
கர்ணனை சந்தித்து விட்டு உபப்லாவியம் திரும்பிய குந்தியின் மனதிற்குள், அவன் பேசிய பேச்சு ஒவ்வொன்றும் அணிவகுத்து நின்றது. அவனுக்குள் தான் என்ன தெளிவு! என்ன கருணை!
யுத்தம் இன்னும் தொடங்கவேயில்லை. அதற்குள்ளாக பீஷ்மர் பற்றிய பயம், கர்ணன் குறித்த குழப்பம் நீக்கிய கிருஷ்ணன் குறித்தும் குந்தி எண்ணினாள். நிச்சயம் கிருஷ்ணன் பாரதப்போரை சரியாக வழி நடத்துவான். படைத்த ஒருவனே, தான் படைத்தவர்களோடு கூடி நின்று, தான் படைத்த படைப்புக்கு எதிரான செயல் ஒன்றையும் செய்ய விழைவது; எத்தனை முரணான செயல்.
இதை விசேஷ மனநிலையை தான் கிருஷ்ண ஜாலம், கிருஷ்ணமாயம், கிருஷ்ண சாகசம் என எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம்.
மொத்தத்தில் குந்தி எப்போதும் இல்லாத மனநிலையில் இருந்தாள். அதை கவனித்த தர்மனுக்கு ஒரே ஆச்சரியம்.
''தாயே தங்களிடம் புதிய நம்பிக்கையை காண்கிறேன். காரணம் அறிந்து கொள்ளலாமா?'' - என மென்மையாக கேட்டான்.
''உண்மை தான் தர்மா... சகலத்துக்கும் கிருஷ்ணனே காரணம். என் மனதின் அடி ஆழத்தில் இருந்த இருள் கூட அவன் ஆறுதல் கூறிய போது நீங்கி விட்டது.''
''நீங்கள் இப்படி சொல்வதை கேட்டு மகிழ்கிறேன். பெற்றவள் வருந்த, பிள்ளைகள் எதை செய்தாலும் அது சிறக்காது என அறிவேன். இனி எங்கள் செயல்பாடுகள் சிறந்து விளங்கும் என நம்புகிறேன்.''
''நிச்சயமாக. கிருஷ்ணன் எது சொன்னாலும் அதை பின்பற்ற தயங்க வேண்டாம்.''
''அப்படியே தாயே.... எங்கள் ஜெயம் வேறு; கிருஷ்ண ஜெயம் வேறில்லை'' என முடித்தான் தர்மன்.
உபப்லாவியத்தின் வடகிழக்கு பாகத்தில் கிருஷ்ணன் தங்க இடம் ஒதுக்கியிருந்தனர். வடகிழக்கில் ஜலவாரிசு இருப்பது சிறப்பானது என்பதால் அங்கே, கிருஷ்ண மாளிகைக்கு வடக்கில் ஒரு நீராழியும் அதில் அன்னங்களும் நீந்திய வண்ணம் இருந்தன. கரை முழுக்க நித்யகல்யாணிப் பூக்கள் மலர்ந்திருந்தன.
கிருஷ்ணன் புல்லாங்குழலால் இசைக்க முயன்ற போது சேவகன் ஒருவன், கிருஷ்ண சகோதரரான பலராமர் வந்த தகவலை கூற கிருஷ்ணனின் முகத்தில் ஒரே ஆச்சரியம்!
அண்ணன் வந்திருப்பது யுத்தத்தில் பங்கேற்கவா, இல்லை வேறு காரணங்களுக்கா? யுத்தத்தில் பங்கேற்றால் துரியோதனாதியர் பக்கம் நின்று தன்னை எதிர்த்து போரிட வேண்டுமே?
கேள்விகளோடு புறப்பட்ட கிருஷ்ணன் ஆலோசனை மண்டபத்திற்கு வந்தார்.
''வந்தனம் அண்ணா..'' என்றபடியே கட்டிக் கொண்ட போது பலராமரிடம் ஒரு எதிர்ப்புணர்வு வெளிப்பட்டது.
''பராக்கிரமம் மிக்க தங்கள் வருகை எனக்கு மகிழ்வளிக்கிறது'' என்றான் தர்மன்.
''படைகளின்றி தாங்கள் தனித்து வந்தது ஆச்சரியம் தருகிறது..'' என்றான் பீமன்.
''அதை தான் இந்த கிருஷ்ணனின் விருப்பத்துக்காக துரியோதனன் படையோடு சேர்த்தாகி விட்டதே...'' என்கிற ஒரு சலிப்பான பதில் பலராமரிடம் இருந்து வந்தது.
''தங்களிடம் வருத்தம் இழையோடுவதை உணர்கிறோமே... என்ன காரணம்?'' என்றான் நகுலன்.
