sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

கிருஷ்ணஜாலம் - 2 (17)

/

கிருஷ்ணஜாலம் - 2 (17)

கிருஷ்ணஜாலம் - 2 (17)

கிருஷ்ணஜாலம் - 2 (17)


ADDED : பிப் 09, 2018 11:43 AM

Google News

ADDED : பிப் 09, 2018 11:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சடலத்தையும், பிராமணரையும் கண்ட அர்ஜூனனுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

''மகனே... நீ இல்லாத உலகத்தில் நான் வாழ்வதிலும் ஒரு பயனுமில்லையடா... இந்த சிதைக்கு தீ வைக்கும் அதே சமயம், இதில் விழுந்து உன்னோடு நானும் வந்து விடுகிறேன்'' என்று சொல்லி சிதைக்கு தீயை வைக்க, அது கொழுந்து விட்டு எரிய தொடங்கியது! அந்த பிராமணரும் அதில் குதித்து உயிர் விடப் போனார்.

அதை கண்ட அர்ஜூனன் ''பிராமணரே நில்லுங்கள்...'' என்று தடுக்க ஓடினான். அவரும், கண்ணீர் விழிகளுடன் அர்ஜூனனை பார்த்தார்.

''பிராமணரே... நீங்கள் பேசியதை கேட்டேன். உங்கள் சோகத்தை நான் புரிந்து கொள்கிறேன். அதற்காக தாங்களும் இறக்க துணிவது தகாத செயல்.''

''இதை கூறவா இப்படி ஓடி வந்தீர்?''

''இதில் என்ன பிழை உள்ளது? பூவுலகில் பிறப்பவர், இறப்பது என்பது எதிர்பாராதது அல்ல... காலம் காலமாக நடக்கின்ற ஒன்று தானே?''

''உண்மை தான்; ஆனால் அதற்கும் வயதிருக்கிறதே?''

''புரிகிறது.. முதிய உங்களுக்கு வர வேண்டிய மரணம் உங்கள் மகனுக்கு வந்து விட்டது. கொடுமை என்றாலும் யாருக்கு எப்போது முடிவு? என்பது நாம் வாங்கி வந்த வரம் என்பது தானே சான்றோர் வாக்கு...''

''இருக்கலாம்.. ஆனாலும் அதை எண்ணி ஆறுதலடைய முடியவில்லை''

''அப்படி சொல்லாதீர்கள்... தாங்கள் அறியாததா...? மனதை கட்டுப்படுத்துங்கள். துக்கத்தை தாங்கி கொள்ளுங்கள்..''

''முடியவில்லை என்று தான் சொல்கிறேனே...''

''முடியும், மனம் இருந்தால் மார்க்கமுண்டு. தற்கொலை செய்வது பெரும்பாவம். புத்திர சோகத்தை போல் பல மடங்கு கொடுமையானது..''

''இப்படி மிரட்டி, என் மனதை மாற்ற முடியாது. மகனை இழந்து வாழ்வதை விட, அந்த பல மடங்கு துயரம் எனக்கு மேலானது.'' என பிராமணர் அழிச்சாட்டியமாக பேச, அர்ஜூனனுக்கு கோபம் உண்டானது.

''பிராமணரே... வேதம் கற்ற தாங்கள் இப்படி பேசுவது, வேதனை தருகிறது. நீங்கள் உயிர் விடுவதால் உங்கள் பிள்ளையோடு சேர முடியுமா? எதை வைத்து இப்படி ஒரு முடிவு எடுத்தீர்கள்?''

' புத்திர சோகம் என்னை வாட்டுவது ஒன்றே காரணம்.''

''இறப்பதால் அது தீராது.. மாறாக உங்கள் கர்ம வினை மேலும் மோசமாகும்.''

''அது சரி... என் நிலை உனக்கு வந்தால் திடத்தத்தோடு அதை தாங்குவாயா?''

பிராமணர் இப்படி கேட்பார் என அர்ஜூனன் எதிர்பார்க்கவில்லை. அர்ஜூனன் மனதில் அவன் மகன் வந்து போனான்.

''இப்போது புரிகிறதா என் வேதனை? எதுவும் அவரவருக்கு வந்தால் தான் தெரியும்.''

''இல்லை பிராமணரே... நான் இவ்வளவு சொல்லியும் விடாமல், வாதாடும் உம்மை நினைத்து வியந்தேன். அவ்வளவே''

''நன்றாக சமாளிக்கிறாய். என் கேள்விக்கு என்ன பதில்?''

''நான் உங்களை போல உயிர் விடத் துணிய மாட்டேன் நான் வீரன். எதையும் தாங்குவேன்.''

''இப்படி பேசுவது சுலபம்.. வாழ்ந்து காட்டுவது கடினம்''

''நான் அப்படியல்ல.. சொல்வதை தான் செய்வேன். செய்வதையே சொல்வேன்.''

''இதை நம்பச் சொல்கிறாயா?''

