sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

கிருஷ்ணஜாலம் - 2 (11)

/

கிருஷ்ணஜாலம் - 2 (11)

கிருஷ்ணஜாலம் - 2 (11)

கிருஷ்ணஜாலம் - 2 (11)


ADDED : டிச 22, 2017 10:24 AM

Google News

ADDED : டிச 22, 2017 10:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கர்ண பத்தினியான சுபாவை பார்த்து கிருஷ்ணன், ''உன் வரவேற்பு என்னை புளகாங்கிதப்படுத்தி விட்டது,'' என்றான். கர்ணனைப் பார்த்து, ''அச்சப்படாதே.. நான் எதையும் கேட்டு வரவில்லை. யுத்தம் உறுதியாகி விட்டதால், எதுவும் நிகழலாம் என்பதால், என் அன்பிற்குரியவர்களை காண விரும்பினேன். அதற்காகவே இந்த விஜயம்,'' என்ற கிருஷ்ணனின் பதில், கர்ணனை ஆழமாக சிந்திக்க வைத்தது.

''கிருஷ்ணா... என்ன பேசுகிறாய்? அன்பிற்குரியவர்களை காண விரும்புவதாகச் சொல்கிறாய்... எதிரியான என் முன் வந்து நிற்கிறாய்... முரணாக இருக்கிறதே?'' என கிருஷ்ணரை உட்கார கூட சொல்லாமல் கர்ணன் கேட்டான். அது சுபாவை என்னவோ செய்தது.

''எதுவாக இருந்தாலும் அமர்ந்து உறவாடலாமே... அத்தோடு இங்கே தங்கி சாப்பிட்ட பின்பே செல்ல வேண்டும்.'' என விருந்தோம்பலுடன் பேசினாள்.

கர்ணனுக்கு அவள் சொன்னது பிடிக்கவில்லை. மேலும் அங்கிருந்தால் கர்ணன் ஏதும் சொல்லக் கூடும் என கருதி, ''நான் விருந்து ஏற்பாடுகளை செய்கிறேன். நீங்கள் பேசிக்கொண்டிருங்கள்'' என்றாள்.

இப்போது கர்ணனும், கிருஷ்ணனும் மாத்திரமே!

''கர்ணா.. உன் மனைவி விவேகமாக செயல்படுகிறாள். பார்த்தாயா நம்மை தனிமையில் விட்டுச் சென்றதை..'' என கிருஷ்ணன் சொல்ல, கர்ணன் தன் மீசையை நீவியபடியே ''நான் கேட்ட கேள்விக்கு பதில் கூறாமல் இதென்ன பாராட்டு'' என்றான்.

கிருஷ்ணனும் ஒரு ஆசனத்தில் உரிமையோடு அமர்ந்தவனாய், ''என்ன கேட்டாய் அப்படி.. திரும்பத்தான் கேளேன்'' என்றான்.

''நடிக்காதே.. நான் உன் எதிரி. ஆனால் அன்பிற்குரியவர்களை காண விரும்புவதாய் கூறினாய்..''

''எப்போதும் எனக்கு ஒரு பேச்சுத் தான் கர்ணா. மாறிமாறிப் பேசுபவர்களோடு நீ எப்போதும் இருப்பதால் என்னையும் சந்தேகிக்கிறாய். நான் என் அன்பிற்குரியவரைக் காண விரும்பினேன் என்றேன். என் அன்பிற்குரியவர்களில் தர்மவானான நீயும் ஒருவன்! அதனாலேயே வந்தேன். அதற்காக நீயும் என் மேல் அன்பு கொள்ள வேண்டும் என்று இல்லை. நீ என்னை மாயாவியாக, விரோதியாக எப்படி வேண்டுமானாலும் நினைத்துக் கொள்..'' கிருஷ்ணனின் பதில் கர்ணனை சற்று திக்கு முக்காட செய்தது.

சட்டென்று ஒரு பதிலை கூற முடியவில்லை அவனால். கிருஷ்ணனை ஒரு சுற்று சுற்றி வந்தான்.

''என்ன கர்ணா என் பேச்சை நம்ப முடியவில்லையா?''

''ஆம்.. அப்படியும் கருதலாம்''

''நான் ஒரு ரகசியத்தை கூறினால் நீ ஒரு வேளை நம்பக்கூடும்''

''ரகசியமா.. என்ன அது?''

''நான் அதைக் கூறிய பிறகு திகைக்கவோ, மூர்ச்சையாகவோ கூடாது''

''அடேயப்பா.. அப்படி ஒரு ரகசியமா?''

''ஆம்.. உன் வாழ்வின் பிரதான ரகசியம்! உன் பிறப்பு ரகசியம்.''

கிருஷ்ணன் சொன்ன நொடி, கர்ணனிடம் பெரும் படபடப்பு.

''கிருஷ்ணா என்ன சொல்கிறாய்?'' என்றான் காற்றுக் குரலில்.