''மனம் விட்டு பேசவே வந்திருக்கிறேன். யுத்தத்தில் எனக்கு கொஞ்சமும் உடன்பாடில்லை. ஒரு சிலரது சுயநலத்துக்காக பலர் மடிவதில் நியாயம் இல்லை. குறிப்பாக பீஷ்மாச்சாரியார், துரோணர் போன்ற வீரஞானியர் இதற்கு எப்படி சம்மதித்தனர் என தெரியவில்லை. யுத்தம் நடப்பதை என்னால் எண்ணிப்பார்க்க கூட முடியவில்லை. இந்த விஷயத்தில் கிருஷ்ணன் உங்கள் பக்கம் நின்று உதவுவது நல்ல விஷயம். கிருஷ்ணன் போல் என்னால் உதவ இயலாது. நாங்கள் இருவரும் சகோதரர் என்றாலும், கிருஷ்ணனே விசேஷமானவன். உங்களுக்கு நன்மை வேண்டி தீர்த்தயாத்திரை செல்ல விரும்புகிறேன். உங்கள் வெற்றிக்காக தீர்த்தங்களில் மூழ்கி எழுந்து வழிபடுவேன். உங்கள் வசம் எவ்வளவோ ஆயுதங்கள், அஸ்திரங்கள்! அனைத்திலும் மேலானது என் பிரார்த்தனை என்னும் அஸ்திரம்'' என்ற பலராமர்
பாண்டவர் ஐவரையும் ஆசீர்வதித்த சமயம், குந்தியும் ஓடி வந்து 'பலராமா..' என சொல்லி நின்றாள். பலராமரின் யாத்திரை முடிவு கேட்டு ஆச்சரியப்பட்டவளாய், ''படையை அனுப்பி விட்டு இப்படி ஒதுங்கினால், துரியோதனன் கேட்டால் என்ன பதில் சொல்வது?''
''அவனுக்கு பதில் சொல்ல போவதில்லை. அவன் அத்தனை பெரியவனுமில்லை. என் யாத்திரை முடிவை நான் திருதராஷ்டிரனுக்கும், பீஷ்மருக்கும் தெரிவித்து விட்டேன். அவ்வளவு தான்! தீர்த்த யாத்திரை என்பது எதிர்பார்ப்பு இன்றி செய்ய வேண்டிய கடமை. அதை நான் கனத்த இதயத்தோடு செய்வது தான் விந்தை. அது தான் விதி என்னும் போது அதை மாற்ற யாரால் இயலும்?'' என்றபடி கிருஷ்ணனை பார்த்தார் பலராமர்.
''உண்மை அண்ணா... விதி வலியது. அதை சற்று வளைக்க வேண்டுமானால் செய்யலாம், உடைப்பது இயலாது'' என்ற கிருஷ்ணன், ''இங்கே வளைக்கும் பணியை என்னால் இயன்ற அளவு செய்கிறேன்.'' என்றான்.
அப்போது அர்ஜூனனின் மகன் அபிமன்யு வந்தான். யாரும் சொல்லாமலேயே பலராமரை பணிவாக வணங்கினான்.
'' அர்ஜூனா... இவனிடம் உன் பராக்கிரமம் அப்படியே தெரிகிறது. வில்லை, அவன் பிடித்திருக்கும் விதம் உன்னை போலவே இருக்கிறது பார்..'' என்று அபிமன்யுவை புகழ்ந்தார் பலராமர்.
அர்ஜூனன் முகத்தில் பூரிப்பு. அதை கவனித்த கிருஷ்ணன் முகத்தில் லேசான சலனம்.
''உன் தந்தை போலவே போர்க்களத்தில் நீயும் வீரம் காட்டப்போகிறாயா?'' என பலராமர் இயல்பாக கேட்டார். ''அதிலென்ன சந்தேகம் பிரபு. இந்த யுத்தம் எனக்கான வீர யுத்தம். இதில் என் புகழ் பெரிதும் பேசப்பட போகிறது. உங்களையும் அந்த செய்தி எட்டும். அப்போது தெரியும்.'' என்று அபிமன்யு நம்பிக்கையோடு பேசினான்.
''தாய் எட்டடி என்றால் குட்டி பதினாறு அடி பாயும் என்பதை நான் அறிவேன். அதற்கு நீயே நல்ல உதாரணம். இருந்தாலும் சொல்கிறேன். தலை இருக்க வால் ஆடக் கூடாது. அர்ஜூனன் உனக்கு சிரமம் தர மாட்டான் என நான் நம்புகிறேன்.'' என்னும் பலராமரின் பதில் அர்ஜூனனை சற்று பதட்டமடைய செய்தது.
''பலராமரே! யுத்தம் எங்களுக்கும், துரியோதனாதியர்களுக்கும் தான். இதில் வாழ வேண்டிய பிஞ்சுகளை தேவைப்பட்டாலன்றி களத்தில் இறக்க நான் ஒரு போதும் சம்மதிக்க மாட்டேன். நீங்கள் சொன்னது போல அதற்கு அவசியமும் ஏற்படாது'' என்றான் வேகமாக.
முக்காலமுமறிந்த கிருஷ்ணனோ அதைக் கேட்டு ஒரு முகாந்திரம் சொல்ல தயாரானான்.
தொடரும்
- இந்திரா சவுந்திரராஜன்