sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

கிருஷ்ணஜாலம் - 2 (18)

/

கிருஷ்ணஜாலம் - 2 (18)

கிருஷ்ணஜாலம் - 2 (18)

கிருஷ்ணஜாலம் - 2 (18)


ADDED : பிப் 20, 2018 10:43 AM

Google News

ADDED : பிப் 20, 2018 10:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நடைபெறப்போகும் யுத்தத்தில், பாண்டவர் தரப்பில் ஒரு மாபெரும் இழப்பு அர்ஜூன புத்ரன் மூலம் ஏற்படப் போவதை அறிந்த நாரதர், இந்திரனும் அதிர்ச்சியை எதிரொலித்தனர்.

''அதிர வேண்டாம். மரணம் ஒரு மாற்றம் என்பதை அறிந்த தேவர்கள் நீங்கள்! அதற்கேற்ப நடந்து கொள்ளுங்கள். தர்மத்தை ரட்சிக்கும் விதத்தில் எவ்வளவோ செய்ய வேண்டியிருக்கிறது. என்னை சரண் புகுந்துவிட்ட அர்ஜூனனுக்கும் நான் அருள வேண்டியிருக்கிறது. அதன் தொடர்புடைய செயலே இந்த மாயாநாடகம்'' என்ற கிருஷ்ணனை இருவரும் வணங்கினர்.

கிருஷ்ணனிடம் மாறாத அந்த மாயப்புன்னகை!

அதன் பின் கிருஷ்ணன் உபப்லாவியத்துக்கு திரும்பி விட்ட நிலையில், தர்மன் தன் சகோதரர்களுடன் காத்து கொண்டிருந்தான். அவ்வளவு பேரிடமும் வழக்கத்திற்கு மாறாக, களம் புகத் தயாராகி விட்ட முனைப்பு, இறுக்கமாய் அணியும் ஆடையிலும், திறந்து கிடந்த மார்பிலும் தெரிந்தது.

அவர்கள் முன், களத்திற்கான வரைபடம், போருக்கான தொடக்கம், பின்பற்ற வேண்டிய விதிமுறைகள், போர் முடிந்த இரவில் தேவைப்படும் உணவு, காயம்பட்டோருக்கான சிகிச்சை முறை என எல்லாம் சகாதேவனாலும், நகுலனாலும் வரையறுக்கப்பட்டு குறிப்புகளாய் இருந்தது. கிருஷ்ணன் வரவும், யுத்தம் குறித்த பேச்சு தொடங்கியது.

''கிருஷ்ணா... உனக்காக காத்திருக்கிறோம். சகாதேவன் சகலத்தையும் கணக்கிட்டு யுத்த செயல்பாட்டிற்கு ஒரு பூரண வடிவம் தந்துள்ளான். இதில் பிழையிருந்தால் அதை எங்கள் பொருட்டு நீ சரி செய்ய வேண்டும்'' என தர்மன் கூறவும், கிருஷ்ணன் நேராக சகாதேவனை தான் பார்த்தான்.

''சகாதேவா... பஞ்சாங்க புலியான உன்னை ஒன்று கேட்கட்டுமா?''

''கிருஷ்ணா.. நான் உன் முன் ஒரு சிறு துாசு. நான் பஞ்சாங்கப் புலி என்பதெல்லாம் மற்றவர் கருத்து. ஆனால் அந்த காலமே நீ தான். அப்படி பார்த்தால் நான் உன்னை அறிந்த, பாண்டித்யனாக இருக்க வேண்டும். ஆனால் நான் மட்டுமல்ல; நாங்கள் அனைவருமே கூட, உன் முன்னால் சாமான்யர்களே... அப்படிப்பட்ட ஒரு சாமான்யனிடம் எதற்கு இந்த பீடிகை? ''

கிருஷ்ணன் சிரித்தபடி, '' எந்த ஒரு விஷயத்தை பேசும் முன்பும் அதற்கான ஆலாபனை முக்கியம். இது மனித சுபாவம். நானும் மனிதன் தானே?''

நகுலன், ''கிருஷ்ணா நீ மனிதனா...?'' என்று வியப்போடும் வேகமாகவும் கேட்டான்.

''என்னைப் பெற்றவள் இருக்கிறாள் நகுலா...'' என்ற உடனடி பதில் நகுலனை வாயடைக்க செய்தது.

''மைத்துனா.... ஏன் இப்படி பேசி நேரம் கடத்துகிறாய்? விஷயத்துக்கு வா. யுத்த முகாந்திரத்தில் நாம் இருக்கிறோம், அதை நீ அறியாதவனா?''

''எந்நிலையிலும் பதற்றம் கூடாது அர்ஜூனா! அது போகட்டும்... சகாதேவா, உன்னிடம் துரியோதனன் வந்து நாள் குறிக்க சென்னான் அல்லவா?''