''சரி... நான் என்ன செய்தால் நம்புவீர்கள்?''

''நான் சொல்வது எல்லாம் உண்மை'' என்று சொல்லி சத்தியம் செய்வாயா?'' பிராமணர் கேட்க கூர்ந்து நோக்கினான் அர்ஜூனன்.

''என்ன பார்க்கிறாய்?''

''இல்லை; இதற்கெல்லாமா சத்தியம் செய்வது என யோசிக்கிறேன்.''

''நான் எப்படி உன்னை நம்புவது?''

''என் பேச்சில் நம்பிக்கை இல்லையா?''

''என் நிலை இது தான். புத்திர சோகம் என்றால், என்னவென்றே தெரியாத நிலையில் இது போல் பேசுவது சுலபம். தெரிந்தவன் நிச்சயம் பேச மாட்டான். சத்தியம் செய்யவும் மாட்டான்.''

''பிராமணரே... நான் பார்க்காத சோகம் இல்லை. நாடு, நகரை இழந்து 13 ஆண்டு காட்டில் வாழ்ந்தவன் நான். எந்த நிலையிலும் இறந்து விட எண்ணியதில்லை.''

''நாடும் நகரமும் அதன் பொன்னும் மணியும் நல்ல பிள்ளைக்கு சமமாகுமா? முயன்றால் அவற்றை திரும்ப பெற முடியும். உயிர் போனால் அப்படியா?''

''போதும்... உங்கள் பதிலால் ஆத்திரம் வருகிறது. முடிவாக என்ன கூறுகிறீர்கள்?''

''நீ சத்தியம் செய்தால் தற்கொலை செய்வதை பரிசீலனை செய்கிறேன்.''

''என்னை சத்தியம் செய்ய வைப்பதில் அப்படி என்ன கிடைக்கிறது?''

''என்ன அப்படி சொல்லி விட்டாய்... புத்திர சோகம் தாங்கும் ஒருவர் கூட, உலகில் இல்லை என்பது என் முடிவு. அதை நீ மாற்றுவதால் மனதிற்குள் நம்பிக்கை பிறக்கிறது.''

''அப்படியானால் என் சத்தியத்தால் மட்டுமே, நீங்கள் வாழ போகிறீர்கள் அப்படித்தானே?''

''அப்படியே தான்..''

''சரி.. கையை நீட்டுங்கள் - சத்தியம் செய்கிறேன்.'' என்று சொல்ல அவரும் கையை நீட்டினார். அர்ஜூனன் தன் வலது கையை, அவர் கை மீது வைத்து

''என் வாழ்வில் நான் பிள்ளைகளை இழந்தாலும், தற்கொலை என்னும் பாவ செயலை நினைத்து கூட பார்க்க மாட்டேன். இது சத்தியம், சத்தியம், சத்தியம்.'' என்றான்.

அந்த பிராமணரும் ''சரியப்பா... நானும் என் தற்கொலை எண்ணத்தை கைவிட்டு வாழ்கிறேன்'' என்றார்.

''இப்போது தான் எனக்கு நிம்மதி'' என்ற அர்ஜூனனிடம், ''அப்பனே என்னை ஆட்கொண்ட நீ யார் என்று அறியலாமா?'' என்றார் பிராமணர்.

''நான் அர்ஜூனன்! குந்தி, பாண்டு என் பெற்றோர். தர்மன், பீமன், நகுலன், சகாதேவன் என் சகோதரர்கள்.. ஹஸ்தினாபுரம் எங்கள் ராஜ்யம்''

''அர்ஜூனனா என்னை காப்பாற்றியது! ஆஹா... நான் பாக்யசாலி...''

பிராமணர், அர்ஜூனன் கைகளை பற்றி நன்றி கூறினார். அப்படியே திரும்பி பார்த்தார். சிதை எரிந்து அடங்கியிருந்தது. கண்ணீரோடு, அங்கிருந்து கிளம்பினார். அர்ஜூனனும் அங்கிருந்து நகர்ந்தான்.

அதன் பின் பிராமணர் அங்கு திரும்பி வர, சிதையில் இருந்து நாரதரும், பிராமணர் உருவிலிருந்து இந்திரனும் வெளிப்பட்டனர்.

கிருஷ்ணர் பிரத்யட்சமாகி,''நன்றி இந்திரா... நன்றி நாரதரே...''என்றார்.

''கிருஷ்ண... கிருஷ்ண... இந்த நாடகத்தில் பங்கேற்றதில் எங்களுக்கு மகிழ்ச்சியே. அதே சமயம் அர்ஜூனனுக்கு புத்திரசோகம் ஏற்பட போகிறதோ, என்கிற ஒரு சந்தேகம் எழுகிறது'' என்றார் நாரதர்.

அதை ஆமோதிப்பது போல், கிருஷ்ணன் மவுனமாக இருந்தான்.

- தொடரும்

இந்திரா சவுந்திரராஜன்






      Dinamalar
      Follow us