கு காரணம் என்ற செய்தியை இது மறைவாகச் சொல்கிறது.

கிருஷ்ணனை நம்முள் நிரப்பி விட்டால் விரல்களால் நாமும் கோவர்த்தனம் போல மலைகளை ஏந்திப் பிடிக்கலாம். மலை கூட குடையாகும் என்ற செய்தியையும் இது சொல்கிறது.

தொடரும்

இந்திரா சவுந்தர்ராஜன்






      Dinamalar
      Follow us