''உன் பிறப்பைப் பற்றிய ரகசியத்தை நீ அறியும் நேரம் வந்து விட்டது கர்ணா. யுத்தத்தில் யாருக்கும் எதுவும் நடக்கலாம். உனக்கே கூட ஆயுள் பங்கம் ஏற்படலாம். இப்படி ஒரு நிலையில் நீ யாருடைய பிள்ளை என தெரியாமலே போவதை என்னால் ஏற்க முடியவில்லை. என் அன்பிற்குரிய பாண்டவர்கள் பாவிகளாவதையும் நான் விரும்பவில்லை.''

''கிருஷ்ணா... போதும் பீடிகை! உனக்கு என் தாய் தந்தை யார் என தெரியுமா? முதலில் அதைச் சொல்''

''தெரியும் கர்ணா.. இப்போதல்ல, எப்போதோ தெரியும். எப்படித் தெரியும் என்று நீ கேட்க மாட்டாய் என நம்புகிறேன். உங்கள் வரையில் நான் தான் மாயாவியாயிற்றே? ஒரு மாயாவிக்கு தெரியாததும் இருக்க முடியுமா என்ன?''

''கிருஷ்ணா... போதும்! பேச்சால் தவிக்க வைக்காதே. யார் என் தாய் தந்தை? முதலில் அதைக் கூறு.''

''கூறத்தானே உன் மாளிகை தேடி வந்தேன். கூறாமல் போவேனா?''

''யார் அவர்? இந்தப் பாவியை ஓடும் ஆற்றில் விட்டுவிட்டு இன்றளவும் நானறியாதபடி இருக்கும் அந்த உத்தமப் பெற்றோர் யார்? அவர்கள் எதனால் என்னை ஆற்றோடு விட்டனர்? அதற்கு என்னை கொன்று புதைத்திருக்கலாமே? நீ அவர்கள் குறித்து கூறவும் எனக்குள் சரம் சரமாய் கேள்விகள் விளைவதைப் பார்.. சீக்கிரம் சொல் யார் அவர்கள்?''

''பதட்டப்படாதே! அவர்கள் யார் என தெரிந்தால் நீ மகிழவே செய்வாய். அவர்களைப் பற்றி அறியப் போகும் அதே சமயம் நீ ஒரு மந்திரப்புருஷன் என்பதையும் தெரிந்து கொள். உலகில் ஒரு உயிரின் ஜனனம் என்பது தாய் தந்தை சேர்க்கையால் விளைவதேயாகும். ஈ, எறும்பு தொட்டு இதுவே அடிப்படை விதி. இதில் விதிவிலக்காய் சில ஜனனங்களும் உண்டு. அதில், வேள்வித்தீயில் பிறந்த திரவுபதி ஒருத்தி. மந்திர சக்தியால் பிறந்த நீயும் ஒருவன்.''

''நான் மந்திர புருஷன் என்றால் எப்படி? விளக்கமாக கூறு கிருஷ்ணா..''

''விண்ணில் உலா வரும் ஒளிப் புருஷனான ஆதித்தனுக்கான மந்திர சக்தியால் கன்னி ஒருத்தியின் பிரார்த்தனை நிமித்தம் பிறந்தவனே நீ! அந்த வகையில் ஆதித்தனே உன் அசலான தந்தை! அவன் அருளே உன் மார்புக்கவசம்.''

''ஆதித்தன் என் தந்தையா!!! என்றால் என் தாய்?''

''நீ பிறக்கப் போவது தெரியாமல், தனக்கு தெரிய வந்த மந்திரத்தை அவள் பரீட்சை செய்து பார்க்கவும் நீ பிறந்து விட்டாய். நீ பிறக்கவும் அந்த கன்னி தவித்துப் போய் உன்னை தன்னோடு வைத்துக் கொள்ள இயலாத நிலையில், உன் தந்தையான சூரியனின் விருப்பத்திற்கு ஏற்ப கண்ணீரோடு உன்னை ஆற்றில் விட்டாள்.''

''கிருஷ்ணா அவள் யாரென்று கூறாமல், அதே சமயம் எங்கே நான் தவறாக கருதி விடுவேனோ என கருதி, அவளை நியாயப்படுத்தியே பேசுகிறாயே... யார் அவள். முதலில் அதைக் கூறு.''

''கூறுகிறேன், முன்பே கூறியது போல அதிர்ச்சி கொள்ளாதே.''

''போதும் கிருஷ்ணா... உன் காலில் கூட விழுகிறேன், முதலில் என் தாய் யார் என கூறு..''

''அந்த உண்மை தெரியவரும் பட்சத்தில், இந்த யுத்தம் ஒரு வேளை நடக்காமல் போகலாம். ஏனென்றால் சகோதர யுத்தம் என்பது மிகக் கொடியதல்லவா?''

''கிருஷ்ணா.. இப்போது நீ என் தாய் யார் என கூறப்போகிறாயா இல்லையா?''

கிருஷ்ணன் மந்தகாசமாய் சிரித்த படியே, ''பாண்டு புத்திரர்கள் உன் சகோதரர்கள்... என்றால் உன் தாய் யார் என உனக்கே தெரிய வந்திருக்குமே?''என்று கிருஷ்ணன் கேட்க, கர்ணனிடம் விக்கிப்பு!

- தொடரும்

இந்திரா சவுந்தர்ராஜன்






      Dinamalar
      Follow us