''ஆம் கிருஷ்ணா. நானும் குறித்து தந்தேன்''

''தெரியும். உன் கடமையை நீ செய்தாய். துரியோதனன் தன் மனதிற்குள், தான் புத்திசாலித்தனமாக நடப்பதாக கருதி கொண்டிருக்கிறான். அது குறித்து நீ ஏதும் அறிவாயா?''

''என்னிடம் வந்து யுத்தம் தொடங்க, வெற்றிக்கான சரியான நேரம் எது என்று கேட்கவும் நான் அதை குறித்து தந்து விட்டேன். இதில் தன்னை புத்திசாலியாக அவன் கருதுவது என்பது அவன் சுபாவம். நான் அதற்கு என்ன செய்ய முடியும்?''

சகாதேவனின் பதில் பீமனுக்கு கோபத்தை அளித்தது.

''தம்பி.....அவன் நம் எதிரி. நம்மை கொல்ல துடிப்பவன். அதற்காகவே நேரம் பார்க்கிறான் என தெரிந்தும் எப்படி கணித்து கொடுத்தாய்?'' என சீறினான்.

''அண்ணா... என்னை மதித்து யார் வந்தாலும் அவர்களுக்கு உதவுவது என் கடமை. இது தெரியாதவரா தாங்கள்?'' என்று திருப்பி கேட்டான்.

''துரியோதனன் மிகவும் கேடு கெட்டவன். எவ்வளவு குரூரம் அவனுக்கு... அவனால் எப்படி இப்படி நடக்க முடிகிறது?'' பீமன் கோபம் குறையாது கத்தினான்.

''தம்பி... கோபத்தை அடக்கு. அடுத்து என்ன செய்ய வேண்டும் என சிந்திப்போம்'' என அமைதிப்படுத்தினான் தர்மன்.

பேச்சை தொடக்கிய கிருஷ்ணனோ, சகாதேவன் மீது கவனமாக இருந்தான்.

''கிருஷ்ணா... நான் என் கடமையை செய்ததில் தவறில்லையே?'' என்று சகாதேவன் திரும்பக் கேட்க, கிருஷ்ணனும் ஆமோதித்தான்.

''கடமையை நேர்மையாக செய்வதே தர்மம். நீ செய்தது சரி. யுத்தம் தொடங்கும் முன்பே, நீ அதற்கான கடமையை தொடங்கி விட்டாய்... பலே... உன்னை பாராட்டுகிறேன்.''

''ஓ... என் பதில் உங்களை இப்படி கூட சிந்திக்க வைக்கிறதா?''

''கிருஷ்ணா... தயவு செய்து இது குறித்து சகாதேவனிடம் பேசியதற்கான காரணத்திடம் வா. நீ கேட்கவும் தான் எங்களுக்கும் இந்த உண்மை தெரிய வந்தது..''

''எல்லோருக்கும் தெரிய வேண்டும் என்றே நானும் கேட்டேன். எதிரியின் ஒவ்வொரு செயலையும் கவனித்தால் அல்லவா வியூகம் வகுக்க முடியும்?''

''இனி என்ன செய்து என்ன பயன்? வெற்றிக்கான நேரத்தை துரியோதனனுக்கு அளித்தாகி விட்டது. நம் தலையில் நாமே மண்ணை வாரிப் போட்டு கொண்டு விட்டோம். இதில் எந்த வியூகத்தால் இனி என்ன பயன்?'' பீமன் கோபப்பட்ட அந்த நொடியில், சகுனியின் மகன் உலுாகன் வந்திருப்பதாக ஒரு மெய்க்காப்பாளன் வந்து நின்றான்.

''உலுாகனுக்கு இப்போது இங்கென்ன வேலை?'' என அனைவரும் எரிச்சல்பட்டனர்.

''வரச்சொல்'' என்றான் தர்மன் இறுதியாக.

உலுாகனும் வந்தான். அப்பன் சகுனியை இளம் வயதில் பார்ப்பது போலவே இருந்தான்.

தர்மனும், ''வா உலுாகா நலமாக இருக்கிறாயா?'' என வரவேற்றான்.

''எங்கள் நலத்துக்கு என்ன குறை... நிரந்தர நலனுக்காக போர் செய்யவும் முனைந்துள்ளோம். நாளையே போர் தொடங்கலாம் என்பது எங்கள் முடிவு. அதைக் கூறவே வந்தேன். நாளை காலை, போரில் சந்திப்போம்...'' என்று சொல்லி புறப்பட்டான்.

அடுத்த நொடி அனைவரும் கிருஷ்ணனை தான் பார்த்தனர்!

- தொடரும்

இந்திரா சவுந்திரராஜன்






      Dinamalar
      Follow us